தொடர்கள்
கதை
“அகோரமாய்ச்  சிரித்தாள்…!” - வெ.சுப்பிரமணியன்

20220413221458227.jpg

இரண்டு வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வேலைபார்த்துவிட்டு, தாய்மண்ணாகிய இந்தியாவில் காலெடுத்து வைத்ததுமே… ‘ஆக்ராவுக்குச் சென்று’, அஸைன்மென்டை ஒன்றை முடிக்கச்சொல்லி, நான் சார்ந்திருந்த கம்பெனி என்னை அவசரப்படுத்தியது.

ராஜஸ்தானில், ‘மக்ரானா’ என்ற இடத்திலிருக்கும், ‘மார்பிள்’ சுரங்கத்திலிருந்து வெட்டியெடுத்த பளிங்குக் கற்களைக் கொண்டு, ஆக்ராவில், யமுனை நதிக்கரையில் எழுப்பப்பட்டிருந்த ‘தாஜ்மஹாலின்’ அழகை, பௌர்ணமி நிலவொளியில், முதன்முதலாக நேரில் கண்டு ரசிக்கப்போகிறோமென்ற, என் எண்ண ஓட்டத்தைவிடவும், அதி விரைவாக ஓடியது அந்த எக்ஸ்பிரஸ் டிரெயின்.

என்னருகே அமர்ந்திருந்தவரிடம், “ஜி… கித்னே பஜே யஹ் காடி, ஆக்ரா பஹூச் தி ஹை?” என்று கேட்டேன். தன் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு, “சபேரே, ஸாடே ஆட் பஜே பஹூன் சேகி” என்றாரவர்.

காலையில் ஆக்ரா ஸ்டேஷனில்… அதீத குளிர் தெரிந்தது. இரயிலிலிருந்து இறங்கி ஸ்டேஷன் வாசலுக்கு வந்தேன். “ஆயியே… கஹாங் ஜானா ஆப்கோ?” என்று கேட்டபடியே ஒரு டாக்ஸிவாலா என்னை வரவேற்றார். ‘மஹால் வியூ’ என்று போர்டு போட்டிருந்த அந்த லாட்ஜ் வாசலில், டாக்ஸியிலிருந்து இறங்கிக்கொண்டேன்.

ரிஸப்ஷனில், “ஜி… முஜே ‘தோ தின்’ டஹர்னே கோயி கம்ரா மில் ஸக்தா ஹை?” என்றேன். அந்த ரிஸப்ஷனிஸ்டோ… “ஜி… ஆப்கோ கௌன், சிங்கிள்-யா-டபுள்?” என்றதும், “எதாவது ரூமைக் குடுத்துத் தொலைடா…” என்று வாய்விட்டு முனகினேன்.

“ஸார்… தமிழ் பேசறீங்களே! தமிழ்நாடா?” என்றான் அந்த ரிஸப்ஷனிஸ்ட்.

“ஆமாம்பா… எனக்கு திருச்சிராப்பள்ளி… நீ எந்த ஊரு? எனக்கேட்டேன். “நான் சேலத்துக்குப் பக்கத்திலே ஆத்தூர்” என்றவன், அட்ரஸ் புரூஃபுக்காக, உங்க ஆதார் கார்டை குடுங்க சார்” எனக்கேட்டான்.

“நல்ல ரூமா குடுப்பா” என்றேன். “ஜி.எஸ்.டி உட்பட ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபாய் ஆகும்சார். பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் குடுங்க. நீங்க லாட்ஜை வெக்கேட் பண்ணும்போது, பேலன்ஸை அட்ஜெஸ் பண்ணிக்கலாம்" என்றான்.

“அரே பஜன்லால்… ஸாஹப் கே சாமான் கோ, தூஸரீ மஞ்சில் கே, தீன் நம்பர் வாலே ‘கம்ரே மே’, லேகே ஜா” என்று லாட்ஜின் சர்வீஸ்பையனிடம் சொல்லிவிட்டு, “நீங்க… இரண்டாவது மாடியில் இருக்கிற, ரூம் நம்பர் மூன்றுக்கு’ போங்கசார். மாடிப்படிக்கு பக்கத்திலேயே லிஃப்டும் இருக்கு” என்றான் அந்த ‘ஆத்தூரான்’.

