பாரத மண் யோகிகளும் ,சித்தர்களும் வாழ்ந்த மண், யோகமும், தவமும் விளைந்த மண் .உலகுக்கே அன்பையும் , அகிம்சையும் கலந்த வாழ்வியல் முறையை கற்பித்த மண் .
நோய் நாடி, நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல் (குறள் 948)
என்று நோய் தீர்க்கும் வழிகளை பாரம்பரியத்தை பெருமிதமாக கொண்ட இம்மண்ணில் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவம் தனித்துவம் மிக்கது /
உலகின் தொன்மை வாய்ந்த மருத்துவ முறைகளில் நம் தென்னிந்தியாவின் சித்த மருத்துவ முறையும் ஒன்று .இயற்கை அளித்த கொடைகளான மூலிகைகள், நவலோகங்கள், தாது பொருட்கள் , நன்னீர் , கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், போன்ற நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியன கொண்டும், தெங்கு, புங்கு, புன்னை, வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட மருத்துவ முறை சித்த வைத்திய முறையாகும் .குரு-சீடர் வைத்திய பரம்பரையில் வாய் வழி கடத்தப்படும் மருத்துவ செய்முறைகள், மருந்து வகைகள் கல்பங்கள் மற்றும் சூரணங்கள் இங்கு காலம் காலமாக மக்களுக்கு நற்சுகத்தை அளித்து, நோய்கள் அணுகாது காத்தும் வருகின்றன.
சித்த மருத்துவத்தில் நாடி வைத்திய முறை சிறப்பு மிக்கது .ஒருவரின் நாடி பிடித்துப் பார்த்தே அவர் உடலில் உள்ள நோய்களைக் கண்டு பிடித்து ,உரிய மருந்தைக் கொடுக்கும் வைத்தியர்கள் முன்பு இருந்தார்கள். இப்போதும் சிலர் அக்கலையில் கற்று தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் . வேலூர் சத்துவாச்சாரியில் சித்த மருத்துவர் பாஸ்கரன் அவர்கள் நாடி வைத்தியத்தில் சிறப்பான சேவை செய்து வருகிறார் .
இவர் நடத்தி மருத்துவ சாலையில் வரும், டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலையில் இருக்கும் நோயாளிகள் பலருக்கு சிகிச்சையளித்து நோயிலிருந்து மீட்டுள்ளார். நாள் பட்ட சர்க்கரை நோய், சொரியாசிஸ் உட்பட பல்வேறு தோல் நோய்கள், நாள்பட்ட சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள், கல்லீரல் நோய், மூட்டுவலி, ஒற்றைத்தலைவலி, புற்று நோய் உட்பட பல்வேறு வியாதிகளுக்கும் மருந்து தயாரித்து தந்து குணப்படுத்தி வருகிறார்.
கொரோனா காலத்தில் தன்னார்வத்துடன் இவர் செய்த மருத்துவ உதவிகள் ஏராளம். மூலிகை முகக் கவசத்தை உருவாக்கி அதனை இலவசமாக மக்களுக்கு வழங்கினார். வேலூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்டம் முழுவதும் இலவச சித்த மருத்துவ சிகிச்சை முகாம்களை நடத்தினார். அதற்காக வேலூர் மாவட்ட நிர்வாகமும், விஐடி பல்கலைக்கழக குடியரசு தினவிழாவில் நோய் தொற்று தடுப்பு பணிகளை சிறப்பாக செய்தததற்கு மருத்துவர் பாஸ்கரன் கௌரவிக்கப்பட்டார் . புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை அவர்களிடம் 'சிறந்த சமூக சேவகர் விருது பெற்றுள்ளார். மேலும் இம்ப்காப்ஸ் (The Indian Medical Practitioners’ Co-operative Pharmacy and Stores Ltd) நிறுவனத்தின் இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இவர்.
சித்த மருத்துவத்தின் புதிய நட்சத்திரமாக விளங்கும் மருத்துவர் பாஸ்கரன் அவர்களை விகடகவி இதழுக்காக நேர்க்காணல் செய்தோம் ....
