மேடையில் பேசும் போது ஆவேசமாக 400 இடங்களில் வெல்வோம் என்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா சவாலாக சொன்னாலும், உள்ளுக்குள் அவர்களுக்கு ஒரு உதறல் தற்சமயம் வரத் தொடங்கி இருக்கிறது. காரணம் இந்தியா முழுவதும் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு என்பதுதான்.
பாரதிய ஜனதா நிபந்தனை விதிப்பதற்கு பதில் பஞ்சாபில் அகாலி தளம் பாரதிய ஜனதாவுக்கு நிபந்தனை விதித்தது. கொடுக்கிற தொகுதிகளை வாங்கிக் கொள்ள வேண்டும் பாரதிய ஜனதா எந்த தொகுதிகளில் போட்டி போடும் என்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம் என்றெல்லாம் நிபந்தனை விதிக்க இதை கௌரவ பிரச்சினையாக பார்த்த பாரதிய ஜனதா கூட்டணி வேண்டாம் என்று விலகிக் கொண்டு விட்டது.
ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி என்று சில வாரங்களுக்கு முன்பு அமித்ஷா அறிவித்தார். அங்கும் தொகுதி பங்கில் பிரச்சனை ஏற்படவே இப்போது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நாங்கள் தனித்துப் போட்டி என்று அறிவித்திருக்கிறார். அடுத்த மாதம் தான் தேர்தல் நடவடிக்கை அங்கு ஆரம்பம் என்பதால் கொஞ்ச காலம் பேசாமல் இருந்துவிட்டு மீண்டும் நவீன் பட்நாயக்குடன்கூட்டணி பற்றி பேசலாம் என்று அமித்ஷா காத்திருக்கிறார். ஆனால், அது நடக்குமா என்பது இப்போதைக்கு சந்தேகம் தான்.
தமிழ்நாட்டில் சப்த நாடியும் ஒடுங்கி பாரதிய ஜனதாவை எதிர்த்து பேசாத ஒரு கட்சியாக அதிமுக இருந்தது. தேவையில்லாமல் அண்ணாமலை அவர்களை வம்புக்கு இழுத்ததால் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி முறிந்தது. அதன் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் அதிமுகவுக்கு நெருங்கிய மத்திய அமைச்சர் இவர்களெல்லாம் கூட்டணிக்கு பேசிய போது கூட அண்ணாமலையை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். ஐந்து தொகுதிகள் தான் தருவோம் என்று அதிமுக நிபந்தனை விதித்ததால் பாரதிய ஜனதா அதை ஏற்காமல் மறுத்தது. ஒரு கட்டத்தில் மிரட்டி கூட பார்த்தார்கள். நீங்கள் நினைத்தால் சின்னத்தை முடக்கலாம் அவ்வளவு தானே அதற்கும் நான் தயாராக இருக்கிறேன் என்று எடப்பாடி மறுத்துவிட்டார். எனவே வேறு வழியில்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வந்தது பாரதிய ஜனதா.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூட கூட்டணிக்கு நாங்கள் பேசவில்லை பாரதிய ஜனதா தான் எங்களை அழைத்துப் பேசியது என்று குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயம் ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இது தவிர வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிலர் போட்டியிட விரும்பவில்லை என்று விலகியது பாரதிய ஜனதாவுக்கு இன்னொரு அதிர்ச்சி. இவை எல்லாவற்றையும் விட தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தேர்தல் அரசியல் வேண்டாம் என்று கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் ,மத்திய அமைச்சர்கள் வி. கே .சிங் ஹர்ஷவர்தன் இப்படி கிட்டத்தட்ட பத்து பேர் ஒதுங்கி விட்டார்கள்.
ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 100 பேருக்கு இந்த முறை பாரதிய ஜனதா வாய்ப்பு வழங்கவில்லை. அவர்களின் சிலர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டி போடுகிறார்கள்.
ஊழல் தலைவர்கள் என்று விமர்சித்து பேசிய பாரதிய ஜனதா அந்த தலைவர்கள் பாரதிய ஜனதாவில் தற்சமயம் இணைந்ததும் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதுவும் தற்சமயம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.
மேனகா காந்திக்கு வாய்ப்பு தந்த பாரதிய ஜனதா அவர் மகன் வருண் காந்திக்கு வாய்ப்பு தரவில்லை. இப்போது காங்கிரஸ் கட்சி வருண் காந்தியை எங்கள் கட்சிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறது. இதேபோல் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கூட வாய்ப்பு கிடைக்காத சிலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலுக்கு போட்டி போடுகிறார்கள்.
மகாராஷ்டிராவில் கூட்டணி குழப்பம் இன்னமும் முடிவுக்கு வந்த பாடு இல்லை. இதேபோல் கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா கட்சியுடன் கூட்டணி என்றாலும் அந்த கூட்டணி உள்ள பூர்வமாக இருக்கவில்லை என்பதை பிரச்சார மேடையில் வெளிப்படையாக தெரிகிறது.
இவை எல்லாவற்றையும் விட அமலாக்கத்துறை வருமான வரித்துறை மூலம் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதால் பாரதிய ஜனதா மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.
உதாரணமாக நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தொகுதி பங்கீடு விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் இருந்தது.
கெஜ்ரிவால் கைதுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக பாரதிய ஜனதாவுக்கு எதிராகவும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும் தற்சமயம் குரல் தந்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆளுங்கட்சி கெஜ்ரிவால் கைதுக்கு பிறகு அந்தப் பகுதியில் அவருக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால்தான் கெஜ்ரிவாலும் இந்த அனுதாபத்தை வாக்கு வங்கியாக மாற்ற ஜாமீனுக்கு அழுத்தம் தராமல் இருக்கிறார்.
பாரதிய ஜனதாவின் பலம் என்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை தான்.
இப்போது பாரதிய ஜனதா கட்சியே எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் போல் தெரிகிறது.
என்னதான் ஆளும் கட்சி வெற்றி பெற்று விடுவோம் என்று முழுநம்பிக்கையில் இருந்தாலும் ஜூன் 4 தேதி ரிசல்ட் அன்று யார் அடுத்த பிரதமர் என்று விவரம் தெரிந்து விடும் .
Leave a comment
Upload