பாத்ரூம் கதவிடுக்கில் எசகுபிசகாக பெருச்சாளி மாட்டிக்கொண்டதோ என்று யோசித்தாள் கோமுப்பாட்டி.
சுப்புசாமி ஜலக்கிரீடை செய்து கொண்டே, "ஸ்னேகிதனே... ஸ்னேகிதனே... ரகசிய ஸ்னேகிதனே... ஏ ... ஏ...!" உச்சமோ உச்சஸ்தாயில் பாடிக் கொண்டிருந்தார்.
ரைஸ்மில்காரனுக்கு மிளகாய்ப்பொடி அரைப்பது எத்தனை சுலபமோ அது போல, பாடுவது தனக்கு மிக மிக சுலபமென்று தீர்மானித்தவராய் பாடிக்கொண்டிருந்த தாத்தா, திடீரென அடுத்த பாடலுக்குத் தாவினார்.
"அடியேய்... மனம் நில்லுன்...ன்னா நிக்காதடீ...!"
"தாப்பாள போடாம... கீடாம..." என்று பாட்டை மறந்து, தான்பாட்டுக்கு பாடினார். வேறு வேறு ரெக்கார்டு தட்டில் ஊசியை மாற்றி வைத்தது போல அடுத்த பாடல் -
"மேகமே மேகமே பால் நிலா காயுதே...!"
'ரிடிகுலஸ்... கிழம் துள்ளி விளையாடுது என்று ஏதோ புரோவெர்ப் சொல்லுவார்கள். அதுபோல ஒரு பாட்டை நிப்பாட்டாமல் பாடித்தொலைத்தால்கூட ஐ கேன் டாலரேட். குரங்கு மரத்துக்கு மரம் தாவுவதுபோல, தட் லெஜெண்டரி வாணி ஜெயராம் பாடல் பாடும்போதே டண்டனக்கா ஏ டனக்குனக்கா என்று தாடிக்கார ராஜேந்திரனுக்கு தாவுவது என்பது அநியாயம்...!'
கடுப்பான பாட்டி, படபடவென பாத்ரூம் கதவைத் தட்டினாள்.
சடாரெனக் கதவைத் திறந்த தாத்தா டார்ஜான்போல ஒட்டுத் துணியோடு காட்சியளித்தார்.
"இப்படியா நோட்டிஸ் கொடுக்காமல் திறப்பார்கள்? யூ பிகம் நேஸ்டி இப்பொழுதெல்லாம். கதவை மூடுங்கள்...!" என்று சொன்ன பாட்டி கண்களை மூடிக்கொண்டாள்.
"என்னடி என் மனைவியே? ஐயா பல பாடல்களை, பல்வேறு குரல்களில் பாடுவதைக் கேட்டு மூடு வந்து, மூடியிருந்த பாத்ரூம் கதவைத் திறந்தாயோ...?" என்றார் தாத்தா.
"பினாயில் கொண்டு வாயைக் கழுவுங்க..." என்றவள், "எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது. ஒரு பாட்டை ஹம்மிங் செய்தால்கூட அதை ஒழுங்காக முடிப்பது தவறல்ல; வெறிநாய் பலரை துரத்திக் கடிப்பது மாதிரி சேனல் மாற்றிப் பாடுவது கர்ண கடூரமாக இருக்கு...! என்றாள்.
"என் வீடு, என் குளியலறை, என் வாய், என் பாடல். நான் இன்னா வோனுமின்னாலும் செய்வேன். உனுக்கு ஏன் காண்டாகீது மடிசார் கிழவியே?" என்றவர்,
"மச்சானைப் பாருடி... மச்சமுள்ள ஆளுடி...!"
சடன் பிரேக் அடித்து, "தாபங்களே...
ரூபங்களாய்...
படுதே தொடுதே.." - என்று 96க்கு தாவினார்.
"பைத்தியக்காரன்கூட ஒரு பாட்டை முழுசா பாடித் தொலைப்பான். வில் யூ ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் திரைகானங்களை...?" என்று கத்த, சுப்புசாமி ஆங்காங்கே சோப்புநுரை திட்டுத்திட்டாய் தெரிய, டர்க்கி டவலால் தன் மேனியைத் துடைத்தவாறு வெளியே வந்தார்.
"மாசில் வீணையும் மாலைமதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே...
ஈசன் எந்தை இணையடி நீழலே... ஏ...ஏ... ஏ...!" என்று பாடியபடி துண்டை உதற, சரேலென தனது அறைக்குள் ஓடினாள் பாட்டி.
பேண்டு ரேடியோவின் கட்டையை திருகி நிறுத்தியது போன்ற மயான அமைதி சற்றே நிலவியது.
வரவேற்பு அறைக்கு ஒரு வழியாய் வந்து சேர்ந்தார் சுப்புசாமி.
ஒரு தேவதையைப் போல நின்றிருந்தாள் பாட்டி. நேர்த்தியான கொண்டை, மல்லிகைப்பூ. நெற்றியில் மின்னும் குங்குமப்பொட்டு. தோள்பட்டையில் அலட்சியமாக ஊஞ்சலாடும் டம்பப் பை. நடந்து சென்ற தேவதையானது 1999.95 பைசா செருப்பை அணிந்து கொண்டது. ஆர்த்தோ செருப்பு . கிழவிக்கு மட்டும் ஆர்த்தோ செருப்பு. சுப்புசாமிக்கு மட்டும் அறுந்துபோன செருப்பு...!
