“ அல்லி விழியாலும் முல்லை நகையாலும் ” எனத் தொடங்கும் வள்ளி மலைத் திருப்புகழின் முதற்பாடல் “ வள்ளிபடர் சாரல் வள்ளி மலைமேலு வள்ளி மணவாளப் பெருமாளே ” அழகான சொல்லாடலுடன் நிறைவு பெறும்.
அருணகிரிநாதரின் இந்த “ வள்ளிமலைத் திருப்புகழ் ” பதினொரு பாடல்கள் கொண்டது. மற்றும் இந்த மலையைப் பற்றி வள்ளல் இராமலிங்க அடிகளார், கச்சியப்பசிவாச்சாரியார், வள்ளிமலை சுவாமிகள், கிருபானந்த வாரியார் வணங்கியும், வாழ்த்தியும், பாட்டு இசைத்தும் முருகனின் அருள் பெற்றார்கள்.
முருகன் தமிழ்க்கடவுள் மட்டுமல்ல, காதல் கடவுளும்கூட.
முருகன் வள்ளியின் மேல் காதல் கொண்டு, வள்ளிமலையில் வேடனாகவும், அண்ணன் பிள்ளையாரின் துணையோடு யானையைக் காட்டி பயமுறுத்தி, கிழவனாகி வள்ளியைக் கட்டி அணைத்துக் காப்பாற்றினார். பின்பு தன்னுடைய சுய உருவம் காட்டி வள்ளியை மணந்தார். காதலுக்காக வேடங்கள் தரித்த முருகனும், குறத்தி வள்ளி வாசம் செய்யும் வள்ளிமலையை, `காதல் மலை' என்றே சொல்லலாம். காதலர்கள் அங்குச்சென்று மனமுருகப் பிரார்த்தித்தால் காதல் கைகூடி திருமணத்தில் முடியும்.
சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வள்ளிமலை முருகன் கோயில் வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே ஒரு சிறிய மலையில் அமைந்துள்ளது. வேலூர் - பொன்னைச் செல்லும் பேருந்துகள் வள்ளிமலை அடிவாரம் வழியே செல்கிறது. இக்கோயில் வேலூரிலிருந்து 25 கி மீ தொலைவில் உள்ளது.
ஸ்தல வரலாறு:
வள்ளிக் கொடிகளின் மத்தியில் ஒரு பெண் குழந்தையைக் கண்ட வேடுவ மன்னன் நம்பிராஜன், அப்பெண் குழந்தையை எடுத்து வந்து 'வள்ளி' எனப் பெயரிட்டு வளர்த்தார். கன்னிப்பருவத்தில் வள்ளி தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகப்பெருமான், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியைத் திருமணம் செய்து கொடுத்தார். பின்னர் நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார் என்கிறது ஸ்தல வரலாறு.
ஸ்தல அமைப்பு:
இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன - ஒன்று மலையடிவாரத்திலும், ஒன்று மலையின் உச்சியிலும் உள்ளன.
ஐந்து நிலையுள்ள இராஜகோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்தால் மதிற்சுவரோடு கூடிய விசாலமான – திறந்தபடியான முதற் பிரகாரம். ஈசான மூலையில் கிணறு. அருகே நவக்கிரக கோவில். அக்கினி மூலையில் மடைப்பள்ளியும் களஞ்சிய அறையும். கருவறையில் ஆறு திருமுகங்களுடன் வள்ளி தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி
அருள்பாலிக்கின்றார். இந்தக் கருவறையை ஒட்டியபடி இருப்பது ஒடுங்கிய இரண்டாம் பகுதியான நடு மண்டபம். இங்கே வலப்பக்கம் விநாயகரும் இடது பக்கம் தண்டாயுதபாணியும் வீற்றிருக்கின்றனர். இதனோடு இணைந்தபடி இடது புறத்தில் உற்சவ மூர்த்திகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அடுத்துள்ளது “ மயில் மண்டபம் ” எனப்படுகின்ற மகா மண்டபம். பக்தர்கள் தரிசனம் முடிந்து இளைப்பாறிச் செல்லும் இடமாக உள்ள வெளி மண்டபமானது எட்டுக் கல்தூண்களுடன் காணப்படுகிறது.
ஆறுமுகர் கோயிலின் பின்புறம் மலைகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துள்ள மலையடிவாரத்தில் “ சரவணப் பொய்கை ” திருக்குளம் அமைந்துள்ளது. இக் குளத்திற்கு நாம் இரண்டு வழிகளில் செல்லலாம். கருவறைக்குப் பின்புறம் உள் வீதியின் நடுவேயுள்ள சிறிய கதவினைத் திறந்து கொண்டும் செல்லலாம். அல்லது வாயிற் கோபுரம் நிழற்கூடப் பகுதியினை வலமாகச் சுற்றிச் சென்றாலும் குளத்தினை அடையலாம்.
