தொடர்கள்
அனுபவம்
வண்டி மாடுகள் - மாலா ஶ்ரீ

20240418095935673.jpeg

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து, அன்றாடப் பணிகளுக்கு சென்று வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இது ஒருபுறம் என்றால், சென்னை நகரின் முக்கிய பகுதியில் இருந்து அதிக பாகங்களை வாயில் நுரை அல்லது எச்சில் ஒழுக இழுத்து செல்லும் வண்டி மாடுகளின் நிலைமை இன்னும் படுமோசமாக உள்ளது. இதுபற்றி அறிவதற்காக, பிராட்வே பகுதிகளில் சுற்றி வந்தபோது கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சியடைய வைத்தது.

குறிப்பாக, சென்னை பிராட்வே, சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம், கொத்தவால்சாவடி பகுதிகளில் ஏராளமான மொத்த காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகள் உள்ளன. மேலும், இங்கு ஏராளமான தனியார் லாரி புக்கிங் பார்சல் குடோன்களும் நீண்ட காலமாக இயங்கி வருகின்றன. இந்த ரயில்வே பார்சல் மற்றும் மொத்த விற்பனை அங்காடிகளில் இருந்து வடசென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட 3 சக்கர லோடு சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிக்காரர்கள், தங்களின் குடும்பத்தினருடன் நடைபாதையிலேயே ‘டென்ட்’ கொட்டகை அமைத்து வாழ்கின்றனர். இதுதவிர, சரக்கு ஆட்டோ டிரைவர்களும் எந்நேரமும் வலம்வருவர்.

அதுசரி… இவர்களை மீறி மாட்டு வண்டிக்காரர்களுக்கு லோடு கிடைத்துவிடுமா? அதற்கும் ஒருசில புரோக்கர்கள் சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் மற்றும் பிராட்வே லாரி புக்கிங் ஆபீஸ் மற்றும் மொத்த விற்பனை அங்காடிகளில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு முறையாக கமிஷனை வெட்டி விட்டால், மாட்டு வண்டிக்காரர்களுக்கு குறைந்தபட்ச வாடகை கட்டணத்துடன் லோடு நிச்சயம். அதிகபட்ச சரக்குகளை ஒத்தை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டாச்சு… வழிநெடுக போலீசார் உட்பட பலருக்கு பணம் வழங்கிய படி வண்டிக்காரர் மாட்டை ஓட்டிக் செல்வார். ‘என்னடா… ரூட் மாறுதே!’ பாக்குறீங்களா? இதுதான் மாட்டு வண்டிக்காரர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை!

இதுதவிர, தனது அன்றாட உணவு தேவைக்காக, போஸ்டர்களைத் தேடி, சென்னை மற்றும் புறநகர் பகுதி சாலைகளில் அவிழ்த்து விடப்படும் பசுமாடுகள், பொதி காளைகள் மற்றும் இளங்கன்றுகளின் நிலைமையும் அந்தோ பரிதாபம். இவை அனைத்தும் சாலைகளில் சுற்றி திரிந்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி, சாலையோரங்களிலேயே ஓய்வெடுக்கின்றன. இதில் பால் கறக்கும் ஒருசில ‘நோஞ்சான்’ பசுமாடுகளை மட்டும் சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் வீடுகளுக்கு ஓட்டிச் சென்று, அந்த மாட்டிடம் இருந்து ஒட்ட பாலை கறந்து விட்டு, மீண்டும் சாலைப் பகுதிகளுக்கு விரட்டிவிடுவதும் வாடிக்கையாக நடைபெறுகிறது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நிற்க… அதிகபட்ச பாரங்களை ஏற்றி செல்லும் ‘நோஞ்சான்’ வண்டி மாடுகள் சாதாரணமாக சாலைகளில் தள்ளாடியபடியும், சென்னை தங்க சாலை, வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம், வியாசர்பாடி மற்றும் மூலக்கடை பகுதிகளில் உள்ள மேம்பாலங்களில் ஏறும்போது வண்டி மாடுகளின் நிலைமை அந்தோ பரிதாபம்… போதிய உணவு மற்றும் குடிப்பதற்கு கழனி தண்ணீர் கிடைக்காமல் நோஞ்சனாக மாறிய ஒருசில வண்டி மாடுகள் மேம்பாலத்தில் அதிக பாரத்துடன் மேலே ஏறமுடியாமல், கோடை வெயிலின் உக்கிரம் தாங்காமல், அப்படியே வாயில் நுரை பொங்க மயங்கி படுத்துவிடுகின்றன. இவை அனைத்தும் சென்னை புறநகர் பகுதிகளில் அன்றாட நிகழ்வுகளாகி விட்டது.

இதுகுறித்து ஒருசில மாட்டு வண்டிக்காரர்கள் கூறுகையில், “சென்னை நகரில் மாட்டு வண்டிகளில் சரக்குகளை ஏற்றிச் செல்ல தடை உள்ளதால், எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சவாரி கிடைப்பதே குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. நாங்கள் ஏற்கெனவே திண்டிவனம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு தென்மாவட்டங்களில் போதிய வருமானமின்றி சென்னை நகரப் பகுதிகளில் தஞ்சம் புகுந்திருக்கிறோம். இங்கு ஏற்கெனவே மாட்டு வண்டி லோடுகளுக்கு மவுசு இருப்பதை வண்டி போட்டு சம்பாதித்து வந்தோம்.

இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. ஒரு நாளைக்கு ஒரு லோடு கிடைப்பதே பெரிய விஷயமாக மாறிவிட்டது. இதில் வண்டி மாடுகளுக்கு எங்கிருந்து போஷாக்கு மிகுந்த தீவனங்களை வாங்கிப் போட முடியும்? ஓட்டல்களில் வாழை இலையுடன் வீசியெறியப்படும் மீதமான உணவு பொருட்களுடன் குடும்பத்தினர் சேகரிக்கும் கழனி நீரை வண்டி மாடுகளுக்கு தருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச வருமானத்தில் புண்ணாக்கு உள்பட பசும்புற்களைக்கூட வாங்க முடியாது.

இதனால் எங்களின் மாடுகள் நோஞ்சானாக மாறி, அதிக சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு சிரமப்படுகின்றன. அந்தந்த பகுதிகளில் சரக்குகளை இறக்கும்போது, வண்டி மாடுகளுக்கு ஓய்வு கொடுத்து, கோடை வெயிலின் உக்கிரத்தில் ஒரு வாளி தண்ணீரை மட்டுமே வழங்க முடிகிறது.

இனியாவது அதிகபட்ச பாகங்களை இழுக்கும் வண்டி மாடுகளுக்கு முறையான உணவளித்து போற்றி பாதுகாப்பதற்கும், ஆங்காங்கே நிழல் தரும் பல்வேறு பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து, நிழல் தரும் மரங்கள் மூலம் அனைவரும் ஒருங்கிணைந்து, கோடை வெயிலின் உக்கிரத்தை தணித்து கொள்வோமே?!