தொடர்கள்
பொது
இட்லியும் இந்திக்காரர்களும் - நேரடி ரிப்போர்ட்   - பால்கி

20220419185836453.jpeg

கேட்ட நாள் முதலாய், …ஹிந்தி படிச்சவன்லாம் பானி பூரி தான் விக்குறான் என்ற வரி மீண்டும் மீண்டும் கிளர்ச்சி செய்தது மனதில்.

ஹிந்தி படிச்சா வேலை கிடைக்கும்னாங்களே. வடக்கத்தியானுக்கு ஹிந்தி தான் தெரியுது. பானி பூரி விக்குறவன்லாம் ஹிந்திக்காரன் தானே. அப்ப ஹிந்தி படிச்சா பானி பூரி விக்கத்தான் லாயக்கா?

சரி..பானி பூரி ஹிந்திக்காரன் அங்கே. அவன் படுறான் பாடு தமிழகத்திலே.

அப்ப, இங்க, நம்ம அம்ச்சி மும்பையில, இட்லி வடை விக்குற நம்ம தமிழன், நிலமை என்ன என்று அறிய ஆவல் வந்துது. மும்பைல இருக்கோம் இது கூட வரலைன்னா எப்படி ???

நாற்பது வருஷமா நிதித் துறையில வளர்ந்து உயர்ந்து ஓய்வும் பெற்றுவிட்டோம். இடைப்பட்ட காலத்தில், மொழியால் அயல் மாநிலத்தவன் என்ற வேற்றுமையால் பாதிக்கப்பட்டோமா என்றால், ஆமாம் என்றே சொல்லி தற்போது வாழ்வு தரும் மாநிலத்தை குறை கூறி அனுதாபம் சுலபமாக வாங்கி விடலாம்.

ஆனால், இங்கு தான், வாழ வந்த இடத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு சிறு வினாவை நமக்கு நாமே எழுப்பி நாமும் , அந்த சூழ்நிலையில் நமது கடமையையும் உணர்ந்து வாழ்ந்தால் நமது உரிமையையும் பெற்றிடலாம் என்று நமது செல்வகுமார் எத்துணை லாவகமாக உணர்த்துகிறார் ??

20220419185900882.jpeg

தலையில் பெரிய அலுமினிய அடுக்கில் சுட சுட இட்டிலியும் பருப்பு, உளுந்து வடைகளும் வட்ட வட்ட தோசைகளும் நேர்த்தியாய் அடு(ட)க்கி அதற்கு மேல் கெட்டி சட்டினி, கூடவே தக்காளி சட்டினியும் எவர்சில்வர் பாத்திரங்களிலும் அடைக்கப்பட்டு, எழுபதுகளில் ஆட்டோக்காரர்களின் பாம் பாம் ஒலி எழுப்பியோடே, புற நகர் ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாப்புக்கள், கட்டட வேலை நடைபெறும் பகுதிகள், கோயில் பகுதிகள், குடிசைவாழ் பகுதிகள் என மும்பை நகர காலை வேளை பசியை நீக்க இவர்களின் ஊர்வலங்களை அடிக்கடி கண்டதுண்டு. சிலர் சைக்கிளிலும், இந்த கட்டமைப்பிக்களோடும் செல்வதுண்டு. படி படியாய் முன்னேறி சிறு நிலைய கடைகள் முதல் சற்றே பெரிய உணவகங்களாக மாறிய கண் கண்ட உண்மை கதை எத்தனையோ உண்டு.

இட்லி வடை வித்துகிட்டு போற நமது தமிழர்கள் தமிழகத்தை தாண்டி எப்படி வரவேற்கப்படுகிறார்கள்? மொழி பிரச்சினை இருக்குமே? எப்படி சாமாளிக்கிறார்கள் ? அதற்கு ஒரு உதாரணமாக நமது நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் எப்படி ?

மும்பை புறநகர் பகுதி அந்தேரி மேற்கு.

புற நகர் இரயில் நிலையத்திற்கருகில். ஸ்டேஷன் ரோடும் ஸ்வாமி விவேகானந்த் ரோடும் சந்திக்கும் முனையில் காலை ஏழு மணிக்கு கடக்கையில், “ஹான் ஹான் பாந்த் கெ ரக் தியா, ரெடீ ஹை” என்று நமது செல்வகுமார் லாவகமாக மொபைலில் பதிலளித்துக்கொண்டே எதிரில் நின்றிருக்கும் வாடிக்கையாளருக்கு இரண்டு வடை ப்ளஸ் இரண்டு இட்லி ஒரு பேப்பர் தட்டில் வெள்ளை சட்டினியும் தக்காளி சட்டினி சஹிதம் ரெடி செய்து கொடுக்கிறார்.

20220419185947553.jpeg

நெற்றியில் மூன்று திருநீற்று கீற்றுகள் இரு புருவங்களுக்கிடையே செவ்விள குங்குமம் பளிச்சென மின்ன காதோரம் உழைப்பின் அடையளமாய் வழிந்த வியர்வை, மார்பில் ருத்ராட்ச மணி புன்னகை அணிந்தவாறே பம்பரமாய் சுழல்கிறார். எப்போதும் ஒரே சமயத்தில் மூன்று நான்கு வாடிக்கையாளர்களை கையாள்கிறார்.

