தோட்டத்திலிருந்து இலையை பறித்து வேகமாக வீட்டுக்குள் எடுத்துவந்தார், வாசன். பாக்யம், "திடீர்திடீர்ன்னு இப்படி யாரையாவது கூட்டிண்டு வந்து சாப்பாடு போடுன்னு சொன்னா! எல்லாம் இருக்கான்னு கேக்க வேண்டாமா என்று அலுத்துக்கொண்டே முனுமுனுத்தாள்.
"இங்க பாரு! முதல்ல அவர் சாப்பிடட்டும். நமக்கு அப்பறம் பாத்துக்கலாம். நான் இலய போடறேன், நீ சாதம் கொண்டு வா". சொல்லிக்கொண்டே வேகமாக வரவேற்பறைக்குச் சென்றார். அங்கே ஒரு ஓரமாக செவருடன் ஒட்டி அமர்ந்திருந்த அந்த முதியவரை பார்த்தவுடன் மனது கொஞ்சம் கலங்கிப்போனது. இலையை சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு அவர் அருகில் வந்து, " ஐயா, சாப்பிட வரீங்களா? " என்று கேட்டார்.
" எனக்கு அங்கெல்லாம் வேண்டாம். தரையில உக்காந்து தான் சாப்பிட்டு பழக்கம். கீழயே இலை போடுங்க” என்றார்.
பாக்யம் உள்ளே இருந்து எட்டிப் பார்த்தாள்.
அவர் குரலில் கொஞ்சம் கூட ஒரு தாழ்மை உணர்ச்சியோ, கழிவிரக்கமோ இல்லாதது அவளுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. சிலர் இப்படித்தான். அவர்களின் அகம்பாவம் தான் அவர்களுக்கு அரண். சித்தி கூட இப்படித்தானே என்று அவளுக்கு தோன்றியது. உறவுகளை நாடி இருக்கும்போது, தன் மரியாதையை காப்பாற்றி கொள்ள ஆணவத்தையும் கோபத்தையும் அரணாக வைப்பாள்.
"ஒரு சொம்பில் தண்ணீர் வேண்டும்". வாசனிடம் அவர் கேட்டது காதில் விழுந்ததும், பாக்யம் தண்ணீர் சொம்பை .அவரிடம் நீட்டினாள்.
அவள் கையிலிருந்து சொம்பை வாங்கிக்கொண்டு வாசலுக்குச் சென்று கைகால் கழுவிக்கொண்டு உள்ளே வந்தார். இலையின் முன் அமர்ந்ததும், சிறிது தண்ணீரை அதில் தெளித்து, கையினால் நன்றாகத் துடைத்தார். பாக்கியம் சாதம் போட்டவுடன், கை கூப்பி, கண் மூடி, ஏதோ மந்திரம் சொல்லி விட்டு பாக்யத்தை நிமிர்ந்து பார்த்தார். மற்றவை எல்லாம் வரிசையாக பரிமாறப்பட்டது.
வாசன் சற்று நகர்ந்து நின்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
மெலிந்த தேகம் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் பூசியது போலத்தான் உடம்பு. சற்று பழுப்பேறிய வேஷ்டி. இளஞ்சிகப்பு சட்டை. வலது கையிலும், கழுத்திலும் கருப்புக் கயிறு.
அன்று காலையில் தான் வாசன் அவரைப் பார்த்தார். தெருவின் ஓரமாய் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார். ஏதோ ஒரு உந்துதலினால், காலில் செருப்பு கூட அணியாமல் வீட்டிலிருந்துவேகமாக வீதியில் ஓடினார் வாசன். அவரை நெருங்கவும், அந்த பெரியவர் மயங்கி தரையில் விழுவதும் சரியாக இருந்தது. அவரை கைத்தாங்கலாக பிடித்து வீதியின் ஓரமாக அமரவைத்தார், வாசன். அருகில் இருந்த வீட்டின் கதவைத் தட்டி தண்ணீர் வாங்கினார். முகத்தில் சற்று தண்ணீர் தெளித்து, கொஞ்சம் நீரை வாயில் விட்டார். கண் மூடி அமர்ந்திருந்த அந்த பெரியவர், சற்று நிமிடங்களுக்கெல்லாம், நினைவு திரும்பினார். நிமிர்ந்து, அவரை கவலையுடன் எழுப்பிக்கொண்டிருந்த வாசனை பார்த்து,
"ரொம்ப நன்றி. இது ஏதோ களைப்பு தான். ஒரு ஐந்து நிமிஷம் இங்கயே உக்காந்துட்டு கிளம்பறேன். நீங்க வீட்டுக்கு போங்க என்றார்."
