தொடர்கள்
கதை
முட்டை ஓதி வைக்கவா- எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

2023001219022090.jpg

ஓஹோ பதிப்பகம்.

சென்னை தியாகராய நகரின் மிக முக்கியமான பதிப்பகம் அது. அந்த

பதிப்பகம் கடந்த அறுபது வருடங்களாக ஆயிரக்கணக்கான புத்தகங்களை

பதிப்பித்து வந்துள்ளது.

30’x30’ அறையில் பதிப்பித்த புத்தகங்கள் டிஸ்பிளே செய்யப்பட்டிருந்தன.

அறையின் பின்னே பதிப்பகத்தின் அலுவலகம் இருந்தது. பதிப்பக கணக்கு

வழக்குகளை நான்கு பணியாளர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு

கணினி முன் அமர்ந்து முந்தினநாள் வரவு செலவுகளை சோதித்துக்

கொண்டிருந்தார் பதிப்பக உரிமையாளர் செல்லப்பன்.

செல்லப்பனுக்கு வயது 55. வியாபார முன் வழுக்கை. முகத்தில் நமட்டு

சிரிப்பு. கண்களில் கள்ளபார்ட் நடராஜன் மினுமினுப்பு. தின சவரம்

செய்யப்பட்ட மீசை இல்லாத கொழுக்மொழுக் முகம். பெல்ட் இல்லாமல்

சட்டையை இன் பண்ணியிருந்தார். சட்டை பொத்ததான்களை கழுத்து வரை

போட்டிருந்தார்.

எழுத்தாளர் மலர் சூர்யா பதிப்பகத்துக்குள் பிரவேசித்தான். வயது 40.

முழு நேர எழுத்தாளர். உலகின் எழுநூத்தி தொண்ணுத்தி சொச்சம் கோடி

பேர் அயோக்கியர்கள் அவர்களை தன் எழுத்துகளால் திருத்த போவதாக

கங்கணம் கட்டியிருந்தான் மலர்சூர்யா. தனது தலைக்கு பின் ஒரு ஒளி

வட்டம் சுழல்வதாக நம்பினான்.

“வணக்கம் சார்!” கை கூப்பினான் மலர் சூர்யா.

“வாருங்கள் புதுமைபித்தனின் பேரனே. ஜெயகாந்தனின் மகனே.

சுஜாதாவின் கடைசி தம்பியே!”

“அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்! புத்தகக்கண்காட்சில நம்ம

ஸ்டால் விற்பனை எப்படி இருக்குது?”

“எவன் புக் வாங்க வரான்.. அப்பளமும் மிளகாய் பஜ்ஜியும் மொசுக்கிட்டு

போரான்க..”

“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேச வந்தேன்!”

“என்ன?”

“போன வருஷம் மட்டும் என் பதினாறு புத்தகங்களை போட்டிருக்கீங்க..”

“ஆமா போட்டேன் போட்டது பூராவும் விக்காம குடோன்ல கட்டுகட்டா

கரையான் அரிச்சு அம்போன்னு கிடக்குது?”

“புத்தகம் போடுற வரைக்கும் தேனா இனிச்சீங்க. இப்ப புக்

விக்கலைன்னு ஆவலாதி சொல்றீங்களே…”

“நீ பெரிய எழுத்தாளன். உன் புத்தகங்களை போட்டா ஆயிரக்கணக்ல

விக்கும்னு தப்புகணக்கு போட்டுட்டேன்…”

“புக் போட்டப்ப ரெண்டு ரெண்டு காம்ப்ளிமென்ட்ரி காப்பி குடுத்தீங்க.

பத்து சதவீதம் ராயல்டின்னு சொன்னீங்க. பதினாறு புத்தகங்களின் மொத்த

விலை அய்யாயிரம் ரூபாய். அய்நூறு பிரதி அடிச்சிருந்தீங்கன்னா கூட

25லட்சம் ஆகுது. அதில் பத்து சதவீதம் ராயல்டி இரண்டரை லட்சம். ஆனா

புத்தகம் போட்டதிலிருந்து நீங்க இதுவரைக்கும் ஒரு பைசா தரல..”

