(படம் சாட்சி ஆர்ட்)
செல்லம்மா நிதானமாக மகளிடம் சொன்னாள்.:
"உங்கப்பனுக்கு அந்த சபலம் எல்லாம் உண்டு. இல்லைனு சொல்லல. ஆனா
அப்படி எல்லாம் செய்ய சாமர்த்தியம் வேணும். அது கிடையாதும்மா அவனுக்கு.
அவன் கடனுக்கு பயந்து ஓடிப்போயிட்டான்.அவ்வளவு தான்.
ஐநூறு பவுன் நகை போச்சு.
வித்தானோ, தொலைச்சானோ, தெரியாது. ஆனால் நம்ம வீட்டை யாரும் விலைக்கு வாங்க முடியாது...உங்க அப்பன் முயற்சி பண்ணா கூட.. போலீஸ்ல கம்பளைண்ட் கொடுத்திட்டோம் . ஆனா ஒரிஜினல் பத்திரம் போச்சு இல்லையா. வீட அப்படியே விக்காம வெச்சுக்கிட
வேண்டியது தான்னு இருந்திட்டேன்.
உங்க தாத்தாவும் இறந்துட்டாரு.
நம்மால எல்லாம் ரெஜிஸ்டர் ஆபீஸ் போய் பேசி பணம் குடுத்து சண்டை போட்டு வேற புது பத்திரம் எல்லாம் வாங்க முடியும்னு அப்போ தோணல.அப்படியே உட்டுட்டேன்.
"ஏம்மா அப்பா கடன் வாங்கினார்?"
"எவனோ கம்பெனிக்காரன் ஒரு ஆயிரம் ரூபாய் சீட்டு கட்டினா அடுத்த மாசம் மூவயிரம் கிடைக்கும்னு ஏமாத்திட்டான். ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி சீட்டு கட்டி ஏமாந்துட்டான்,
உங்கப்பன். சீட்டுக்காரன் பணத்தோட சிங்கப்பூர் ஓடிப் போய்ட்டான்.இவன மாதிரி இளிச்சவாய் ஆளுங்க மட்டும் மாட்டுனாங்க.பணத்த தொலைச்சு கடங்காரன் ஆனாங்க."
"அதுனால தான் அப்பா காணாம
போய்விட்டாரா.? இல்லை வேற ஏதாவது விஷயம் இருக்குமா?"
"ஓடிப்போறவன் பொண்டாட்டிய
கூப்பிட்டு
"அம்மா! தாயே!தெரியாம நிறைய கடன் வாங்கி ஏமாந்துட்டேன்.. இனிமே குடும்பம் முழுசும் உன் பொறுப்புத்தான். நான் ஜாலியா ஓடிப்போறேன். குட் பை னு சொல்லிட்டா போவான்.?
ஓடிப்போட்டான். அவ்வளவு தான்."
" இவ்வளவு நாளா.. எங்கப்பா இந்த மாதிரி தான் ஓடிப்போனார்னு.. எனக்கு நீ சொன்னதே இல்லை."
"ஆமாம். இது பெரிய இதிகாச கதை. நள மகா ராஜன் தமயந்திய உட்டுட்டு ஓடுறான் பாரு.
. இந்த அசிங்கத்தை வேற நான் உனக்கு விவரமா சொல்லணுமா?
சரி கண்ணு. என் புருஷன் காரன் என் கிட்டசொல்லாமயே ஓடிட்டான். உம் புருஷன் உன்கிட்ட சொல்லிட்டான். நீ அவனோட போகலைனா அவனும் ஓடிடுவான். பரம்பரை விதி போல! அதுனால குழந்தைய கூட்டிகிட்டு அவனோட அமேரிக்கா போ.
இங்க நான் பாத்துக்குறேன்."
என்று என் அம்மா, அதான் செல்லம்மாப்பாட்டி முடித்தாள்."....
என்று நிறுத்திய பூமா பின் தொடர்ந்தாள்....
"எனக்கு வேற வழி இல்லை. சரி என்று
சொல்லி அமெரிக்கா வந்தாச்சு. நாப்பது வருஷம் ஆகப்போகுது. இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் இந்தியா போய் அம்மாவை பார்த்துவிட்டு வருவேன். ஆனா எங்கப்பா காணாம போனவர் போனவர்
தான். என்ன ஆனாரோ தெரியல.
