151 வது குறள்:
“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.”
தன்னைத் தோண்டுபவரையும் தாங்கிக் கொள்ளும் நிலம் போல தம்மை இகழ்ந்து பேசுபவரையும் பொறுத்துக் கொள்ளுதல் தலைசிறந்த அறமாகும். என்ற வள்ளுவரின் இந்த குறளின்படி பொறுமையின் விளிம்பில் இருந்து பெற்றோர்கள் அவர் தம் குழந்தைகளை வளர்க்க நேரிடும். இத்தகைய சூழலில் அவர்கள் எப்படி பிரச்சனைகளை சாதுர்யமாக சமாளிக்க முடியும் என்று பார்க்கலாம்.
கேள்வி:
பரீட்சை நெருங்கி விட்டது படிக்கும் நேரத்தில் போன் பார்க்கிறான் ஏன் என்று கேட்டு போனை பிடுங்கி வைத்தால், அடம் பிடித்து கொடுக்கவில்லை என்றால் படிக்க மாட்டேன், சாப்பிட மாட்டேன் என்று முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான்.
சரி கொஞ்ச நேரம் பார்க்கட்டும் என்று கொடுத்தால் நேரம் போவதே தெரியாமல் மொபைலில் மூழ்கி விடுகிறான். இதனால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இடையில் பெரும் வாக்குவாதத்தை ஏற்படுகிறது. குடும்பத்துடன் நிம்மதியாக சாப்பிடுவது ,தூங்குவது என்ற சாதாரண விஷயமே பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது, இதை எப்படி சமாளிப்பது?
இது என்னை சந்தித்த ஒரு பெற்றோரின் தவிப்பு, இப்படிப்பட்ட சூழலில் முதலில் பெற்றோராகிய நாம் நமக்கென அதிக நேரம் ஒதுக்க முடிவெடுப்பதே முதல் வேலை. தாய் தந்தை இருவரும் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி இருவருமே வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி ஒருவர் மட்டும் வேலை பார்த்தாலும் சரி எப்படி சூழல் இருந்தாலும் அவர்கள் முதலில் ஒரு வாரத்திற்கு தங்களின் முழு நேரத்தை இதற்காக ஒதுக்குவது அவசியம். அதாவது ஒரு நாளில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஒதுக்க தயாராக வேண்டும்.
பிறகு முதலில் பெற்றோர்கள் chart work (டைம் table) தயார் செய்ய வேண்டும். மறுநாள் வாடிக்கையாக பார்க்க வேண்டிய வேலைகளுக்கு நடுவில் காலை 2 மணி நேரம் மத்தியம் 2 மணி நேரம் மாலை இரண்டு மணி நேரம் என்று பிரித்துக் கொண்டு அதில் முதல் 15 நிமிடம் உங்கள் குழந்தைகள் எதைக் கேட்டு அடம் பிடிக்கிறார்கள் என்பதை தெளிவாக எழுத வேண்டும், பிறகு அதை நீங்கள் மறுப்பதற்கான காரணத்தை பட்டியலிடுங்கள் ஒன்றிலிருந்து பத்து வரை உங்கள் பட்டியல் இருக்கலாம். பிறகு அவர்களின் பார்வையில் அது வேண்டும் என்று கேட்பதற்கான காரணத்தை நீங்கள் எழுத வேண்டும் அவர்கள் அந்த மொபைலை கேட்பதற்கான காரணம் என்ன என்று நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்பதை எழுதுங்கள்.
நீங்கள் எழுதிய பிறகு குழந்தைகளை ஒரு சார்ட் பேப்பரை எடுத்து அவர்கள் அந்த பொருள் வேண்டும் என்று ஏன் கேட்கிறார்கள்? அதற்கு 10 காரணங்களை அவர்களை எழுதச் சொல்லுங்கள். இதை அவர்களிடம் செய்ய சொல்லிவிட்டு நீங்கள் வேறு வேலை பார்க்க கூடாது ஓரிடத்தில் உட்கார்ந்து நீங்கள் எழுதும் பொழுது அவர்களையும் உட்கார்ந்து அதை எழுத செய்வது தான் இந்த இடத்தில் முக்கியம். இப்படி உங்களின் காரணத்தையும் மூன்று வேளை எழுதுவதும் அவர்களின் காரணத்தையும் மூன்று வேளையும் எழுதுவதனால் முதல் நாள் எழுதும் காரணத்திற்கும் மறுநாள் எழுதும் காரணத்திற்கும் வேறுபாடுகள் இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.
இப்படி தொடர்ந்து மூன்று நாள் எழுதிய பிறகு அவர்கள் அந்தே அடம் பிடிக்கும் அந்த வீரியம் இருக்கிறதா குறைந்து விட்டதா என்பதை நீங்கள் கவனித்து அதற்கு ஏற்றார் போல் அவர்களை கையாள்வது சுலபம். குழந்தைகள் தானே உணர்ந்து ஒரு விஷயத்தில் இருந்து வெளியே வருவது தான் சரி. இந்த எழுத்து பயிற்சியால் அவர்களுக்கு clarity in thinking clarity in decision making போன்றவை குழந்தைகளுக்கு வந்துவிடும்.
நீங்கள் சொன்னவுடன் குழந்தைகள் உட்கார மாட்டார்கள் எழுத மாட்டார்கள் ஆனால் உங்கள் நேரத்தை ஒதுக்கி நீங்கள் வேளா வேளைக்கு உட்கார்ந்து எழுதும் பொழுது அவர்களும் உங்களுடன் வேறு வழியின்றி உட்கார அதிக வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளுக்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் மிகவும் முக்கியம். அவர்களுக்கு அதை மதிக்க தெரியும் ஆனால் நேரம் எடுத்து நாம் உட்காருகிறோமா என்பதுதான் இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய ஒன்று.
பொறுமையுடன் இந்த ஆக்டிவிட்டியை செய்தால் தானும் தெளிவாக ஒரு பிரச்சனையை அணுக முடியும் மற்றும் குழந்தைகளும் தன்னை தான் உணரும் பக்குவம் வந்துவிடும். தானே எழுதுவது என்பது பல குழந்தைகளுக்கு சிரமமாக இருக்கும் இந்த சூழலில் நீங்கள் அவர்களை சொல்லச் சொல்லி எழுதுவது அவசியம். இதற்கு மிகுந்த பொறுமையும் அவசியம். இதை செய்யும் பொழுது எந்தவித எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது. அவர்கள் என்ன சொன்னாலும் எழுதுவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உலகம் ஓடும் வேகத்திற்கு ஓடுவது முக்கியமல்ல. நாம் சரியாக ஓடுவதற்கு நம்மை தயார் செய்து கொண்டு ஓடுவதே புத்திசாலித்தனம். சிறுவயதில் குழந்தைகள் பரீட்சை எழுதவில்லை, பள்ளிக்கு செல்லவில்லை என்பது பெரும் குற்றமாகாது. ஆனால் இதே பையன் நாளை பெரியவனானதும் அடம்/ பிடிவாதம் பிடிக்கும் போது பெற்றோர்களுக்கு அவர்களை கையாள்வது கடினமாகிவிடும். ஆகையால் இப்போதே நேரம் ஒதுக்கி இந்த எளிய ரைட்டிங் மெத்தடில் தீர்வு காண்பது நல்லது.
“இன்று பொறுமையுடன் நேரம் ஒதுக்குங்கள்
நாளை பெருமையுடன் அனைவராலும் போற்றப்படுவான் உங்கள் மகன்.”
- தொடர்ந்து பேசுவோம்.
Leave a comment
Upload