தொடர்கள்
கவர் ஸ்டோரி
அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்-தில்லைக்கரசிசம்பத்

20231017194429160.jpeg

இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகின்றது. கடந்த 2018 ல் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 1,62,468 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவர்களில் 87,090 மரணமடைந்ததாக நமக்கு அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கின்றது. அதாவது இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் உயிரிழக்கிறார். இன்னும் சொல்லப்போனால் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்ட இரு பெண்களில் ஒருவர் நிச்சயமாக உயிர் இழந்துவிடுகிறார். கேட்கவே பயமாக இருந்தாலும் இது தான் உண்மைநிலை. ஒரு காலத்தில் கர்ப்பவாய் புற்றுநோய் தான் இந்தியாவில் அதிகம் பெண்களை தாக்கிக்கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த இடத்தை மார்பகபுற்றுநோய் பிடித்துள்ளது.

20231017194509160.jpeg

கடந்த 3 தலைமுறைகளாக உலகம் முழுவதும் 20 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்க பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களையே பெரும்பாலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இளம் பெண்களையும் அதிகம் தாக்குகிறது
என்ற புள்ளிவிவரம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் 39% பெண்கள் மார்பக புற்றுநோய் தாக்கிய ஆரம்ப நிலையிலேயே அதாவது புற்றுநோய் உடலில் வேறு பாகங்களில் பரவாமல் மார்பகத்தில் மட்டுமே உள்ள நிலையில் மருத்துவ பரிசோதனை மூலம் அறிந்து கொள்கிறார்கள். 59% பெண்கள் மார்பகங்களை தாண்டி வெளியே மற்றும் நிணநீர் முடிச்சுகள் (lymph nodes) வரை பரவிய நிலையில் புற்றுநோயை கண்டறிகிறார்கள்.
பாக்கி 11% பெண்கள் அதையும் தாண்டி நுரையீரல் கல்லீரல் எலும்பு என அனைத்து பாகங்களையும் துவம்சம் செய்த பிறகே தமக்கு புற்றுநோய் வந்திருக்கிறது என்பதை மிக தாமதமாக அறிந்து கொள்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இவ்வகையினரில் பெரும்பான்மையினர் உயிர் பிழைப்பதில்லை.

ஆரம்பநிலையிலேயே கண்டுப்பிடித்துவிட்டால் பெரும்பாலான வியாதிகளுக்கு நிச்சயமாக குணமடையலாம். மார்பக புற்றுநோயையும் பெண்கள் அவ்வப்போது தமது உடலை சுயப்பரிசோதனை செய்வதின் மூலம் உஷாராக இருந்துக்கொள்ளலாம்.
மார்பகங்களின் அளவின் திடீர் மாற்றங்கள் ஒரு பக்கம் கடுமையான வலி ஏற்படுவது, ரத்தம் வருவது, கட்டிகள் தென்படுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதம் செய்யாமல் உடனே மருத்துவரிடம் செல்லவேண்டும்.

20231017194544173.jpeg

மார்பக புற்றுநோய் குறித்து பல தவறான நம்பிக்கைகள் பரவியுள்ளன. நமது நெருங்கிய ரத்த உறவு சொந்தங்களுக்கு மார்பக புற்றுநோய் வந்திருந்தால் நமக்கும் நிச்சயமாக வரும் என்பது முழுவதும் உண்மையல்ல.. சுமார் 5% லிருந்து 10% வரையே புற்றுநோய் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். குடும்பத்தில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மார்பகபுற்றுநோய் வந்திருந்தாலோ அல்லது இருவருக்கு நோய் பாதித்திருந்தாலோ அல்லது ஒருவருக்கு இரு மார்பகங்களிலுமே புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலோ அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஜாக்கிரதையாக இருந்து , சந்தேகம் ஏற்பட்டால் மரபணு ரீதியாக நமக்கும் நோய் தாக்குமா என்பதை மருத்துவ பரிசோதனைகளின் மூலம் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம்.
இன்னொரு தகவல் , ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும். மார்பகங்களே இல்லாமல் மார்பக புற்றுநோயா என ஆச்சரியப்படவேண்டாம். மார்பக திசுக்கள் இருப்பாலினத்தவருக்கும் இருப்பதால் அவர்களுக்கும் வரும். இந்தியாவில் இது பற்றிய புள்ளிவிவரங்கள் சரியாக கிடைக்கவில்லை என்றாலும் இங்கிலாந்தில் ஒவ்வொரு வருடமும் 350 ஆண்களுக்கு மேல் மார்பகபுற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

20231017194648918.jpeg

சென்னையில் உள்ள அடையார் புற்றுநோய் மருத்துவமையம் கடந்த 15 வருடங்களில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் 7% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது.

