தொடர்கள்
கதை
தப்புத் தப்பாய்... ஒரு லவ் லெட்டர் - என் குமார்

தப்புத் தப்பாய்... ஒரு லவ் லெட்டர் 🖊️ என் குமார்

20240110072103565.jpeg

“இதோட ஏழாவது தடவை கிழிச்சுக் கிழிச்சுப் போட்டாச்சு.
உருப்படியா உனக்கு ஒரு லவ் லெட்டர் எழுத முடியலையே,
நரேன். பார்க்கணும் பார்க்கணும்னு மனசு அடிச்சு… ஒவ்வொரு
வாட்டியும் பெரிய பிரயத்தனம்லாம் பண்ணி, உன்னைப்
பார்க்கும்போது, எதுவும் பேசாம… உப்புச் சப்பு இல்லாத
உலகத்தைப் பத்திப் பேசி… தூரத்துல போறவங்களை
வேடிக்கை பார்த்திட்டு, அலைச்சத்தம் மீறி, இருட்டும்போது,
“இப்போ கிளம்பினா சரியா இருக்கும்ல”னு எழுந்துக்கற நேரம்
இருக்கே அவஸ்தை, நரேன். முடியல.

20240110073918190.jpeg

பேசாம… எதெல்லாம் பேசணும்னு அடிச்சுக்குதோ
அதையெல்லாம் இப்படி எழுதிக் கொட்டி உன் கைல
திணிச்சுட்டு, நீ படிச்சு முடிக்கறதுக்குள்ள… அந்தக் கடைசி
வரிக்கு நீ வர்றதுக்குள்ள… விருட்டுனு உன் பக்கத்துல இருந்து
ஓடிடணும்.
எப்பவோ காலேஜ் டைம் இப்படி பேனா பிடிச்சு, ஏதோ ஒண்ணு
எழுதுன ஞாபகம். அதுக்கப்புறம் இப்போ தான் இப்படி ஒரு முழு
நீளக் கடிதம். செல்கிட்டயே கண்ணும் கையும் போய்ப் போய்…
பேனாவும் தாளும் டச் பண்ணும்போது… இதுவே ஏதோ
பண்ணுது என்னை.
இந்த ரெண்டோட ஸ்பரிசமே என்னை இன்னும் எழுது
எழுதுன்னு தூண்டுது. பேனாவையும் தாளையும், கொஞ்ச விட்டு
வேடிக்கை பார்க்கறேனோ!
எப்படியோ, என்னை இப்படில்லாம் யோசிக்க வைக்கறதே நீ
தான். நீ மட்டும் தான்.
நான் எழுத நினைச்ச லெட்டரை எழுத ஆரம்பிச்சிட்டேனான்னு
தெரியல, நரேன். ஆனா, அது, இதுதான்னு நினைக்கறேன்.

உன்னை முதல்ல பார்த்தப்போ நினைச்சேன், என்னை நீ
அப்படியே மாத்தப்போறேன்னு நினைச்சேன். ஆனா, நீ என்னை
எதுவும் மாத்தல. என்னை அப்படியே வாங்கி, என்னை
என்கிட்டயே, ‘இது, நீ தான் பார்த்துக்கோ, சுதர்மா’ன்னு
காமிச்சே.
சத்தியமா, ஸ்டன் ஆயிட்டேன். என்னை இம்ப்ரெஸ் பண்ண
எதுவுமே பண்ண மாட்டேங்கறியேன்னு தோணும். ஒரு
ஃப்ரெண்ட் எங்கேயோ படிச்சாளாம். இம்ப்ரெஸ் பண்ணாம
இருக்கறதுகூட ஒரு மாதிரி இம்ப்ரெஸ் பண்ற விஷயம்னு.

ச்சே… அப்படியொரு சந்தேகம் அவளுக்கு சொசைட்டி மேல.
அதனால தான் அவளால யாரையும் லவ் பண்ண முடியல.
அச்சோ…. சாரி… சாரி… அப்படின்னா, நான் உன்னை லவ்
பண்றேனோ!
ம்…….
பண்றேன்னு எனக்கே தெரிஞ்சுபோச்சு. இப்போ இதை
வாசிக்கிற உனக்கும் தெரிஞ்சுபோச்சு.
ஒரு தடவை என் வீட்டுல… சாயந்தரம் ஜாப் முடிச்சு உள்ளே
நுழைஞ்சேன். ஏதோ அமைதியா இருந்துச்சு. முகம் கழுவ பாத்
ரூம் போறதுக்குள்ள… என் அண்ணன் என்னை நிறுத்தி, “என்
பொண்டாட்டிய காலைல ஏதோ சொன்னியாமே!”ன்னு பளார்னு
ஒரு அறை, என் இடது கன்னத்துல. ஒரு நிமிஷம் தலை
சுத்திருச்சு. அம்மா அப்பா, அந்த அண்ணி எல்லாரும் ஒரே மாதிரி
எக்ஸ்பிரஷன்ல வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னாங்க. நான்
எதுவுமே சொல்லல. ஆனா, நான் சொன்னதா ஏதோ ஒரு
நாடகம் பண்றாங்க… பொத்துக்கிட்டு வந்துச்சு அழுகை.
அவங்க முன்னாடி அழுதா அது அசிங்கம். வலி வேற.

