தொடர்கள்
அரசியல்
நேஷனல் ஹெரால்ட் கேஸ். ஒரு முன்னோட்டமும் இன்றைய நிலவரமும்- பால்கி

20220521222120773.jpg

1937 ல் நமது இந்தியாவின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிக்கையான நேஷனல் ஹெரால்டு தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஆகியோரை அமலாக்க இயக்குனரகம், ராகுல் காந்தி ஜூன் 2ஆம் தேதியும், சோனியா காந்தி ஜூன் 8ஆம் தேதியும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. ராகுல் காந்தி அந்த தேதியில் இந்தியாவில் இல்லாததால் ஜூன் 5ம் தேதிக்கு பிறகு ஆஜராக அவகாசம் கேட்டிருந்தார்.

இருவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

2012 ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவரும் வழக்கறிஞருமான சுப்பிரமணியன் சுவாமி, யங் இந்தியன் பி.லிமிடெட் (YIPvtL) நிறுவனத்தால் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) நிறுவனத்தை கையகப்படுத்துவதில் சில காங்கிரஸ் தலைவர்கள் ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கை மீறலில் ஈடுபட்டதாகக் கூறி விசாரணை நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நேஷனல் ஹெரால்டின் சொத்துக்களைநயவஞ்சகமான வகையில்' கையகப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.

நேஷனல் ஹெரால்டு என்ற அந்த ஆங்கில செய்திதாளை , சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பலர் வெறும் 50 லட்சம் ரூபாய் கொடுத்து, இதன் மூலம் யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசுக்கு சேர வேண்டிய கடனான ரூ.90.25 கோடியை திரும்பப் பெறும் உரிமையைப் பெற்றுள்ளது என்ற நிதி முறைகேடு செய்ததாக அந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது,. AJL க்கு காங்கிரஸ் கொடுத்த கடன் "சட்டவிரோதமானது", ஏனெனில், அது கட்சி நிதியில் இருந்து கொடுக்கப்பட்டது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேருவால் 1937 இல் மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) மூலம் வெளியிடப்பட்ட இந்த செய்தித்தாள் சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஊதுகுழலாக மாறியது. AJL குவாமி அவாஸ் என்றுஉருதுவிலும், நவ்ஜீவன் என்று இந்தியிலும் இரண்டு செய்தித்தாள்களை 2008 வரை வெளியிட்டது. 2008 இல், 90 கோடி ரூபாய் கடனுடன் பேப்பர் மூடப்பட்டது.

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) ஜவஹர்லால் நேருவின் சிந்தனையில் உருவானது. 1937 இல், நேரு 5,000 சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் அதன் பங்குதாரர்களாக நிறுவனத்தைத் தொடங்கினார். நிறுவனம் எந்த ஒரு நபருக்கும் சொந்தமானது அல்ல. இந்த கம்பெனிஆரம்பித்தபோது நேருவைத் தவிர, 5000 சுதந்திரப் போராட்ட வீரர்கள் AJLல் பங்குதாரர்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 2010ல் 1000 ஆகக் குறைந்துள்ளது என்று தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கை கூறுகிறது. இது நஷ்டத்தைச் சந்தித்தது, அதன் பங்குகள் 2011 இல் யங் இந்தியா லிமிட்டெட் க்கு மாற்றப்பட்டது.

யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் 2010 இல் நிறுவப்பட்டது, அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ராகுல் காந்தி இந்த கம்பெனிக்கு டைரக்டராக இருந்தார். நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா வைத்திருக்கும் போது, ​​மீதமுள்ள 24% காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு சொந்தமானது. நிறுவனம் எந்த வணிக செயல்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

AJL பங்குதாரர்களின் குற்றச்சாட்டுகள். இது தான் இந்த வழக்கின் முக்கிய புள்ளி.

முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் சாந்தி பூஷன், அலகாபாத் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு உட்பட பல பங்குதாரர்கள், யங் இந்தியன் கம்பெனி அசோசியடெட் ஜர்னல்ஸை கையகப்படுத்தியபோது தங்களுக்கு எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும், அவர்களின் தந்தைகள் வைத்திருந்த AJL பங்குகள் 2010 இல் அவர்களின் சம்மதம் இல்லாமலேயே யங் இந்தியன்க்கு மாற்றப்பட்டுவிட்டது என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி யாரை இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார்?

சுவாமியின் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே, தொழில்நுட்ப வல்லுநர் சாம் பிட்ரோடா ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

ரூ. 2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள லாபத்தையும் சொத்துக்களையும் பெறுவதற்காக, செயலிழந்த அச்சு ஊடகத்தின் சொத்துக்களைநயவஞ்சகமான வகையில்யங் இந்தியன் "கையெடுத்தது" என்று சுப்பிரமணியன் சுவாமி தன் வழக்கில் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கில் பணமோசடி நடந்துள்ளதா என 2014-ம் ஆண்டு அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தியது. 18 செப்டம்பர் 2015 அன்று, நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தனது விசாரணையை மீண்டும் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸின் பதில் இதோ:

