தொடர்கள்
அனுபவம்
மாண்புமிகு மனிதர்கள் -10 ஜாசன்

20220524161443914.jpg

பூனை

எனக்கு பூனை பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். பூனை சகுனத் தடை என்பார்கள். ஆனால் பூனையால் எனக்கு எந்த சகுன தடையும் ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் பூனையார் என்ற பெயரில் ஜூனியர் விகடனில் பல்வேறு இடங்களுக்கு விசிட் செய்து நடப்பதை பூனை போல் கவனித்து வாரா வாரம் தொடராக எழுதி இருந்தேன் அதுவும் ஒரு பாப்புலர் தொடராக அப்போது வாசகர்களால் பாராட்டப்பட்டது.

நான் வேலைக்கு சேர்ந்த புதிதல் என் வீட்டுக்குள் ஒரு பூனை வந்து என்னிடம் சினேகமாய் மியாவ் என்றது. நான் அதற்குப் பால் தந்தேன் அது முதல் என்னை சுற்றி சுற்றி வந்தது சாப்பிடும் போது என் பக்கத்தில் வந்து உட்காரும் நான் கொஞ்சம் சாதம் போட்டதும் அதை சாப்பிட்டு விட்டு நாவால் நக்கிய படியே அடுத்ததுகாக காத்திருக்கும். சில சமயம் எலிகளைப் பிடித்து சுவற்றில் வைத்துக்கொண்டு தின்று கொண்டிருக்கும். நான் ஏய் உனக்கு இனிமேல் பால்சாதம் எதுவும் கிடையாது மிகச் செல்லமாக கோபித்ததும் ஒரு மாதிரி மியாம் என்று சாரி சொல்லி விட்டு சாப்பிடுவதை தொடரும்.

நான் எவ்வளவு நேரம் தாமதமாக வந்தாலும் எனக்காக முழித்து இருக்கும் ஜீவன் ஆரம்பத்தில் என் மனைவி எனக்காக காத்திருப்பாள் தூங்காமல் அதன் பிறகு அவர் வரும் போது வரட்டும் என்று தூங்கிவிடுவாள். ஆனால் பூனை எனக்காக விழித்துக்கொண்டு காத்திருக்கும். நான் தூர வருவதை விளக்கு வெளிச்சத்தில் பார்த்து விட்டு துள்ளி குதித்து ஓடி வந்து என் காலை சுற்றி வரும் அதன் பிறகு எனக்கு முன்பு சென்று வாசல் தாழ்ப்பாளை ஓசை செய்து மியாம் என்று குஷியாக சத்தமிடும் என் வருகையை தெரிவிக்கும் காலிங் பெல் அதுதான். என் மனைவி அம்மா நான் வந்துவிட்டேன் என்று தெரிந்து கொண்டு கதவைத் திறப்பார்கள்.

20220524161918997.jpg

ஒரு முறை அது பாம்போடு சண்டை போட்டதில் அதன் ஒரு கண்ணை பாம்பு கொத்தி விட்டது. இதனால் அதற்கு ஒரு கண் தெரியாது நாங்கள் செல்லமாக அதை ஒற்றைக்கண் சிவராசன் என்று அழைப்போம். சில காலம் அது காணவில்லை யாரோ பிடித்து கொண்டு போய்விட்டார்கள் என்றும் , இறந்து விட்டது என்றும் இரண்டு வித கருத்து இருந்தது. ஆனால் அது காணாமல் அதைப் பார்க்காமல் நான் கொஞ்சம் கவலைப்பட்டேன் என்பது நிஜம்.

அடுத்த சில வாரங்களில் ஒரு கருப்பு குட்டி பூனை எங்கள் வீட்டுக்கு வர தொடங்கியது அதுவும் என்னுடன் நட்பாக பழகியது நான் நடந்தால் அதுவும் என் கூட நடக்கும் நான் உட்கார்ந்தால் அதுவும் உட்காரும் நான் பேப்பர் படித்தால் அதற்கு பிடிக்காது பேப்பர் படிக்க விடாமல் தள்ளி விடும் நான் டிவி பார்த்தால் என் மடியில் உட்கார்ந்து அதுவும் டிவி பார்க்கும்.