நீ என் ஒரே மகன். சித்து .!! செயற்கை நுண்ணறிவு நிபுணன் ஆகி ஆப்பிளில் நல்ல வேலைல இருக்கிறாய்.
கூட வேலை செய்யும் நாடலியை மனைவியா ஆக்கி சிலவருஷம் ஆச்சு.
இல்லையா!
போன மாசம் என் அம்மா,உன் பாட்டி செல்லம்மா 90 வயசுல இறந்து,.நான் காரியத்துக்கு இந்தியா வந்து முடிந்ததும் அமெரிக்கா திரும்பினேன் என்று உனக்குத் தெரியும்."
என்று பூமா மீண்டும் கொஞ்சம் நிறுத்தி விட்டுப் பின்னர் மெதுவாக சித்தார்த்திடம் சொன்னாள்.
"உன் பாட்டிக்கு இன்னும் நிறைய சொத்து இருக்கு ஊர்ல . எல்லாம் உன் பேர்ல எழுதி இருக்கா.
அவள் ஆத்மா சாந்தி அடைய, நீ ஒரு தரம் இந்தியா போய் சொத்து விஷயம் எல்லாம் செட்டில் பண்ணிடு. நல்ல அட்வகேட்டாப் பாத்து.....
இது உன் சொத்து. உன் வேலை.
ஆனால் எனக்கு நீ முடிஞ்சா ஒரு சின்ன உதவி செய்யணும்.
"என்னம்மா"
2023 டிசம்பர் 3 ம் தேதி எங்க அப்பா ஆதிசேஷனுக்கு நூறு வயசு பூர்த்தி ஆகிறது. அதிசயமாஇன்னும் உயிரோட இருக்காரோ இல்லை எப்பவோ போய் சேர்ந்துட்டாரோ தெரியல.
அன்னிக்கு நீ இந்தியால நல்லூர் வீட்டுல ஒரு சின்ன பூஜை பண்ணி தாத்தாவை நினைத்துக்கொள். உன் சந்ததிக்கு நல்லது.அப்புறமா ஒண்ணு பண்ணனும் நீ.
எங்கப்பா என்ன ஆனார் என்று எனக்கு தெரியணும். என் ஞாபகப்படி, அனுபவப்படி ,அவரைப்பற்றி . எனக்கு
ஒன்றும்தெரியாது. ஆனால் அவர்
நல்லவர் என்று ஏதோ ஒரு நம்பிக்கை உண்டு. எங்களை விட்டுட்டு ஓடும் மனிதராக இருந்திருக்க மாட்டார் என்றும் தோணுது.
எங்க அம்மா, அதான் உங்க பாட்டி.. அவளுக்கு மட்டும் சாகும் வரை தாத்தா மீது தீராத கோபம்.
வீட்டு நகைகள், வீட்டு பத்திரம் எல்லாத்தோட எங்கப்பா ஓடிட்டார் என்ற அவப் பெயர் இன்னும் ஊர்ல இருக்கு. அது அப்படி இல்லை என்று எனக்கு ஏதோ தோன்றுகிறது.நான் நினைப்பது சரினு நீ எனக்கு கண்டுபிடிச்சு சொல்லணும்.. முடிஞ்சா.. ஒரு மாசத்தில்
ஏதாவது செய்.
. அப்பாவோட பழைய போட்டோ ஒண்ணு இருக்கு. இதை தேட யூஸ் பண்ணு. அப்புறம் வீட்ல மாட்டிடு."
என்று முடித்தாள் பூமா.
சித்தார்த்,தாத்தாவின் இள வயது
போட்டோவைப் பார்த்தான்.
சாதுவா, இளமையா,பாவமாய்
சிரித்தார் சித்தார்த்தின் தாத்தா ஆதி சேஷன்.
நாளைக்கு தாத்தாவின் நூறாவது பிறந்தநாள் நல்லூர் வீட்டில் கொண்டாட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன?
(தொடரும் )
Leave a comment
Upload