தொடர்கள்
தொடர்கள்
பெண்களுக்கான சுய அதிகாரம் - 19 - பத்மா அமர்நாத்

20240310230836846.jpg

“There are four ways, and only four ways, in which we have contact with the world. We are evaluated and classified by these four contacts: what we do, how we look, what we say, and how we say it.” – Dale Carnegie

மனிதர்கள் அன்பு, பாசம், கோபம் மற்றும் பிற உணர்ச்சிகளை அவர்களின் உடல் மொழி மூலம் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். நம் வாய் பேசாமல் இருந்தாலும், உடல் அசைவு மொழியின் மூலம், நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். மாணவர்கள் கல்வியுடன், விவாதம் (elocution) மற்றும் பேச்சுப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு, தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நவீன காலத்தில் சில முக்கியப் பதவிகள் வகிக்க, தகவல் தொடர்புத் திறன் மிகவும் அவசியம்.

20240310230958169.jpg

சீனாவில் வாழ்ந்த தத்துவஞானி Gui-Gu Tze (கி.மு 481-221). இவர் முக வாசிப்பின் தந்தை என்று போற்றப்படுபவர். அவரது புத்தகம் Xiang Bian Wei Mang இன்றுவரை அச்சில் உள்ளது

சொற்கள் அல்லாத தகவல்தொடர்புகளின் முக்கியத்துவத்தை, பலர் குறைத்து மதிப்பிடுகின்றனர். கூட்டங்களில் என்ன சொல்லப் போகிறோம் என்று திட்டமிட்டு எழுதி வைத்துக் கொள்வார்கள். ஆனால் உடல் மொழியை முற்றிலும் புறக்கணிப்பார்கள் - இது பெரும்பாலும் பாதிச் செய்தியை மட்டுமே வெளிப்படுத்தும். நமது தகவல் தொடர்புகளில், 60 சதவீதம், சொற்கள் அல்லாதவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

20240310231102363.jpg

உடல்மொழி அம்சங்களைக் கற்றுக்கொண்டு, அதை முழுமையாகப் பயன்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்த பல தலைவர்களில், அடொல்ஃப் ஹிட்லரும் ஒருவர். ஒவ்வொரு முறையும், மேடையேறும் முன், ஆளுயர கண்ணாடியின் முன் நின்று, கையை அசைத்துப் பயிற்சி செய்வார்.

நடிகர் சார்லி சாப்ளின், உடல் மொழி திறன்களின் முன்னோடியாக இருந்தார்.

சிலர், உடல் மொழியை மறைக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஆனால், உணர்ச்சிகளை எல்லா நேரத்திலும் மறைத்து வைக்க முடியாது.

இதில் சுவாரசியம் என்னவென்றால், உடல் மொழியை அறிவதில், ஆண்களைவிட, பெண்கள் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். அதனால் தான், கணவர் பொய் சொன்னால், மனைவியிடம் மாட்டிக்கொள்கிறார்கள். உடல் அசைவில் நாம் கருத்தில் கொள்ளவேண்டிய சில அம்சங்களைப் பற்றி பார்ப்போம்.

கைகள் :

கைகளின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். நாம் யார் என்பதைப் பற்றி நம் கைகள் பேசும். ஒருவர் நம்மிடம் பேசும்போது, நம் மூளை, பேசுபவரின் கைகளின் மீதே அதிக கவனம் செலுத்தும். காரணம், மூளை நம் தற்காப்பை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்தும். பேசுபவரின் கைகளைப் பார்க்க முடியாதபோது, நாம் அவர்களை நம்புவதில் சிக்கல் ஏற்படும். உதாரணத்திற்கு, ஒருசிலர் எப்பவுமே கைகளை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டுப் பேசுவார்கள். ஒரு சிலர், தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில், கைகளைக் கட்டிக்கொண்டுப் பேசுவார்கள்.

பேசும் போது, உங்கள் கைகளை மேசைக்கு மேலே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

கைகளை, மார்பிற்கும் இடுப்புக்கும் இடையே வைத்துப் பேச வேண்டும். இதற்கு வெளியேச் சென்றால், அது கவனத்தை சிதறடிப்பதாகவும், கட்டுப்பாட்டை மீறுவதாகவும் இருக்கும்.

மேடையில் பேசும்போது, கைகளை மேலே பார்த்தபடி, அதாவது, ஆகாயத்தைப் பார்த்தபடி விரித்து வைத்து பேசினால், கேட்பவருக்கு நம்பிக்கை பிறக்கும். அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் பாப் ஹாக் ஆகியோர் பிரச்சனைகளை பற்றி விவாதிக்கும்போது, கைகளை திறந்து, விரித்து பேசும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர்.

20240310231435442.jpg

இதற்கு நேர்மாறாக இருந்தது ஹிட்லரின் செய்கை. காரணம், அவர் தன் சர்வாதிகாரத் தோரணையை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். பூமியைப் பார்த்தபடி, கைகளை முன்னே நீட்டிப் பேசுவார்.

2024031023130921.jpg

தலையசைக்கவும் :

நண்பர்களை வெல்வதற்கும், மக்களின் செல்வாக்கைப் பெறுவதற்கும், பேசும் நபர்களிடம் நாம் ஆர்வம் காட்ட வேண்டும். சிறிய தலையசைப்புகள் "மேலும் சொல்லுங்கள்" அல்லது "நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன்," என்று, நீங்கள் ஆர்வமாகவும் ஈடுபாட்டுடனும் இருப்பதைக் காட்ட இது ஒரு சிறந்த வழியாகும். இச்செயல், உங்களுடன் பேசுவதற்கு, பிறரை ஊக்குவிக்கும்.

அடுத்த சில அம்சங்களைப் பற்றி, தொடர்ந்து வரும் வாரங்களில் பார்ப்போம்.

இணைந்திருங்கள்...