13. நான்: கதைகளின் போக்கிலேயே சிலவற்றை உணர்ந்து கொண்டிருந்தாலும், இப்படி ஒரு ஆரோக்கியமான உரையாடலின் மூலம் நிறையத் தகவல்கள் கிடைப்பதாக உணர்கிறேன் அப்பா. இந்த உரையாடலின் ஆரம்பத்திலிருந்தே மனதிற்குள் ஒரு ஐயம் கலந்த கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது கேட்டு விடவா?
அப்பா: தயங்காமல் கேள் மகளே! உன் ஐயங்களைத் தீர்த்து வைப்பது என் கடமை!
14.நான்: உங்கள் நாவல்களில் சிலவற்றில் வரும் பெண் கதாபாத்திரங்களில் சிலரை சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்டிருக்கு ஒப்புமைப் படுத்தியிருக்கிறீர்களே. சமூகக் கதைகளுக்கும் நூற்றாண்டுகள் கடந்த பெண்டிர் வாழ்வியல் முறைக்கும் எப்படிப் பொருந்தும். உதாரணமாக, குறிஞ்சி மலர் பூரணியை 'திலகவதி அம்மையார் அவர்களுக்கு ஒப்புமைப்படுத்தியிருக்கிறீர்கள். சமூகப் புரட்சிகளும், அவலங்களும் நிறைந்த சூழ்நிலையில் காலச்சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய பெண்டிருக்கு அத்தகைய வாழ்வியல் முறை சாத்தியமா?
அப்பா: காலம் ஒரு சக்கரம் மீரா. ஒரு இடத்தில் நிலைக்காமல் மீண்டும் மீண்டும் சுற்றிக் கொண்டே இருப்பது. அதில் என்ன மாற்றம் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரே மாதிரி உருவ அமைப்பு கொண்ட ஏழு பேர் பிறப்பில் சாத்தியம் என்றால் காலங்கள் பல கடந்தாலும் ஒழுக்கம் என்ற அடித்தளம் பற்றினால், புரட்சிக் காலப் பெண்டிர்களிலும் நூற்றாண்டுகள் கடந்த பண்பு நலன்களில் சாத்தியம் உண்டு. எல்லாக் காலங்களிலும், எல்லாத் தலைமுறைகளிலும், பலவித மனங்கள் படைத்த மனிதர்கள் தோன்றுவது நம் கையில் இல்லை. ஏனெனில், அது இறைவனின் விளையாட்டு.
15. நான்: ஆம் அப்பா, ஒப்புக் கொள்கிறேன். உங்கள் 'மணி பல்லவம்' கதையைத் தழுவி என் அனுமானம் ஒன்றைக் கேட்கிறேன் சரியா என்று சொல்லுங்கள். ஆரம்பக் கட்டத்தில் இளமைக்கே உரிய மதிப்பில் தான்தோன்றியதாகத் திரியும் இளங்குமரன் ஒரு கட்டத்தில் பரிபூரண நிலையை எய்தி துறவுவாழ்க்கைக்கு தன்னை முழுமையாக ஒப்படைக்கச் த்தமாகிறான். ஒரு வேளை சுரமஞ்சரி தன்னை வாதத்தில் வென்றிராவிட்டால், தன்னை விரும்பிய சுரமஞ்சரி, முல்லை இருவரையுமே தன் வாழ்விலிருந்து ஒதுக்கி வைத்திருப்பான் என்ற என் அநுமானம் சரிதானே.
