தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 12 "மதிலேறிய மாணிக்கம்" - மோகன் ஜி

2024050718255273.jpg

இன்று என் கண்ணில் பட்டது இந்தப் புகைப்படம்.

நீங்க பார்க்கிற இந்தப் படமோ, அல்லது அதனோடு எடுக்கப்பட்ட ஒன்றோ, எங்கள் வங்கியின் ஹவுஸ் மேகஸினில் பிரதானமாக வந்திருந்ததது.

அது 2013ஆம் ஆண்டு. எங்கள் வங்கி 90 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருந்த நேரம். அந்த நிகழ்வு, வங்கியின் சரித்திரத்தில் ஒரு மைல்கல் அல்லவா?

90 புதிய கிளைகளைத் திறப்பது, புதிய சேமிப்பு திட்டங்கள் துவக்குவது என தலைமை அலுவலகம் ஏற்பாடுகள் செய்து வந்தது.

அச்சமயம் வங்கியின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் துணை முதல்வராக இருந்தேன். ஒரே நேரத்தில் முன்னூறு அதிகாரிகள் அங்கு தங்கி, பயிற்சி மேற்கொள்ளும் வசதி கொண்ட பெரிய கல்லூரி வளாகம் எங்களுடையது..

வங்கியின் 90ஆம் ஆண்டு சந்தர்ப்பத்தில் கல்லூரி சார்பாக என்ன செய்யலாம் என்று பயிற்சிக்கு வந்திருந்த இளம் அதிகாரிகளைக் கேட்டேன்.

பல ஆலோசனைகளை அள்ளிக் கொடுத்தார்கள். சிலவற்றை செயல்படுத்த ஏற்றுக் கொண்டேன்.

சற்றே கண்ணயர்ந்தாற் போலிருந்த இளம் பெண் அதிகாரியிடம், “ உங்க ஆலோசனை என்ன?” என வினவினேன்.

‘அதைத் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் சார்’ என்று சமாளித்தவள், சட்டென்று

“ நமது தோட்ட லான் பெரியதல்லவா? நாங்களும், அடுத்த வகுப்பு பயிற்சியாளர்களும் 90 என்ற எண் போல் அணிவகுத்து நிற்கிறோம். அதைப் படம் பிடித்து பெரிதாக்கி கல்லூரியில் மாட்டலாம். ஹவுஸ் மேகஸீனுக்கு அனுப்பலாம் சார்”

மற்றவர்களும் அதை ஆமோதிக்க,

அடுத்தநாள் காலையில் அவ்வண்ணமே செய்யலாம் என்று முடிவெடுத்தோம்.

அடுத்த நாள் காலை, எனது கேமராவுடன் கல்லூரியில் நுழையும் போதே, 90ஆம் எண் வடிவில் அணிவகுக்க ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது.

உயரத்திலிருந்து படம் எடுத்தால்தான் நன்றாக வருமென்று கல்லூரி உதவியாளர்கள் மூவரை அழைத்துக்கொண்டு, இரண்டாம் மாடியின் தளத்துக்கு விரைந்தேன்.

உதவியாளர்களை என்னைப் பிடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, மாடியின் கைப்பிடிச் சுவர் மேலேறி நின்று சில படங்களை எடுத்தேன். இன்னொரு இடத்துக்கு நகர்ந்து வேறு கோணத்திலும் படம் பிடித்து முடித்தேன்.

அப்போதே அங்கு வந்த எங்கள் பொதுமேலாளர் பதறிவிட்டார்.

அந்த உயரத்திலிருந்து விழுந்தால் என்ன ஆகியிருக்கும்?’ என்று கடிந்து கொண்டார்.

‘’ஒரு போட்டோ கிராபருக்கு இருநூறு ரூபாய் செலவழிக்க முடியாத நிலையிலா நாம இருக்கிறோம்? பாத்துக்குங்க மோகன்” என்று மெல்ல சகஜமானார்.

போட்டோக்கள் நன்கு வந்திருந்தன. பெரிதாக்கி சட்டமடித்து வளாகத்தில் ஒன்றும் மாட்டப் பட்டது.

‘நீங்க ஹீரோ சார்… ஸ்பைடர் மேன் சார்’ என்று இளம் அதிகாரிகள் உரிமையுடன் காமெண்ட் அடித்தார்கள்.

இந்த யோசனையைச் சொன்ன அந்தப் பெண் அதிகாரி தனியே வந்து, முதல்நாள் தூங்கி வழிந்ததிற்கு வருத்தம் தெரிவித்தாள்.

தூக்கக் கலக்கத்திலேயே இவ்வளவு நல்ல யோசனை சொன்னவள், விழிப்புடன் இருந்தால் இன்னமும் சிறப்பாக சொல்லியிருப்பாயல்லவா என்று சொல்லி அனுப்பினேன். அப்போது என்னுடன் பணிபுரிந்த ஒரு சீனியர் பயிற்றுனர் உள்ளே வந்தார்.

“மோகன் சார்! நேற்று மாலை இங்கே ஸ்டாஃப் மீட்டிங் போட்டு தாமதமானதால, வீட்டுக்கு லேட்டா போய் மனைவி கிட்டே திட்டு வாங்கினேன் தெரியுமா?” என்றார்.

“ அட! அப்போ நீங்களும் வீட்டுல திட்டு வாங்கினீங்களா?!”

“ பூனை மெல்ல வெளிய வருது மோகன் ஜி! ஒங்களுக்கு வீட்டுல என்னைவிட செம டோஸ் விழுந்ததுன்னு காலையிலேயே தெரியும்!”

“ ஆஹா! எப்படித் தெரியும் பாஸ்?”

“ நீங்க காலேஜுல நுழைஞ்சவுடனே மாடிக்குப்போய் கைப்புடிச் சுவர் மேலயே ஏறிட்டீங்க! பார்த்தேன்..”

“ஆமாங்க. அங்க இருந்து போட்டோ பிடிச்சேன். அதுக்கென்ன?”

“ஓ…சாரிங்க! நேத்து வீட்டுல திட்டு வாங்கினதுல மனசொடிஞ்சி போய் சூயிஸைட் அட்டெம்ப்ட் பண்றீங்ளோன்னு நெனைச்சேன்”

“ அடப் பாவி மனுஷா!”