அவர் குரலும் பேசும் தொனியும், வாசனுக்கு அவர் மேல் மரியாதையை ஏற்படுத்தியது.
"ஐயா, என் வீடு பக்கத்துல தான் இருக்கு. வந்து ஏதாவது சாப்டுட்டு போலாமே!"
அவர் நிமிர்ந்து பார்த்தார்.
"சாப்பிடலாம் தான். பசி தான் இந்த மயக்கமே. மனதை கட்டுப்படுத்த முயன்றாலும், உடல் உபாதைகள் கூடவே தானே வருது. ஆனா திடீர்னு ஒருத்தர் வீட்டுக்கு சாப்பிட போகக்கூடாது இந்த காலத்தில. உங்கள் மனைவியை கேட்டுட்டு வாங்க."
"அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை அய்யா. நீங்க வாங்க." பிடிவாதமாக வீட்டுக்கு அழைத்து வந்தார்.
சாப்பிட்டு முடித்து விட்டு, தானே இலையை எடுத்து வெளியில் சென்று குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்தார். சொம்பிலிருந்த நீரினால் கை கழுவிக்கொண்டு, கொஞ்சம் நீரை சாப்பிட்ட இடத்தில் தெளித்துத் துடைத்தார். பின் சற்று விலகி வந்து அந்த அறையில் ஒரு ஓரமாக அமர்ந்தார்.
"சாப்ட்டாச்சே! ஏன் இன்னும் இவர் கிளம்ப மாட்டேங்கறார்?" பாக்யம் வாசன் அருகில் வந்து மெதுவாக முனுமுனுத்தாள்.
"கொஞ்சம் பேசாமயிறேன். வயசானவர். கிளம்புவார்" எரிச்சலுடன் கூறினார். பாக்யம் அப்படித்தான். எல்லாவற்றையும் செய்வாள் ஆனால் ஒரு புலம்பலுடன்.
அவர் கண் மூடி அமர்ந்திருந்தார்.
"உங்க சுவாமி அறை எங்க இருக்கு?"
"சுவாமி அறை இருக்கா? கடவுள் நம்பிக்கை உண்டா?" திடீரென்று கேட்டார்
"உண்டு ஐயா!. அனால் தீவிரமாக கிடையாது. அவரை நாங்கள் எதற்கும் தொந்தரவு செய்வதில்லை. விளக்கேற்றி கும்பிடுவதோடு சரி "என்றார் வாசன்.
"நான் பார்க்கலாமா?"
சற்று தயக்கத்துடன் கூட்டிக்கொண்டு சென்றார் வாசன் . வரவேற்பறையிலே மற்றொரு ஓரத்தில் இருந்த மர அலமாரி அடுக்குகளாக பிரிக்க பட்டு ஸ்வாமி அறையாக மாறி இருந்தது. தெய்வங்களின் படத்துக்கு நடுவே ஒரு சிறிய மரப்பெட்டியும், ஒரு வெள்ளி விளக்கும் இருந்தது. சுத்தமான அறை. வந்தவர் திரும்பிப் பார்த்தார். பாக்யம் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
சட்டென்று தரையில் அங்கேயே அமர்ந்தார்.
"உங்க பேரு என்ன?"என்று வாசனைப் பார்த்துக் கேட்டார்.
"நான் வாசன். இது என் மனைவி பாக்யம்."
" ஒரு நோட்டும், பேனாவும் குடு" என்றார்.
வாசன், தன்னுடைய பழைய டைரியை எடுத்துக் குடுத்தார்.பேனாவிற்கு தேடும் போது, பாக்யம், தான் கணக்கு எழுதும் டைரியிலிருந்து வேகமாக எடுத்துக் கொடுத்தாள். அவளுக்கு இப்போது ஆவல் அதிகரித்தது.
