தொடர்கள்
கதை
சுப்புசாமியின் சபதம்...! - புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஶ்ரீகாந்தன் 9.

20240508075709987.jpeg

இசைப்புயல் தட்டில் நிரப்பி வைத்திருந்த மூக்குப்பொடி வகை டப்பாக்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். முகத்தில் மென்மையான புன்னகை அரும்பியது.

"பொடியும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வஸ்துதானே ஐயா?" என்று கேட்டார்.

"நிச்சயமாக..." என்றார் சுப்புசாமி. தொடர்ந்து, "இது இப்பொழுது பலரிடம் புழக்கத்தில் இல்லை. எங்களைப் போன்ற மூத்த அறிஞர்கள் தேடிப் பிடித்து, அளவோடு உபயோகிக்கிறோம். மேலும்,எனக்கும் 75 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இனி அது தீயப் பொடியாய் இருந்தால் என்ன, மாயப்பொடியாய் இருந்தால் என்ன?" என்றார் சிரித்துக் கொண்டே.

அந்தத் தட்டை கையில் எடுத்து ஒவ்வொரு டப்பாவையும் திறந்து முகர்ந்து கொண்டே வந்தார் தாத்தா.

"இதெல்லாம் என் நண்பர்கள் எனக்கு அளித்த அன்பளிப்புகள். இதுபோன்று பல வஸ்துகள் வரும். நான் விலக்கி வைத்து விடுவேன். இந்தப் பொடி டப்பிகளின் அழகால் இவற்றை அப்படியே ஷோகேஸில் வைத்திருந்தேன். உங்களுக்கு உபயோகமானல் எடுத்துக் கொள்ளலாம்...!" என்றார் ரஹ்மான்.

"ஓசி பொடிதனை நாசியில் இட்டால்...

காசிக்குப் போனாலும் கருமம் தீராது!' என்று ஒரு பழமொழி உண்டு ரகு...!" என்றார் தாத்தா.

"வாவ், சூப்பர்!"

"என்னிடம் ஸ்பெஷல் சுண்ணாம்பு, நெய் சேர்த்த பொடி எப்பொழுதும் உண்டு. அதுவே போதும்..!" என்றார்.

குழந்தைகள் சொப்புச் சாமான்கள் வைத்து விலையாடுவதுமாதிரி இந்தப் பெரியவர் காட்டும் ஆர்வம், இசைப் புயலுக்கு பெரும் உத்வேகத்தை ஏற்டுத்தியது!

"ரெக்கார்டிங் போகலாமா?"

"ஓ...!"

சுப்புசாமி விரல்களில் பொடிதனை ஏந்தினார். மூக்கை அதி பரவசத்தோடு தொட்டு பாசத்தோடு சில மில்லி பொடியை ஏற்றிக்கொண்டார்.

சில பல இரசாயன மாற்றங்கள்...கொஞ்சம் மதுவந்தி நடனம்...திடீரென மைக்கேல் ஜாக்சன்

ஸ்பீடு...சடுதியில் ஐஸ்வர்யா (தனுஷ்) தினுசு ஆட்டம்... பின்னர் பளீச்சென பத்மா சுப்பிரமணியம் இலாவகம்...மறுபடியும் காயத்ரி ரகுராம் ஆட்டம்...!

"அ... அ... ஆ... அக்சூ...!"

விதவிதமாய்... அக்சூ...அக்சூ...!!!

ரஹ்மான் அள்ள அள்ளக் குறையாமல் ரெக்கார்ட் செய்தார். அவர் தேடிய அரிதினும் அரிதான ஒலி!

ஒலிப்பதிவை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த குண்டு ராஜாவுக்கும் ருக்குமணிக்கும் அப்பாராவுக்கும் செம போர் அடித்து விட்டது. 'இது என்ன பாட்டுபாடப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, தாத்தா பொடி போட்டு அச்சு அச்சு என்று தும்முகிறார்... இவரோ அதை விழுந்து விழுந்து ரெக்கார்டிங் செய்து கொண்டிருக்கிறார்!'

