தொடர்கள்
ஆசிரியர் பக்கம்
'மன்னிப்பு ' படும் பாடு - விகடகவியார்

20231102061514728.jpeg

சென்ற வாரம் ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் அதிகம் பயன்படுத்திய வார்த்தை மன்னிப்பு. மன்சூர் அலிகான் திரிஷா மோதல் அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜ் மோதல் குஷ்பூ காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் மோதல் இதன் தொடர்ச்சியாக ஒருவர் மாற்றி ஒருவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர் கொடி உயர்த்தினர். ரமணா படத்தில் விஜயகாந்த் மன்னிப்பு தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை என்று சொல்லியது ஏனோ நமக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.

முதலில் மன்சூர் அலிகான் திரிஷா விவகாரத்தை பார்ப்போம். வில்லன் நடிகர் ஆன மன்சூர் அலிகான் இப்போது கிட்டத்தட்ட காமெடி நடிகராக படங்களில் வரத் தொடங்கி விட்டார். அதே சமயம் பொது மேடையில் பேட்டிகளின் போது அவரது பேச்சு கொஞ்சம் பரபரப்பைத் தான் ஏற்படுத்தும். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவது தான் மன்சூர் அலிகான் பழக்க வழக்கம். அப்படித்தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் லியோ படத்தில் திரிஷாவுடன் ரேப் சீன் எல்லாம் இல்லை, அதேபோல் இன்னொரு நடிகையை எனக்கு தங்கை என்று சொல்லிவிட்டார்கள் இரண்டையும் தமாஷாக அவர் அங்கலாய்த்தார். இந்த வீடியோ வைரலானது. இதைத் தொடர்ந்து திரிஷா மன்சூர் அலிகான் எப்படி இப்படி பேசலாம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து குஷ்பூ நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் மன்சூர் அலிகானின் இந்த பேச்சை கண்டித்தார்கள். இது போதாது என்று தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரையின் பேரில் இரண்டு பிரிவின் கீழ் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையம் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தது அவரை விசாரணைக்கும் அழைத்தது. இது ஒரு புறம் இருக்க தென்னிந்திய நடிகர் சங்கம் பொதுவெளியில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் . அதுவரை அவரை ஏன் தற்காலிகமாக சங்கத்திலிருந்து நீக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டது .ஆரம்பத்தில் மன்னிப்பு எல்லாம் நான் கேட்க முடியாது ரேப் சீனில் திரிஷா நடித்ததே இல்லையா சினிமா காட்சிதானே ஒரு படத்தில் கொலை செய்து விட்டது போல் காட்சி வருகிறது அப்படி என்றால் நிஜமாகவா கொலை செய்து விட்டார்கள் என்றார். நடிகர் சங்கம் விவகாரத்தில் உங்களுக்கு நான் நான்கு மணி நேரம் அவகாசம் தருகிறேன் அதற்குள் அந்த அறிக்கையை திரும்ப பெறுங்கள். என்னை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று கேட்காமல் நீங்களாகவே ஒரு முடிவு செய்யலாமா என்று கேட்டார் மன்சூர் அலிகான்.

​முதலில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த மன்சூர் அலிகான் திடீர் திருப்பமாக என் சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு என்று அறிக்கையை வெளியிட்டு கூடவே மணிப்பூர் ஜி எஸ் டி மத்திய அரசு என்று கடுமையாக அரசியல் நெடியும் அந்த அறிக்கையில் இருந்தது. பதிலுக்கு திரிஷா தவறு செய்வது மனிதம். மன்னிப்பது தெய்வீகம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

​மன்சூர் அலிகான் திடீரென மன்னிப்பு கேட்டதுக்கு காரணம் அவரது நலம் விரும்பிகள் உங்கள் படம் வெளிவர வேண்டும் நீங்கள் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் இப்போது இந்த சர்ச்சை தேவை இல்லை என்று அறிவுரை கூறியதை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டதாக சொல்கிறார்கள். அதேசமயம் மன்சூர் அலிகான் ஒரு நகைச்சுவைக்காக சொன்ன ஒரு கருத்து இப்படி வில்லங்கம் ஆகிவிட்டது. ஆனால் ஜெயிலர் பட விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் இயக்குனர் தமன்னாவுடன் சேர்ந்து என்னை நடனமாட விடாமல் ஏமாற்றி விட்டார் என்று சொன்னதை எல்லோரும் தமாஷாக சிரித்து தான் கடந்து போனார்கள். அதேபோல் ஒரு யூட்யூப் பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் காஷ்மீர் குளிருக்கு விஜய்க்கு இதமாக இருந்த திரிஷா என்று என்று குறிப்பிட்ட வீடியோவும் வைரலானது. அப்போதெல்லாம் திரிஷா மௌனம் காத்தார். இதேபோல் சிரஞ்சீவி ஒரு தெலுங்கு பட விழாவில் மேடையிலிருந்த ஒருவர் சொன்ன கருத்துக்கு பதில் சொல்வது போல் தனது பக்கத்தில் இருந்த கீர்த்தி சுரேஷை அவர் சற்று அநாகரிகமாக சீண்டினார். தொடையில் எல்லாம் கை வைத்தார், அந்த வீடியோவும் வைரலானது. எது எப்படியோ மன்சூர் அலிகான் கருத்து தமிழ் சினிமாவின் இன்னொரு பக்கத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கிவிட்டது என்பது மட்டும் உண்மை.