அருகில் இயங்கும் காக்கி உடை BEST பஸ் பணியாளர்கள், ஆஃபீஸ் செல்லும் ஊழியர்கள், அருகில் சிறு தொழில் வியாபாரிகள், டுடோரியல்ஸ்ஸில் படிக்கும் மாணவர்கள், ஹிஜாப் அணிந்த பெண்மணியும் முஸ்லீம் அன்பரும் இவரது அன்றாட வாடிக்கயாளர்கள். வாகனங்களில் வருபவரும் உண்டு.

ம்ம்ம்ம்..வாடிக்கையளர்கள் என்பதை விட குடும்ப அங்கத்தினர்கள் என்றே உணர்வு தெரிந்தது. வந்தோமா சாப்பிட்டோமா என்ற ஒரு அனிச்ச செயலன்றி, பரஸ்பரம் குசலங்களோடு ஆரம்பித்து கேட்ட உணவு வகை அபரிதமான அன்போடு பறிமாரப்பட ஆனந்தமாய் வயிறு நிரம்ப ஏப்பம் விட்டபடி அகல்கின்றனர். அங்கு பிராந்திய வேறுபாடில்லை. இன வேறுபாடில்லை, மொழி வேறுபாடில்லை, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடில்லை. மத வேறுபாடில்லை. தொழிலாளி முதலாளி வேற்பாடில்லை. அத்துணை அன்னியோன்னியம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வே மேலோங்கி நின்றது.

அருகிலேயே இருபத்தைந்து அடி சுற்றளவுக்குள் இது போன்ற கைய்யேந்தி பவன்கள் வட பாவ், பட்டாடா வடா, பிரட் சாண்ட்விச் வகைகள், போஹா, ஷீரா போன்ற காலை சிற்றுண்டிகள் இருபது சுறு சுறு விறு விறு என்று இயங்கி கொண்டிருக்கயில் நமது இட்டிலிக்கும் ஒரு மதிப்பு மிக்க ஸ்தானம் அங்கு இருப்பது சற்றே கர்வம் கொள்ளச் செய்தது.

செல்வகுமார் பேசினார்.

"பதினேழு வருஷமா இந்த வியாபாரத்தில் இருக்கேன். கடவுள் அருளாலே நல்லா போயிட்டிருக்கு சார் என்று ஆரம்பிக்கிறார் ஒரு சுய நம்பிக்கையோடு. ஆசியாவிலேயே பெரிய ஸ்லம் (slum) என்றழக்கப்படும் தாரவியில் வசிக்கிறார். காலை 6.30 க்கு இங்கு ஆஜராகி விடுகிறாராம். கிட்டத்தட்ட 10.30 வரை இங்கு தனது வியாபாரம் நடத்துகிறார். 400 இட்டிலி, 100 செட் தோசைகள், பருப்பு மெது வடை என 600 எண்ணிக்கை தனது இல்லத்தில் தயாரான சரக்குடன் டாக்ஸியில் வந்து விடுகிறாராம்.

மனது திருப்தியாக இருக்கிறது இந்த தொழிலில். பசித்தவரின் பசி தீர்க்கும் செயலில் சந்தோஷமும் கிடைக்கிறது. அவர்கள் உடல் நலம் மிகவும் முக்கியம். தயாராகும் பண்டங்களுக்கு தரமான தானியங்களை வாங்குவது முதல் கொண்டு வடிக்கையாளருக்கு குடிக்கும் தண்ணீர் பிஸ்லேரி என்று தனது கடமை என்கிறார். அவர்கள் உடல் நிலை நன்றாக இருந்தால் தானே நாளை நம்மிடம் வருவர் என்பதில் திடமாயிருக்கிறார்.

இவர்களது வாடிக்கையாளர்களும் இவரது நலனிலும் அக்கரை கொள்வார்களாம். உடம்பு சரியில்லை என்றால் போன் செய்து நலம் விசாரிப்பது மருந்து உதவி செய்வது என்பது சகஜமாம்.

நம்மூர்ல ஹிந்திக்காரங்க பானிபூரி விக்கரதை பத்தி….என்றவுடன், பாரதம் எல்லோருக்கும் தாய்நாடு. நான் இங்கு பிழைக்க வரவில்லையா, அது போலத்தான் அவர்களும் நம்ம ஊர்ல வந்து பிழைக்கிறார்கள். சுய மரியாதையுடன் வியாபாரம் செய்து பிழைப்பதை வரவேற்கவேண்டும் தானே.

ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு ஆர்டர் கொடுத்தவர்க்கு கவனிக்க செல்கிறார். சாலையோரமாய் செல்வகுமாரிடமிருந்து ஆட்டோவில் வந்தவர் சரேலன வாங்கி சென்றார்.

