தொடர்கள்
தொடர்கள்
‘தமிழுக்கு ஒரு முத்தம்’ – 8 - பித்தன் வெங்கட்ராஜ்

20240410085409575.jpg

'தாயிற் சிறந்த கோவிலும் இல்லை'

-ஔவையார் (கொன்றைவேந்தன்)

அனைவர்க்கும் இனிய அன்னையர் நாள் வாழ்த்து. அம்மா, அம்மை, அன்னை, தாய் என்றெல்லாம் நாம் அழைக்கும் தாய்மையின் பெருமைகளைப் பற்றி எழுதித் தீராது. ஆயினும் நம் பங்குக்குச் சங்க இலக்கியங்களில் இருக்கும் 'தாய்'மார்கள் பற்றிய தகவல்கள் சிலவற்றைக் காண்போம்.

பொதுவாக, சங்க இலக்கியங்களில் இரு தாய்மார்கள் காணப்படுகின்றனர். அவர்கள் ‘நற்றாய்’ மற்றும் ‘செவிலித்தாய்’ ஆகியோர் ஆவர். நற்றாய் என்பவள் ஈன்றெடுத்த தாய் என்றும், செவிலித்தாய் என்பவள் உடனிருந்து வளர்த்த தாய் என்றும் அறிகிறோம். 'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே' (புறம்: 312) என்கிறாள் ஒரு நற்றாய். போலவே, தலைவியின் அகவாழ்வு முழுமைக்கும் செவிலித்தாயே பொறுப்பு என்பது போல, தலைவியின் களவு, காதல் வாழ்வு பற்றியெல்லாம் செவிலித்தாயே பெரும்பாலும் பேசுகிறாள்.

'கிழவோன் அறியா அறிவினள் இவளென

மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்

ஐயக் கிளவியின் அறிதலும் உரித்தே' (தொல் – களவியல்: 27)

என்பது நற்றாய் பற்றியும் செவிலித்தாய் பற்றியும் தொல்காப்பியம் கூறும்‌ ஒரு செய்யுள். தனக்குரிய நல்ல தலைவனைத் தன் மகளுக்குத் தேர்ந்தெடுத்துக்கொள்ளத் தெரியாது என்று கருதி, இதனைச் சான்றோர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பது அவ்விருவருக்கும் உரிய குணமே என்கிறார் தொல்காப்பியர். இருவருமே தலைவியின் அதாவது தம் மகளின்மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்பது இதன்மூலம் விளங்குகிறது.

2024041008543958.jpg

'தோழி தானே செவிலி மகளே' (களவியல்: 35) என்றும் 'தாய் அறிவுறுதல் செவிலியோ டொக்கும்' (களவியல்: 48) என்றும் கூறுகிறார் தொல்காப்பியர். பழகியோர் எல்லாம் தோழியர் அல்லர்; செவிலித்தாயின் மகளே தலைவியின் தோழி என்றும், தன் மகளின் களவொழுக்கம் பற்றி நற்றாய் அறிதல் செவிலித்தாய் அறிதல் போன்றதே; அஃதாவது தந்தை மற்றும் சகோதரர்களைப் போன்று நற்றாய் கோபப்படமாட்டாள் என்றும் கூறுகிறார் தொல்காப்பியர். பெற்ற தாயின் உள்ளம் தன்னை வருத்தும் செயல்செய்த தன் பிள்ளையின்மீதும் கோபம்கொள்வதில்லை என்பது உண்மைதானே!

'கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள

நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக் குரிய ஆகும் என்ப‌' – (தொல் – கற்பியல்:12)

என்னும் பாடலில், நடந்தவற்றிலும் நடந்துகொண்டிருப்பவற்றிலும் நடக்கப்போவதிலும் வழிகாட்டுதல்போல நல்லவற்றைக் கூறுதலும், தீயவற்றை விலக்கச்சொல்லுதலும் செவிலித்தாய்க்கு உள்ள உரிமைகளாகும் என்கிறார் தொல்காப்பியர்.

அதே போல, 'ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே' என்று ஒரு தாய் பாடியிருந்தாலும், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்று வள்ளுவர் கூறியிருந்தாலும், தன் மகன் வீரமரணம் அடைந்தான் என்று அறிந்தபோதுதான் அவனை ஈன்ற பொழுதைவிட அத்தாய் பெருமைப்பட்டதாகப் பாடுகிறார் புலவர் பூங்கணுத்திரையார்.

'மீன் உண் கொக்கின் துவி அன்ன

வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்

களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே...' (புறம்: 277)

என்பதே அப்பாடல்.

போலவே மற்றொரு பாடல்.

'சிற்றில் நற்றூண்பற்றி நின்மகன்

யாண்டு உளனோ? என வினவுதி என்மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்

புலிசேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர் களத்தானே' - (புறம்: 86)

அஃதாவது, சிறியவீட்டின் நல்ல தூணைப் பற்றி நின்றுகொண்டு, 'உன் மகன் எங்கே?' என்று என்னிடம் கேட்கிறாய். என் மகன் எங்கே இருக்கிறான் என எனக்குத் தெரியாது. ஆனால், அந்தப் புலி தங்கியிருந்த கல் அளை (கற்குகை) போன்று அவனை ஈன்ற வயிறு இதோ இங்குதான் இருக்கிறது. ஆகவே, அவனைத் தேடவேண்டாம், அவனே போர்க்களத்திற்கு வருவான் என்று பாடுகிறார் காவற்பெண்டு என்னும்‌ பெண்பால் புலவர். அவர் ஒரு பெண்பால் புலவர் என்பதையும் தாண்டி ஓர் அன்னையும் அல்லவா!

தலைவன் மற்றும் தலைவியரின் அக மற்றும் புற வாழ்வில் நற்றாய் மற்றும் செவிலித் தாயாரின் பங்குகள் அளப்பரியன. அவர்களின் அன்பையும் கனிவையும் துணிவையும் வீரத்தையும் தெற்றென விளக்குகின்றன சங்க கால இலக்கியங்களும். எக்காலும் மாறாத தன்மை தாய்மை என்றால் அதுவும் மிகையின்மையே.

20240410085812308.jpg

தன் மகனைப் புலியாக்கி அவனைச் சுமந்த வயிற்றைக் கற்குகை என்று பாடிய அன்னை காவற்பெண்டுக்கு ஒரு தமிழ்முத்தம் தந்தோம்.

அவர்க்கும் நமக்கும் யாவர்க்கும் அன்னையாம் நம் தமிழுக்கு

இஃது எட்டாவது முத்தம்.

தொடரும்‌…