தொடர்கள்
ஆன்மீகம்
பாரதத்தின் மலைக் கோவில்கள் ! - 16 சாமுண்டி மலை, கர்நாடகா!! சகல சௌபாக்கியங்கள் அருளும் சாமுண்டீஸ்வரி கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Chamundeeswari Temple is a place of all blessings

51 சக்தி பீடங்களில் ஒன்றான சாமுண்டீஸ்வரி கோயில் (சம்பப்பிரத பீடம்) கர்நாடகாவின் மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் சாமுண்டி மலையில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருக்கும் அம்பிகை துர்கையின் அம்சம். ஆதிகாலத்தில் இந்தப் பகுதி மகிஷாசூரன் என்ற அசுர வம்ச மன்னனால் ஆளப்பட்டதாகவும், அவனது பெயரிலேயே மகிஷா என்ற ஊரின் பெயரில் அழைக்கப்பட்டதாகவும், அதுவே மருவி மைசூரு என்றானதாகவும் சொல்லப்படுகிறது. ஆதிபராசக்தியான சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனை வதம் செய்து இந்த நகரத்தின் காவல் தெய்வமாக மாறியதாக வரலாறு கூறுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3486 அடி உயரத்தில் செங்குத்தாகக் காணப்படும் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழிலுடன் காட்சி தருகிறார்.
தேவர்களால் சாந்தமான அன்னையின் அருட்கோலத்தை மார்க்கண்டேய மகரிஷி 8 கரங்களுடன் வடிவமைத்து சாமுண்டீஸ்வரி மலைப்பகுதியில் அமைத்தார்.
இந்தக் கோவில் கிபி 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னரால் கட்டப்பட்டது. ஆனால் கோயில் கோபுரங்கள் விஜயநகர மன்னர்களால் கிபி 17ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது. மன்னர் ஆட்சிக் காலம் தொடங்கி இன்று மக்கள் ஆட்சிக் காலம் வரை கர்நாடகத்தை ஆளும் எவராயினும் அன்னை சாமுண்டீஸ்வரியின் அருளாசியைப் பெறாமல் ஆட்சியில் அமர்வதில்லை.

ஸ்தல புராணம் :
சிவனிடம் வரம் பெற்ற மஹிஷாசுரன், தனக்கு மரணமில்லை என்பதால், பல அட்டூழியங்களைச் செய்து மக்களை அச்சுறுத்தி வந்தான். அவனின் கொடுமையைத் தாங்க முடியாமல், சிவனிடம் முறையிட்ட தேவர்கள் அவனை அழிக்க வேண்டினார்கள். அதற்குச் சிவனோ, என்னிடம் வரம் பெற்றுள்ள மஹிஷாசுரனுக்கு ஆண்கள், விலங்குகள், ஜலம் மூலம் மரணம் ஏற்படாது. ஆனால் கண்டிப்பாக ஒரு பெண்ணால் ஏற்படும் என்று கூறினார். அதனால் மஹிஷனை அழிக்க, அன்னை பார்வதியிடம் பக்தியுடன் வேண்டி முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட பார்வதிதேவி அசுரனை அழிக்கத் தீர்மானித்தாள். பிரம்மா,
மகாவிஷ்ணு, சிவபெருமானிடம் வரம் பெற்றும் சாமுண்டீஸ்வரி தேவியாக ஆடிமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை மஹிஷாசுர (மஹிசூரில்) மண்ணில் அவதரித்தார். சாமுண்டீஸ்வரிதேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தார். ஒவ்வொரு கையிலும் கத்தி, சக்கரம், திரிசூலம் உள்படப் பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். மக்களை வாட்டிவதைத்து வந்த மஹிஷாசுரனிடம் போர் தொடுத்து அவனை வதம் செய்தார். அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கியதுடன், தங்களுக்குத் துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். மக்களின் வேண்டுகோளை ஏற்றுக் காவல் தெய்வமாக மஹிசூரில் தங்கிவிட்டார் என்கிறது ஸ்தல புராணம்.

Chamundeeswari Temple is a place of all blessings

கோயில் வரலாறு:
சாமுண்டீஸ்வரி கோயில் கி பி 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர்களால் கட்டப்படப்பட்டிருந்தாலும், கோயில் கோபுரம் விஜயநகர மன்னர்களால் கி பி 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. சாமுண்டி மலை மேல் ஏறுவதற்கு கி பி 1659ல் ஆயிரம் படிக்கட்டுகள் நிறுவப்பட்டது. சாமுண்டீஸ்வரி தேவியை தங்கள் குல தெய்வமாகப் போற்றி வணங்கி வரும் உடையார் பேரரசர்கள், 1823ம் ஆண்டு திராவிட கலையில் கோயில் அமைத்தனர். கர்நாடகத்தில் மன்னர்கள் ஆண்ட காலத்திலும், தற்போது மக்களாட்சி காலத்திலும், ஆட்சி செய்பவர்கள் சாமுண்டீஸ்வரி ஆசியைப் பெறாமல் ஆட்சியை துவங்க மாட்டார்கள்.