20220524162243370.jpg

அது ஒரு பெண் பூனை என்பது அதன் வயிறு திடீரென்று பெரிதான போது என் மனைவி கருப்பி சீக்கிரம் குட்டி போட போகிறாள் என்று சொன்ன போது தான் எனக்கே தெரிந்தது. திடீரென ஒரு நாள் டிவி பெட்டி கீழே இருந்த இடத்தில் கருப்பி குட்டி போட்டது 5 குட்டிகள் அழகாக அம்மாவின் மடியில் சொகுசாக தூங்கிக்கொண்டு பால் குடித்து ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. சில சமயம் குட்டி நடந்து போனாள் கோபமாக மியாமி சத்தம் செய்து அந்தக் குட்டியை காலால் இழுத்து அரவணைத்துக் கொள்ளும்.எப்போதாவது வெளியே போகும் போன சிறிது நேரத்தில் திரும்பி வந்து குட்டிகளை அரவணைத்துக் கொண்டு பால் கொடுக்கும். குட்டிகள் கொஞ்சம் பெருசா ஆனபோது அப்போது குட்டிகளுக்கு டைபர் வசதியெல்லாம் இல்லாததால் அவர்கள் வெளியேற்றும் கழிவுகளை என் மனைவி அம்மா இருவரும் முணுமுணுத்தபடியே சுத்தம் செய்வார்கள் ஆனால் அவற்றை விரட்ட மாட்டார்கள்

ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லை நான் மட்டும் தான் இருந்தேன் தூக்கம் வராததால் டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்போது ஒரு ஆண் பூனை ஒன்று பெண் பூனையிடம் சினேகமாக கொஞ்ச முயற்சி செய்தது. பெண் பூனை அந்த ஆண் பூனையை விரட்டுவதில் குறியாக இருந்தது. நானும் அந்த ஆண்பூனையை போ என்று விரட்டினேன். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு குட்டியை அந்த ஆண் பூனை கடித்துக் குதறி சாகடித்து விட்டது. நான் பதறிப்போய் கையில் அகப்பட்டதை தூக்கி அதன் மேல் வீச அந்த ஆண் பூனை ஓடியது நான் அந்த இறந்து போன குட்டியை தூர கொண்டுபோய் போட்டு விட்டு வருவதற்குள் மூன்று குட்டிகளை அந்த ஆண் பூனை வந்து கடித்துக் குதறி விட்டுப்போய் விட்டது. அந்த மூன்று குட்டிகளும் இறந்து போய் விட்டது. நான் ஆண்பூனை வருவதற்கான ஜன்னல் கதவை நன்கு அடைத்து விட்டு இறந்து போன மீதி 3 குட்டிகளையும் எடுத்துக்கொண்டு கதவையும் பூட்டி விட்டு போய் இறந்து போன குட்டிகளை தூர போட்டுவிட்டு வந்தேன். அந்த ஒரு குட்டியை மட்டும் தாய் பூனை பத்திரமாக பார்த்து கொண்டது. அந்த ஆண் பூனை நான் பார்த்த போதெல்லாம் விரட்டிக் கொண்டிருந்தேன். மறுநாள் இது இந்த சம்பவம் பற்றி என்னுடன் ரயிலில் பயணிக்கும் கால்நடை மருத்துவரிடம் இது பற்றி கேட்டேன். அதற்கு அந்த மருத்துவர் அந்த ஆண்பூனை பெண் பூனையை உறவுக்கு அழைத்து இருக்கிறது ஆனால் குட்டி ஈன்ற பெண் பூனைகள் இதுபோன்ற உறவில் நாட்டம் கொள்ளாது குட்டி பராமரிப்பு அரவணைப்பு இவற்றை தான் சுகமான அனுபவமாக பார்க்கும். இதனால் சில ஆண் பூனைகள் பெண் பூனை வரவில்லை என்ற கோபத்தை குட்டிகளின் மீது காண்பிக்கும் என்றார்

அதன் பிறகு நான் பெண் பூனையுடன் பாசம் காட்டுவேன் ஆண் பூனையைக் கண்டால் எரிச்சல் படுவேன் அந்தக் குட்டிகள் இறப்பு இப்போதும் என் மனக்கண்முன் அடிக்கடி வந்து போகும் அந்தப் பெண் பூனை இயலாமையால் சோகமாக வந்து என்னிடம் வந்து சாய்ந்து கொண்டது இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது.

