தொடர்கள்
தொடர்கள்
சந்திப்போம் பிரிவோம் 12 - பொன் ஐஸ்வர்யா

20240506172941487.jpg

அமெரிக்க வாழ்க்கை

தேனும் பாலும் ஆறாய் ஓடும் என்கிற மனக்கோட்டை கட்டிக் கொண்டு வந்து அமெரிக்காவில் காலடி வைக்கும் 99% சதவீத மக்களுக்கு முதல் பத்து வருடம் அக்னி பரீட்சைதான். கையில் பெருந்தொகையுடன் வந்து இறங்குபவர்கள் கதை வேறு. ஆனால் அப்படி எல்லோரும் வருவதில்லை. மேற்படிப்புக்காக வருபவர்கள், படித்தபின் இங்கேயே வேலை தேடுபவர்கள், பணிக்காக H1 விசாவில் முதன்முதலாய் நுழைபவர்கள் என்று இந்த வகையில் வந்து சேருபவர்கள்தான் ஏராளம்.

எல்லோருக்குமே முதல் ஒரு வருட காலம் சமாளிப்பதற்குள் நாக்கு தள்ளி விடும். முதலில் புதிய நாட்டின் கிடுக்குப்பிடி சட்ட விதிகளை சரியாய் தெரிந்து, புரிந்து நடந்து கொள்ள வேண்டும். தங்குவதற்கு வீடு எடுத்தால் 12 மாத கடுமையான லீஸ் அக்ரிமெண்ட். வீட்டு வாடகை, வருமானத்தில் பெரும்பகுதியைப் பிடுங்கி விடும். இடையில் வீடு மாற்றினால் கணிசமான தொகையை இழப்பீடாக கறந்து விடுவார்கள். வாடகை கெடு ஒரு நாள் தாமதமானாலும் அபராதம் உறுதி. எல்லாவற்றிலும் எப்பொழுதும் கண்ணுங்கருத்துமாய் இருக்க வேண்டும்.

அடுத்தது சாப்பாட்டுப் பிரச்சனை. நன்றாக சம்பாதிக்கும் வரை ஹோட்டல் பக்கமெல்லாம் தலைகாட்ட முடியாது, விலையெல்லாம் அப்படி. இருபத்தைந்து முப்பது டாலருக்குக் குறைந்து வயிற்றுக்கு சாப்பிட முடியாது. இந்திய ரூபாயில் இரண்டாயிரத்து ஐநூறு மூவாயிரம். புதிதாய் போனவர்களுக்கு கட்டுபடி ஆகுமா?. பண்டம் பாத்திரம் வாங்கி தானே சமைத்து சாப்பிட்டால் தான் உண்டு. இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இந்த ஊரில் அரிசிப் பருப்பு காய்கறி விலையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் யானை விலை குதிரை விலையாய் தோன்றும். அறுசுவை உணவை எல்லாம் தற்காலிகமாய் தள்ளிப் போட வேண்டியதுதான்.

நியூயார்க் போன்ற மிகப்பெரிய நகரங்களை தவிர, மற்ற எல்லா இடங்களிலும் பொது போக்குவரத்து (Public Transport) என்பது மிகவும் அரிது. டாக்ஸிப் பக்கம் திரும்பினால் தாறுமாறான கட்டணங்கள். ஏறி இறங்கினால் பத்து இருபது டாலர். பாய்ந்தோடும் வாகனங்களைத் தவிர காக்காய் இல்லாத சாலைகளில் தன்னந்தனியாய் லொங்கு லொங்கென்று நடந்து போவதெல்லாம் சாத்தியமில்லை.

இங்கே கார்தான் கால்கள். ஒவ்வொரு இடமும் நான்கைந்து மைல் தள்ளி தள்ளிதான் இருக்கும். வெளியில் போக வர சொந்தமாக வாகனம் வேண்டும். கார் என்பது இங்கு அத்தியாவசிய பொருள். கார் ஓட்ட முதலில் லைசென்ஸ் வாங்க வேண்டும். லைசென்ஸ் வாங்க சாலை விதிகளை நன்கு படித்து தேர்ச்சி பெற வேண்டும். இடதுகைப் பக்கம் ஸ்டிரிங் பிடித்து ஓட்ட முறையான பயிற்சி அவசியம். அந்த பயிற்சி முடிக்க ஆறு ஏழு மாதம் ஆகி விடும்.