" உங்களைப் பற்றி சொல்லுங்கள் ,டாக்டர் "
"நான் டாக்டர் பாஸ்கரன். வேலூரில் பள்ளி படிப்பை முடித்த பின் ஸ்ரீபெரும்புதூரில் சித்த மருத்துவக்கல்லூரியில் BSMS முடித்துள்ளேன்.
என் நான்காவது வயதில் இருந்தே சித்த மருத்துவத்துக்கும் எனக்கும் தொடர்பு இருந்ததால் அதில் ஆர்வம் பிறந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காலாங்கி நாதர் என்ற சித்தர் ஶ்ரீ புற்று மகரிஷி என்ற பெயராலும் அழைக்கப்பட்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் மூலவரை பிரதிருஷ்டை செய்தவர் .காலங்கி நாதரின் 47 வது -சீடப் பரம்பரையில் வந்தவர் நான் .என் தந்தை டம்பாச்சாரி எலும்பு முறிவு சிகிச்சையில் நிபுணத்துவம் கொண்ட சித்த மருத்துவர். பெரியப்பா அர்ஜூனன் நொடிகளில் நாடிக்கணிப்பு செய்து சகல நோய்களுக்கும் வைத்தியம் செய்து, நிரந்தர குணமாக்குவதில் கெட்டிக்காரர். இவர்களிடம் சித்த மருத்துவ முறைகளை இளமை முதல் கற்றுக் கொண்டேன்
நாடி பிடித்து உடலின் வியாதிகளை எப்படி கண்டு பிடிக்கிறீர்கள் ?
நிலம் ,நீர் ,நெருப்பு ,காற்று ,ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதே மனித உடல். இந்த மனித உடலில் வாதம் , பித்தம், கபம் இவற்றின் அளவுகள் ஒருவரின் ஆரோக்கியத்தை அளவீடு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன . சித்த மருத்துவத்தின் சிறப்பம்சம் ஒருவரின் நாடி பார்த்து வியாதியின் தன்மையை அறிந்து அதற்கு தகுந்த, தேவையான மருந்தை தயாரித்து கொடுப்பதாகும்.
நீரழிவு நோயை, காலை நேரத்தில் நாடியை பார்த்தால் வாத நாடி குறைந்தும் பித்தநாடி அதிகரித்தும் அதிகமாகவும் இருக்கும் .அப்போது சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும்.எண்ணெய் விட்டு பார்த்து நீரழிவு நோய் எந்த அளவில் இருக்கிறது என்று கணிப்போம் .நீர்க்குறி, எண்ணெய் குறி என்று இந்த பரிசோதனை முறைகளை அழைப்பார்கள். சர்க்கரை அளவை கணித்து தகுந்த மருந்து தயாரித்து அளிப்போம். ஆரம்ப நிலையில் இருக்கும் சர்க்கரை நோயை பூரணமாக குணப்படுத்தி விடலாம். மேலும் டயாலிசிஸ் பாதிப்பு போன்று அதிக பாதிப்பு இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தால் அவர்களை குணப்படுத்தி விடலாம்.
அதேபோல புற்றுநோயையும் சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோயை விரைவாகவே குணப்படுத்திவிடலாம். ஒவ்வொரு நோய்க்கும் தேவையான மருந்தை தயாரித்து கொடுக்க கொடுக்க முடியும்.பொறுமையாக மருத்துவரின் ஆலோசனை கேட்டு அதை பின்பற்றி நடப்பவர்கள் குணம் பெறுவார்கள்.
பாதரசம் கந்தகம் போன்ற உலோகங்கள் சேர்த்து செய்வதால் சித்த மருத்துவத்தில் பக்க விளைவுகள் ஏற்படும் அல்லவா ?