செல்லப்பன் முகம் கறுத்தது.

“உன் கணக்கு கண்ணாடி வியாபாரி கனவு கண்ட கதையா இருக்கு.

நாங்க ஒவ்வொன்றிலும் ஐம்பது காப்பிதான் அடிச்சம். பதினாறு புத்தகங்களின் விலை அய்யாயிரம் என்றாலும் தள்ளுபடி 25சதவீதம் வரைக்கும் தரோமே..

இந்த ஒரு வருஷத்ல உன் புத்தகங்கள் ஒத்தைபடை எண்ணிக்கைலதான்

வித்திருக்கு. உன் புத்தகங்களை பதிப்பிச்சதில் நஷ்டம் ஏற்பட்டால் நீதான்

அந்த நஷ்டத்தை தரனும்..”

“முகநூலில் என் புத்தகங்களை வாங்கி படிச்சு பதிவு போட்டவங்களே

இருநூறு முந்நூறு பேர் தாண்டுவாங்க. ஒரு சிங்கப்பூர் வாசகர் எல்லா

புத்தகங்களிலும் முப்பது செட் வாங்கியிருப்பதாக போட்டோ போட்டிருந்தார்!”

“பேஸ்புக் கிறுக்கன்களை நம்பாதே. ஈறை பெருமாள் ஆக்குவாங்க..”

“இதுவரை வித்த கணக்குதான் என்ன?”

செல்லப்பன் தனது கணக்காளரிடம் திரும்பினார். “இவரோட புத்தக

விற்பனை கணக்கை சொல்லு!”

அவர் கணினியில் பல பட்டன்களை தட்டினார். “மரக்குதிரை இரண்டு

பிரதிகள். காலத்தை துரத்தினவன் ஒரு பிரதி. பூஜ்யத்துக்குள்ளே ஒரு

ராஜ்ஜியம் ஒரு பிரதி. கல்கோனா முத்தம் ஒரு பிரதி. கோவேறு கழுதை ஒரு

பிரதியும் விற்கவில்லை. இதயம் விற்பனைக்கு ஒரு பிரதி. (சொல்லிக்

கொண்டே போனார்) மொத்தம் 2400ரூபாய்க்கு விற்றிருக்கிறது. மலர்

சூர்யாவுக்கு தரவேண்டிய ராயல்டி 240ரூபாய். வருடத்தின் சிறந்த நாவல்

தொகுப்பு சிறந்த சிறுகதை தொகுப்பு பரிசு போட்டிகளுக்கு எழுத்தாளரின்

வேண்டுகோளின்படி மூன்று மூன்று பிரதிகள் அனுப்பப்பட்டன. அந்த

பிரதிகளின் விலை கழிவு போக 716 ரூபாயிலிருந்து 240 ரூபாயை கழித்தால்

மலர் சூர்யா நமக்கு 476ரூபாய் தரவேண்டும். சூர்யா சார்! அந்த பணத்தை

ஜிபே பண்ணிவிடுகிறீர்களா?”

ரத்தம் தலைக்கேறியது மலர் சூர்யாவுக்கு. வானம் வெடிக்க கத்தினான்.

“அடப்பாவிகளா! என்ன ஒரு பித்தலாட்டக் கதையை ஒப்பிக்கிறீங்க?”

“தவறாக பேசாதீர்கள். நாணயமான பதிப்பகம் எங்க பதிப்பகம். எங்கப்பா

பெயரை கட்டிக்காக்கதான் நஷ்டத்தோட நஷ்டமா இந்த பதிப்பகத்தை

நடத்திக்கிட்டு இருக்கம். எங்க பதிப்பகத்ல புக் போட நூத்துக்கணக்கான

எழுத்தாளர்கள் க்யூ வரிசைல நிக்ராங்க தெரியுமா? ஒவ்வொரு எழுத்தாளரும்

ஒரு புத்தகம் போட பத்தாயிரம் தராங்க. உங்க பதினாறு புத்கதங்களுக்கு

கணக்கு பாத்தா நீங்க ஒரு லட்சத்திஅறுபதாயிரம் எங்களுக்கு

குடுத்திருக்கனும். கேட்டோமா நாங்க..”