எனது அறையின் அழைப்புமணி ஒலிக்கவும், கதவைத் திறந்தேன். ரூம்-சர்வீஸ் பையன், “ஜி… அவுர் குச் லேங்கே?” என்று கேட்டான். “முஜே பீனே கேலியே கரம்பானி லாவோ” என்று சொல்லிவிட்டு என் அறைக்கதவை சாத்தப்போனேன்.

அப்போதுதான்… ‘அவள்’ எனது அறைக்கு நேரெதிரே இருந்த ரூமிலிருந்து கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். “ஆமாம்… அவளேதான்” என்று என் மனம் உறுதி செய்தது. “எக்ஸ்கியூஸ் மீ மேடம்… நீங்க மிஸஸ்… சுலோச்சனா மோகன்தானே?” என்று கேட்டேன்.

என்னை ஏறெடுத்துப் பார்த்தவள், “ஹாய்… ராகவா, வாட் ஏ சர்ப்பிரைஸ். ஆக்ராவிலே… அதுவும் இந்த ‘லாட்ஜிலே’ நீ எப்படி வந்தே?” என்றவள், தன் திறன்பேசி அழைக்கவும், “பிளீஸ் டியர், ஜஸ்ட் வெயிட்… ஐயாம் கமிங்…” என்று யாரிடமோ பேசிவிட்டு, “ராகவன்… நீ, இங்கேதானே இருப்பே? நான் அர்ஜென்டா வெளியே, கிளம்பறேன்” என்றாள்.

“நாளைக்குதான் எனக்கு ஆஃபீஸ் மீட்டிங். இன்னிக்கு முழுவதும் இங்கே ரெஸ்ட்லதான் இருப்பேன். நீ வெளியே போயிட்டு எப்போ வருவே?” என்றேன்.

“கரெக்டா ஈவ்னிங் ஏழுமணிக்கு மீட் பண்ணுவோம் ராகவா…” என்று சொல்லிவிட்டு, அவளிடம் மாறாதிருந்த கவர்ச்சிப் புன்னகையும், துள்ளல் நடையும் சிதறித்தெளிக்க, சுலோச்சனா ‘லிஃப்டை’ நோக்கி நடந்தாள்.

‘சுலோச்சனாவை’ பார்த்ததும்… எனது மனம் ‘கனத்தது’. கதவை சாத்திக்கொண்டு, என் அறையிலிருந்த ‘குஷன் கட்டிலில்’ சாய்ந்தபடியே, தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருந்த ‘சாண்டிலியர்’ விளக்கில் தெரிந்த என் உருவங்களைப் பார்த்தேன்.

“அப்பா… இவர்தான் மிஸ்டர் ராகவன்! என்கூட காலேஜிலே ஒண்ணா படிச்சார்ன்னு சொன்னேனே. நீங்க பேசிகிட்டிருங்க… நான் போய் உங்க இரண்டுபேருக்கும், சாப்பிட சூடா ‘பஜ்ஜி’ போட்டு எடுத்துகிட்டு வரேன்” என்ற சுலோச்சனா, கிச்சனுக்குப் போனாள்.

“மிஸ்டர் ராகவன்… சுலோச்சனா, குழந்தையிலேயே தாயை இழந்ததாலே அதீத செல்லம் குடுத்து வளர்த்துட்டேன். அவ இப்போ… உங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லறா” என்ற ‘சுலோவின்’ அப்பாவை இடைமறித்தேன்.

“சார்… நானும் அவளை உயிருக்குயிரா நேசிக்கிறேன். எனக்கு நல்ல வேலை கிடைக்கிற வரையில், எங்களோட காதலை, ரகசியமா வைச்சிருக்க முடிவு செஞ்சோம். ஒரு ‘மல்டி நேஷனல் கம்பெனியிலே’ எனக்கு வேலை கிடைச்சிருக்கு. அடுத்த மாதம் ‘ஆஸ்திரேலியாவுக்கு’ போகப்போறேன். அதனாலதான்… ‘வீட்டுக்கு வந்து அப்பாவை நேர்ல பார்த்து பேசுங்கன்னு சொல்லி’ சுலோச்சனா என்னை கூட்டிகிட்டு வந்திருக்கா” என்று முடித்தேன்.

