தொடர்கள்
அனுபவம்
மகத்தான பெண்மணி -லலிதா பாரதி, மரியா சிவானந்தம்

20230027190245367.jpg

பாரதி என்னும் மகா கவி , மறைந்து நூறாண்டுகள் ஆன பின்னும் தமிழ் மண்ணில் மேலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் ஒரு பெயர். அந்தக் கவிராஜனின் குடும்பம் ஆறாம் தலைமுறையாக கிளை பரப்பி, விழுதுகள் தாங்கி, வேரூன்றி ஆலமரமாக பரந்து விரிந்து விரிந்து நிழல் தருவதை நாம் காண்கிறோம் . பாரதியின் வழித்தோன்றல்கள் தமிழும் இசையும் வளர்க்கிறார்கள். கணினியும், பொறியியலும், மேலாண்மையும் படித்த போதும் தமிழ் அவர்களின் முதன்மை தேர்வாகவே இருக்கிறது. .

சமீபத்தில் இந்த ஆலமரத்தின் வலிமை மிக்க கிளை ஒன்று முதிர்ந்து, மண்ணில் கலந்தது .பாரதியின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி தன் 94 ஆம் வயதில் மறைந்தார் , பாரதியின் பேத்தி என்ற அடையாளத்தை தாண்டி, ஒரு ஆளுமை மிக்க தமிழ் அறிஞராக வாழ்ந்தவர் லலிதா பாரதி. பாரதியாரின் வாரிசுகளில், அவரை முழுமையாக பிரதிபலிக்க முயன்றவர் லலிதா பாரதி. பள்ளி ஆசிரியையாக இருந்தவர்.தனது தாத்தாவைப் போலவே தமிழ் மேல் தணியாத பற்று கொண்டு வாழ்ந்தவர்.

லலிதா பாரதியின் இளைய மகன் Dr. ராஜ்குமார் பாரதியை நாம் அனைவரும் அறிவோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். பாரதியின் பாடல்களுக்கு புதிய இசை வடிவம் கொடுத்து , ஒலிநாடாக்களில் பாடி, மக்களிடையே அவற்றை எடுத்துச் சென்றவர் .கர்நாடக இசைப்பாடகர், இசை அமைப்பாளர். பாரதி திரைப்படத்தில் "கேளடா மானிடவா ..எம்மில் கீழோர் மேலோர் இல்லை " போன்ற பாடல்களைப் பாடிய பின்னணி பாடகர் .

20230027190422356.jpg

அவரது மனைவி சாந்தலக்ஷ்மி பாரதி , பொறியியல் பயின்றவர், பாரதி குடும்பத்தின் இளைய மருமகள் என்னும் பெருமையைப் பெற்றவர். தன் மாமியார் லலிதா பாரதி மேல் அன்பும், பெருமதிப்பும் கொண்டவர். "உங்கள் மாமியாரைப் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம்" என்று நாம் வேண்டுகோள் விடுத்த போது, லலிதா பாரதியைப் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார். விகடகவி இதழுக்காக பிரத்தியேகமாக அளித்த நேர்க்காணலை பெருமையுடன் படைக்கிறோம் .

20230027190501775.jpg

இதோ சாந்தலக்ஷ்மி பேசுகிறார்:

"என் மாமியார் லலிதா பாரதி, பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாள் பாரதியின் இரண்டாவது மகள். இளமையிலேயே இவரது தந்தை இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவில் இருக்க நேரிட்ட போது , தங்கம்மாள் பாரதி தன் குழந்தைகளுடன் செல்லம்மாள் பாரதியுடன் வாசித்தார். எனவே லலிதா பாரதி செல்லம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். செல்லம்மாவுக்கு பாரதியின் பாடல்கள் அனைத்தும் மனப்பாடம். அத்தனை பாடலையும் பாரதி இசைத்த மெட்டில் பாடுவார். லலிதா பாரதிக்கு பாரதியின் பாடல்கள் தாய்வழி சீதனமாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம் .

திருச்சி சாரதா வித்யாசாலையில் இடைநிலை ஆசிரியையாக பணி செய்த லலிதா பாரதி , திருமணத்துக்குப் பின் புதுக்கோட்டை , தில்லி பிறகு சென்னை என ஆசிரியப்பணி ஆற்றினார். சென்னையில் மாநகராட்சி பள்ளி ஆசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.

பாரதியின் பேத்தி என்ற அடையாளம் இருப்பினும் லலிதாம்மா தனித்துவம் மிக்க ஆளுமை கொண்டவர். தமிழ் மேல் அளவில்லா பற்றும், இசை மேல் பெருங் காதலும் கொண்டவர். இசை ஆர்வத்துடன் தன் மகன்கள் அர்ஜுன், ராஜ்குமார் இருவருக்கும் முறையே மிருதங்கமும் ,வாய்ப்பாட்டும் பயிற்றுவித்தார். இருவரும் அதில் புகழ் பெற வேண்டி தன் நேரத்தை செலவிடுவார் . அதற்கான எவ்வித தியாகமும் செய்ய அவர் தவறவில்லை. ராஜ்குமார் பாரதிக்கு ஐந்து வயதிலியே சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு கர்நாடக இசையைப் பயிற்றுவித்தார் .அவர் சிறந்த பாடகராக மிளிர இசை அமைப்பாளாராக விளங்க அவர் அன்னையின் பங்கு பெரிது.

