தொடர்கள்
கவர் ஸ்டோரி
தெப்பக்காடு யானைகள் முகாமில் விகடகவி - ப ஒப்பிலி

20240123181432317.jpeg

யானைகள் பற்றி நம்மில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் அவை விலங்கினங்களில் மிகவும் பெரிதானவை. ஆனால் பலருக்கு தெரியாது அவைகள் மிகவும் புத்திசாலியான மிருகங்கள் என்று. யானைகளின் ஞாபக சக்தி மற்றும் அவற்றின் அறிவு கூர்மை நம்மில் பலரை ஆச்சரியப்படுத்தும்.

தெப்பக்காடு. ஊட்டியிலிருந்து 24 கி.மீ தூரத்தில் இருக்கும் இடம். இங்கு உள்ளூர் வண்டிகளை தவிர வேறு மாவட்ட வண்டிகள், மாநில வண்டிகள் அனுமதியில்லை. ஏனெனில் 36 கொண்டையூசி வளைவுகளில் விபத்துக்களை தவிர்த்து, சாமர்த்தியமாக ஓட்டும் திறன் நிச்சயம் தேவை.

தெப்பக்காடு யானைகள் முகாம் மிகவும் பழமையான ஒன்று. இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் இந்த முகாமிலிருந்து நேரடி அனுபவம் அடுத்த இரண்டு வாரத் தொடர்.

20240123181750439.jpeg

பெரியதொரு புல்லுக்கட்டை வாயில் சுமந்தபடி தனது மாவூத்தனின் கட்டளைகளுக்கு இணங்க ஆடி அசைந்து கிருஷ்ணன் யானை நடந்து வந்து கொண்டிருந்தது. அதன் ஆட்டமும் நடையும் பார்ப்பதற்கே தனி அழகுதான். வனத்துறை இந்த யானைகளின் முகாமிற்கு உங்களை வரவேற்கிறது. கிருஷ்ணனை போல முகாமில் 26 யானைகள் உள்ளன. அவற்றை பராமரித்து கும்கி யானைகளாக பழக்குவது முகாமின் முக்கிய கடமைகளில் ஒன்று, என்கிறார் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு.

மொத்தமுள்ள 27 யானைகளில் ஒன்பது யானைகள் கும்கி யானைகள். இவை காட்டிலிருந்து வெளியே வந்து பயிர்களை மேயும் அல்லது மனிதர்கள் வசிக்கும் இடங்களில் வந்து பிரச்சனை ஏற்படுத்தும் யானைகளை பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும். இந்தியாவிலேயே தெப்பக்காடு யானைகள் முகாம் முதன் முதலில் 1910ல் முதுமலையில் உள்ள கேம் ஹட் என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின் 1927ல் தெப்பக்காடு பகுதிக்கு மாற்றப்பட்டு, இன்று வரை அதே இடத்தில் தொடர்ந்து செயல் பட்டு வருகிறது.

ஆரம்பித்தது முதல் இன்று வரை 85 யானைகளுக்கு மேல் இந்த முகாமில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இதில் 49 ஆண் யானைகள், 36 பெண் யானைகள். இதுவரை 51 யானை குட்டிகள் இந்த முகாமில் பிறந்துள்ளன. அவற்றில் ரதி மற்றும் தேவகி என்கிற பெண் யானைகள் தலா 10 குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றில் தேவகி பிடித்த ஒரு பெண் யானை இரட்டை குட்டிகளை ஈன்றது மேலும் காமாட்சி என்கிற பெண் யானை ஒரு மக்னா (தந்தம் இல்லா ஆண் யானை) குட்டியையும் ஈன்றுள்ளது. இந்த முகாமில் 7 காட்டு யானை குட்டிகள் தங்கள் கூட்டத்தால் நிராகரிக்கப்பட்டதால் இந்த முகாமிற்கு வரப்பெற்று பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாம் கூட்டத்தால் விலக்கப்பட்ட குட்டி யானைகளின் மறுவாழ்வு முகாமாகவும் செயல்படுவது தனி சிறப்பு, என்கிறார் சுப்ரியா சாஹு.