“எழுத்தாளர்கள் சபிக்கபட்ட ஒயிட் அண்ட் ஒயிட் பிச்சைக்காரர்கள்.

அவங்க திருவோட்ல கிடக்ற சில்லரைக்காசுகளை திருடி புரோட்டாவும்

பாயாவும் திங்றீங்களேய்யா.. இது செரிக்குமா?”

“நீ பிச்சைக்காரனாக இருக்கலாம். நாங்கல்லாம் பரம்பரை

பணக்காரர்கள். திருடி திங்கிற பிராப்தம் எங்களுக்கு இல்லை!”

“பதவிசா கேக்ரேன்… உண்மையான கணக்கை போட்டு எனக்கு சேர

வேண்டிய ராயல்டியை தந்திடுங்க..”

“தமிழ்நாட்டுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் லைப்ரரிக்கு காப்பி

வாங்க மாட்டாங்க. ஏன்னா புததகங்களை படிச்சு அறிவை வளத்துக்கிட்டா

யாரும் அவங்களுக்கு ஓட்டு போட மாட்டாங்களாம். சமையல், ஜோசியம், வாஸ்து புக்குகள் தான் விக்குது. ‘நூறு வகை பிரியாணிகள்’ன்ற டைட்டில்ல

புக் எழுது. ராயல்டியை வீடு தேடி வந்து தங்கதட்ல தரேன்!”

“என் ராயல்டியை ஒழுங்கு மரியாதையா தரலைன்னா உங்க பதிப்பகம்

முன் அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவேன்!”

“நடத்து பதிப்பக ஆட்களை வைத்து உண்ணும்விரத போராட்டம்

நடத்துவேன்!”

“புத்தக கண்காட்சிக்கு வந்து உன் ஸ்டால் முன்னாடி தீக்குளிப்பேன்!”

“தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான எழுத்தாள பயல்களில் ஒருத்தன்

குறைவான்!”

“முகநூலில் உன் தில்லுமுல்லுகளை போட்டு நாறடிப்பேன்..”

“நான் ஒரு நூறுபேருக்கு காசு கொடுத்து உனக்கு எதிர் பதிவு

போடுவேன்!”

“பத்திரிகைகளுக்கும் டிவிகளுக்கும் உன் தில்லுமுல்லு பத்தி பேட்டி

குடுப்பேன்..”

“மொதல்ல அவங்க அவங்களோட செய்தியாளர்களுக்கு ஒழுங்கா

சம்பளம் குடுக்க சொல்லு.. அப்றம் ஊர் நியாயம் பேசலாம்!”

“செல்லப்பன்! உனக்கு ஒரு வாரம் டயம் தரேன். அதுக்குள்ள என்

ராயல்டியை ஒழுங்கு மரியாதையா குடுக்கப்பாரு..”

“நூறுவருஷம் ஆனாலும் உனக்கு பத்து பைசா தரமாட்டேன் கிளம்பு

கிளம்பு..”

ஆங்காரமாய் கால்களால் தரையை உதைத்தபடி பதிப்பகத்திலிருந்து

வெளியேறினான் மலர்சூர்யா.

தாண்டவக்கோன் பேப்பர் டம்ளரில் இருந்த மேன்ஷன் ஹவுஸ்

பிராண்டியை ராவாக அப்படியே தொண்டைக்குள் கவிழ்த்தான்.

தாண்டவக்கோன் ஒரு பத்திரிகையின் ரிப்போர்ட்டர்.

“ஓஹோ பதிப்பகம் செல்லப்பன் உனக்கு சேர வேண்டிய ராயல்டியை

தராமல் பொய் கணக்கு கொடுத்தானாக்கும்!”

“ஆமாம்!”

“எழுத்தாளர்களின் கவிஞர்களின் இரத்தத்தை உறிஞ்சி வருஷம் ஒரு

கார் மாத்துவான்! நூறு பதிப்பகத்தாரில் முப்பது பதிப்பகத்தார் நல்லவர்கள்.

