தொடர்கள்
கவிதை
ஒரு ஆதுரத்தை அருந்துவது பற்றி! - ராகவன் ஸாம்யெல்

20240513112822241.jpeg

ஆயத்தங்களின் முன்னீடாய்
ஒரு பிரியமான
திரவ இரவை
கோப்பைகளுக்குள் இட்டு நிரப்புகிறேன்
இருட்குழம்பின் குமிழ்கள்
ஆரத்தின் ஓரங்களில்
நழுவி உடையும் சுகந்த மரணம்
ஒவ்வொரு பரிமள உடைதலின் போதும்
வானத்தில் ஒரு பூ பூக்கிறது
எத்தனை மலர்ச்சியாய் இருக்கிறது வானம்?
உறவுகள் நகரும் (அ) நகர்த்தும்
காலத்தின் சொற்கட்டுகள்
அவிழ்ந்து மலரும் உதிர்ந்து உலரும்
அதன் மெத்தில் தானே அமர்ந்திருக்கிறோம்?
நம் கைகளைப் பற்றியிருக்கும்
கோப்பைகளில் கொஞ்சம்
நட்சத்திர தூவல்களை உதிர்க்கிறேன்
தடுக்கும் விரல்களில்
நட்சத்திரங்களை அணிந்து கொள்கிறாய்
எறும்புகள் இதழ்கள்
கரைதல் சுவைக்கூட்டலா, அல்லையா?
பூனைகள் உருட்டும் நூல்கண்டின்
பிரிகளென
மெல்லிய கோடுகளால்
புலன்களை இணைக்கிறாய்
சிலவற்றை மயக்கி கிடத்தியிருக்கிறாய்
நீ புரட்டிக் கொண்டிருக்கும்
பக்கங்களில் வாசிக்கப்படாமல்
மொடமொடக்கும் கவிதைத் தினவின் சாயம்
விரவிப்பரவும்
கித்தானில்
வால் நட்சத்திரத் தீற்று
இரவைச் சுமந்தலையும்
பாரம் உனக்கு மட்டுமல்ல!
எதையும் வேண்டியே சுமக்கிறோம்
கொஞ்சம் கொஞ்சமாய் இரவைப் பருகிறோம்
கய்ப்பும், கரைந்த சீனித்திமிரும்
இறங்கும் போது
கோப்பைகள் காலியாகத்தொடங்குகிறது
ஆசுவாசம் இளைப்பாறும்
அந்த(க)க் கரையை அடைய
இன்னும் எத்தனை காதம்?