கன்னத்துல கை வெச்சுக்கிட்டே பாத் ரூம்ல போய் அழுது
தீர்த்தேன்.
அச்சோ… இப்போ எதுக்கு அதெல்லாம்…. லவ் லெட்டர்ல
தப்புத் தப்பா என்னவெல்லாமோ கொட்டறேன்…
நரேன், ஆக்‌ஷுவலா, உனக்கு எழுதணும்னு நினைச்சு, எனக்கு
நானே டைரி மாதிரி எழுதறேனோ…
சிரிக்கறதை நிறுத்தாதே!ன்னு நீ சொன்னதில இருந்து,
சிரிக்கறேன். சம் டைம்ஸ் கொஞ்சம் சத்தமா சிரிக்கறேன்.
ஏதோ ஒரு பயம்…. இன்செக்யூரிட்டி இருந்துருக்கு. எல்லாத்து
மேலயும்…. எல்லார் மேலயும். அதனால தான் பழகும்போது
நெருங்க பயம். ஆசையா அக்கறையா நீ ஏதாவது விசாரிச்சாக்
கூட அடிமையாக்கப் போறாங்களோ நம்மளைன்னு ஒரு தவிப்பு.
அதைக் கழட்டித் தூரப் போடறதுக்கே எனக்கு எத்தனை வருஷம்
ஆயிருக்கு, உன்கிட்ட.
ஒண்ணு கேட்கட்டுமா? நான் எத்தனை தடவை உன்னை ஹர்ட்
பண்ணியிருக்கேன். நீ என்னை ஒரு தடவை கூடக்
காயப்படுத்தலையே, நரேன். உன் மனசென்ன வாடாமல்லியா?
என்னோட டைமண்ட் ரிங்க் காணாமப் போனாக் கூடக்
கவலைப்பட மாட்டேன். நீ பேசிட்டுப் போனதும் அதுல ஏதாவது
ஒரு விஷயம் ஞாபகத்துல இருந்து தொலைஞ்சுபோனா…
அவ்ளோ தான். அவ்வளவு கஷ்டமா இருக்கும்.
இது ஏதோ வெறும் பாலின ஈர்ப்பு… மேல்… ஃபீமேல்
ஓரியண்டட் மாதிரி தெரியல.
“ ‘நீ இல்லாம நான் வாழ முடியாது. நீ இல்லாத உலகம் எனக்கு
வேண்டாம்’னு யார் சொன்னாலும் அது அந்த நேரத்து
எமோஷனல் அவுட்லெட். காதலர்கள் சொல்ற உச்சக்கட்ட
பொய்”னு நீ சொல்லியிருக்கே.

அதையெல்லாம் நான் சொல்லிருவேனோன்னு தோணும்…. நீ
என்னை ஒவ்வொரு தடவையும் என் இடத்துல
இறக்கிவிட்டிட்டுப் போகும்போது! அவஸ்தை, நரேன்.
‘ரெண்டாவது நாள் ரொம்ப வலிக்குமே… அப்செட் ஆகாம…
க்ராஸ் பண்ணிடு… உடம்ப பார்த்துக்கோ…
பார்த்துக்கோ’ன்னு ப்ரீயட்ஸ் டைம்ல என் அம்மாகிட்ட, அப்பா
கேட்டிருப்பாரா? சத்தியமா இருக்காது. நாம பழகி, என்ன
உறவுன்னே முடிவாகாத முதல் மாசத்துலயே நீ இதையெல்லாம்
கேட்டு என்னை ஷாக் ஆக்கிட்டே, நரேன்.
அதுக்கப்புறம்தான், ‘எந்த வலின்னாலும் இந்த இடியட் கிட்ட
கூச்சமில்லாமச் சொல்லுடி, சுதர்மா!’ன்னு எனக்குள்ள ஒரு
நம்பிக்கை வந்திச்சு.
தெரியல… இதுக்கப்புறம் என்ன? எதுவும் தெரியல. இப்போ
நல்லா இருக்கு. இந்தத் தாளுக்கும் பேனாவுக்கும் எப்படி நான்
எழுதப்போற அடுத்த வரி தெரியாதோ…. அப்படித்தான்
எனக்கும் நம்ம உறவோட அடுத்த நொடி தெரியல.
ஆனா, உன்கிட்ட ஏதோ சொல்லணும்னு தோணுது. அதை
எழுதத்தான் ஏழாவது தடவையும் கிழிச்சுக் கிழிச்சு இதை
எழுதினேன்.
… நீ இப்படியே இரு, நரேன். ஒரு பொண்ணுக்கு ஒருத்தன்
எப்படியெல்லாம் இருந்தாப் பிடிக்குமோ, அப்படி இருக்கே.
இப்படியே இரு.
உன்கிட்ட ஒண்ணு கொடுக்கணும்னு தோணுது. ஆனா,
இன்னும் ஏதோ தடுக்குது. தப்புத் தப்பா ஏதோ சொல்றேனோ...”
கடிதத் தாள், அலைக்கு எதிரே அமர்ந்திருக்கும் நரேனின் கையில்
படபடத்துக்கொண்டிருந்தது. படபடப்பு தாங்காமல், சுதர்மா,

அந்தக் கடைசி வரிக்கு நரேன் வருவதற்கு முன் விருட்டென்று
எழுந்தாள்.
சட்டென்று நரேனின் வலது கைக்குள் சுதர்மாவின் இடது
கைவிரல்கள் மாட்டிக்கொண்டன.
படகு கடலுக்குள் வழுக்கி இறங்குவதுபோல், அந்தக்
கடற்கரையில், அவன் இழுப்புக்கு நெருங்கி விழுந்தாள்.
சாயந்தர வானம் சாட்சியாக… உப்புக் காற்றுக்கு இடைவெளி
விடாமல், சுதர்மாவின் இடது கன்னத்தில் நரேன் கொடுத்த
அழுத்தமான முத்தம்…
செய்யாத தவறுக்காக, இதே கன்னத்தில் ஒரு ஆண் என்கிற
அகம்பாவம் கொடுத்த பளார் என்ற அறை… அந்தத் தீராத
வலியை ஆற்றியதுபோல் இருந்தது, சுதர்மாவுக்கு.