ஏமாத்றவனோட கோணத்ல பாத்தா அவன் செய்றதெல்லாம் சரின்னுதான்

அவனுக்கு படும்”

“இவனை என்ன செஞ்சா என் காசு எனக்கு வரும்?”

யோசித்து சூரியனித்தான் தாண்டவக்கோன்.

“செல்லப்பனுக்கு ஒரு வீக்னஸ் இருக்கு. அதை தட்னா காசு

கொடகொடன்னு கொட்டும்!”

“ஆஹா!”

“அஞ்சுருபா செலவாகும் பரவாயில்லையா?”

“சொல்லுசொல்லு..”

“அஞ்சு ரூபாய்க்கு ஒரு முட்டை வாங்கு. மந்திரவாதி வேஷம் நான்

போட்டு முட்டையை குங்குமத்ல புரட்டி எடுக்கிறேன். செல்லப்பன் வீட்டு

தோட்டத்தில் எங்கயாவது புதை. அதை நான் விடியோ எடுக்கிறேன்.

அதன்பின் ஒரு நாடகம் போடுகிறேன். தலைதெறிக்க ஓடிவந்து உன்

ராயல்டி காசை குடுத்திருவான் செல்லப்பன்!”

அப்படியே செய்தான் மலர்சூர்யா.

கைபேசி சிணுங்கியது.

எடுத்தார் செல்லப்பன். எதிர்முனையில் தாண்டவக்கோன்.

“நல்லாருக்கீங்களா முதலாளி?”

“இருக்கேம்பா..”

“உங்ககிட்ட ஒருரகசியம் சொல்றேன். நீங்க மலர்சூர்யாவுக்கு ராயல்டி

குடுக்க மறுத்ததினால் அவன் ஒரு மந்திரவாதியை வச்சு ஒரு முட்டையை

மந்திரிச்சு ஓதி உங்களுக்கு செய்வினை வச்சிட்டான். நாற்பத்திஎட்டு

நாட்களில் உங்க வீட்ல ரெண்டு துர்மரணம் நிகழும். உங்க பதிப்பகம்

தீப்பிடிச்சு எரிந்து நடுத்தெருவுல வந்து நிப்பீங்க. அவன் முட்டையை ஓதி

செய்வினை வச்சதை விடியோ எடுத்து வச்சிருக்கேன் உங்க வாட்ஸ்அப்புக்கு

அனுப்றேன்… பாருங்க…”

பதறிபோய் விடியோவை பார்த்தார் செல்லப்பன்.

“அய்யய்யோ என்ன செய்யலாம் தாண்டவக்கோன்?”

“மலர்சூர்யாவுக்கு நீங்க உண்மைல குடுக்க வேண்டிய ராயல்டி

எவ்வளவு?”

“ஒரு லட்சத்தி இருபத்தி ஆறாயிரம் ரூபாய்!”

“பணத்தை கொடுத்து சமாதானம் ஆகி செய்வினை வச்ச முட்டையை

திருப்பி எடுக்க சொல்லுங்க…”

“சரி!”

“செய்வினை விஷயத்தை போட்டு உடைச்ச எனக்கு பத்தாயிரமும் ஒரு

புல் பாட்டில் ரம்மும் தனியா கொடுத்திருங்க!”

-தலைக்கு மேல் பெரிய கும்பிடு போட்டபடி போய் பணத்தை

கொடுத்தார் செல்லப்பன். புதைத்த முட்டையை எடுத்து கடலில் போட்டான்

மலர்சூர்யா.

“ஓதி பார்த்த செய்வினை முட்டை டெக்னிக் தவறு செய்யும் 70சதவீத

பதிப்பாளர்களிடமும் ஜெயிக்காது எழுத்தாளா! சகலத்தையும் விழுங்கி

ஏப்பமிடும் கல்லுளிமங்கன்கள் இங்கு ஏராளம் தாராளம்” எனக்கூறி

பகபகவென சிரித்தான் தாண்டவக்கோன்.