அப்பா: சரிதான் அம்மா, ஒரு பரிபூரணத் துறவியின் மனநிலை அப்படித்தானே இருக்க முடியும். முல்லை, சுரமஞ்சரி இருவரின் தன் மீதான காதலை நன்கு உணர்ந்த நிலையிலும் இளங்குமரனிடம் வாதில்
வென்றதால் மட்டுமல்ல எல்லாக் கோணங்களிருந்தும் நோக்குகையில் இளங்குமரனின் மீதான சுரமஞ்சரியின் காதலே உயர்ந்தது என்று பல வகையிலும் இளங்குமரன் உணரும் நிலையை கதையில் படித்திருப்பாய். தன் தாய், தந்தையரை கொடூரமாகக் கொன்ற பெருநிதிச்செல்வரை மன்னிக்கும் மாட்சிமையும், அவர் மகள் சுரமஞ்சரியை தன் மனைவியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் நிலை, அரிது என்றாலும் ஒரு துறவிக்கு அது சாத்தியமே. ஆனால் தன்னை வெறுத்த இளங்குமரனிடம் பரிபூரணமான அன்பு கொண்டு தன் உயிரையும் அவன் காலடியில் விடத் துடிக்கும் சரணாகதி நிலையைத் தாண்டி தன்னை வாதத்தில் வென்ற சுரமஞ்சரி அவள் விருப்பப்பட்ட பாதையில் தன்னை அழைத்துப் போகலாம் என்று இளங்குமரன் உரைத்தத்தையும் மீறி அவன் பாதையில் அவனுக்கு இணையாக தன் சுகதுக்கங்களையெல்லாம் இளங்குமரனின் காலடியில் சமர்ப்பணம் செய்யும் உயரிய குணம் செல்வச் செழிப்போடு வளர்ந்த சுரமஞ்சரியின் அசாத்தியமான செயலே இளங்குமரன், முல்லை இவர்கள் எல்லோரையும் விட உயர்ந்தது. முல்லையின் இளங்குமரனின் மீதான காதலில் உண்மை இருந்தாலும்
இளங்குமரனுடனான சந்திப்புகளிலெல்லாம் தன் காதலை ஒரு பிடிவாத உணர்ச்சியாகவே பிரதிபலித்து தோற்றும் போகிறாள் பாவம்!
16. நான்: சுரமஞ்சரியை உயர்ந்த கதாபாத்திரமாக சித்தரித்தியிருக்கிறீர்களே என்று நான் நினைத்த கேள்விக்கும் சேர்த்து பதில் கூறி விட்டீர்கள் அப்பா கடைசியாக ஒரு கேள்விஅப்பா, நித்திலவல்லி கதையில், பாதுகாப்புக்காக கணிகை இரத்தினமாலையின் வசிப்பிடத்திற்கு வந்து நேரம் இளைய நம்பி ஆரம்பத்தில் குலத்துக்குரிய ஆணவத்தையும், செருக்கையும் வெளிப்படுத்தி ஒரு கட்டத்தில் அந்தக் கணிகையை அந்தரங்கமாக நாடுவது உவப்பானதாக இல்லையே.
அப்பா: இந்தக் கதையில் வரும் முக்கியமான கதாபாத்திரமான மதுராபதிவித்தகர் இளைய நம்பியின் பாதுகாப்புக் கருதியே அவனை இரத்தினமாலையின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறார். குலப்பண்பும், வீரமும், செருக்கும் ஒருங்கே இணைந்த நிலையில் இரத்தினமாலையை இழிவாகப் பேசினாலும், அங்கு அவளுடன் தங்கியிருந்த நாட்களின் ஓட்டத்தில் அவள் காட்டிய பரிவும், அன்பும் அவன் இளமையின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டன என்பதுதான் உண்மை.
இதே இளையநம்பி தன்னை ஒரு கட்டத்தில் பத்திரமாக இந்த இடத்திற்கு அனுப்பி வைத்த காராளர் மகள் செல்வப் பூங்கோதையை மனப்பூர்வமாக விரும்புகிறான். இதில் இரத்தினமாலைதான பாராட்டுக்குரியவள். தன்னை விரும்பி நாடிய இளையநம்பி குற்ற உணர்ச்சியால் மணந்து கொள்வதாக வாக்குக் கொடுத்தபோது கூட அவனது அரச மரபிற்கு அது ஒத்து வராது என்றும் அவன் விரும்பும் செல்வப் பூங்கோதையை மணப்பதே உகந்தது என்றும் கூறும் அவளது பண்பு சிறந்தது. இறுதியில் மதுராபதி வித்தகருக்கு இன்னதென்று புரியாமலே செய்து கொடுத்த சத்தியத்திற்கிணங்க செல்வப்பூங்கோதையை விடுத்து, அவன் சேர நாட்டு இளவரசியை மணக்க நேரிடும் போது செல்வப் பூங்கோதையை விட அவளுக்காக அதிகம் வருந்துகிறாள் இரத்தினமாலை. நீ கூறியபடி உவப்பானதாக இல்லை என்றாலும், மனமும் உடலும் எல்லாக் கட்டத்திலும் ஒருங்கே செயல்படுவதில்லையம்மா. வாழ்க்கையின் பல கட்டங்களில் மனதை, உடல் தன்னிச்சையாலும், ஆபாசங்களாலும் வென்று விடுவது இயல்பு
