பரணீதரன் இந்திரனுடைய நிலத்தைப் பற்றிக் கூறத் தொடங்குகிறார்.
மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் எனக் கூறப்பட்ட இந்திரன் (தேவேந்திரம்) ஆவார். அவருடைய கொடியில் சூரியனும், சந்திரனும் இடம் பெற்றிருக்கும். அவருடைய வாகனமாக யானை இருக்கும். இதற்குரிய புராண இதிகாச கதைகள் அனைத்தும் பண்டைய புராணங்களில் இருக்கிறது. எதனால் இந்திரன் என்ற பதம் தொல்காப்பியத்தில் இல்லாமல் வேந்தன் என்ற பதம் இருக்கிறது என்பதற்கு தொல்காப்பியத்தில் உள்ள ஒரு சூத்திரம் சான்றாக உள்ளது.
அதாவது, இந்த்₃ர: என்ற சொல் வடமொழிச் சொல்லாகும். தலைவன் என்ற பதத்திற்கான இலக்கணமே இந்திரன் என்று சொல். தேவர்களுக்கு வேந்தனாக இருந்தால் தேவேந்திரன் எனவும், மனிதர்களுக்கு வேந்தனாக இருந்தால் நரேந்திரன் என்றும், பறவைகளுக்கு வேந்தனாக இருந்தால் பக்ஷீயேந்திரன் (கருடன்) என்றும், மிருகங்களுக்கு வேந்தனாக இருந்தால் மிருகேந்திரன் (சிங்கம்) என்றும், யானைகளுக்கு வேந்தனாக இருந்தால் கஜேந்திரன் என்றும், வேந்தர்களுக்கு எல்லாம் வேந்தனாக இருந்தால் மகேந்திரன் என்றும் அந்த காலத்தில் பெயரிட்டனர். இவை அனைத்தும் பொதுவாக வடமொழிச் சொற்களாகவே இருந்தன. அதற்கு தமிழ் பதம் பொதுவாக வேந்தன்(தலைவன் / அரசன் / மன்னன்) என்பதே ஆகும்.
வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ - தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்சவியல் - 5 என்ற விதிப்படி தொல்காப்பியர் வடமொழிச் சொற்களை தவிர்த்து அதற்குரிய தமிழ்ச் சொல்லான வேந்தன் (தலைவன்) என்ற பதத்தை மருத நிலத்தின் கடவுளுக்கு பயன்படுத்தினார். இதில் அரசன், மன்னன் போன்ற சொற்களில் கூட வடமொழி கலப்பு உண்டு.
ராஜா என்ற பதம் ராசா ஆகி, தமிழ் சொல் ரகரத்தில் (‘ர') தொடங்கியது என்பதால் அதற்கு முன் அகரம் (‘அ’) சேர்த்து அராசா என்று மாறியது. பொதுவாக ஆண்பால் ‘ன்' விகுதியில் முடிவதால் அரசன் என்று மாறியது. மரியாதை கொடுப்பதற்காக பலர் பால் விகுதியில் அரசர் என்றும் மாறியது. மன்னன் என்ற பதத்திற்கு, குடிமக்களை தனது மனதில் (மன் - மனது, மனசு, மன) எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருப்பவன் என்று பொருள். ஒரு மன்னனாகப்பட்டவன் எப்பொழுதும் தன் மக்களுக்கு கைமாறு கருதாமல் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைப்பவன். எப்படி மழையானது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் பெய்கிறதோ அதுபோல மன்னனாகப்பட்டவன் மக்களுடைய நன்மை தீமையை பார்க்காமல் எப்பொழுதும் மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்பவனாக இருப்பான். அதனால் தான் இந்திரனுக்கு மழை தெய்வம் என்று ஒரு பெயரும் உண்டு. அதனாலேயே இந்திரனை வேந்தன் என்று தொல்காப்பியர் கூறுகிறார்.
இந்திரனுடைய வாகனமாக யானை இருப்பதற்கான காரணம் மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை என்ற முதுமொழிக்கு ஏற்ப மருத நிலப்பகுதியான மதுரையில் பயிர்களை போரடிப்பதற்கு யானையையே பயன்படுத்தினர். அது மட்டும் இல்லாமல் ஒரு நாட்டின் கோட்டையை பாதுகாப்பதற்கும் வேறு ஒரு நாட்டின் கோட்டையை தகர்ப்பதற்கும் அந்த காலத்தில் இக்கால டேங்கை (Tank) போல யானை பயன்படுத்தப்பட்டது. மரங்களை உடைத்தல், மரங்களை பெயர்த்தல், வீடு கட்டுதல், கோவில் கட்டுதல், பாறைகளை நகர்த்துதல் போன்ற பல கடினமான வேலைகளைச் செய்யவும் கூட யானைகள் பயன்படுத்தப்பட்டன. மக்களின் உணவு, அவர்களின் பாதுகாப்பு, அவர்கள் தங்குவதற்கு இடம், கடினமான வேலைகள் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் யானைகளை பயன்படுத்தப்பட்டன. இதனால்தான் இந்திரனின் வாகனமாக யானை இருக்கிறது. வயல்கள் நிறைந்த மருத நிலங்கள் செழிப்பதற்கு மழை, யானை எவ்வாறு முக்கியமோ அது போல சரியான சூடும் சரியான குளிர்ச்சியும் மிகவும் முக்கியமாகும். அவை இரண்டையும் கொடுப்பது சூரியனும் சந்திரனும் ஆகும். சில தானியங்கள் வளருவதற்கு சூரிய ஒளி மிகவும் முக்கியம். அதேபோல சில தானியங்கள் வளர்வதற்கு நிலவொளி மிகவும் முக்கியம். இந்த இரண்டும் அளவாக இருந்தால் மட்டுமே மக்களின் உணவு உற்பத்தி எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். அதனாலேயே இந்திரனுக்கு சூரியனும் சந்திரனும் கொடியாக இருக்கிறார்கள்.