உண்மையில் மருந்து தயாரிக்கும் போது, பாதரசம் போன்ற உலோகங்களை சரியான முறையில் சுத்திகரிக்கப்பட்டு உபயோகப்படுத்துகிறோம். மருந்துக்கு ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்து அவருக்கு தேவையான அளவு பாதரசமும் கந்தகமும் சேர்க்கும்போது எருக்கம் பாலில் அதை பலமுறை ஏன் நூறு முறை கூட சுத்திகரிப்பது உண்டு இதை சுத்தி முறை என்று அழைக்கிறோம். தவிர நோயாளிகளின் உடலின் தன்மை அறிந்து, மருந்து சாப்பிட வேண்டிய கால அளவையும் நிர்ணயிக்கிறோம் .மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தை உட் கொள்ள வேண்டும் .
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்த மருத்துவத்தின் பலன்களை எப்படி மக்களிடையே கொண்டு சேர்க்கிறீர்கள் ?
கொரோனா காலத்தின் போது மக்களிடையே பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. கபசுர குடிநீர் எல்லா இடத்திலும் விநியோகிக்கப்பட்டது. மக்கள் மட்டுமல்ல எல்லா மருத்துவர்களும் அதன் பயனை உணர்ந்து தினமும் குடித்து வந்தனர். இயற்கையான உணவுகள், சிறு தானியங்கள், கசாயங்கள் இவற்றை பயன்படுத்தி மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொண்டனர் . வருமுன் காக்கும் மருத்துவ உபாயங்களை மக்கள் அறிந்துகொண்டு அதன்படி தங்களை காத்துக் கொண்டனர் . காய்ச்சல் வந்தால் மாத்திரைகளை விழுங்கும் வழக்கம் கொண்டவர்களும் , கஷாயம் வைத்து குடித்து குணமாக்கி கொள்ளும் பழக்கத்துக்கு மாறினார் .
என்ன மாதிரி உணவுகளை உண்ண வேண்டும் ?
வழக்கமான உணவு முறைகளை மாற்றிக் கொண்டு, அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களில் அடை தோசை மற்றும் பலகாரங்கள் செய்து சாப்பிடலாம். சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சக்கரை பனைவெல்லம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். மாவு சத்து குறைத்து ,நார்சத்து ,புரதச் சத்து உள்ள உணவுகளை எடுக்கலாம்
வீட்டில் விளையும் கீரைகள், பிரண்டை, முடக்கத்தான், கற்பூரவல்லி நெல்லிக்காய் எலுமிச்சை போன்றவற்றையும் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். ரீபைண்ட் எண்ணெய்களுக்கு பதிலாக பதிலாக செக்கு எண்ணெய் உபயோகப்படுத்தலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நீங்கள் சொல்லும் வழிகள் என்ன?
ஒரு பாடல் உண்டு
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே ..
.
இந்தப் பாடலின்படி காலையில் இஞ்சிச்சாறு சுடுநீரில் கலந்து குடிப்பதும் மதிய வேளையில் சுக்கு பொடியாக்கி சேர்த்துக் கொள்வதும் மாலை வேளையில் கடுக்காய் கொடியை எடுத்துக் கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடலும் பலம் பெறும். இவை தவிர நம் வழக்கமான உணவு முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இவற்றைத்தவிர
நாள் இரண்டு
வாரம் இரண்டு
மாதம் இரண்டு
வருடம் இரண்டு என்று சொல்வார்கள்.
அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு இரண்டு முறை உடலுறவு கொள்ள வேண்டும்.ஒரு வருடத்துக்கு இரண்டு முறை உடல் சுத்தம் செய்ய பேதிக்கு மருந்து சாப்பிட வேண்டும். இவற்றை பின்பற்றி வந்தால் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். நல்ல தூக்கம், உடற்பயிற்சி பிராணாயாமம் யோகா இவையெல்லாம் நல்ல உடல் நலத்துக்கு அவசியமானவை.
மக்களிடையே சித்த வைத்தியத்தின் சிறப்பினை எடுத்துச் சென்று, நோய் நீக்கும் மருத்துவர் பாஸ்கரனுக்கு வாழ்த்து கூறி விடை பெற்றோம் .
Leave a comment
Upload