இவரது மற்ற இரு சகோதரர்களும் அருகருகே இது போன்ற வியாபாரத்தில் உள்ளனராம். மூன்று சகோதரர்களும் நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை தனது சொந்த ஊர் மதுரைக்கு சென்று அங்கு இருக்கும் தமது பெற்றோர் மற்றும் தமது பிள்ளைகளை பார்த்துவிட்டு வருவார்களாம். அப்போது கூட வாடிக்கயாளர்கள், எப்போது மும்பை திரும்புகிறாய் என்று அக்கறையோடு விசாரிப்பார்களாம்.

இந்த வியாபாரத்தை நீங்கள் ஏன் நமது தமிழகத்தில் செய்யக்கூடாது என்றதற்கு, இங்கு இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறதே.

யோசித்துப் பார்த்தால், பானிபூரி விற்பது ஒரு தொழில்தானே. அதில் நேர்மையாய் செய்தால் யாருக்கு என்ன பிரச்சினை? வட நாட்டவன் நமது தமிழகத்தில் பானி பூரி செய்து விற்பதுபோலே நமது அனேக தமிழர்கள் பாரதம் முழுவதும் பெரிய நகரங்களில் இட்டிலி தோசை வடை சுட்டு விற்று பிழைக்கின்றனரே. 80களில் ஸ்ரீநகர் தால் லேக் ஏரியாவில் நமது தமிழர்கள் இந்த தொழிலில் இருந்ததை பார்த்திருக்கிறேன்.

நம்மிடையே மனரீதியான பூகோள மதில்கள் உடைக்கப்பட அனைத்து திசைகளும் சகஜமாக சரளமாக மனித உறவுகள் ஏற்படுத்தித்தர நமது நாடு ஒரு அசைக்கமுடியாத பாரத விலாஸாகவே மாறிவிட்டது. குறிப்பாக பாலிவுட்டில் பல மாநிலத்தவரும் கலந்தே உள்ளனர். நமது திருமணங்கள் மற்றும் பெரிய வரவேற்பு நிகழ்ச்சிகளில் நாற்திசை உணவுகள் முதலாய் இசை, உடை அலங்காரம் விரும்பி கலக்கப்பட்டன. இதில் பானி பூரியும் ஒன்றே. சொல்லப்போனால் பாரதத்தின் எந்த மூலையிலும் அனைத்து உணவுவகைகள் கிடைக்கின்றன. இதனாலேயே தற்போது உள்ளூரில் டூரிசம் தழைத்தோங்குகிறது.

ஹிந்தி கற்றதால் தானே நமது செல்வகுமார் தலை நிமிர்ந்து தனது தொழிலை வேற்று மாநிலத்தில் தடையின்றி நடத்திக்கொண்டிருக்கிறார்.

இந்திய பரப்பளவு ஐரோப்பாவுக்கு நிகரானது.

இத்தணை பிரம்மாண்ட நிலப்பரப்பில் பாஸ்போர்ட்,விசா இல்லாமலேயே எளிதில் செல்லலாம்,வியாபாரம் பெருக்கலாம், சாதாரண ஒரு மொழியினாலயே என்பது தான் உண்மை. தங்களுக்கு பிடித்த தனது சொந்த நாட்டில், தங்களால் முடிந்த தொழிலை நடத்திக்கொள்ள இதை விட ஏதேனும் உபாயம் வேண்டுமா ?

வட ஆற்காடு அன்பரொருவர் தனது மாவட்ட அளவிலான வியாபாரம் ஹிந்தி கற்றதன் மூலம் பாரதம் முழுவதும் விரிவடைந்ததாக சொன்னார்.ஒரே மொழியில் பாரதத்தையே நம் வசமாக்கலாம் என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

60, 70 களில் இங்கு சிவசேனா மும்பையில் மண்ணின் மைந்தர்களுக்குத் தான் வேலை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் அடி பட்டவர்கள் தென்னிந்தியர்கள் தான்.

"லுங்கி ஹடாவோ" என்ற போராட்டமே நடத்தி வந்தனர்.80 கள் வரை நீடித்த இந்த போராட்டம் சிவசேனா தேர்தலில் குதித்தபின் நிலமை உல்டாவா மாறி தென்னிந்தியர்களை இந்துதுவாவிற்கு ஆதரவு தர ஈடுபடுத்தினர். சென்ற முப்பது வருடங்களாக சிவ சேனா இந்த லுங்கி ஹடாவோ என்ற போராட்டத்தை கையிலெடுக்க வில்லை.

20220419190107213.jpeg

அந்த ப்ளேட்டில் இட்டிலி வடை இத்யாதிகளுடன் அன்பு, பரிவு பாசத்தோடும் பண்போடும் பரிமாறும் செல்வகுமாருக்கு அவரது வாடிக்கையாளர்கள் ஒருபடி மேலே போய் அடுத்த லெவல் பாசத்தை பொழிகின்றனர் என்று நிதர்சனமாய் கண்களால் கண்டும் காதார கேட்டும் நிம்மதியோடு நகர்ந்தேன்.

அந்த பாசத்தை நம்மூரில் பானி பூரி தட்டிலும் நிச்சயம் கண்டு கொள்ளலாம்.

பானிபூரியோ இட்லியோ தேவை சகமனிதனிடத்தில் அன்பு மட்டுமே !!