20230027190544610.jpg

எழுத்தாற்றலும் ,பேச்சுத்திறனும் கொண்டவர் லலிதா பாரதி. நாற்பதுகளில், ஐம்பதுகளில் அவர் எழுதிய கட்டுரைப் பிரதிகள் இன்னும் எங்கள் வீட்டில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன .இலக்கிய ஈடுபாடு மிக்கவர். வானொலியில் அவர் நிகழ்த்திய உரைகள் பாரதியின் புகழை ,தமிழின் அழகை உரத்துக் கூறின.

அந்நாளில் டி.கே.சி நடத்திய 'வட்டத்தொட்டி " என்னும் இலக்கிய அமைப்புடன் இணைந்து மீ.. சோமு , மு.மு இஸ்மாயில் பாஸ்கர தொண்டைமான், .பொ.சி போன்ற தமிழறிஞர்களுடன் தமிழை வளர்த்தார். முப்பது வருடம் முன்பே அவர் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்து பாரதி பாடல்களை, பாரதி இசையமைத்த மெட்டிலே பாடி இரண்டு ஒலி நாடாக்களை வெளியிட்டார் .

லலிதா பாரதி சுய ஆளுமை மிக்கவர், பன்முகத்திறன் கொண்டவர். 'பாரதியின் வாரிசு' என்பதை எண்பிக்கும் வகையில் அவரது செயல்கள் எப்போதும் இருக்கும். உறுதியானவர், தைரியம் மிக்கவர். அவர் குரல் ஆதிக்கம் மிக்க கம்பீர குரலாக இருந்தது. அவரது ஆளுமைத்திறனைப் பார்ப்பவர்கள் அவர் ராணுவம், அரசியல் என எந்த துறை சென்று இருந்தாலும் புகழ் பெற்று இருப்பார் என்றே நினைப்பார்கள். கலைஞர் உள்ளிட்ட முதல்வர்கள் அனைவரிடமும் அவர் எவ்வித தயக்கமும் இன்றி உரையாடுவார்

20230027190636538.jpg

அவர் சொற்களைத் தேர்ந்தெடுத்து பேசுவார். அவர் குரலே கணீர் என்று இருக்கும். "மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம்" என்னும் பாரதியின் வரியை அடிக்கடி மேற்கோள் போல காட்டுவார். அவர் பேசுவது அத்தனையும் மந்திரம் போலவே இருக்கும். "வெடிப்புற பேசு'வது அவர் பாணியாகவே இருந்தது.

20230027190716605.jpg

செல்லம்மா பாரதி, லலிதா மற்றும் குழந்தைகளை மிகுந்த கண்டிப்புடன் வளர்த்தார், லலிதா பாரதியும் அவ்வாறே ஒரு கண்டிப்பான அம்மாவாக இருந்தார் . அது மட்டும் அல்ல, பேரக்குழந்தைகளிடமும் கண்டிப்புள்ள பாட்டியாக இருந்தார். குழந்தை வளர்ப்பில் ஒழுக்கத்தை முன்னிறுத்தி அவர் பிள்ளைகளை வழி நடத்தினார். அவரே ஒரு முன் உதாரணமாக எங்களுக்கு வாழ்ந்து காட்டினார். நேரம் தவறாமை அவரது தாரக மந்திரமாக இருந்தது .

குழந்தைகளை நன்முறையில் பயிற்றுவித்தார். அவர்கள் பேசும் முதல் மொழி தமிழாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் . எல்லா சொற்களும் முதலில் தமிழில் தான் கற்பித்தார் ,என் மகன் முதலில் தபால் பெட்டி என்றுதான் கற்றுக் கொண்டான். பின்னரே அவர் Post box என்ற சொல்லை அறிந்தான். குழந்தைகள் ஆங்கிலம் கற்பதில் தடையில்லை ஆனால், அது தமிழ் அறிந்த பின்புதான் என்பதில் உறுதியாக நின்றார் என் மாமியார் .

20230027190803963.jpg

எத்தனை கண்டிப்பு மிக்கவரோ அத்தனை கனிவு மிக்கவர் லலிதா பாரதி .குடும்பத்தில் யாருக்கு உடல் நலம் இல்லாமல் இருந்தாலும், அவர் அத்தனை அக்கறையுடன் கவனித்துக் கொள்வார். வேளைக்கு உணவு, மருந்து என்று அவர்கள் நலம் பெறும் வரை முழு ஈடுபாட்டுடன் கவனித்துக் கொள்வார். கனிவும் ,கண்டிப்பும் மிக்க ஒரு பூரணமான பெண்மணியாக, அனைவருக்கும் ஆதர்ச அன்னையாக. விளங்கினார் " என்று லலிதா பாரதியின் நினைவுகளை உருக்கமாக எடுத்துக் கூறினார் சாந்தலஷ்மி பாரதி.

சாந்தலக்ஷ்மி பாரதிக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டோம் .

பாரதியின் இந்நூற்றாண்டின் பிரதிபலிப்பாக, அவரின் பெண் வடிவம் போல் வாழ்ந்து, தமிழ் வளர்த்த லலிதா பாரதி போற்றத் தகுந்தவர்.

"பாரதியின் வாரிசு" என்னும் பெருமைக்கு ஏற்றவாறு ஒரு பரிபூரணமான வாழ்க்கை வாழ்ந்தவருக்கு 'விகடகவி' இதழ் வந்தனம் செய்கிறது , தமிழ் மக்களுடன் இணைந்து .!