​மன்சூர் அலிகான் பேட்டிக்கு கண்டனம் தெரிவித்து குஷ்பூ கருத்து தெரிவித்தார் அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற முறையில் அவரது பரிந்துரையின் பேரில்தான் தமிழக காவல்துறை மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தது. குஷ்புவின் இந்த கருத்து பற்றி திமுக ஆதரவாளான சண்முகம் சின்னராஜ் என்பவர் மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறை வன்கொடுமைக்கு ஆளான போதுநடவடிக்கை எடுக்க குரல் கொடுக்காத குஷ்பூ திரிஷாவுக்கு மட்டும் குரல் கொடுப்பதா என்று குஷ்பூவை விமர்சனம் செய்து எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் அவருக்கு பதில் அளித்த குஷ்பூ திமுக இப்படியான மோசமான மொழியைத்தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இதுதான். பெண்களை அவமதிக்க தவறான மொழியை கையாளுகிறார்கள் சாரி என்னால் உங்களைப் போல் சேரி மொழியில் பேச முடியாது என்று தெரிவித்தார்.

​குஷ்பூ சேரி மொழி என்று பயன்படுத்தியதற்கு விடுதலை சிறுத்தைகள் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் குஷ்பு மீது புகார் மனு தந்தது. காங்கிரஸ் கட்சி எஸ்சி எஸ்டி பிரிவு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவரை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றார்கள். எக்ஸ் பக்கத்திலும் பலர் சேரி மொழி என்ற வார்த்தை பயன்படுத்தியதற்கு குஷ்பூக்கு பலர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் குஷ்பூ நான் மன்னிப்பு எல்லாம் தெரிவிக்க முடியாது. சேரி என்பதற்கு பிரஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள் நான் அன்பை பகிர்ந்து கொள்கிறேன் என்று கிண்டலாக அந்த வார்த்தை பயன்படுத்தினேன் என்று சொல்லி இருக்கிறார். நடிகை குஷ்பூ. பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் குஷ்பூ இன்று வரை மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

20231102061542344.jpeg

​அடுத்த மன்னிப்பு சர்ச்சை தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விவகாரத்தில்.

​ஆவின் நிறுவனம் பற்றி அண்ணாமலை சொன்ன ஒரு கருத்துக்கு பதிலாக தமிழகபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வட மாநில பால் உற்பத்தியாளர்களிடம் அண்ணாமலை கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்துக்கு எதிராக செயல்படுகிறார் என்று குற்றம் சுமத்தி இருக்கிறார். அதற்கு பதிலாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் உங்களுக்கு நான் 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும். உங்களால் நிரூபிக்க முடியாவிட்டால் தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கேட்டு உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பதிவு செய்திருக்கிறார் கூடவே நீங்கள் அமைச்சராக தொடர்வது தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.

​இதற்கு பதிலாக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் தலையை சீவி விடுவாயா மன்னிப்பு கேட்க நான் சாவார்கார் பரம்பரை அல்ல பெரியார் பேரன் என பதில் சொல்லி இருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

​இதற்கு பதிலாக அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு தொடர்வேன். என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டை சொல்லி இருக்கும் அமைச்சரை ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வேன். அந்த ஒரு கோடியை ஆவின் நிறுவனத்தில் பால் கொடுக்கும் நமது விவசாயிகள் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்குவேன் என்று சொல்லி இருக்கிறார்.

​மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டு திரிஷா குஷ்பூ சிரஞ்சீவி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன் என்று சொல்லி இருக்கிறார். குஷ்பு மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்கிறார். அண்ணாமலை ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்கிறார். மொத்தத்தில் மன்னிப்புநிலைமை ரொம்பவும் பாவம்.