" மழையும் நீயே, வெயிலும் நீயே ,
நிலவும் நீயே , நெருப்பும் நீயே'
என்று மென்மையாய் துவங்கி , அடுத்த வரியில் ''அடடா ....உனைத்தான் இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா..." என்று குழைந்து ,தழைந்து , உள்ளத்தைக் கிறங்க வைக்கும் இசை அனுபவத்தை நாம் மறந்திருக்க முடியாது. பாலச்சந்தரின் 'அழகன்' படப் பாடலைத்தான் நினைவுப் படுத்துகிறேன். அப்பாடலில் வைரமுத்துவின் வைர வரிகளை எஸ்பிபியின் தேன் குரலில் குழைத்துத் தந்த மரகதமணியையும் நாம் மறப்பதற்கில்லை. அதே படத்தின் ,சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா? இன்னும் இருக்கா , ஜாதி மல்லி பூச்சரமே , தத்தித்தோம் ' போன்ற பாடல்களும் இன்னும் நம் மனதில் ரீங்காரம் இட்டு, சொக்க வைக்கின்றன.
1991 ஆம் ஆண்டு அழகனில் அறிமுகப் படுத்தப்பட்ட இசையமைப்பாளர் மரகதமணியின் விரல் வழி பிறந்த அந்த சங்கீத ஸ்வரங்களுக்கு இப்போது உலக அரங்கில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த வாரம் நடை பெற்ற ஆஸ்கர் விருது விழாவில் அவர் இசை அமைத்த RRR படப் பாடலான 'நாட்டு நாட்டு' தெலுங்குப் பாட்டு சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளது. ஏற்கனவே இப்பாடல் கோல்டன் குளோப் விருதைப் பெற்று, இசை ரசிகர்கள் நடுவில் பெரும் எதிர்பார்ப்புகளை எழுப்பி இருந்தது. திரைத்துறையின் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது பெற்றுள்ளது அனைவருக்கும் ஆனந்தத்தை தந்துள்ளது.
தமிழில் தான் மரகதமணி. மற்ற தென்னிந்திய மொழிகளில் MM கீரவாணி என்றும் , இந்தியில் MM கீரம் என்றும் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தெலுங்கின் சூப்பர் டூப்பர் ஹிட்டான படங்களான பாகுபலி-1, பாகுபலி -2 படங்களுக்கும் கீரவாணிதான் இசை அமைத்துள்ளார். இன்று உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள கீரவாணி பல பாலிவுட் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். எனினும் உலக அளவில் இவர் பெற்றுள்ள விருது அவரை புகழேணியின் உச்சியில் ஏற்றி வைத்துள்ளது .
நாட்டு நாட்டு பாட்டை கேட்பவர்கள் அந்த துள்ளல் இசையில் மனம் பறி கொடுக்கிறார்கள் . ஜூனியர் என்டிஆர், மற்றும் ராம் சரண் குதித்தாடும் பாடல் காட்சி இளையவரை மட்டுமல்ல, வயது முதிர்ந்தவரையும் மெய் மறக்க செய்கிறது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல, அகில உலக அரங்கத்திலேயே அப்பாடலை அனைவரும் ரசித்தனர். சட்டையின் மேற்பட்டிகளை இழுத்து விட்டவாறு ,தரையில் கால் பரவாமல்,வியக்க வைக்கும் வேகத்துடன் குதித்தாடும் காட்சி ஆடாத கால்களையும் ஆட வைக்கும்.
அப்பாடலைப் பாடிய ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் காலபைரவா இருவரும் ஆஸ்கர் மேடையில் 'நாட்டு நாட்டு' பாடலை மீண்டும் 'லைவ்'வாக அரங்கேற்ற, உலக திரை ரசிகர்கள் நாடு ,மொழி வேறுபாடின்றி உடன் ஆடி பரவசத்தில் ஆழ்ந்தனர் . பாடற் காட்சியில் ஆட்டம் போட்ட ராம்சரணும் , ஜூனியர் என்டிஆரும் இந்தியாவின் பிரதிநிதிகளாக ஆஸ்கரில் பங்கேற்பதாக பெருமை கொண்டனர் . தெலுங்கு திரையுலகம் மட்டுமல்ல ,இந்திய திரையுலகே அங்கு பிரதிநிதித்துவம் பெற்ற அழகு கண்கொள்ளா காட்சியாக இருந்தது .
சிவாஜிகணேசன் முதல் கமலஹாசன் வரை தவற விட்ட ஆஸ்கர் விருதை இந்தியா கைப்பற்றிய இத்தருணம் மகிழ்ச்சியான தருணத்தில் ,அதை நாம் முழுமையாக அனுபவிக்க இயலாமல் பல்வேறு கருத்துக்கள் இங்கு சமூக வலைத்தளங்களில் புயலாக சுழன்று அடிக்கின்றன .