"ஓவியத்தை வரைந்து வைத்தேன்... ரசித்துப் பார்க்க கண்ணில்லையே... ஓர் அழகு விளக்கிருந்தும் எண்ணெய் ஊற்ற கையில்லையே...!" என்று பக்கத்தில் இருந்த தாம்பாளத்தை எடுத்து தட்டியபடியே பாடினார் தாத்தா.
'விடுங்க ஆளை...!' என்று புறப்பட்ட கோமுவை கைகளை குறுக்கே வைத்து தடுத்து நிறுத்தினார்.
"எங்கேம்மே...கம்பி நீட்டறே? இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. மத்தியானம் நாஷ்டாவுக்கு கொஞ்சம் தாராளமா துட்டு வெட்டுமே, தோஸ்துகள் வாறாங்க...!" என்றார்.
"வரவர ஐயாவுக்கு டன் கணக்கிலே திமிர் ஏறிடுச்சு. என்றைக்கு அந்த மனுஷர் பாக்கியம் ராமசாமி போய்ச் சேர்ந்தாரோ, உங்கள் திமிர் ரொம்ப அதிகமாயிடுச்சு. மதியம் தாளிச்ச தயிர் சாதம், வடுமாங்கா ஊறுகாய். விரல் படாமல் நாசுக்காய் ஸ்பூன்லே எடுத்து சாப்பிடுங்கள்...!"
"இன்னிக்கு அலங்கரித்த தேர் எங்கே ஊர்வலம் போகுது...?" கடுப்பானார் தாத்தா.
"மைண்ட் யுவர் வேர்ட்ஸ். சாப்பிட்டு ஒழுங்கா தூக்கம் போடுங்க. அந்த குண்டு ராஜா, பாமாராவ் தடிப்பசங்களோட ஆட்டம் போட போயிடக் கூடாது...!"
"நீ மட்டும் தில்லானா மோகனாம்பாள் பத்மினி மாதிரி மினுக்கிக்கிட்டு போகலாமா?"
"ஐ வில் நாட் ஆன்சர் பார் யுவர் சைல்டிஷ் க்வெசன்ஸ். ஓகே, ஓகே கூல். நான்கு மணிக்கு பா. மு. க. ஆடிடோரியத்துக்கு ஸ்பெஷல் இன்வைடி தி கிரேட் சிங்கர் சித் ஸ்ரீராம் வருகிறார். அரைமணி காணம், கொண்டாட்டம்...!"
"யாரு எல்லா பாட்டையும் ஒரே மாதிரி பாடுவானே அந்தப் பாடகனா...?"
"ஹவ் கேன் எ டான்கி நோ அபௌட் கற்பூர வாசனை...?"
"என்னைக் கழுதைன்னு சொல்ல வரீயா...?"
"சொல்ல வருவதாவது? ஒன் ஹன்ரட் பர்செண்ட் ட்ரூ டான்கி! உலகமே பாராட்டுகிற ஒரு கலைஞனை மகா மட்டமா பேசுற உங்களுக்கு நான் ஏன் ரெஸ்பெக்ட் கொடுக்க வேண்டும்?"
பற்ற வைத்த ராக்கெட்டாய் கோபம் சுர்ரென்று ஏறியது தாத்தாவுக்கு.
"கட்டின புருஷனை மதிக்காமல் தான் மட்டும் சூப்பரா சிங்காரம் செஞ்சுக்கிட்டு சூப்பர் சிங்கரை பார்க்கப்போவது நியாயமா?"
"தப்பித்தவறி கட்டின புருஷன் என்று திருத்திக் கொள்ளுங்கள்! ஒரு பாத்ரூம் பாடலைக்கூட ஒழுங்கா பாட தெரியாத நீங்க பார் போற்றும்... ஏன் அகில உலகம் போற்றும் பாடகரை அவமதித்துப் பேசுவதை ஐ ரியலி ஹேட். அவரோட கால் தூசிக்கு சமானம் ஆக முடியுமா உங்களால்?"
"சும்மா கிடடி கிழவி. டிராக் ...டிராக்கா பாடறவனெல்லாம் பாடகனா? எங்க டி.எம்.எஸ். பாடின 'பாட்டும் நானே பாவமும் நானே' மாதிரி ஒரு பாட்டை உன் கிரேட் பாடகரால் பாட முடியுமா? "எனக்கொரு காதலி... இருக்கின்றாள்...!" மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. பாடுவாரே... அதுபோல உன் சித்தால பாட முடியுமா? நானாடி பாத்ரூம் பாடகன்? நான் நினைச்சா இளையராஜா கம்பெனியிலே பாடுவேன்... ஏ .ஆர்.ரகுமான் சிம்பொனியிலே பாடுவேன் தெரியுமா?"
"கிழித்தீர்கள்! அவங்க ஸ்டுடியோ வாட்ச்மேன் உங்களை நெட்டித் தள்ளாமல் உள்ளே விட்டாத்தானே அது நடக்கும்...?"
"நடக்கும்டி நடக்கும். இது சங்கராபரணம் சோமையாஜூலு மேல சத்தியம்டி. நான் ஒரு நாள் ரஹ்மான் இசையில் பாடத்தான் பாடுவேன். அப்போ எடுத்துக்கோ உன் ஒரு பக்கத்து மீசையை...!"
தேவாங்கு நெஞ்சாங்கூடு இரைக்க இரைக்க ச(த்த)பதமிட்டார் தாத்தா.
(அட்டகாசம் தொடரும்...)
Leave a comment
Upload