நீலகிரியின் பழங்குடியினரான தோடர் இன பெண்கள் ஒரு வித்தியாசமானவர்கள்.
பழங்காலத்தில் தங்களின் மந்தை (கிராமம் ) விட்டே வெளியே வராமல் இருந்தார்கள் .
எதுவுமே இவர்களுக்கு தெரியாது என்ற காலம் மாறிவிட்டது என்கிறார் தோடர் இன பெண்களின் ஒருங்கிணைப்பாளர் வாசமல்லி .
அவரை ஊட்டி தமிழக மந்தில் ( மந்து என்பது தோடர் கிராமம் ) சந்தித்து பேசினோம் , " ஒரு காலத்தில் பெண்கள் வீட்டோடு வாழ்ந்து வந்தார்கள் தற்போது புதுமை பெண்களாக உலா வந்து கொண்டிருக்கிறோம் .
பழங்காலத்தில் எங்க சமுதாயத்தில் பெண்கள் குறைவாக இருந்தனர் . சூழ்நிலைக்கு ஏற்ப இருவருக்கு ஒரு மனைவி திருமணம் செய்து வாழ்ந்த காலம் கூட இருந்தது . பின்னர் பெண் குழந்தைகளின் பிறப்பு சரி விகிதமாக மாறியவுடன் அந்த பழக்கமும் மாறி போனது .
பெண் சிசு கொலை இருந்தது என்று கூறுகிறார்களே ? என்று கேட்க
அப்படியெல்லாம் இல்லை சில தொற்று நோய்களால் குழந்தைகள் இறந்து போயின என்று கேள்விப்பட்டுள்ளேன் .
பெண்கள் முன்னுக்கு வர எங்க இன பெண் ஒருவர் தான் முன்னெடுத்திருக்கிறார் அவர் 1888 ஆம் வருடம் ஒரு புரட்சி பெண்ணாக வலம் வந்துள்ளார் .அவர் பெயர் சுந்தரிட்ஸ் கவர்னர் சோலையில் உள்ள ஆன கல் மந்தை சேர்ந்தவர் .அவர் காடு , மலை , பறவைகள் பற்றி பாடல்கள் நிறைய பாடியுள்ளாராம் .வீட்டில் பெண்கள் முடங்கி இருக்கக்கூடாது வெளியுலகத்திற்கு வர வேண்டுமென்று மந்துகளுக்கு சென்று பெண்களிடம் பேசியுள்ளாராம் .பாடல்கள் வாயிலாகவும் தன் ஐடியாவை கூறியுள்ளார் .
எருமை இவர்களின் ஒரு தெய்வீகமான ஒன்று அதனால் மேய்ச்சல் தான் இவர்களின் மிக முக்கிய வேலை பின்னர் விவசாயமும் செய்து வந்தனர் இதில் பெண்களின் பங்கும் மிக முக்கியம் என்கிறார் வாசமல்லி .
எருமை பாலில் நெய் காய்த்து அந்த நெயில் கோயில் வீடுகளில் விளக்கு ஏற்றுவது வழக்கம் .பெண்கள் அந்த நெயில் தான் தங்களின் கூந்தலை வருடி முடித்து கொள்கிறார்கள் அதனால் தான் அவர்களின் கூந்தல் கருத்தே இருக்கும் . எந்த தோடர் பெண்ணும் கூந்தலுக்கு டை பூசுவது இல்லை என்பது ஆச்சிரியமான உண்மை .
பெண்களின் மிக பெரிய வேலை எம்பிராய்டரி தையல் போடுவது ..அதில் எப்படி எங்கள் மந்தின் அருகே ஓடை ஓடுகிறதோ அது போல தான் எம்ப்ரோய்டரி டிசைன் அமைந்திருக்கும் ஒவ்வொரு தோடர் இன பெண்களுக்கு உடன் பிறந்த கலை அது ஏராளமான சுற்றுலாக்களை கவர்ந்த ஒரு கலை .
ஒரு காலத்தில் கல்வி என்பது இல்லாமல் இருந்தது பின்னர் 1952 ஆம் ஆண்டு நீர்காசி மந்து என்ற இடத்தில் தக்கர்பாபா குரு குல பள்ளி ஆரம்பிக்கப்பட்டு ஆரம்ப கல்வி கற்றுள்ளனர் .
தற்போது டீச்சர் , டாக்டர் , வக்கீல் ,அரசு வேலையில் சிலர் பணிபுரிகிறார்கள் .
மேலும் அவர் கூறும் போது , " எங்க இனத்தில் பெண்கள் கர்ப்பம் தரித்த பின் தான் திருமணம் என்ற சர்ச்சைக்குள்ளான விஷயத்தில் உண்மை இல்லை .எங்க 14 குலத்தில் ஒரு குலத்திற்கு பெண் கொடுப்போம் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள பெரிய பாட்டி விளக்கை ஏற்றி அந்த வீட்டினுள் பெண்ணை ஏற்றுக்கொண்டவுடன் திருமணம் முடிந்து விடும் .பின் கர்ப்பம் தரித்தவுடன் அந்த குழந்தையை தங்களின் குலத்திற்கு ஏற்றுக்கொள்ளும் விழா தான் வில் அம்பு நிகழ்வு இதை திருமணம் போல செய்து குழப்பத்தை உண்டாகிவிட்டனர் .
வரதட்சணை இல்லாத திருமணம் எங்களுடையது .
விதவை மறுமணம் உண்டு .ஒரு தகவல் எங்க இனத்தில் 'விதவை ' என்ற வார்த்தைக்கே இடமில்லை எல்லாம் சமம் என்கிறார் . ஆண்களின் ஆதிக்கம் இருக்க தான் செய்கிறது அதை இப்பொழுது உடைத்துள்ளோம் இருவரும் சமம் என்ற எண்ணத்தை விதைத்துள்ளோம் .
மற்ற ஒரு விஷயம் இவர்களின் இனத்தில் வளர்ந்து விட்டது அது தான் காதல் திருமணம் தோடர் பெண்கள் படிப்புக்கும் வேலைக்கும் வெளியே செல்வதால் காதல் மலர்ந்துவிடுவது சகஜமாக இனம் மதங்களை கடந்துவிட்டது தோடர் இனம்" என்கிறார் வாசமல்லி .
முதல்வரின் தோடர் நடனம்.
வாசமல்லி தான் இந்த இனத்தின் முதல் பட்டதாரி பெண் என்பதை இது நாள் வரை நீலகிரி பிரதிபலித்து கொண்டிருக்கிறது .
அறுபத்தி ஐந்து வயதான இவர் ஒரு சிறந்த பெண் எழுத்தாளர் " மாறும் உலகில் மறையா ஒலிகள் " என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் .கடந்த வாரம் மிசோரமில் நடந்த அகில இந்திய பெண் எழுத்தாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு பாராட்டு பெற்று திரும்பியுள்ளார் .
" நான் எழுதிய நீலகிரி மலை ரயிலை பற்றிய கவிதை அனைவரையும் ஈர்த்தது " என்கிறார் இந்த தோடர் இன புதுமை பெண் .
Leave a comment
Upload