சரவணப் பொய்கையின் மேற்குக் கரையில் மண்டபத்துடன் இணைந்த சிறிய கருவறையில் குளக்கரை வள்ளியம்மை கோயில் உள்ளது. இதனை அடுத்து, திருப்படி விநாயகர் கோவிலாகும். மலையின் உச்சியிலுள்ள குகைக் கோயிலை அடைய 444 படிகட்டுகள் உள்ளன. இக்கோயில் அமைப்பைப் பல்லவ மன்னர்கள் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இப்படிக்கட்டுகளில் பல இளைப்பாறும் மண்டபங்களும் உள்ளன. மலையின் உச்சியில் நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோயில் நம்மை அதிசயிக்க வைக்கிறது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் வீற்றிருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் உருவசிலைகளும் உள்ளன. குடவறைச் சந்நிதியில் முருகன் ஒரு திருமுகமும் இரு திருக்கரங்களும் கொண்டு அபயஹஸ்தத்துடன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். பொதுவாக விமானத்தின் கீழ்தான் சுவாமி காட்சி தருவார். ஆனால், இங்கு முருகன் சன்னிதிக்கு மேலே கோபுரம் இருக்கிறது. முருகனைக் கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டார். இதனால் இங்குப் பக்தர்களுக்குத் திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை செய்யப்படுகிறது. வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
ஒரு முறை முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். அதனால் வேங்கை மரமே இங்கு ஸ்தல விருக்ஷமாக இருக்கிறது. ஸ்தல தீர்த்தம், சரவணப்பொய்கை ஆகும்.
இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய "குமரி தீர்த்தம்' என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியைப் பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை, "யானைக்குன்று' என்றழைக்கிறார்கள். இவ்விடங்கள் வனத்திற்குள் இருப்பதால் தகுந்த பாதுகாப்போடு சென்றால் பார்த்து வரலாம்.
வள்ளி கோயிலிலிருந்து திரும்பும் பாதையில் மிகவும் பழமையான சமண குகைகள் உள்ளன. அங்குப் பல நேர்த்தியான சிற்பங்கள் காணப்படுகின்றன. இதனை இந்தியத் தொல்லியல் துறை தற்போது நிர்வகித்து வருகிறது.
வள்ளிமலையில் கிருபானந்த வாரியார்:
கிருபானந்த வாரியாரின் சொந்த ஊர் வள்ளிமலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள “ காங்கேய நல்லூர் ” ஆகும். இவர் முருகன் கோவிலுக்கு அருகில் வள்ளி தவம் செய்த மேடையில் ஒரு தவபீடத்தைக் கட்டியுள்ளார். வள்ளிமலை முருகன் மீது மாறாத அன்பும் - காதலும் கொண்டிருந்ததால் அருணகிரிநாதர் பாடிய “ வள்ளிமலைத் திருப்புகழ் ” 11 பாடலுக்கும் இவரது விரிவுரையும் – விளக்கவுரையும் தனித்துவமாக அமைந்தன. வள்ளிமலையை “ ஞானபூமி ” என வாரியார் சுவாமிகள் வர்ணித்துள்ளார்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருமுறையாவது வள்ளிமலைக்குச் சென்று முருகப்பெருமானைத் தரிசிக்க வேண்டும் என்று கிருபானந்த வாரியார் தனது சொற்பொழிவில் அடிக்கடி கூறுவார். இம்மலை அந்த அளவிற்குச் சிறப்பு வாய்ந்தது.
திருவிழாக்கள்:
இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது . வள்ளிமலை முருகனுக்குத் தேரோட்டம் நான்கு நாட்களுக்கு நிகழ்கிறது. 7ஆம் நாள் உற்சவத்தன்று மாலையில் புறப்படும் திருத்தேர் தேர் 6 கி.மீ தூரமுடைய கிரிவலப் பாதையைச் சுற்றிய பிறகு 10ஆம் நாள் மாலையில் இருப்புக்கு வந்து சேர்ந்ததும் பக்தர்கள் அனைவரும் சரவணப் பொய்கையில் தீர்த்தமாடுகிறார்கள். விழாவின் கடைசி நாளன்று (மாசி பௌர்ணமி) வள்ளி கல்யாணம் நடக்கிறது. இதைத்தவிர வைகாசி விசாகம், கிருத்திகை விழாக்கள், சதுர்த்தி, கந்தசஷ்டி, சித்திரைப் பௌர்ணமி, விஜயதசமி, தீபத் திருவிழா, தமிழ்ப்புத்தாண்டுப் படிவிழா போன்றவை வள்ளிமலை முருகன் திருத்தலத்தின் முக்கிய திருவிழாக்களாகும்.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன் :
திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனைப் பிரார்த்தனை செய்வதால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாகச் சுவாமிக்குத் தேன், தினைமாவு படைத்து, வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செலுத்துகிறார்கள்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
மலைக் கோவில் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 வரை மதியம் 2.00 மணி முதல் 6.30 வரையும் திறந்திருக்கும்
கோயிலுக்குச் செல்லும் வழி:
சென்னையிலிருந்து சுமார் 111 கி.மீ தொலைவிலும், காட்பாடியிலிருந்து 21 கி.மீ. தொலைவில் வள்ளி மலை உள்ளது. வேலூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களிலிருந்தும் வள்ளிமலை செல்ல பேருந்து வசதி உள்ளது.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், காதல் திருமணம் வெற்றி பெறவும் வள்ளி, தெய்வயானை சமேதராய் வீற்றிருக்கும் வள்ளிமலை முருகனின் அருளைப் பெறுவோம்!!
https://youtu.be/KLUFShzz3OQ?si=zWxilrkbmxxUIJyl
Leave a comment
Upload