தொடர்கள்
ஆன்மீகம்
திருநீலநக்க நாயனார்!!- ​​​​​​​ஆரூர் சுந்தரசேகர்.

திருநீலநக்க நாயனார்


சிறப்புமிகு அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனார் வேதங்களைக் நன்கு கற்றுணர்ந்தவர். இவர் சிவபெருமானுக்கு சிவத்தொண்டு செய்வதில் மட்டில்லா மகிழ்ச்சிக் கொள்வார். மற்றும் மறையொழுக்கம் வழுவாமல் ஆகமவிதிப்படி எந்நேரமும் வேத பாராயணம் செய்வர்.
சிவபெருமானுக்குப் பூஜை செய்வதும், சிவனடியார்களுக்கு அமுது படைப்பதை தலையாய கடமையாகக் கொண்டிருந்தார்.
இவர் சிவபெருமானை வழிபட்டும் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்தும் வந்தார்.
"திருஞானசம்பந்தரின் திருமணத்தை தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்."
திருநீலநக்க நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்ட தொகையில்
"ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்" என்று போற்றுகிறார்.

திருநீலநக்க நாயனார் அவதரித்த திருச்சாத்தமங்கை:
அன்றைய சோழ நாட்டில் திருச்சாத்தமங்கை (திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திற்கு அருகே அமைந்துள்ள இவ்வூர் இன்று மக்கள் வழக்கில் சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது) எனும் ஊரில் திருநீலநக்கநாயனார் அந்தணர் குலத்திலே பிறந்தார். இவ்வூரில் அமைந்திருக்கும் திருதலத்திற்கு அயவந்தி என்று பெயர். இங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமான் அயவந்தீஸ்வரர் என்றும் பார்வதி தேவி இருமலர்க்கண்ணம்மை (உபய புஷ்ப விலோசனி) என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். ‘அயன்’ என்னும் ‘நான்முகன்’ வழிபாடு மேற்கொண்ட திருத்தலமாதலால் இது பிரம்மாவின் பெயராலே அயவந்தி என்றழைக்கப்படுகிறது.
இத்திருக் கோயிலில் அருமறைப் பொருளில் தெளிந்த இவர் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்துக் கொண்டு, அங்கு வரும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாகிய பலவகைப்பட்ட பணிகளையுஞ்செய்வார்.

சிலந்தியினால் சிவனுக்கு ஏற்பட்ட கொப்புளம்:
ஒரு திருவாதிரை நன்னாளில், திருநீலநக்க நாயனார் அயவந்தீஸ்வரருக்குப் பூஜை செய்ய, பூஜைக்குறிய பொருட்களுடன் தம் மனைவியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் சிலந்தி ஒன்று அயவந்தீஸ்வரர் திருமேனியில் விழுந்தது. அதனைக் கண்ட திருநீலநக்க நாயனாரின் மனைவியார் விரைந்து சென்று வாயினால் ஊதியவாறு அந்த சிலந்தியை விரட்டி அடித்தார்.
இதனைக் கண்ட திருநீலநக்க நாயனார் கோபமடைந்தார் ஆகம நெறிக்கு புறம்பாக சிவபெருமானை எச்சில் செய்த உம்மை இக்கணமே துறந்தோம் என்று கூறி வீட்டிற்கு திரும்பினார். இதைக் கேட்டு நடுங்கிய நாயனாரின் மனைவியும் மன வேதனை மேலிட செய்வதறியாது கோயிலிலேயே தங்கி விட்டார்.

