தொடர்கள்
பொது
காணாமல் போகும் துறைகள் - சத்யபாமா ஒப்பிலி

20240425071806144.jpg

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததுமே எல்லா கல்லூரிகளும் களை கட்டும். மதிப்பெண்களை வைத்து அந்தந்த குரூப் க்கு கட் ஆஃ நிர்ணயிக்கப்படும். குறைந்த பட்சம் 95 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அட்மிஷன் திணறாமல் கிடைக்கும். மற்றவர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். 70 எல்லாம் மதிப்பெண்ணாகவே கருதப்படுவதில்லை இப்பொழுது. இது பொதுவாக அட்மிஷன் சமயம் வரும் புலம்பல். இந்த கட்டுரை மதிப்பெண்களை பற்றி அல்ல.

உயர் கல்வியில் கோலோச்சிக்கொண்டிருந்த சில துறைகளின் நிலமையைப் பற்றி. நான் கல்லூரியில் படிக்கும்போது, B. Sc கணிதம், இயற்பியல் இரண்டுமே மிகவும் பிரபலாமான பாடங்கள். தேர்வு முடிவு வந்தவுடன், முதலில் இவை ஏதாவது ஒன்றில் மாணவ, மாணவிகள் சேர்ந்து விடுவார்கள். பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால் இதை விட்டு விட்டு அதில் தாவி விடுவார்கள். அந்த காலி இடங்கள் மற்றவர்களால் நிறப்பப் படும். பொறியியல் கல்லூரியும் சொற்பமாகவே இருந்தன. அதனால் இந்த துறைகள் எப்பொழுதுமே நிறைந்து வழித்துக்கொண்டு தான் இருந்தன. இப்பொழுது மதிப்பெண்களும் அதிகமாக வாங்குகின்றனர்(போடுகின்றனர்?தமிழில் எல்லாம் 100/100 மதிப்பெண்கள் எப்படித்தான் வாங்குகிறார்களோ?!!)பொறியியல் கல்லூரிகளும் அதிகமாக இருப்பதால் இந்த பாடங்களுக்கு மவுசு கொஞ்சம் குறைந்துதான் போயிருக்கிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்னால், கொண்டாடப்பட்ட இந்தத் துறைகள் , இப்பொழுது ஐம்பது சேர்பதற்க்கே திணறுகிறது. கணினி சம்மந்தப்பட்ட பாடங்கள் இன்னும் பிரபலமாக இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டால் அதன் மதிப்பு கூடுகிறது. பாரம்பரியமாக வந்து கொண்டிருந்த பாடத்திட்டங்கள், கடந்த சில வருடங்களாகவே மாற்றம் கண்டுகொண்டு தான் இருக்கின்றன. இது Industry demand ஐ பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். படிக்கும் மாணவ மாணவிகளை இளங்கலை முடிக்கும் பொழுதே வேலைக்குத் தயார் செய்துவிட வேண்டிய கட்டாயம் எல்லா கல்லூரிகளுக்கும் இருக்கின்றது . தேவைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் பாடத்திட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டின் ஆரம்பத்திலும் பாடத்திட்டங்களை கொஞ்சம் திருத்தியோ மாற்றியோ செய்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. பாடத்திட்டத்தில் என்ன மாற்றம் செய்தாலும், துறையின் பெயரில் மாற்றம் கொண்டுவரவில்லை இன்னும். கணிதம், இயற்பியல் அதே பெயருடன் தான் இருக்கின்றன. அதனாலேயே மாணவ சேர்க்கை அடிபடுகிறது.

இந்த மாற்றம் இதழியல் பாடத்திலும் ஏற்பட்டிருக்கிறது. ஒரு ஐந்து வருடம் முன் இதழியல் மேல் இருந்த ஆர்வம் இப்போது குறைந்துவிட்டது. நிறைய காரணம் தோன்றினாலும், பொதுவாக இதழியலின் கோட்பாடுகள் மாறிவிட்டதால் என்று தோன்றுகிறது. பத்திரிகை நெறிமுறைகள் எல்லாம் மாறிவிட்டன. நெடுங்காலம் இந்தத் துறையில் இருப்பவர்களுக்கே இந்த ராக்ஷச மாற்றம் அயர்வைத்தான் கொடுக்கிறது. பெற்றோர்களிடமும் எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன. . சம்பாதிக்க முடியுமா? இது இல்லை என்றால் வேறு என்ன வேலை? சம்பளம் எவ்ளவு கிடைக்கும்? மேலை நாடு சென்று படித்தால் நம் நாட்டில் வேலை கிடைக்குமா கூடுதல் சம்பளத்துடன்?

கிட்டத்தட்ட இதே கேள்விகள் தான் கணிதத்திற்கும், வேதியல், இயற்பியல், உயிரியலுக்கும். சில கல்லூரி இந்தத் துறைகளுக்கு எல்லாம் மூடு விழா கண்டுவிட்டன.

இதை ஒரு காலத்தின் போக்காகப் பாக்கவேண்டுமே அல்லாது அந்த துறையின் குறையாக காண முடியாது. காலம் மாற மாற, தேவை மாறுகிறது, தேவைக்கேற்ப கல்வித் துறைகளும் மாறுகின்றன. அனால் இந்த கால கட்டம் பொதுவாக அனைத்து கல்லூரிகளுக்குமே ஒரு சவாலாகத் தான் இருக்கின்றது. பாட திட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் கொண்டு வந்தாலும் மாணவ சேர்க்கை ஒரு கேள்வியாகத்தான் இருக்கிறது. புது கல்வித்திட்டம் போல 4 வருட கல்வியில், எந்த நேரத்தில் படிப்பை நிறுத்தினாலும் அதற்கேற்ப டிகிரியோ, டிப்ளோமா வோ பெற்றுக் கொள்ளலாம் என்று கொண்டுவந்தால், ஒருவேளை. இந்த துறைகள் விட்ட இடத்தைப் பிடிக்கலாம்.