டைரியையும், பேனாவையும் வாங்கிக்கொண்டவர், எழுதி இருந்த பக்கங்களை கிழித்து வாசனிடம் கொடுத்தவிட்டு, ஒன்றும் பேசாமல் முதல் பக்கத்தில் பெரியதாய் ஓம் என்று எழுதிவிட்டு, பக்கத்தை திருப்பி மேலும் எழுதத் தொடங்கினார்.
ஒரு அரை மணி நேரம் வீடே மிக நிசப்தமாக இருந்தது.
பின் அவர் டைரியை கீழே வைத்து விட்டு, கண் மூடி அமர்ந்து ஏதோ மந்திரம் போல் சொன்னார்.
எழுந்து நின்று, வாசனையும், பாக்யத்தையும் பார்த்து கை கூப்பி விட்டு வேகமாக வெளியேறினார்.
சற்று நேரம் திகைத்து நின்ற வாசன் பின் சுதாரித்துக்கொண்டு, அந்த டைரியை குனிந்து எடுத்தார். பாக்கியமும் நெருங்கி வந்து அதில் என்ன எழுதியிருக்கிறது என்று எட்டிப்பார்த்தாள்.
அவர்கள் முதல் பக்கத்திலிருந்த ஓம் என்பதையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர். கையில் நடுக்கம் இருந்தாலும் தெளிவான எழுத்து. அழுத்தமாய் அந்த பக்கம் முழுவதும் எழுதப்பட்டிருந்தது. 'ஓ' வின் ஆரம்பத்திலும் முடிவிலும் இருக்கும் சுழியில் ஒரு அழுத்தம், ‘ம்' ன் புள்ளியிலும் இருந்தது. அடுத்த பக்கம் திருப்பும்போது வாசலில் ஏதோ சத்தம் பெரியதாக கேட்க இருவரும் வேகமாக வெளியில் சென்று பார்த்தனர். ஒரு வேனிலிருந்து பாக்யத்தின் சகோதரர், அவர் மனைவி, குழந்தைகள், மற்றும் இன்னும் சிலர் இறங்கினர். தன் கண்களை நம்ப முடியாமல், பாக்யம் வேகமாக வேனின் அருகே சென்றாள். ஏதோ ஒரு விஷயத்தில் இருவருக்கும் மன வேறுபாடு உண்டாயிருந்தது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் பேச்சு வார்த்தை இல்லை. தினமும் வருத்தப்படுவாள். இன்று அவர்கள் வந்து நிற்க, நம்பமுடியாமல், அழுகையை அடக்கிக்கொண்டு வரவேற்றாள். அவள் அண்ணனும் பாக்யம் தலையைத்தடவிக்கொடுத்து, அணைத்துக்கொண்டு உள்ளே வந்தார். வாசனும், கை கூப்பி வரவேற்றார். சில நொடிகளில், வீடே மாறி விட்டது. ஒருவருக்கு சமையல் செய்ய அலுத்துக்கொண்ட பாக்யம், சந்தோஷமாக அனைவருக்கும் மறுபடியும் சமைக்க ஆரம்பித்திருந்தாள்.நண்பர்களுடன் நவ திருப்பதி வந்த அண்ணன், இவர்கள் ஊரை தாண்டும் பொழுது. மனது கேட்காமல் வந்து விட்டார். இருவரும் வருத்தம் தரும் எந்த பழைய கதையையும் பேசாமல், சந்தோஷமாக பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். வாசனுக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு, தன் கையிலிருந்த டைரியை மேலும் புரட்டிப்பார்க்காமல், சுவாமி அறைக்குள் வைத்து கதவை சாத்தினார், கிராமத்து வீடு. தனியாக அறைகள் இல்லையென்றாலும், அனைவரும், தரையில் படுக்க தாராளமாக இடம் உண்டு. நண்பர்களுக்கு மாடி அறையை தயார் செய்துவிட்டு கீழே வந்தார். மதியம் உணவு, இரவு உணவு, வாசலில் அமர்ந்து அரட்டை என்று அமக்களப்பட்டுக்கொண்டிருந்தது வீடு அன்று முழுவதும். காலையில் வந்த அந்த மனிதர், அவர் எழுதிய டைரி எதுவுமே இருவருக்கும் நினைவில் இல்லை.