என்பதுதான் உன் கேள்விக்கு என்னால் கொடுக்க முடிந்த பதில். (520)
17. நான்: நீங்கள் கூறுவது முற்றிலும் சரிதான் அப்பா. காதலை பெரும்பாலும் காம உணர்ச்சிகளின் வாயிலாகச் சித்தரிக்கும் இன்றைய எழுத்தாளர்களை விட உங்கள் காலத்திய எழுத்தாளர்களின் அணுகுமுறை நாகரீகமானது என்றே சொல்லலாம். காலங்களின் ஓட்டத்தில் சமூக மற்றும் தலைமுறை இடைவெளிகளை ஓரளவுக்கு சமன் செய்வதற்காக உங்களைப் போன்றோரும் இன்றைய நவீன
நாகரீகப் போக்கினை ஒட்டி நாயகன் – நாயகி உறவைச் சித்தரிக்கிறீர்கள். உதாரணமாக தந்தையிடம் தைரியமாகப் பேசி மோகினியை மணமுடிக்காத பொன்விலங்கு சத்தியமூர்த்தி, கல்லூரிப் பருவதிலேயே தைரியத்தோடும், உரிமையோடும் காதல் வளர்க்கும் சத்திய வெள்ளம் பாண்டியன் - கண்ணுக்கினியாள், இந்த இரண்டு கதைகளையுமே படித்தவுடன் எனக்குத் தோன்றிய வேறுபாடு இது. ஆனால் ஒன்று அப்பா, காம உணர்ச்சிகளை காதல் கதைகளில் பிரதிபலித்து எழுதும் எத்தனையோ எழுத்தாளர்கள் கூட அக்கதைகளை இல்லறத்தை நல்லறமாக்கும் அளவுக்கு மேன்மைப்படுத்தியே கதையை முடித்திருப்பதையும் படித்து ரசித்திருக்கிறேன்.
அப்பா: நீ சொல்கிற எல்லாம் சரி அம்மா. உலகின் எந்த மூலையிலோ நிதர்சனமாக நடப்பவற்றைப் பிரதிபலிப்பதுதான் ஒரு கதையின் நோக்கமாக இருக்க முடியும். எந்தெந்தக் காலக்கட்ட நிகழ்வுகளைப் பிரதிபலிக்க வேண்டுமோ அக்காலக் கட்டத்துக்கே சென்று படைக்க வேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை. காலத்தால் அழியாதவை எப்படி உண்மையோ அப்படித்தான் காலத்தோடு வளர்வதும், நல்லவை,
வல்லமை எல்லாமே காலத்தின் கைகளில் சிக்கி கடந்தும் போகும். இவற்றில் எதுவாக இருந்தாலும் விருப்பு வெறுப்பின்றி சமநிலையோடு அணுகி கதையை வடிப்பது ஒரு எழுத்தாளனின் கடமை. ஒவ்வொரு எழுத்தாளனும் தன் சொல்லாற்றலைக் கொண்டு இந்தச் சமூகத்தைப் பண்படுத்தும் ஒரு சமூக விவசாயி என்பதை மனதில் கொண்டு செயல்படுவது அவசியம் என்றே நினைக்கிறேன்.
18. நான்: நன்றி அப்பா. 'காதல் என்ற களத்தின் அடிப்படையில் உங்கள் கதைகளில் சிலவற்றை அணுகி, அவற்றைப் பற்றிய எனது அய்யம் கலந்த கேள்விகளுக்கு என் மனம் தெளிவுறும்படி விடை அளித்தீர்கள். இதைப்போல இன்னும் பலப்பல ஆரோக்கியமான விவாதங்களுக்கான வருங்கால எதிர்ப்பார்ப்போடு இப்பொழுது முடிக்கிறேன் அப்பா.
அப்பா: நான் உனக்குக் கூறிய மறுமொழிகள் எல்லாம் என் கதைகளைப் படிக்கும் பல மனங்களுக்கும் எழக்கூடிய பலவிதமான கேள்விகளுக்கான மறுமொழியாகவோ கொள்ளலாம் அம்மா. இவ்வளவு ஆரோக்கியமான கேள்விக் கணைகளைத் தொடுத்த உனக்கு என் மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள்.
Leave a comment
Upload