அவ்வப்போது சுயப்பரிசோதனை செய்தல், சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்தல், பாதிக்கப்பட்டிருந்தால் தாமதிக்காமல் உரிய சிகிச்சை எடுத்தல் ஆகிய செயல்களே உயிரைக்காப்பாற்றும் என்பதை நினைவில் வைத்து கவனமாக இருங்கள்.

20231017194719171.jpeg

இக்காலக்கட்டத்தில் மார்பகபுற்றுநோய் அதிகரித்து உள்ளதற்கு , மரபணுரீதியான பாதிப்புகள், குழந்தைபேறு தள்ளிவைப்பு, உடலுழைப்பற்ற வாழ்க்கைமுறை, உடல்நலனுக்கு ஒவ்வாத உணவு பழக்கம் , காற்றுமாசு போன்றவைகளை காரணம் காட்டுகிறார்கள். மற்ற காரணிகள் நாமாக உண்டாக்கி கொள்வது. ஆனால் காற்றுமாசு என்பது இந்த நாகரீக ( ! ) உலகம் நம் மீது திணிப்பது. காற்று மாசால் பலவிதமான வியாதிகள் புற்றுநோயையும் சேர்த்து பலவிதமான வியாதிகள் வருவதற்கு காற்று மாசில் இருக்கும் PM2.5 (Fine particulate matter ) என்ற மிக நுண்ணிய துகள்கள் காரணமாக உள்ளது. ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு. அந்த துகளின் விட்டம் 2.5 மைக்ரான்களைக் காட்டிலும் சிறியவை. எனவே அதை PM 2.5 என அழைக்கிறார்கள். காற்றில் கலந்திருக்கும் அந்த துகளின் நுண்ணிய அளவின் காரணமாக, PM 2.5 துகள்கள் சுலபமாக சுவாசத்தின் மூலம் எளிதில் மூக்கு மற்றும் தொண்டையை கடந்து, இரத்த ஓட்டத்தில் நுழைந்து “தன்இயல்பு மாற்றம்” ( mutation) அடைந்த செல்களை வேகமாக புற்றுநோய் செல்களாக உருமாற்றம் செய்கிறது.

பலவித வியாதிகளை உண்டாக்கும் இந்த காற்று மாசால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 70 லட்சம் மக்கள் இறந்து போகிறார்கள் என்பது கூடுதல் செய்தி.

நல்ல செய்தி என்னவென்றால் பல வருடங்களாக பெண்களின் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த அனஸ்ட்ரசோல் (anastrozole) எனும் மருந்தை தற்போது புற்றுநோய் வராமலும் தடுக்கும் என்பதால் இதை தடுப்பு மருந்தாக உபயோகிக்கலாம் என இங்கிலாந்தின் மருந்து மற்றும் உடல் ஆரோக்கிய பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (Medicines And Healthcare Products Regulatory Agency) உரிமம் வழங்கியுள்ளது. முக்கியமாக அனஸ்ட்ரசோல், காப்புரிமை தேவை இல்லாத மருந்து. எனவே இதனை குறைந்த செலவில் இனி பல மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தயாரித்து விற்க முடியும். அனஸ்ட்ரசோல் மார்பக புற்றுநோய் வருவதை தடுப்பதில் மிக சிறந்த முறையில் செயலாற்றுவதால் மார்பக புற்றுநோய் தாக்க வாய்ப்பு உள்ள பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

தினமும் 1 மில்லிகிராம் (1 mg) அனஸ்ட்ரசோல் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். விலையும் குறைவு என்பது சாதகமான விஷயம். பெண்கள் உடலில் சுரக்கும்
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் புற்றுநோய் கட்டிகள் வளரவும் காரணமாக இருக்கிறது. அனஸ்ட்ரசோல் மருந்து ஈஸ்ட்ரோஜன் சுரப்பை குறைத்து புற்றுநோய் கட்டிகள் வளர்ச்சிக்கு ஆப்பு வைப்பதால் கட்டிகள் வளர்வதை தடுக்கிறது. இம்மருந்தை 5 வருடங்கள் எடுத்து கொண்ட பெண்களில் 50 சதவீதம் பேருக்கு நோய் வரவில்லை என ஆய்வு தெரிவிக்கிறது. மெனோபாஸ் வந்த பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய்க்கு மருந்தாக அனஸ்ட்ரசோல் இன்று வரை சிறப்பான சிகிச்சை மருந்தாக இருந்து வந்த நிலையில் இனி இந்த நோய் வருவதையே தடுக்கவும் இந்த மருந்தை பயன்படுத்த முடியும் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.