திருநீலநக்க நாயனார்


அன்றிரவு சிவபெருமான் திருநீலநக்க நாயனார் கனவிலே எழுந்தருளி, தம் திருமேனியை காட்டினார். உமது மனைவி ஊதிய இடம் நீங்கலாக மற்ற இடமெங்கும் சிலந்தியினால் ஏற்பட்ட கொப்புளம் என்று கூறியருளினார். கண் விழித்த திருநீலநக்க நாயனார் சிவபிரானுடைய திருவருளை வியந்து ஆடிப்பாடி கூத்தாடி, கோயிலுக்குச் சென்று அயவந்தீஸ்வரரைத் தரிசித்து விட்டு மனைவியை அழைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார். முன்பு போல் இல்லற வாழ்க்கை நடத்தினார்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடன் சந்திப்பு:
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மீது திருநீலநக்க நாயனாருக்கு அதீத ஈடுபாடும் பக்தியும் உண்டு. ஒருநாள் திருஞானசம்பந்தர் திருநள்ளாறு சென்றுவிட்டு திருசாத்தமங்கை வந்தார் அப்போது அவரை வரவேற்க திருசாத்தமங்கையில் பந்தல் போட்டு, தோரணங்கள் கட்டி, மேளதாளத்துடன் வரவேற்று அவரது பாதத்தில் பணிந்து பேரின்பம் அடைந்தார். அன்று இரவு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநீலநக்க நாயனார் இல்லத்தில் தங்கினார். தம்முடன் வந்திருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் இல்லத்திலேயே தங்க இடம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். உடனே திருநீலநக்க நாயனார் சற்றும் தயங்காமல், தாம் செய்யும் வேள்விக் குண்டத்திற்கு அருகில் யாழ்ப்பாணருக்கு உறங்க இடம் அளித்தார். குலம் பார்க்காமல் மகிழ்வோடு அடியாரின் விருப்பத்தை நிறைவேற்றிய திருநீலநக்க நாயனாரின் பெருமையை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அயவந்தீஸ்வரரைப் பணிந்து பாடிய பதிகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அயவந்தீஸ்வரரின் அருளைப்பெற்றுப் புறப்பட்டபோது, திருநீலநக்கநாயனாரும் அவருடன் கிளம்ப முயற்சித்த போது எம்முடன் வருவதை விட இங்கேயே இருந்து அயவந்தீஸ்வரருக்கு திருத்தொண்டு புரிந்து இங்கே வரும் அடியார்களுக்கு சேவை செய்து அத்திருத்தலத்திலேயே இருக்கும்படி பணித்தமையால் அதனை மீறாமல் அவரது ஊரிலேயே தங்கி விட்டார்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடன் சிவனடி சேர்ந்தார்:
திருநீலநக்க நாயனார் அவ்வப்பொழுது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இருக்கும் தலங்களுக்குச் சென்று தம்முடைய நட்பை வளர்த்துக் கொண்டார். இறுதியில், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் திருமணத்தினைக் காண மனைவியுடன் சென்று திருமண வேள்விச் சடங்கினை முன்னின்று நிகழ்த்தி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடன் கூடிய அடியார் திருக்கூட்டத்துடன் பெருஞ்ஜோதியினுள் புகுந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வு பெற்று, அவருடனே சிவனடி சேர்ந்தார்.

குருபூஜை நாள்:

திருநீலநக்க நாயனார்


நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்துக் கொண்டு, தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாகிய பலவகைப் பட்ட பணிகளைச் செய்த திருநீலநக்க நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சீயாத்தமங்கை (திருமருகலிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் 1கி. மீ. சென்று, 'கோயில் சீயாத்தமங்கை' என்னும் வழிகாட்டிக் கல் உள்ள இடத்தில் பிரிந்து செல்லும் சாலையில், எதிர்ப்புறமாக 1கி. மீ. செல்ல வேண்டும். முதலில் வரும் ஊர்ப்பகுதி சீயாத்தமங்கையாகும். சற்று உள்ளே மேலும் சென்றால் கோயில் உள்ள பகுதியான 'கோயில் சீயாத்தமங்கை'யை அடையலாம்) அ/மி.அயவந்தீஸ்வரர் திருக்கோயிலிலும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன திருநல்லூர் பெருமணம் என்னும் ஆச்சாள்புரத்தில் (சிதம்பரத்துக்கு அருகில் உள்ள கொள்ளிடம் இரயில் நிலையத்திலிருந்து 6 கி. மீ. தொலைவில் உள்ளது.) உள்ள அ/மி சிவலோகத்தியாகர் திருக்கோயிலிலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அயவந்தீஸ்வரர் திருக்கோயிலில் திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவசிலைகள் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் மங்கையர்க்கரசி என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

“திருச்சிற்றம்பலம்”

அடுத்த பதிவில் திருமூலர் இடைய நாயனார்…!!