தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த குமாரபாளையம் மலைமேல் தவளகிரி முருகன் கோவில் உள்ளது. இந்த மலைக்குன்றில் வீற்றிருக்கும் முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவராக விளங்குகிறார். இக்கோயில் முருகன் தவளகிரி தண்டாயுதபாணி என்று அழைக்கப்பட்டாலும், மலைக்கோவில் என்றே பிரசித்தி பெற்றது. இங்கு முருகன் சிலையும் பழனி மலையில் உள்ள முருகன் சிலையும் ஒரே வடிவில் அமைந்துள்ளது. இதனால் இந்த கோயில் பழனி முருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக ஒரு சிறப்பு வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.
இக்கோயில் 500 ஆண்டுகளுக்கு முன்பு துர்வாச முனிவர் உருவம் இல்லாத சிலையாக மேற்கு பார்த்து பிரதிஷ்டை செய்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இக்கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல வசதியாகப் படிகள் மற்றும் தார்ச் சாலைகள் உள்ளன.
ஸ்தல புராணம்:
ஒருமுறை துர்வாச முனிவர் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரரை தரிசித்துவிட்டு சத்தியமங்கலம் வழியாகக் கர்நாடக மாநிலம் சிருங்கேரிக்கு நடைப்பயணமாகச் சென்று கொண்டிருந்தார். பவானி ஆற்றைக் கடக்கும் போது திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து அதிகரிக்கத் தொடங்கியது. அதில் துர்வாச முனிவர் சிக்கித் தத்தளித்த போது முருகனை மனதில் நினைத்தார். அப்போது மயில் ஒன்று பறந்து வந்து ஒரு குன்றின் மீது அமர்ந்தது. முருகப்பெருமானே ஏதோ ஒரு அறிவிப்பைச் செய்கிறார் என்று உணர்ந்தார் துர்வாசர். உடனே வெள்ளம் குறையத் தொடங்கியதும் அவர் நீந்திக் கரைக்கு வந்து குன்றின் அடிவாரத்தை அடைந்தார். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, அருகில் உள்ள மலை இருப்பதை மயில் மூலம் முருகப் பெருமான் தனக்குத் தெரிவித்ததையடுத்து, தனக்கு மனம் தளராத தைரியத்தையும் கொடுத்துள்ளார் என்பதை உணர்ந்து மலை உச்சியில் முருகப்பெருமானின் திருவுருவச் சிலை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.
ஸ்தல அமைப்பு:
தவளகிரி மலையில் ஏறுவதற்கு 270 படிகள் கொண்ட பாதையும், வாகனங்கள் செல்ல தார்ச் சாலையும் உள்ளன. அடிவாரத்தில் மேற்கு நோக்கி நாகருடன் அமர்ந்திருக்கும் விநாயகரை முதலில் தரிசிக்கின்றனர். படிக்கட்டுகள் வழியாகச் சென்றால் தான் மலைக்கு நடுவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் இடும்பக் குமரன் அருள் பெற முடியும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். இடும்பக் குமரனைத் தரிசித்த பின் மேற்கே உள்ள பவானி நதியின் அழகையும் ரசிக்கலாம்.
முருகனைத் தரிசிக்கச் செல்லும் படிகளேறிச் சென்றால் தனித்தனி சந்நதிகளில் பால விநாயகரும், வள்ளி தெய்வானையும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். இங்கு வள்ளி, தெய்வானை இருவரும் முருகனை அடைய வேண்டும் என்ற நோக்கில் கன்னிப் பெண்களாக தவக்கோலத்தில் காட்சி தருவது வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லாத கூடுதல் சிறப்பு.
கருவறையில் முருகன் பால தண்டாயுதபாணியாக சத்தியமங்கல நகரத்தை நோக்கி மேற்கு பார்த்தவாறு வலது கையில் தண்டாயுதமும், இடது கையினை இடுப்பில் வைத்தும் அழகு ததும்பக் காட்சி தருகிறார். இவரின் இடது கை சுண்டு விரலில் தர்ஜனி மோதிரம் உள்ளது. இது மிகவும் விசேஷம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. 'தர்ஜனி' என்பதற்குச் சமஸ்கிருதத்தில் ஒருவனது ஞானம், கல்வி, திறமை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
கருவறையைத் தொடர்ந்து அர்த்த மண்டபம், மகா மண்டபம் அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் தன் அலகில் நாகத்தைப் பற்றிய மயில் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளன.