இசைக்கென ஆஸ்கர் விருது பெறுவது நம் நாட்டுக்குப் புதில்லைதான். ஏற்கனவே ஏஆர் ரஹ்மான் அங்கு தன் கொடியைப் பறக்க விட்டவர்தான். 'ஜெய் ஹோ' அளவுக்கு 'நாட்டு நாட்டு 'இல்லையே என்று ஒரு சிலர் உதட்டைப் பிதுக்குகிறார்கள். ஒரு குத்துப்பாட்டுக்கு ஆஸ்கரா என்று சலிப்புடன் பேசுகிறார்கள் .கீரவாணியின் மெலடி பாட்டுகளுக்கு அவார்டு வரவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள் . விஜய் ஆண்டனியின் அட்றா அட்றா நாக்க மூக்க' பாடல் 'நாட்டு நாட்டு 'சாயலில் தானே இருந்தது .அப்பாடலுக்கு ஏன் ஆஸ்கர் விருது தரப்படவில்லை என்று இப்போது கவலைப்படுகிறார்கள் .
'ஜெய் ஹோ' சிறந்த பாடல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததும் தவறில்லை .நாட்டு நாட்டு 'ஐட்டம் சாங்' என்று அழைக்கப்பட்டாலும் அது படமாக்கப்பட்ட விதம் , நடன அமைப்பு, காட்சி அமைப்பு, ரசிகர்களின் வரவேற்பு போன்ற காரணங்களால் தன்னை அவ்விருதுக்கு தகுதியாக்கி கொண்டுள்ளது. ஆஸ்கரின் அளவுகோல்களை முழுமையாக பூர்த்தி செய்ததால்தான் விருது கிடைத்துள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் இசைமேதைகளில் குறிப்பிடத்தக்கவர் இளையராஜா. அவருக்கு ஆஸ்கர் விருது இன்னும் வழங்கப்படாமல் இருப்பதற்கு வருந்துகிறவர்கள் ஒருபுறம். 'நாட்டு நாட்டு' பாடலுக்கு முன்னோடியான, தளபதி படப்பாடலான 'காட்டுக்குயிலு மனசுக்குள்ளே ' பாடலுக்கு ஏன் ஆஸ்கார் வழங்கப்படவில்லை என்று எழுதுபவரும் உண்டு. 'சிம்பனி' இசை அமைத்து உலக இசை அரங்கில் புகழ்மாலை சூடியவர் இளையராஜா. திருவாசகத்துக்கு அவர் அளித்த இசை வடிவம் ஒப்பற்றது . எத்தனை ஆஸ்கர் விருதும் அதற்கு ஈடாகாது. இன்னும் இளையராஜா இசையமைத்துக் கொண்டுதானே இருக்கிறார்? ஆஸ்கர் விருது அவர் கரங்களில் தவழ காலம் துணை செய்யுமென்றே அவரது ரசிகர்கள் நம்ப வேண்டும்..
RRR படத் தயாரிப்பாளர் ராஜமௌலி 'லாபி' செய்வதில் தேர்ந்தவர். அதனால்தான் இப்பாடலுக்கு விருது கிடைத்துள்ளது என்று எழுதுகிறார்கள். பணம் ,சிபாரிசு போன்ற காரணிகளே வெற்றியைத் தீர்மானிக்கும் என்றால் உலகில் உழைப்புக்கு என்ன பொருள் சொல்ல முடியும்? நேர்மையான உழைப்பு , உண்மையான திறமை இவை இரண்டுமே ஒரு முழுமையான வெற்றியைக் கொண்டு வர முடியும் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்தில்லை .
இது கொண்டாட்டத்துக்கான நேரம் . இந்த ஆண்டு இரட்டை ஆஸ்கர் விருதுகள் நம் இந்திய திரைத்துறைக்கு கிடைத்துள்ளது ,இது ராஜமௌலிக்கும்,கீரவாணிக்கும் .கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கும் மட்டும் கிடைத்துள்ள விருதுகள் அல்ல. இந்தியாவுக்கு கிடைத்த விருதுகள். எந்த மகிழ்ச்சியையும் முழுமையாக அனுபவிக்க இயலாமல் தனக்குத்தானே மனத்தடைகள் ஏற்படுத்திக் கொள்வது மனித இயல்பு. அதை ஊடகங்கள் ஊதி ,ஊதி பெரிதாக்கி விருதுகளின் மதிப்பை மட்டுமல்ல, பெறுபவரின் மதிப்பையும் குறைக்கும் சமூக போக்கு மாற வேண்டும் .
ஆஸ்கர் விருதுகளைக் கையிலேந்தி ராஜமௌலி, கீரவாணி, சந்திரபோஸ் நின்ற காட்சி காணும் போது நம் கண்களும், மனமும் நிறைகிறது. நாம் பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்தி, விருது பெற்றவர்களை மனதார வாழ்த்த வேண்டிய இத்தருணத்தில் . திரைத்துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இந்தியா முதன்மையான, முழுமையான வெற்றியைக் கொண்டு வரும் என்று நாம் நம்புவோம்.
விருது பெற்றவர்களை கை குலுக்கி பாராட்டுவோம். விருதுக்கு காத்திருப்போரை வாழ்த்துவோம் . இந்திய இசைக்கு மென் மேலும் சிறப்புகள் பெருக கை கோர்ப்போம் .
Leave a comment
Upload