குண்டு ராஜா தன் ஆசை மனைவி 'எப்பொழுது காதில் ஹெட்போன் போட்டுக்கொண்டு பாடப் போகிறாள்?' என்று ஆவலோடு காத்திருந்தான்.

"சுப்பு சார் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டு ஏதாவது பானம் அருந்தலாமே? கொஞ்ச நேரத்தில் மறுபடியும் நாம் ரெக்கார்டிங்கைத் தொடரலாம்...!" என்றார் ரகுமான்.

"சூடாக குங்குமப்பூ போட்ட மசாலா பால் எனக்கும் என் நண்பர்களுக்கும் கிடைக்குமா?" என்று கேட்டார் சுப்புசாமி.

ருக்குமணி 'என்னை அடுத்து பாட கூப்பிடப் போகிறார், சார்...!' என்று தயாராக இருந்தாள். அடிக்கடி தொண்டையை லேசாக செருமிக் கொண்டிருந்தாள்.

தாத்தாவிடம் ஒரு பாடல் பேப்பர் கொடுக்கப்பட்டது. பின்னர் இசைப்புயல் சொன்னார்:

"பெண் குரல் ஒவ்வொரு பல்லவி பாடி முடித்ததும்,நீங்கள் உடனே தங்கள் மூக்கு இசையை ஒலிக்க வேண்டும்...!"

தனக்கும் பாடலின் பேப்பரை தருவார் என்று ருக்குமணி ஆவலாய் காத்திருக்க, ரஹ்மான் தனது ஒலிப்பதிவு கூட்டத்துக்குச் சென்று விட்டார்.

"தாத்தா, எனக்குப் பாட பேப்பர் கிடையாதா?" என்று கேட்டாள் பரிதாபமாக ருக்குமணி.

"எதுக்கு ரெண்டு பேப்பர்? நான் நடுவில் அக்சூதானே சொல்லப் போகிறேன்? நீ இதை முழுசாகப் படிச்சுக்கோ. அவர் வந்து சொல்லிக் கொடுத்ததும் பாடி விடு..." என்றார் சுப்புசாமி.

பாடலின் டிராக் இசை அறை முழுவதும் அவ்வப்போது ஒலித்தது.

ஒரு சிப்பந்தி தட்டில் மசாலா பால் ஏந்தி வந்து, பரிமாறினார்.

திடீரெனப் பரபரப்பு...!

மேலே கண்டபடி சுற்றியதுபோல ஆடை அணிந்தும் அணியாமலும், அங்க அவயங்களை இலவசமாகக் காட்டியபடி ஒரு ஒல்லிப் பெண் ஒய்யாரமாக ஸ்டுடியோவிற்குள் வந்தாள். தன் கூலிங் கிளாஸை தலையில் ஏற்றிக் கொண்டு நின்றாள்.

- அட, ஸ்ருதி ஹாசன்...!

தன் அறையிலிருந்து புயலென வந்த ரஹ்மான், ஸ்டைலாக தன் கையை ஸ்ருதியோடு குலுக்கினார்.

"ஹவ் ஆர் யூ...?" தடிக் குரல்... தேன் வாயிலிருந்து.

"சூப்பர் டியர். ரெக்கார்டிங் போலாமா? ஷால் வீ?"

"யார் கூட பாடுறாங்க?"

"அவர்... மிஸ்டர் சுப்புசாமி...!"

"வாவ், குட் காம்பினேஷன்...!" என்ற ஸ்ருதி, தாத்தாவின் அருகில் சென்று, ஆரத்தழுவி, கை குலுக்க, சுப்புவின் உடம்பே ஆடியது.

"ரொம்பவும் குலுக்கி விட்டாய் கமல் மகளே...!" என்று புன்னகைத்தார் சுப்புசாமி.

'ஸ்ருதியாம்...ஸ்ருதி...!' - ருக்குமணியின் கோபம்...சீமானின் கோபத்தைப்போல் நூறு மடங்கு எகிறியது...!

(அட்டகாசம் தொடரும்...)