2022052416250564.jpg

அதன் பிறகு நாங்கள் வீடு மாறி போன பிறகும் பூனை தொடர்பு தொடர்ந்தது இந்த முறை ஒரு கர்ப்பிணி பூனை எங்கள் வீட்டுக்கு வந்தது அது எங்களிடம் சினேகமாக இருந்தது அதற்கு தேவையான பால் சாதம் இவற்றையெல்லாம் கொடுப்பேன் அது வீட்டு ஹாலில் சுதந்திரமாக சுத்தி வந்தது படுத்து தூங்கியது ஒரு நாள் திடீரென்று நான் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது என் கை பட்டு பூனை மியாவ் என்றது. எப்போது வந்தது என்று தெரியவில்லையே என்று விளக்கைப் போட்டுப் பார்த்த போது எங்க வீட்டு படுக்கையில் அது குட்டி போட்டு இருக்கிறது சாம்பல் நிறத்தில் மஞ்சள் நிறத்தில் வெள்ளை நிறத்தில் கருப்பில் இப்படி 5 குட்டிகள் கண்ணை மூடிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தது. நான் பால்கனியில் அதற்கென்று ஒரு இடம் ரெடி செய்து அந்த குட்டிகளை பத்திரமாக அங்கு கொண்டு போய் படுக்கவைத்தேன் அதன் பிறகு பூனை அங்கு போய் உட்கார்ந்து அவற்றை கவனிக்க ஆரம்பித்தது. இன்னொரு முறை அதே பூனை என்னுடைய புத்தக செல்பில் குட்டி போட்டு விட்டது. இந்தப் புத்தக செல்பில் போட்ட என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அந்த குட்டிகளையும் நான் பத்திரமாக பால்கனியில் தான் கொண்டு போய் விட்டேன் தாய் பூனையும் அதை சந்தோஷமாக பராமரித்துக் கொண்டிருந்தது குட்டி கொஞ்சம் பெரிசானதும் அதற்கென்று எலி சுண்டெலிகளை பிடித்து வந்து துண்டு துண்டாக ஆக்கி குட்டி மியாம்களை சாப்பிட வைக்கும் அது அந்தக் குட்டிகள் சாப்பிட்ட மிச்சத்தை ஈ எறும்பு சாப்பிட வருவதால் அந்த இடம் சுகாதாரமற்ற இருந்தது எனவே நான் அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு அந்த இடத்தை டெட்டால் போட்டு சுத்தம் செய்வேன்.இது அடிக்கடி நடக்கும்.

20220524162841319.jpg

ஒரு முறை நாங்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் வெளியூர் போக வேண்டி வந்தது அப்போது வீட்டை பூட்ட வேண்டியது இருக்கும் அப்போதுதான் என் மனைவி பூனைக்குட்டிகளை பற்றி ஞாபகப்படுத்தினாள். பூனைக்கு என் மொழி தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை பூனைக்குட்டிகளை வாசலில் வைத்து நாங்கள் வெளியூர் போகிறோம் வர நாலு நாட்கள் ஆகும் உங்கள் குட்டிகளை பத்திரமாக எங்கேயாவது வைத்துக்கொள் என்று தாய் பூனையுடன் சொன்னேன் அது எதுவும் பேசாமல் ஒவ்வொரு குட்டியாக கவ்வி மறுபடியும் பழைய இடத்திலேயே கொண்டு போய் வைத்தது இது இரண்டு மூன்று முறை நடந்தது நான் உடனே மறுபடியும் அந்த குட்டிகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டு நான் கொஞ்சம் கோபமாக "நான் சொல்றது உனக்கு புரியலையா வீட்டை பூட்டி விட்டு போனா நீ உள்ளே வர முடியாது சாப்பாடு இல்லாமல் உன் குட்டிகள் செத்துப் போய்விடும் அதை முதலில் புரிஞ்சுக்கோ" ஒரு நிமிடம் அந்தப் பூனை என்னை நிமிர்ந்து பார்த்தது பிறகு எதுவும் பேசாமல் ஒவ்வொரு குட்டியாக எடுத்துக் கொண்டு போய் எங்கேயோ பத்திரப்படுத்தி விட்டு வந்தது.ஆனால் அது என்னை திரும்பி கூட பார்க்கவில்லை.

20220524163205558.jpg

என் மனைவி பூனைக்கு உங்கள் மேல் கோபம். நான் அப்போது நம்பவில்லை நாங்கள் நான்கு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியதும் வாசல் சுவரில் இருந்த பூனையிடம் "நாங்கள் வந்து விட்டோம் இப்போது உன் குட்டியை அழைத்து வா "என்றேன். ஆனால் அந்தப் பூனை எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டது". அதன் பிறகு எனக்கும் பூனைக்கும் இருந்த உறவும் இல்லாமல் போனது.