யானைகள் கூட்டத்தில் சில சமயங்களில் குட்டி யானைகளை தங்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை. யானைகள் அனாதையாகும் போது என்ன செய்யும் பாவம். இந்த முகாம் அவைகளுக்கு வீடாகிறது.

20240123181815165.jpeg

இங்குள்ள மாவூத்தனும் காவடிகளும் சிறந்த முறையில் யானைகளை பராமரிப்பதால்தான், Elephant Whisperer என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. யானைகளின் பராமரிப்பில் பழங்குடியின மக்களின் பங்களிப்பு அளப்பரியது என்கிறார் சுப்ரியா சாஹு.

இங்குள்ள யானைகள் காலை ஏழு மணிக்கு அவிழ்த்து விடப்பட்டு அருகில் உள்ள மாயார் ஆற்றில் இரண்டு மணி நேரம் ஆனந்தமாக குளித்து விட்டு வரும். அவற்றிற்கு மாவுத்தன் மற்றும் காவடிகள் தேங்காய் நாரை கொண்டு அழுந்த தேய்த்து குளிப்பாட்டுவதை பார்த்தாலே பரவசம் தான். அந்தப் பரபர சத்தம் நமக்குத் தான் வலிக்குமோ என்று தோன்றுகிறது ஆனால் யானைகள் ஒரு மாதிரி கண்கள் செருகி அனுபவிக்கிறது. குளித்து முடித்தவுடன் நேராக முகாமிற்கு அழைத்து வரப்பட்டு, அவற்றின் கால்களில் கற்பூரம், வேப்பெண்ணை, மற்றும் டிக்காமல்லி கலந்த தைலம் பூசப்படுகிறது. இந்த தைலம் காலில் ஏற்படும் புண்களுக்கு மருந்தாகவும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

இந்த முகாமில் யானைகளுக்கு இம்மாதிரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை உருவாக்கியவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்ற மருத்துவர்தான். இவர் காட்டு யானைகளுடன் மிக சாதாரணமாக பழகுவார் மற்றும் அவற்றுக்கு பல முறை சிகிச்சை அளித்துள்ளதும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம். அதனாலேயே அவருக்கு யானை டாக்டர் என்ற பட்ட பெயரும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஜெயமோகன் அவரைப் பற்றி எழுதிய யானை டாக்டர் கட்டுரை மிகப் பிரபலம்.

குளித்து முடித்து விட்டு பிறகு முகாமிற்குள் வந்தால் அவற்றிற்கான உணவு தயாராக இருக்கிறது. கொள்ளு, ராகி, அரிசி, வெல்லம், உப்பு, மினரல் கலவை, ஆகியவற்றை ஊற வைத்து பின்பு வேகவைத்து ஒரு களி போல செய்து அதை பெரிய உருண்டைகளாக்கி முகாமில் உள்ள யானைகளுக்கு கொடுக்கிறார்கள். இவை தவிர தேங்காய் (ஓடு நீக்கியது) மற்றும் கரும்பு துண்டுகள் அவைகளின் உணவில் பிரதான பங்கு வகிக்கின்றன. உணவு முடிந்த பின் மீதும் காலில் சங்கிலிகளுடன் காட்டுக்குள் மேய விடப்படுகிறது இந்த முகாம் யானைகள்.

முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் து வெங்கடேஷ் கூறுகையில் "முதுமலைக்கு சுற்றுலா வரும் அணைத்து வித மக்களுக்கும் இந்த யானைகள் முகாம் ஓர் பெரிய பொழுதுபோக்கு அம்சம். அவற்றிற்கு அளிக்கப்படும் உணவு, கால்களில் தடவப்படும் மருந்து என ஒவ்வொரு அம்சமும் மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயங்கள். விடுமுறை நாட்களில் இந்த முகாமிற்கு வரும் டூரிஸ்டுகள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும். காலையில் 8.45 மணிக்கு, மாலையில் 5.45 மணிக்கு தினமும் யானைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது இந்த முகாமில்".

(அடுத்த வாரம் முகாமில் உள்ள யானைகளின் உணவு மற்றும் அவற்றை கும்கிகளாக தயார் செய்யும் முறைகள் பற்றி......)