“எனக்கு இப்போ வந்திருக்கிற இக்கட்டிலே, உங்க இரண்டுபேரோட ஆசைகளையும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையிலே நான் இருக்கேன். சமீபத்திலே ஏற்பட்ட பெரிய ‘ஷேர்மார்க்கெட்’ வீழ்ச்சியாலே, ஆக்ராவிலே இருக்கிற என்னோட ‘லெதர் ஃபாக்டரி,’ மீண்டுவர முடியாதபடி, சிக்கலான நிலையிலிருந்தது. என் ‘நண்பரொருவர்தான்’ இந்த ஃபைனான்சியல் கிரைசிஸ்லே இருந்து, என் கம்பெனியை மீட்டுக் கொண்டுவர ஹெல்ப் பண்ணியிருக்கார்” என்றார் சுலோச்சனாவின் அப்பா.

“சுலோச்சனா இதைப்பத்தி எங்கிட்டே ஒண்ணுமே சொல்லலையே. உங்க பிசினஸ் பிரச்சனைகள் தீரும் வரை, ‘சுலோவுக்காக’ நான் வெயிட் பண்ணறேன்” என்றேன்.

“மன்னிக்கணும் மிஸ்டர் ராகவன். நான் வாங்கியிருக்கிற கடனுக்கு ‘கைமாறாக’ என் நண்பர், அவரோட மகன் ‘மோகனுக்கு’ சுலோச்சனாவை பெண்கேட்டாரு. எனக்கு வேற வழிதெரியல்லே” என்று சொன்னவர்… “ராகவன்… என் வாழ்வும், மானமும்… இப்போ உங்க கையிலேதான் இருக்கு. எப்படியாவது என் மகளை என்னிடமே கொடுத்துவிடுங்கள்” என்றுச்சொல்லி, என் கால்களில் விழுந்துவிட்டார்.

எங்களுக்காக, சூடாக பஜ்ஜியும், காஃபியும், எடுத்துக்கொண்டு வந்த சுலோச்சனா, அவளது தந்தை என் கால்களில் விழுந்து கிடந்ததைப் பார்த்ததும், நொறுங்கிப்போனாள்.

“அப்பா… என்னகாரியம் செய்யறீங்க…?” என்றவளிடம், “உன்னோட வாழ்க்கைக்காகத்தான் நான் இவரோட காலில் விழுந்து மன்றாடறேம்மா” என்று கதறிய அவரின் நிலைமையை, நான் புரிந்துகொண்டேன்.

“முடியாது சார்… பணத்துக்காகத்தான், அவளை காதலிச்சேன். நீங்க ஒருகோடி ரூபாய் ‘வரதட்ஷணையாக’ தந்தால் மட்டும்தான், உங்க பெண்ணை நான் கல்யாணம் செஞ்சுப்பேன்… இல்லேன்னா, நீங்க… அவளை யாருக்கு வேண்டுமானாலும் கட்டி வைங்க, எனக்கொன்றும் ஆட்ஷேபனையில்லை” என்ற என்னை ‘அதிர்ச்சியுடன்’ பார்த்தாள் சுலோச்சனா… ‘நன்றியுடன்’ பார்த்தார் அவளின் தந்தை.

“சீ… த்தூ… வெளியே போடா நாயே…! என் உயிர் இருக்கும்வரை என் முகத்திலே முழிக்காதேடா” என்று கோபம் கொப்பளிக்க, அன்று என்னை அவளது வீட்டைவிட்டு துரத்தினாள் சுலோச்சனா.

அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் வேலைகிடைத்து போன எனக்கு கடந்த இரண்டு வருடங்களாக சுலோச்சனாவின் நினைப்பே வரவில்லை. இன்று காலையில், அவளை எதிர்ரூமில் பார்த்தபின்னர், மீண்டும் சுலோச்சனா… என் நினைவில் அழுத்தமாக ஒட்டிக்கொண்டாள்.

மதியம் சாப்பிட்டுவிட்டு, குட்டித் தூக்கம் போட்டுவிட்டு… அடுத்தநாள் மீட்டிங்கிற்கு வேண்டிய டாக்குமென்டை எல்லாம் ‘லாப்டாப்பில்' சரிசெய்துவிட்டு… மணியைப் பார்த்தேன். இரவு ஏழாகியிருந்தது.

என் அறையின் அழைப்புமணி ஒலித்தது. எழுந்துபோய் கதவைத்திறந்தேன்.