அந்த காலத்தில் மக்கள் இந்திர விழா என்ற ஒரு விழாவினை எடுத்ததாக சங்க இலக்கியங்களில் நிறைய சான்றுகள் உள்ளன.
இந்திர விழா அல்லது காமன் விழா (இன்றும் தஞ்சை மாவட்டத்தில் காமன் பண்டிகை என்ற ஒரு விழா உள்ளது. ஆனால் இப்பொழுது அது மன்மதனுக்காக செய்யப்படுகிறது) என்ற பெயரில் மக்கள் ஒரு மாத காலம் விழா எடுத்தார்கள் என்று சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் ஐங்குறுநூறு போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
பூம்புகாரில் உள்ள கற்பகக் கோட்டத்தில் வெள்ளை யானை கொடியேற்றப்பட்டு இந்திர விழா தொடங்கப்பட்டது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
இன்றும் கூட பாரதத்தின் கிழக்குப் பகுதிகளில் இந்திர பூர்ணிமா (இந்த்ரோத்சவம் - இந்திர உற்சவம், சரத்பூர்ணிமா - மழை கால முடிவு) என்று ஒரு பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அதாவது சரியான மழையினை கொடுத்து பயிர்களை காப்பாற்றிய இந்திரனுக்கு நன்றி சொல்லக்கூடிய ஒரு பண்டிகை ஆகும். இப்படி காலப்பருவங்களை மருத மக்களுக்கு கொடுத்து அவர்களுடைய வாழ்வினை உயர்த்தியதால் இந்திரனே வேந்தனாக மக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆறு பெரும் பொழுதுகளும் உள்ள மருத நிலத்திற்கு அவர் கடவுளாக இருந்தார். இவரைத்தான் மாயோன் எனக் கூறப்படும் முல்லை நில கடவுளான கிருஷ்ணர் எதிர்த்தார். பல புராண இதிகாசங்களில் கூட இந்த கதை உள்ளது.
அரசனையும் இந்திரனுக்கு நிகராக இந்த காலத்தில் மக்கள் கொண்டாடினர். அதனால்தான் அரசனுக்கும் இந்திரனை போல பட்டத்து யானை உண்டு. இந்திரனிடம் ஐராவதம் என்ற யானை இருக்கும். அரசனிடம் பட்டத்து யானை இருக்கும். இந்திரனிடம் உச்சைவசிரஸ் என்ற குதிரை இருக்கும். அரசரிடம் பட்டத்து குதிரை இருக்கும். இந்திரனிடம் கற்பக விருட்சம் என்ற மரம் இருக்கும். அரசர்களுக்கும் குடி மரம் இருக்கும் (எடுத்துக்காட்டாக சோழனுக்கு ஆத்தி, பாண்டியனுக்கு வேம்பு). இந்திரனுக்கும் கொடி, தேர் போன்றவை உண்டு. அரசனுக்கும் கொடி, தேர் போன்றவை உண்டு. இவ்வாறு மக்கள் இந்திராணியும் அரசினையும் ஒன்றாக கொண்டாடுவதற்கு காரணம் மிகுந்த வறட்சியோ அல்லது பெரிய வெள்ளமோ அல்லது எதிரிப் படையோ அல்லது ஒரு மிகப்பெரிய நோயோ வரும்பொழுது தன் நாட்டு மக்களை காப்பதற்கு அந்நாட்டு மன்னன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.
இதற்கு சான்றுகள் பாரத தேசத்து முன்னாள் இருந்த அனைத்து நாடுகளில் உள்ள இலக்கியங்களிலும் உள்ளன. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டின் மனுநீதிச் சோழன் ( பசுவிற்கு நீதி வழங்குவதற்காக தன் மகனையே தேர்காலில் இட்டுக் கொன்றவர்), பொற்கை பாண்டியன் (தன் மக்களை காப்பாற்றுவதற்காக தன் கையை தானே வெட்டிக் கொண்டவன்), பாண்டியன் நெடுஞ்செழியன் (கோவலனுக்கு தண்டனையை சரியாக ஆராயாமல் கொடுத்து விட்டேன் என்று வருந்தி உயிரை விட்டவர்) வடக்கே சிபிச் சக்கரவர்த்தி (தன்னை நம்பி வந்த புறாவிற்காக தன்னையே அர்ப்பணித்தவன்), ராமபிரான் (தன் நாட்டில் உள்ள ஒருவன் தன் மனைவியை சந்தேகித்ததால் சீதையையே காட்டுக்கு அனுப்பியவர்), ராணா பிரதாப் சிங் (கடைசி வரை தன் மக்களை காத்து நின்றவர்) போன்ற எண்ணில் அடங்காத மன்னர்கள் தங்கள் மக்களை காத்து நின்றதால் அவர்களையும் மக்கள் கடவுளாகவே எண்ணி வழிபட்டு வந்தனர். அதனால்தான் கண்ணால் பார்க்க முடியாத ஆனால் உணரக்கூடிய (மழையாகவும், வெயிலாகவும், குளிராகவும்) இந்திரணையும் கண்ணால் பார்க்கக்கூடிய மன்னனையும் மருத நிலம் கடவுளாக எடுத்துக் கொண்டது.
அடுத்த வாரம் நெய்தல் நில கடவுளை பற்றி பரணீ சொல்கிறார்.
Leave a comment
Upload