இரவில் அனைவரும் உறங்கிய பிறகு, ஏதோ ஒரு உந்துதலால் திடுக்கிட்டு எழுந்தார் வாசன். உடம்பெல்லாம் வேர்த்திருந்தது. மெதுவாக எழுந்து கீழே படுத்துக்கொண்டிருந்த அனைவரையும் தாண்டி, ஒரு புறமாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டு மேசையில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தார். மனம் ஏதோ சஞ்சலமாக இருந்தது. சுவாமி அலமாரியை திறந்து உள்ளே இருந்து விபூதி எடுத்து இட்டுக்கொள்ளும் போது அவர் கண்களில் பட்டது அந்த டைரி. பார்த்தவுடன் காலையில் நடந்த அத்தனையும் நினைவுக்கு வந்தது. மெதுவாக அந்த டைரியை எடுத்தார். சத்தம்போடாமல் அடுத்த அறைக்கு வந்தார். அவர் உறக்கமில்லாமல் இருக்கும் தினங்களில் அங்கே தான் அமர்ந்து ஏதாவதுபடித்துக்கொண்டிருப்பார். தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து விளக்கைப் போட்டார். அந்த டைரியை மெதுவாக புரட்டினார். முதல் பக்கத்திலிருக்கும் ஓம் அவர் பார்வையை கவரத்தான் செய்தது. மெதுவாக அந்தப் பக்கத்தை திருப்பினார். அவருடைய பிறந்த தேதி, தாய் தந்தை பெயர், பிறந்த ஊர் அனைத்தும் எழுதி இருந்தது. ஆச்சர்யமாக மேலும் படிக்க ஆரம்பித்தார். அவர் வாழ்க்கையில் நடந்த அத்தனை முக்கியமான தருணங்களும் எழுதப்பட்டிருந்தது. அவர் வேலை, திருமணம், பெற்றோர்களை விபத்தில் இழந்தது, வேலையை விட்டு தொழில் ஆரம்பித்தது, அது நொடிந்து போக தன் கிராமத்திற்கே திரும்பி வந்தது, வேறு தொழில் ஆரம்பித்து அது வளர்ந்து கொண்டிருப்பது, மனைவியின் பிரிந்த உறவு சேர்வது.
கண்களை மூடி சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார் வாசன். இந்த நொடி வரை அனைத்தும் சரியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அடுத்த பக்கத்திலிருந்து எதிர்காலம். கடவுளை வேண்டிக்கொண்டு திருப்பினார். அவர் தொழில் வளரும் என்றும், மனைவி உடல் நிலை குறையும் அனால் காப்பாற்றப் படுவாள் என்றும், வேலைக்கு சேரும் யாரோ ஒருவன் குடும்பத்தில் ஒருவனாக மாறுவதும் அவனிடம் ஏமாறாமல் சுதாரித்துக்கொள்ளும் படியும், அவர் உண்ணும் உணவினால் அவருக்கு வரப்போகும் உடல் கோளாறுகளும், அதற்காக அவர் தவிர்க்க வேண்டிய உணவுகளும் எழுதப்பட்டிருந்தது.
மறுபடியும் கண்களை மூடிக்கொண்டார் வாசன். இது எதற்கு? எதிர்காலம் ரொம்ப தெளிவாக தெரிந்தால், வாழ்க்கை எப்படிப்போகும்? இது நமக்கு வரமா? சாபமா? ஒரு நம்பிக்கையில் இப்பொது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் படிக்கலாமா?