YIL "தொண்டு நோக்கத்துடன்" உருவாக்கப்பட்டது, எந்த லாபத்திற்காகவும் அல்ல. நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவதற்கான "வெறும் வணிகப் பரிவர்த்தனை" என்பதால், பரிவர்த்தனையில் "சட்டவிரோதமில்லை". இந்த வழக்கில் "அரசியல் உள்நோக்கம்" உள்ளது என்று முத்திரை குத்தி, சுவாமி தாக்கல் செய்த புகாருக்கு ஆட்சேபனைகளை எழுப்பியது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு: இதுவரை நடந்த கதை

2015 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் விரைவான விசாரணைக்கு ஒரு வழக்கைத் தாக்கல் செய்யுமாறு சுவாமியிடம் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு டிசம்பர் 19, 2015 அன்று விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 2016 ஆம் ஆண்டில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் (காந்திகள், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் மற்றும் சுமன் துபே) உச்ச நீதிமன்றம் தனிப்பட்ட தோற்றத்தில் இருந்து (personal appearance) விலக்கு அளித்தது. ஆனால் அதே சமயம் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்ய மறுத்திருந்தது.

காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பூஞ்சை கோவிட்டினால் பீடிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அவகாஸம் கிடைத்துள்ளது. அவரது மகன் ராகுல் காந்தி சென்ற வாரம் முதல் இந்த திங்கட்கிழமை வரை நாங்கு நாளாக அமலாக்கத்துறையினரால் விசாரணைக்கு சென்று வருகிறார். இதனை எதிர்க்கும் விதமாக மத்திய அரசை கண்டித்து முதலில் டெல்லியில் ஆரம்பித்த தர்ணா படி படியாக நாடு தழுவிய அளவில்நான் ராகுல்என்ற அளவில் இந்த சத்யாக்ரஹம் தொடர்கிறது. இடையில் சில இடங்களில் வன்முறையும் எழுந்ததாகவும் செய்திகள் வெளியாயின. பண பரிவர்த்தனையே இல்லாத இந்த YIL க்கு கொல்கொத்தா நிறுவனம் அளித்த கடன் பற்றிய கோணமும் அலசப்படுகின்றன.

20 ஜுன் 2022 வரை நான்கு நாட்களாக நாளொன்றுக்கு குறைந்தது 10 மணி நேரம் அமலாக்கத்துறையின் வினாக்களுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கிறார். பதிலளிப்பதில் மிகுந்த நேரம் எடுத்துக்கொள்வதாகவும், முந்தைய பதில்களை மீண்டும் மீண்டும் திருத்துவதாகவும், அதிலும் மதிய உணவுக்கும் நாட்களுக்கிடையேயும் அவரது கட்சி மேலிட உறுப்பினர்களின் மற்றும் சட்ட வல்லுனர்களின் அறிவுரைக்கேற்ற படியே இந்த அடிக்கடிமாற்றம் நடப்பதாகவும் அமலாக்கத்துறை செய்திகள் கூறுகின்றன. கடைசியாக ராகுல் காந்தி, “பணம் பற்றிய பரிவர்தனைகளை மறைந்த மோதிலால் வோரா தான் பார்துக்கொண்டிருந்தார்என்று சொல்லியிருப்பதாக தெரிகிறது.

இதுவரை ED விசாரணையில் ஆரம்பத்திலிருந்து என்ன தெரியவந்துள்ளது?

ஆகஸ்ட் 2014 இல், பணமோசடி ஏதேனும் உள்ளதா என்பதை அறிய ED ஒரு விசாரணையைத் தொடங்கியது. விசாரணை ஆகஸ்ட் 2015 இல் மீண்டும் தொடர்ந்தது.

விசாரணை தொடர்ந்த நிலையில், மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஒன்பது மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி மே 2020 இல் ED ஆல் இணைக்கப்பட்டது. டெல்லியின் சிண்டிகேட் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து ரூ.120 கோடி மதிப்புள்ள மும்பை சொத்து வாங்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்டது.

காந்திக்கு YIL நிறுவனத்தில் உள்ள பங்குகள் மூலம் அவருக்கு 154 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும், முன்பு மதிப்பிடப்பட்டதைப் போல 68 லட்சம் ரூபாய் வருமானம் இருக்காது என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது. 2011-12 மதிப்பீட்டிற்கான நிறுவனத்திற்கு 249.15 கோடி ரூபாய்க்கான கோரிக்கை அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு யங் இந்தியன் லிமிடெட் நிறுவனத்தை அறக்கட்டளையாக அங்கீகரிக்கும் மனுவை ஐடி தீர்ப்பாயம் நிராகரித்தது ஒரு பின்னடைவே.

சென்ற வாரம் இந்த வழக்கை தொடர்ந்த சுப்ரமணியன் ஸ்வாமி, ராகுல் காந்தி ஒத்துழைக்கவிட்டால் சிறையில் வைத்து விசாரிக்கப்படலாம் என்று ஒரு டீவீசானலுக்கு கூறியிருந்தார்.

2012 லிருந்து நடக்கும் இந்த வழக்கு என்று கடைசி நிலை எட்டுமோ?

இது சம்பந்தமான ஒரு ஸ்வாரிஸ்யமான ஜோக் இந்த கலாட்டாவுக்கிடையில் தவிர்க்கமுடியாத ஒன்றும் கூட. சிரித்துவிட்டு போங்களேன்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் முன்னாள் பிரதமர் நேருவுக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.