தொடர்கள்
தொடர்கள்
பெண்களுக்கான சுய அதிகாரம் – 26 பத்மா அமர்நாத்

2024050519354686.jpg

The question of what you want to own, is actually the question of how you want to live your life.

எதை நிராகரிக்க வேண்டும், எதை வைத்திருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில்தான் நாம் மிகப் பெரிய சிக்கலை எதிர்கொள்கிறோம். ஒரு பொருளின் மீது அதிக ஈர்ப்பு இல்லை என்பதை உணர்ந்தாலும், "எனக்கு அது பின்னர் தேவைப்படலாம்", போன்ற பல காரணங்களை, நம் மனம் சொல்லும். இந்த எண்ணங்கள் நம் மனதில் சுழன்று சுழன்று, அப்பொருளை விட்டுவிட முடியாத படி கெட்டியாகப் பிடித்துகொள்வோம்.

Function- ஒரு பொருளின் செயல்பாடு (பழைய பொருட்கள்),

Information-பொருள் தரும் தகவல் (புத்தகங்கள், பேப்பர்),

Sentiment,-அப்பொருளினால் நாம் பெறும் உணர்வு (புகைப்படங்கள், நினைவு பொருட்கள்)

இவற்றின் அடிப்படையில் தான் பொருட்களைப் பிரித்துப் பார்க்க வேண்டும். முடிவெடுக்கக் கடினமானவற்றிலிருந்து நாம் தொடங்கக் கூடாது. முதலில் ஆடைகளிலிருந்து தொடங்கி, அலங்காரப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள், புத்தகங்கள் பின் இறுதியாக நினைவுப் பொருட்கள் என அப்புறப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பொருளையும் கையில் எடுத்துப் பார்த்து உணருங்கள். உண்மையிலேயே, உங்கள் மனதிற்கு சந்தோஷத்தை வரவழைக்கக் கூடிய, உங்கள் மனதிற்கு நெருக்கமானப் பொருட்களாக இருந்தால் மட்டுமே, அது உங்களுடன் இருக்க வேண்டும்.

நிராகரிக்கக் கடினமாக இருந்தால், முதலில் அதை ஏன், எப்போது வாங்கினீர்கள்? அதன் பயன்பாடு என்னவாக இருந்தது? ஏன் இன்னும் வைத்திருக்கிறீர்கள்? என்று சிந்தித்துப் பாருங்கள். இன்று, உங்கள் வாழ்க்கையில் அதன் பங்கு என்ன என்பதை, மறுபரிசீலனை செய்யுங்கள்.

வாழ்க்கையில், ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு பங்கு உண்டு. எல்லா ஆடைகளும் இழையாகக் கிழிந்துப் போக, உங்களிடம் வரவில்லை. மக்களும் அப்படித்தான். வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நெருங்கிய நண்பராகவோ அல்லது காதலராகவோ மாற மாட்டார்கள். சிலருடன் நீங்கள் பழகுவது கடினம். சிலரை ஆரம்பத்திலிருந்தே விரும்பமாட்டீர்கள். ஆனால் இந்த நபர்களும், நீங்கள் யாரை விரும்புகிறீர்கள், உங்கள் தேர்வு எப்படிப் பட்டது என்பதை உணர்த்த உதவியாக இருந்துள்ளனர்.

அதுப்போல, பொருட்களும், வந்த பணியை நிறைவேற்றி, இனி உபயோகப் படாது என்ற நிலைக்கு வந்தவுடன், அவற்றிற்கு நன்றி தெரிவித்து, அப்புறப்படுத்திவிடுங்கள். அதேபோல, பார்க்க மகிழ்ச்சியைத் தரும் புத்தகங்களை மட்டுமே அலமாரியில் வைத்துக் கொள்ளுங்கள். என்றைக்குமே புத்தகத்தைப் பார்த்த அந்த நொடி தான், அதை வாசிப்பதற்கான வாய்ப்பாக அமையும். அதை விடுத்து, "இதை வேறொரு நாள் படிப்பேன்…“என்றைக்காவது முடித்துவிடுவேன்...” என்பார்கள்.

ஏன் இன்னும் இவற்றை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், என்று கேட்டால்,​​ பதில்கள் அனைத்தும்என்றாவது ஒரு நாள்" செய்ய விரும்பும் விஷயங்களைப் பற்றி இருக்கும். நினைவிருக்கட்டும்…. “என்றைக்காவதுஎன்றால், என்றைக்குமே இல்லை என்று பொருள்.

புகைப்படங்களும் அப்படித் தான். புகைப்படங்கள் என்பது கடந்த கால நினைவுகள். ஒருசுற்றுலா சென்று வந்தால், குறைந்தது நூறு படங்கள் கிளிக் செய்யப்படும். இயற்கைக் காட்சிகள், மான், சூரிய உதயம், ரோஜாப் பூ, என இவற்றையெல்லாம் நீக்கி விட்டால், உண்மையிலேயே நமக்கு ஆனந்தம் தரக்கூடியப் படங்கள் என்று பார்த்தால், ஒரு ஐந்து அல்லது பத்து தான் மிஞ்சும்.

குழந்தைகளின் சிறு வயது நினைவாக அவர்கள் எழுதிய முதல் வாரத்தை, முதல் பள்ளிக்கூடப் பை, சீருடை, புத்தகம் என பத்திரப்படுத்தி இருப்போம். அவற்றை இப்போது பிள்ளைகளிடம் காண்பித்துப் பாருங்களேன்... “இன்னுமா இதெல்லாம் இருக்கு..?” என்பார்கள்.

எதையாவது விட்டுவிலக மனம் வரவில்லை என்றால் அதற்கு ​​​​இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு: கடந்த காலத்தின் மீதான பற்றுதல் அல்லது எதிர்காலத்தின் மீதான பயம்.

நம் நினைவுகளையோ, கடந்த கால அனுபவங்களையோ நாம் பாதுகாப்பது முக்கியமல்ல. மாறாக, கற்ற பாடங்களினால், வளர்ந்து ஆளான மனிதராக இருக்கும் நம்மை தான், நாம் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும். இந்த நினைவுச் சின்னங்கள் நமக்குக் கற்பிக்கும் பாடம் இதுதான். நாம் வாழும் இடம் நாம் இப்போது இருக்கும், நமக்கான இடமாக இருக்க வேண்டுமே தவிர, கடந்த காலத்தில் நம்முடன் இருந்த நபருக்காக அல்ல.

நமக்குத் தேவைப்படாது என்ற நிலையில் உள்ள பொருட்களைக் கழிப்பது, ஒருக்காலும்வீண் செயல் அல்ல

இணைந்திருங்கள்தொடர்ந்து பேசுவோம்.