ஒரு சில படங்கள் தான் வெளியாகும் முன்பே பிரம்மாண்டத்தை கண் முன்னே கொண்டு வரும்.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் இரண்டாம் பாகம். முதல் நாளே பார்த்ததில் ஏக மகிழ்ச்சி.
ஆதித்த கரிகாலன் நந்தினியின் மழலை காதலில் ஆரம்பிக்கும் இரண்டாம் பாகம் நம் கண்களில் கண்ணீர் துளியை நிற்க செய்கிறது.
முதல் பாகத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று பேசப்பட்டதோ, அவர்கள் தான் இரண்டாம் பாகத்தின் நாயகர்கள். சுந்தர சோழர், குந்தவை, வானதி, பூங்குழலி, ஊமை அரசி, நந்தினி இவர்கள் உட்பட பல பேரின் வாழ்க்கையின் புதிருக்கு விடை இரண்டாம் பாகம்.
குந்தவை, வந்தியத்தேவனின் காதல் நம் சுவாசத்தை நிறுத்தும் அளவிற்கு மிக அழகாக அமைந்துள்ளது. ஆதித்த கரிகாலன், நந்தினி இருவரின் காதலும் இதயத்தை அழுத்துகிறது.
காதலை எப்பொழுதும் மையமாகக் கொண்டு படமெடுக்கும் மணிரத்தினம், வரலாற்று கதையிலும் அதை மிக அழகாக கையாண்டு இருக்கிறார். பகை, குரோதம், வன்மம், பழி வாங்குதல் ,காதல் என அனைத்தையும் ஐஸ்வர்யா ராயின் விழிகளே நடித்து விடுகிறது.
சோழர்கள் என்றால் வீரர்கள் என நமக்கு உறுதி செய்யும்படி பல காட்சிகள் அமைந்துள்ளது. ராஜராஜன் எப்பேர்பட்ட அரசன் என்று எடுத்துக்காட்டும் காட்சிகள் இப்பாகத்தில் உண்டு. சென்ற பாகத்தில் இது இல்லாதது குறையாக பேசியவர்களுக்கு செம தீனி.
ஆனால் இது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் அல்ல ! மணிரத்தினம் உருவாக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் !
பலரும் முயன்று கைவிடப்பட்ட ஒன்றை, வெற்றிகரமாக இரு பாகங்களாக, மிகப்பெரிய நாயகர்களை அதில் நடிக்க வைத்து திறமையான நெருக்கமான திரை கதையை அமைத்து அதில் தனது "டச்"சையும் கொடுத்து நம்மை சோழர் காலத்துக்கு கடத்தி இருக்கிறார் மணிரத்தினம்.
கல்கி பொன்னியின் செல்வனின் ஆரம்பத்தில் சொல்வது போல 'வாசகர்களை கால ஓட்டத்தில் ஏறி ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் செல்ல அழைக்கிறேன்' என்பதை தனது காட்சி அமைப்பின் மூலமும், பிரம்மாண்டத்தின் மூலமும் அந்த இரண்டரை மணி நேரமும் நம்மை சோழர்களோடே வாழ விட்டிருக்கிறார் என்ற வகையில் மணிரத்தினம் வெற்றி பெற்று இருக்கிறார்...
இந்த இரண்டாம் பாகம், மணிரத்னம் எனும் இயக்குனரின் படமாக விரிகிறது… ஒவ்வொரு காட்சியும் திரையில் விரியும் போதும் அமரர் கல்கியின் தீவிர ரசிகர்கள் இது அவர்கள் படித்த , ரசித்த, வாழ்ந்து கொண்டிருக்கிற கதையல்ல என்று கொஞ்சம் வருத்தப்பட்டாலும் அல்லது உணர்ந்தாலும் மணிரத்தினம் என்னும் தேர்ந்த இயக்குனரின் ரசிகர்களுக்கு பல பக்கம் எழுதி புரிய வைக்க வேண்டிய காட்சிகளை ஒன்றிரண்டு க்ளோஸ் அப் ஷாட்டுகள், கதாநாயகர்களின் முக பாவங்களின் வழியே கடத்தி விடுகிறார். துணைக்கு ஏ .ஆர். ரகுமான் இசை ஆயிரம் ஆண்டு ஆண்டு சோழர்காலத்திற்கு அழைத்து செல்கிறது.
கலை இயக்குனர் தோட்டா தரணி, எடுத்துக்கொண்டிருக்கும் மெனக்கெடல் ஒவ்வொரு காட்சிப் படுத்தலிலும் தெரிகிறது. சோழர் காலத்து கோட்டைகள் எதுவும் இப்போது இல்லாத போதும், சரியான இடங்களைத் தேர்ந்தெடுத்து படப்பிடிப்பை நடத்தி இருப்பது கண்களுக்கு இதமான விருந்து.
பாடல்கள் கதையை நகர்த்தி செல்ல உதவுகின்றன. ஸ்ரீகர் பிரசாத்தின் துல்லியமான எடிட்டிங் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது. ஆனாலும் கதை தெரியாமலும், முதல் பாகத்தை பார்க்காமலும் வருகிற ரசிகர்கள் கொஞ்சம் தலை சுத்திதான் போவார்கள். பொன்னியின் செல்வன் முதல் பாகம் பார்த்து விட்டு இரண்டாம் பாகம் பார்ப்பது உசிதம்.
இலங்கை இயற்கை மற்றும் கடற்கரைகள், தாய்லாந்து வனங்கள், வாடா இந்திய கோட்டைகள். தங்க சுரங்கம் என செட்டுகள் , இயற்கையான பிரமாண்டத்தை தன்னுடைய கேமராவில் சிறை பிடித்துள்ளார் ரவி வர்மன், பெயருக்கு ஏற்றாற்போல ஒவ்வொரு ப்ரேமும் ஓவியம் தான். பல இடங்களில் லைட்டிங் அந்த காட்சியை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்கிறது. ரவி வர்மன் கேமிரா சோழர் காலத்திற்கு அழைத்து செல்கிறது.
இசைப்புயலின் உழைப்பு இரண்டாம் பாகத்தில் வேற லெவல். இந்த தலைமுறை ரசிகர்களுக்காக பாடல்கள் வைத்தாலும், காட்சிகளுக்கு ஊடே ஒன்றிய பின்னணி இசைக்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சி நன்றாகத் தெரிகிறது.
மொத்தத்தில் , மணிரத்தினத்தின் திரைப்படமாக அமோகமாக வெற்றிபெற்றிருந்தாலும், கல்கியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், (கதையில் இல்லாத பல திருப்பங்கள், திரைப்படத்தில் இருப்பதால்) ஏமாற்றத்தையும் தருகிறது என்பது படம் பார்த்துவிட்டு வெளியே வரும் அவர்களின் முகத்திலிருந்தும் , அவர்களின் விமர்சனத்திலிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.
இது கல்கியின் கதையல்ல, இது முழுக்க முழுக்க மணிரத்தினத்தின் நவீன பொன்னியின் செல்வன்.
சினிமா என்னும் காட்சி ஊடகத்தின் முழுமையான வீச்சினைப் புரிந்துகொண்ட பிரமாண்ட இயக்குநர் மணிரத்தினம் செதுக்கியிருக்கும் நிஜ சோழ சாம்ராஜ்ஜியம் !
பொன்னியின் செல்வன் - 'மணி'யான செல்வன் !!
Leave a comment
Upload