Chamundeeswari Temple is a place of all blessings

கோயில் அமைப்பு:
சாமுண்டி மலை அடிவாரத்திலிருந்து சுமார் 3486 அடி உயரத்திலுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை 1008 படிகளைக் கொண்டுள்ளது. மேலும் மலைக் கோயிலுக்குப் பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் எனச் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலையின் ஏற்றத்தின் போது 700 ஆவது படிக்கட்டில், சிறிய சிவன் கோவிலுடன் கூடிய பிரமாண்ட நந்தி சிலை அமைந்துள்ளது. இந்த நந்தி 15 அடி உயரமும், 24 அடி நீளமும், இதன் கழுத்தைச் சுற்றி பெரிய மணிகளைக் கொண்டு மிகப் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றது. மேற்கு நோக்கிச் செல்லும் மலைப்பாதையில் மகிஷாசுரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் கத்தியும், மற்றொரு கையில் நாகபாசமும் கொண்டு உயர்ந்த வடிவில் மகிஷாசுரன் நிற்கிறான்.
மலை மேல் ஏழு நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்தில் ஏழு தங்கக் கலசங்கள் உள்ளன. கோபுர நுழைவு வாசலில் வெள்ளி முலாம் பூசப்பட்ட வாசலில் தடைகளை நீக்கும் விநாயகப் பெருமானின் திருவுருவம் உள்ளது. வாசல் கதவில், அம்மனின் வெள்ளி கவசமிட்ட சிற்பங்கள் உள்ளன. வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். கோவிலுக்குள் நுழையும் போது, ஒரு சிறிய விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்ததும் முதலில் நவரங்க அரங்கம், அடுத்து அந்தர்கலா மண்டபம், மூன்றாவதாக கர்ப்பகிரகம். சுற்றி பிராகாரமும் உண்டு. வழியில் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம்.

Chamundeeswari Temple is a place of all blessings


கருவறைக்கு முன்னால் கொடிமரம், அம்பிகையின் திருப்பாதம், நந்தி உள்ளன. கருவறை வாசலில் நந்தினி, கமலினி என்னும் துவாரபாலகியர் காட்சி தருகின்றனர். சந்நிதியின் வலப்புறம் பைரவர் இருக்கிறார். கருவறையில் எட்டு கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பழமையான இந்த விக்கிரகம் மார்க்கண்டேய மகரிஷியால் ஸ்தாபிக்கப்பட்ட ஆதி சக்தியாக வணங்கப்படுகிறார். மேலும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தேவர்களும் ஒன்றான மகா பிரம்மம் என்றும் மகா சக்தி என்றும் பக்தர்கள் வழிபடப்படுகிறார்கள். அன்னையின் கீழ் இந்த மகிஷாசுரன் எருமை உடலுடனும், அசுரத் தலையுடனும் விழிகள் பிதுங்கிய வண்ணம் இருக்கிறான். திரிசூலத்தால் அன்னை இவனைக் குத்தியபடி காட்சியளிக்கிறாள். மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் மற்றும் அவரது மூன்று ராணிகளான ராமவிலாசா, லட்சுமிவிலாசா மற்றும் கிருஷ்ணவிலாசா ஆகியோரின் ஆறடி சிலை வைக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்:
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மூன்றாவது ஆடிவெள்ளியில் தேவி அவதரித்தார் என்பதால், மைசூரு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம் உள்படப் பல நிகழ்ச்சிகள் இங்கே நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி, கன்னட மாதப் பிறப்பு தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இந்த கோயிலின் முக்கிய திருவிழா நவராத்திரி ஆகும். இதனைத் தசராப் பண்டிகைத் திருவிழாவாக மிகச் சீரும் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். இந்த விழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்நாட்களில் கோயிலில் சிறப்புப் பூஜைகளும், வேதமந்திரங்களும் நடைபெறுகின்றன. பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
நவராத்திரி விழாவின் போது, அம்பிகை ஒன்பது விதமான ரூபங்களில் இங்கே அலங்கரிக்கப்படுவார். அப்போது மைசூர் மஹாராஜாவல் கொடையளிக்கப்பட்ட நகைகள் மாவட்ட பொக்கிஷ கிடங்கிலிருந்து இந்த கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அலங்காரம் செய்விக்கப்படும். தசரா விழாவின்போது மைசூர் அரண்மனை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். விஜயதசமி தினத்தன்று ஜம்பு சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையில் சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவதை இலட்சக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகின்றனர்.

Chamundeeswari Temple is a place of all blessings

கோயில் திறக்கும் நேரம்:
காலை 7.30 மணிக்குத் தொடங்கி மதியம் 2 மணி வரை நடக்கும். ஒன்றரை மணி நேர இடைவெளிக்குப் பிறகு, மாலை 3.30 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் வாசல்கள் திறக்கப்படுகின்றன. மீண்டும், சிறிது நேரம் நிறுத்தப்பட்ட பிறகு, பக்தர்கள் இரவு 7.30 மணி முதல் 9.30 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

கோயிலுக்குப் போவது எப்படி:
சாலை வழியாக: சாமுண்டி மலையானது மைசூர் மற்றும் நஞ்சன்கூடுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கார், டாக்ஸி அல்லது பஸ் மூலம் பயணம் செய்ய ஒருவர் தேர்வு செய்யலாம். கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மைசூரில் இருந்து மலைகளுக்கு ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் இயக்கப்படுகிறது.
இரயில் மூலம்: மைசூர் ரயில் நிலையம் அருகில் உள்ளது. இது 13 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து மலைப்பகுதிகளுக்குப் பேருந்துகள் மற்றும் டாக்சிகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
விமானம் மூலம்: கர்நாடகா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பெங்களூருக்கு விமானம் மூலம் செல்லலாம். பெங்களூரில் இருந்து சாமுண்டி மலை சுமார் 160 கி.மீ. பெங்களூரிலிருந்த சாலை வழியாகவோ அல்லது ரயிலில் மைசூர் செல்லவோ தேர்வு செய்யலாம் .

முகவரி:
அருள்மிகு சாமுண்டீஸ்வரி கோவில், சாமுண்டி மலை ரோடு, மைசூர் 570010,

சகல சௌபாக்கியங்கள் அருளும் சாமுண்டீஸ்வரியை
வழிபட்டு அருள் பெறுவோம்!!