தொடர்கள்
கவிதை
மழை பேசுகிறேன்…!--கவிஞர் இரா. சண்முகம் ,பரணம்பேடு

படித்ததில் பிடித்தது....

20231101211818365.jpeg

முல்லைப் பெரியாறு

அணை உடைந்தால்

எல்லையில்லா வெள்ளத்தில்

மூழ்கிப் போவோமென்று

இல்லாத கதைபேசி

வம்பு செய்தது கேரளம்.

அணை உடையாமலே மூழ்க வைத்து

கலகம்செய்த கேரளத்தை

உளம் நடுங்கவைத்தேன்

கதிகலங்க வைத்தேன்

தமிழகத்தின் நியாயத்தை

தரணிக்குப் புரியவைத்தேன்.

சொட்டுத் தண்ணீர்கூட

தரமறுத்த கர்நாடகத்தை

கொட்டித்தீர்த்த கனமழையாய்

சூழ்ந்த பெருவெள்ளமானேன்.

கெட்டது குடியென்று

கதறிய கோலத்துடன்

பட்டது போதுமென்று

முன்னூறுலட்சம் கனஅடிநீரை

நட்டமெனினும் திறக்கவைத்து

புத்திப் புகல வைத்தேன்.

தண்ணீர் தண்ணீரென்று

கதறிய தமிழகமே

தண்ணீர் காட்டி

இரண்டு மாநிலத்தை

தஞ்சமென்று உன்னிடமே

அன்போடு ஒடிவந்தேன்.

ஏரிகுளம் ஓடையென்று

எனைத்தேக்கிப் பாதுகாத்து

நீர் வளம்பெருக்கி வாழ்ந்திடவே

கனிவோடு ஒடிவந்தேன்.

ஒடிவந்த எனைநீயோ

தொடர்ந்து ஓடவைத்து

கடலோடு சேர்த்துவைத்தாய்

உன்இயலாமையைக் காட்டிவிட்டாய்.

விழித்துக்கொள் தமிழகமே

வேண்டாமே அலட்சியங்கள்

எனக்கான முகவரியைக்

காணாமல் தேடுகிறேன்.

ஏரிகுளம் குட்டைகளை

இழந்துநான் தவிக்கின்றேன்.

குவியல்குவியலாய்ப்

பிளாஸ்டிக் பூதங்கள்

தடுத்து வழிமறிக்க

நிலைகுலைந்துப் போகின்றேன்.

எங்கே என் இருப்பிடம்

தேடிக் கொடுத்திடுங்கால்

உங்கள்இல்லங்களை

நான் ஏன் நாடுகிறேன்.

உங்கள் தேரோடும் வீதிகளில்

நான் ஏன் ஓடுகிறேன்

எனக்கோர் வழிசெய்து

உங்கள் பெருந்துன்பம் தவிர்த்திடுங்கள்.

மாதம் மும்மாரி

பொழிந்த நான் இன்று

மூன்றாண்டில் ஓர் முறையே

பூமியைத் தழுவுகிறேன்.

இதமாய் வரவேற்று

உரியஇடம் கொடுத்திடுங்கள்

ஏரிகுளம் தூர்வாரி

எனக்கு இடம் கொடுத்திடுங்கள்.

உங்களுக்கோர் ஊறுஇன்றி

தங்கி இளைப்பாறிடுவேன்

உங்கள்கோடைத் தாகமும்தணித்து

தண்ணீர்ப் பஞ்சமும் போக்கிடுவேன்.

வாழ்க நீவிர்!

ஓங்குக தமிழகம்!