தொடர்கள்
ஹாய் மதன்
ஹாய் டியர் மதன்

20230019164129871.jpg

1. பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறீர்களா?

2023001916463706.jpg

பஸ்ஸிலேயே வாழ்ந்திருக்கிறேன். நான் விகடனில் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு பஸ்தான். 25 B! ஓடும் பஸ்ஸிலிருந்து குதிப்பது, தாவி ஏறுவது, தொங்கிய வாறு செல்வது எல்லாம் செய்திருக்கிறேன். அதெல்லாம் டேஞ்சரான விளையாட்டு என்று இப்போதுதான் புரிகிறது!

2. ஆன்மீகப் பெரியோர்கள் அரசியல் பேசலாமா?

2023001917080715.jpg

வாழைப்பழத்தில் ஊசி போல பேசினால் சுவையாகத் தான் இருக்கும். ரொம்ப பேசினால் கட்சி சாயம் பூசி விடுவார்கள். பிறகு மாற்றுக் கட்சியினர் அவரை தரைக்குறைவாகத் தாக்குவார்கள். தேவையா இதெல்லாம்?!.

3. வாரிசு அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?

20230019165314567.jpg

சினிமாவில் வாரிசு நடிகர் வந்தால் பிரச்சனை இல்லை. படத்தை பார்க்காமல் தவிர்க்கலாம்!ஆனால் அரசியலில் என்றால் பிரச்சனைதான்.வாரிசு என்றால் மகன் மட்டுமல்ல. மகள்,தங்கை, அண்ணன், மைத்துனர் என்று யார் வேண்டுமானாலும் வரலாம். தவிர்க்க முடியாது! அரசியல் வாரிசுகள் ஒரு 'அட்வான்டேஜ்' உடன் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். அண்மையில் உதயநிதியின் பிறந்தநாளுக்கு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் 12 பக்கங்கள் விளம்பரம் கொடுத்தார்கள். அது ஒரு ரிகார்டு என்று தான் நினைக்கிறேன். வாரிசு அல்லாத ஒரு புதிய அரசியல்வாதிக்கு இது நடக்குமா? மொத்தத்தில் இப்போது தருமி சிவபெருமானிடம் 'தவிர்க்க முடியாதது எதுவோ ?'என்று கேட்டால் அவர் "வாரிசு அரசியல் "என்று சொல்லுவார் என்று தோன்றுகிறது!

4. கோயில் உற்சவங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்களா?

20230019165550294.jpg

பார்த்தசாரதி கோயில் தேர் இழுத்திருக்கிறேன். கருட சேவையில் முன்னால் ஓடியிருக்கிறேன். சிறு வயதில் தஞ்சைக்கு அருகே உள்ள கருவேலங்குளம் என்கிற கிராமத்தில் என் தாத்தாவுக்கு நிலங்கள் இருந்தன.அங்கு மாரியம்மன் கோயிலில் திருவிழாவன்று கரகம், தீமிதி எல்லாம் நடந்தன. தாத்தா ஒரு நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்து இருந்தார். நான் அவர் பக்கத்தில் (ஆறு வயது) ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து திருவிழாவை ரசித்ததுண்டு. பூசாரி கையில் தீச்சட்டியுடன் கிட்டே , கிட்டேவந்து ஆடி பயமுறுத்தியதை மறக்க முடியாது!.

5. நாத்திகம் ஆன்மீகம் இது எப்படி பார்ப்பீர்கள்?

20230019170601953.jpg

நாத்திகம் ஒரு Bore. வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை ,உற்சாகம், பண்டிகை, விழா என்று எதுவுமே இல்லாமல் 'டல்' லடிக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால், என் மதம் என்னை கட்டுப்படுத்துவதில்லை. என் இஷ்டப்படி தான் வாழ்வேன்!.

தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்

வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in மற்றும் vikatakavi.weekly@gmail.com