ஸ்தல விருக்ஷம் மகிழமரம்.
ஸ்தல சிறப்பு:
அறுபடை வீடுகளில் மூன்றாவதாக உள்ள பழனியில் முருகன் மேற்கு நோக்கி, அருள்பாலிப்பதும், அங்கு வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி சண்முக நதி பாய்வதும் போல் இங்கும் தண்டாயுதபாணி மேற்கு நோக்கியுள்ளார், பவானி நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. இதனால் இக்கோயிலில் உள்ள தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசித்தால் பழநி சென்ற பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சித்திரை மாதம் முதல் மூன்று நாட்களில் சூரியன் மறையும் முன், முதல் நாள் மூலவர் பால தண்டாயுதபாணியின் பாதங்களிலும், இரண்டாம் நாள் மார்பிலும், மூன்றாம் நாள் முகத்திலும் பிரகாசிப்பதால், இவர் சூரியனால் வழிபடப்படும் முருகன் என்ற சிறப்பையும் பெறுகிறார். இதுபோல ஒளி விழும் தருணத்தில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொண்டால் முருகப்பெருமானின் ஆசியோடு, சூரியபகவானின் அருளும் நமக்குக் கிட்டும் என்பது ஐதீகம். தவளகிரி முருகன் கோவிலுக்கு இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் திருமணத் தடை உள்ள கன்னிப்பெண்கள் வள்ளிக்கும் தெய்வானைக்கும் பட்டுப் பாவாடை சாத்தி மனம் உருகி வேண்டிக் கொண்டால் அந்த தடை நீங்குவதாக நம்பிக்கை.
செழிப்படைய வைத்த முருகன்:
முருகன் அருளால் இந்தப் பகுதி முழுவதும் விவசாயம் செழிப்புடன் விளங்குவதால் மக்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது. இந்த செழிப்பிற்குக் காரணமான முருகனுக்குச் சிறப்புச் செய்யும் விதமாக திப்புசுல்தான் தனது படைத்தளபதிகளில் ஒருவரின் வேண்டுகோளினை ஏற்று இந்த தண்டாயுதபாணி சுவாமிக்குக் கர்ப்ப கிரகம் கட்டித் தந்ததாகச் செவிவழிச் செய்தி உண்டு.
திருவிழாக்கள்:
சித்திரை மாதம் முதல் நாள், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை மற்றும் கார்த்திகை மாத கிருத்திகை ஆகிய விசேஷங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தை பூசத் திருநாள் இங்கே ஒரு பெருவிழாவாகும். அன்றைய தினம் ஆறு கால பூஜைகள், விசேஷ அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனைகளுடன் அமர்க்களமாக நடைபெறுகிறது.
மலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பால தண்டாயுதபாணிக்குப் பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தக் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த அழகுமிக்க காவடி ஆட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன் :
திருமணத்தடை, பில்லி, சூனியம், வியாபார விருத்தி, செவ்வாய் தோஷம், எதிரிகள் விலகல், தொழில் விருத்தி ஆகியவற்றுக்கு உகந்தது இந்த கோயில். திருமணத் தடையுள்ள கன்னிப் பெண்கள் வள்ளிக்கும், தெய்வானைக்கும் 21 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. மற்றும் பட்டுப் பாவாடை சாத்தி மன முருக வேண்டிக் கொண்டாலும் திருமணத் தடைகள் நீங்குவதாக ஐதீகம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 7.30 மணி முதல் மதியம் 12.00 வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையில் கோவில் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
சத்தியமங்கலத்திலிருந்து கொடிவேரி செல்லும் பேருந்தில் பயணித்து மலைக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் கோயில் அடிவாரத்தை அடையலாம். சத்திய மங்கலத்திலிருந்து பேருந்து வசதி மட்டுமின்றி ஷேர் ஆட்டோ போன்ற பல்வேறு வாகன வசதிகள் உள்ளன.
திருமணத்தடைகளைப் போக்கும் தவளகிரி முருகன் கோயில்
முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
Leave a comment
Upload