குழப்பத்துடன் பக்கத்தை திருப்பும் போது, அந்த பெரியவர் எழுதி முடித்த இடத்தில் சொருகி இருந்த பேனா கை பட்டு கீழே விழுந்தது. அடையாளத்திற்காக அந்த பக்கத்தில் விரலை வைத்துக்கொண்டு கீழே குனிந்து பேனாவை எடுத்தார். மறுபடியும் அந்தப் பக்கத்தில் பேனாவை சொருகும்போது தான் தெரிந்தது இன்னும் இரு பக்கங்களே அவர் எழுதியிருக்கிறார் என்று. ஒரு பக்கத்தில் முக்கியமான இரெண்டு நிகழ்வு மட்டுமே எழுதியிருந்தார். அப்படி இருக்க இன்னும் இரெண்டு பக்கத்தில் முடித்துவிட்டார் என்றால், எது முடியப்போகிறது? நம் வாழ்க்கையா ? அல்லது முக்கியமான தருணங்களா? தன் மரணத்தைப் பற்றி குறிப்பு உள்ளதா? இல்லை அவர் அதை பற்றி எழுதாமலே விட்டு இருப்பாரா? மனதில் என்னவோ கேள்விகள். மேலே படிக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கம். படிக்க தைரியமும் இல்லை. மனதில் ஒரு பகுதி படி படி என்று சொன்னாலும், மற்றொரு பகுதி மூடி வைத்தது விட்டு போய் தூங்கு என்றது. சற்று நேரம் யோசித்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தவராய், அத்தனை பக்கத்தையும் கண்களை மூடிக்கொண்டு சுக்குநூறாய் கிழித்தார். மணியைப்பார்த்தார். அதிகாலை 4 மணி ஆகியிருந்தது. மெதுவாக அத்தனை அறைகளையும் கடந்து கொல்லைபுறத்திற்கு சென்றார். வெந்நீர் போடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் விறகடுப்பின் அருகில் சென்றார். விறகுகளை அகற்றி கிழித்த காகிதத்தை உள்ளே போட்டு, அதன் மேல் விறகுகளை வைத்தார். வெந்நீர் பானையில் தண்ணீர் நிரப்பி அதன் மேல் வைத்தார். பின் மண்ணெண்ணையை லேசாக மேலே விட்டு அடுப்பை பத்த வைத்தார். வேகமாக எரிய ஆரம்பித்த நெருப்பை சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டு மறுபடியும் வாசலுக்கு சென்றார். பாக்யம் அப்பொழுது தான் எழுந்திருந்தாள்.
" அதுக்குள்ள எழுந்தாச்சு இன்னிக்கு!" என்று அவரை பார்த்து கேட்டுக்கொண்டே சமையல் அறைக்குள் சென்றாள் . வேறு யாரும் எழுந்திருக்கவில்லை.
வாசன், காலை கடன்களை முடித்து விட்டு வாசலுக்கு வந்தார். பாக்யமும் காபியுடன் வாசலுக்கு வந்தாள். அவரின் அருகில் அமர்ந்து அவரைப் பார்த்து,
"அண்ணா வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நேத்திக்கு அந்த பெரியவர் வந்தது தான் நமக்கு நல்லது நடக்க ஆரம்பிச்சிருக்கு. அந்த டைரி பத்திரமா இருக்கு இல்லையா? அத திறந்து எல்லாம் படிக்க வேண்டாம். அது இருந்தாலே நமக்கு நல்லது நடக்கும்னு தோணுது. அந்த மரபெட்டி இருக்குல்ல, அதுல வைச்சு மூடிடுவோம். சரியா?" சொல்லிக்கொண்டே எழுந்து சென்றாள்.
வாசனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பாக்யம் போல படிக்காமல் அதை ஒரு பூஜை பொருளாய் மாற்றி இருக்கலாம். படிக்க வேண்டாம் என்று ஏன் முடிவு செய்தாள் என்று புரியவில்லை. ஒரு வேலை யூகித்திருப்பாளோ? தேவை இல்லாமல் குழம்ப வேண்டாம் என்று முடிவு எடுத்திருப்பாளோ? ஆனால் நடந்த நல்ல விஷயத்தையும் இந்த டைரியையும் இணைத்துகொண்டு விட்டாள். அது இல்லை என்றாகிவிட்டால், ஒரு வேளை மனம் கலங்கிப் போகலாம். அவள் உடல் நிலையை பற்றி அவர் படித்தது நினைவுக்கு வந்தது. சிறிது யோசித்தார். பின்னர், ஒரு முடிவு செய்தவர் போல் உள்ளே சென்று அதைப்போலவே ஒரு டைரியை எடுத்தார். பேனாவை எடுத்து ‘ஓம்’ என்று மட்டும் எழுதினார். பின்னர், சுவாமி அறையில் இருந்த அந்த சிறு பெட்டிக்குள் அதை வைத்து மூடினார். கண்களை கூப்பி அந்த பெரியவரை தியானித்து விட்டு அன்றைய பொழுதைத் துவங்கினார்.
Leave a comment
Upload