அடுத்ததாக புது ஊரின் கொடுமையான க்ளைமேட். தமிழ் நாட்டுக் மக்களுக்கு சற்றும் பரிச்சயமில்லாத குளிர் கொன்று எடுத்து விடும். பல மாதங்கள் உறைபனி மைனஸ் டெம்ப்பரேசர். அவ்வப்போது பஞ்சு பஞ்சாய் பனி பொழியும். அன்றாடம் அலுவல்கள் காலை எட்டு மணிக்கு துவங்கும் எந்திர வாழ்க்கை. கொஞ்சம் கொஞ்சமாய் இந்த இறுக்கமான வாழ்க்கை ஓட்டத்திற்குப் பழகிக் கொள்வதற்குள் மூச்சு முட்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாகவிசாஎன்கிற கத்தி எப்போதும் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும். சரியான நேரத்தில் விசா நீட்டிப்பிற்கு தவம் இருக்க வேண்டும். விசா நீட்டிப்பு காலங்களில் அவசர ஆபத்துக்கு சொந்த ஊர் வந்து போக முடியாது. அதிகபட்சமாக மூன்று வருடமோ, ஆறு வருடமோ பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்து அங்கே வாழ்ந்து விட்டு அடுத்து எங்கே போவது என்கிற கவலை அகலாத நிழலாய் தொடரும்.

20240506173258451.jpg

இதற்கிடையில் வேலைபார்க்கும் நிறுவனம் சீட்டு கிழிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமே என்று இராப்பகலாய் உழைக்க வேண்டும். தொடர்ந்து பணிபுரிய -140 கிடைக்க தாமதமானால் ( பெரும்பாலும் தாமதமாகும்) பிள்ளைகளின் படிப்பில் தொய்வு ஏற்படாமல் இருக்க என்ன செய்வது என்ற சிந்தனை ஒரு புறம். தாய் நாடு திரும்பினால் திரும்பவும் ஆதியில் இருந்து தொடங்க வேண்டுமே என்கிற அச்சம் மறுபுறம். இப்படியாய் கிரீன் கார்டு என்கிற நிரந்தர அனுமதி வரும் வரை இவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.

அமெரிக்கா பணக்காரர்களுக்கான நாடு. கையில் காசு இல்லையென்றால் இங்கு வேலைக்காகாது. காசு சம்பாரிக்கும் இலக்கை நோக்கி ஓடி ஓடி போராடித்தான் ஒரு இடத்தைப் பிடிக்க முடியும். அனைத்து தளங்களிலும் குடியுரிமை / க்ரீன் கார்ட் பெற்றவர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே ஒரு தலைமுறை பெரும் இடைவெளியைக் காணலாம்.

ஏழெட்டு வருடம்சர்வைவல் ஆஃப் தி பிட்டஸ்ட்மாதிரி ஒட்டியும் ஒட்டாமல் தம் கட்டி சமாளித்து விட்டால்க்ரீண் கார்டோஅல்லது குறைந்த பட்சம் -140யோ கையில் கிடைக்கப் பெற்றப் பிறகு அமெரிக்காவில் ராஜ வாழ்க்கைதான். துணிந்து ஒரு இடத்தில் இல்லையென்றாலும் இன்னொரு இடத்தில் திறமைக்கேற்ற வேலையை தேடிக் கொள்ளலாம். கணவன் மனைவி என்று இரண்டு பேரும் வேலைக்குப் போகலாம். கைநிறைய சம்பளமாய் டாலர்களை சம்பாதிக்கலாம். அரண்மனை போன்ற வீடு, ஒன்றுக்கு இரண்டாய் சொகுசுக் கார்கள் வாங்கலாம். நினைத்த போது தாய்நாடு வந்து போகலாம். எதிர்பார்த்துப் வந்த அமெரிக்க கனவு வாழ்க்கை இதற்குப் பிறகுதான் மெல்ல கைகூடி வரும்.

இங்கு ஒரு விஷயம் சர்வ நிச்சயம், “எதுவும் இலவசம் கிடையாது. அவரவர் கையை ஊன்றி கரணம் போட்டால்தால் சோறு”!

நாம் நினைப்பதைப் போல அமெரிக்க வாழ்க்கை அத்தனை சுலபமானது இல்லை

மேலும் பேசுவோம்

தொடரும்