அழகு தேவதையாக எதிரே நின்றாள் சுலோச்சனா. அனிச்சையாக என் கரங்கள் அறைக்கதவை தாளிட்டது. அவள் கட்டிலில் அமர, நான் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

“சுலோ… உன் கணவர் வரவில்லையா?” என்றேன். அழகாக புன்னகைத்தவள்… “உனக்கு ஞாபகம் இருக்கிறதா ‘ராகவா’? என் அப்பாவின் கண்ணீரும், உன்னுடை போலிநாடகமும் ஒன்று சேர்ந்து… இரண்டு வருடங்களுக்கு முன்னர் என் வாழ்க்கையை ‘மோகன்’ என்பவனுக்கு, விலைபேசி… விற்றது…” என்றாள் சுலோச்சனா.

“அந்த பழையக்கதையை ஏன் இப்போ பேசறே? இன்னிக்கு நீ நல்லாத்தானே வாழறே?” என்றேன்.

மந்தகாசமாக சிரித்துக்கொண்டே… ‘ராகவா…’ என்று ‘மோகத்துடன்’ அவளிருந்தக் கட்டிலுக்கு, கண்ணசைவினாலேயே என்னை அழைத்தாள்.

என் அறையிலிருந்த, ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த… பௌர்ணமி நிலவில், தாஜ்மாஹாலின் எழில் பொலிவில், அலாதியான மல்லிகை மணத்தின் மயக்கத்தில்… ‘காந்தம் கவர்ந்த இரும்பு’ போல, நான் அவளிடம் ஒட்டிக்கொண்டேன். என்னை அவளினுள் கரைத்தேன்.

சற்று நேரத்தில்… அவளின் ‘பேய்க் காமம்’ என்னுள் ‘மரணபீதியை’ ஏற்படுத்தியது. என்னுடல் ‘தீயுள் ஆட்பட்ட புழுபோல’ துடித்தது. முகமெங்கும் ‘பழுத்த’ இரும்பினால் சூடு போட்டதுபோல எரிந்தது. என்மீது பரவிக்கிடந்த சுலோச்சனாவின் வாயிலிருந்த ‘கூரிய பற்கள்’ என் தோள் பட்டையை கடித்து அழுத்தியது, அவளது விரல்நகங்கள் என் கன்னத்தை கீறிக்கொண்டிருந்தது.

திடீரென்று… என் அறையின் அழைப்புமணி அலறியது. என் மீது கிடந்த ‘சுலோச்சனா’ காற்றில் புகையாய் கரைந்து போனாள்.

சிரமப்பட்டு எழுந்துபோய்… என் அறைக்கதவைத் திறந்தேன். ‘ஆத்தூரான்’ நின்று கொண்டிருந்தான். “சார்… எனக்கு ஷிஃப்டு சேஞ்சாகுது. இப்போ போயிட்டு நாளை மறுநாள் காலைதான் டியூட்டி. தமிழ்காரர்ங்கிறதாலே உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு போலாம்னு வந்தேன்” என்றான்.

“ஏம்பா… எதிர் ரூம்லே யார் தங்கியிருக்காங்க?” என்றேன். அவனோ சுத்திப்பார்த்தபடியே… “நீங்க நம்ம ஆளுங்கிறதாலே சொல்லறேன்” என்றான் ஒருவித அச்சத்துடன்.

“இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, ‘மோகன், சுலோச்சனான்னு’ ஒரு ஜோடி, ஹனிமூனுக்காக, தமிழ்நாட்டிலேயிருந்து வந்து, இந்த எதிர்ரூம்ல தங்கியிருந்தாங்க. அன்னிக்கு முழு பௌர்ணமி. என்ன பிரச்சனையோ… அதுங்க இரண்டுபேரும்… ராத்திரி ஏழுமணியளவிலே, அந்த அறையிலேயே, விஷம்குடிச்சு செத்துக்கிடந்தாங்க. அதனால அந்த அறையை, நாங்க யாருக்குமே வாடகைக்கு விடறதில்லே” என்று அவன் சொல்லவும், எனக்கு வியர்த்தது.

ஜன்னல் வழியே பார்த்தேன். அங்கே… தாஜ்மஹால் எனும், ‘காதல் கல்லறை’ மீது, பட்டுத்தெறித்த பௌர்ணமி நிலவொளியில், என் கண்களுக்கு மட்டும் தெரியும்படி சுலோச்சனா… “அகோரமாய்ச் சிரித்தாள்”.