தொடர்கள்
பொது
எனக்கு எண்ட் கார்ட் போடமுடியாது?!- சுவாமி நித்தியானந்தா

2022041316584739.jpg

1978 ஆண்டு நித்தியானந்தா திருவண்ணாமலையில் பிறந்தார். திருவண்ணாமலை அடிவாரத்தில் தனது பன்னிரெண்டாவது வயதில் பவுர்ணமி நாளில் உடல் தாண்டி அனுபவம் என்ற பேரானந்த நிலையினை அடைந்து தனது முதல் ஆன்மீக அனுபவத்தை அடைந்தார் நித்யானந்தா.

பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி இரண்டாயிரம் மைல்கள் பாதயாத்திரை நடந்து சென்று இந்தியாவின் முக்கிய ஆன்மீக செயல்பாடுகளை அறிந்து கொண்டார்.திபெத் வரை சென்று இமயமலையில் பல கடுமையான தவ நிலையை அடைந்து முக்தி எனும் பேரானந்த நிலையினை 2000 ஆண்டில் பெற்று தனக்கு கிடைந்த ஆனந்த நிலையினை சக மனிதர்களுக்கும் கிடைக்க தியான பீடம் என்ற சேவை நிறுவனத்தினை நித்தியானந்தா தொடங்கி வைத்தார் என்று சுவாமி நித்தியானந்தா என்று அவரது தரப்பில் தரும் தகவல் இது.

20220413165948312.jpg

வெகு விரைவில் , அதுவும் 21 நாடுகளில் 800 கிளைகளுடன் தனது தியான பீடத்தினை நித்தியானந்தா விரிவு படுத்தி பக்தர்களுக்கு அவரது ஸ்டைலில் பக்தர்களுக்கு சத்சங்கங்கள் நடத்தி அதனை சமுக வலைதளங்களில் தவறாமல் ஒளிபரப்பி வந்தார். உலகெங்கும் சுவாமி நித்தியானந்தா ஏக போகத்திற்கும் பிரபலம் ஆகி தனது உரையை தொடர்ந்து தனது பக்தர்களுக்கு வழங்கி வந்தார்.

சுவாமி நித்தியனாந்தாவின் சிரிப்பான ஆன்மீக பேச்சை ஒரு தடவை கேட்டால் போதும் , அடுத்த தடவை அவரது பேச்சை கேட்க பக்தர்கள் தயாராக இருப்பார்கள் . இதனால் உலகளவில் நித்தியானந்தாவிற்கு பெரும்பான்மையான பக்தர்கள் இருந்து வருகின்றனர்.

20220413170530192.jpg

தமிழகத்தில் நித்தியனந்தா சுவாமிகள் பிரசித்தி பெற்றாலும் அவருடன் அவரது பக்தர்கள் எப்போதும் உடனிருப்பது போன்ற பல புகைபடங்கள் சமுக வலைதளங்களில் பளிச்சென்று வரும்.

சுவாமி நித்தியானந்தாவின் அசூர வளர்ச்சியை கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டு போனார்கள் . கதவை திற காற்று வரட்டும் என்ற தொடரை பிரபல வார இதழில் நித்தியானந்தா எழுதியது சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. இதனால் நித்தியானந்தாவிற்கு பக்தர்கள் கூட்டம் சேர தொடங்கியது.

2010 ஆண்டில் ,நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்லப்பட்ட வீடியோ வெளியானது. தன் சிஷ்யை உடன் தன்னை வீடியோவில் தவறாக சித்திரித்து தன் நற்பெயரினை அழிக்க சதி நடக்கிறது என்று கூறி நித்தியானந்தா தனது ஆசிரமத்தினை பெங்களுருக்கு சென்று அமைத்து கொண்டார்.

20220413170652990.jpg

நித்தியானந்தா தனது சிஷ்யையுடன் இருப்பது போன்ற வீடியோ வெளியான பின்பு மதுரை ஆதின மடத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற அறிவிப்பினை மடாதிபதி அருணகிரிநாதர் அறிவித்தார். நித்தியானந்தா இளைய மடாதிபதி நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு வந்தது. அதன்பின் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டது.

மதுரை ஆதின மடத்தின் மடாதிபதி அருணகிரிநாதர் உடல் நலகுறைவால் சிகிச்சை பெற்ற போது நித்தியானந்தா தன்னை அடுத்த மடாதிபதியாக பிரகடனம் செய்து கொண்டார் .அதன்பின் ஏற்பட்ட கடும் எதிர்ப்பால் பின்பு இந்த பொறுப்பிலிருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பெங்களுர் தனது ஆசிரமத்தில் தனது சீடர்களுடன் ஆன்மீக சொற்பொழிவினை நடத்தி வந்த நித்தியனாந்தா, அடிக்கடி தன்னுடைய கெட்டப்பை மாற்றி புகைபடங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

20220413213455460.jpg

அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் நித்தியானந்தா, சில காலங்களுக்கு பின்பு தனது ஆன்மிக பலத்தின் மூலம் அருளாசி தந்து பல பெரிய அரசியல்வாதிகளை நெருக்கமாக ஆக்கிக் கொண்டார். இதன் முலம் தனது செல்வாக்கினை உயர்த்தி கொண்டார் என்று அப்போது பேச்சு எழுந்தது.

2012 ஆண்டில் கர்நாடகாவில் தனது ஆசிரமத்தில் பத்திரிக்கையாளர்களுடன் அப்போது ஏற்பட்ட தகராறில் நித்தியானந்தா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின் காவல்துறை நித்தியானந்தாவை தேடி வந்த நேரத்தில் அவர் ராம் நகர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கர்நாடகாவில் செயல்பட்டு வந்த நித்யானந்தா ஆசிரமத்தினை மூட அப்போதைய கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடா உத்தரவிட்டார்.

குறுகிய காலத்திலேயே சுவாமி நித்தியானந்தா எந்த அளவிற்கு ஆன்மீகத்தில் சொற்பொழிவாற்றி தனது பக்தர்களை பெருக்கி கொண்டாரோ அதே போல் அவர் அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிகொண்டு காவல்துறையினர் அவர் மீது வழக்கு போடுவதும் வாடிக்கையாக்கி விட்டது.

20220413171041711.jpg

சில ஆண்டுகளுக்கு முன்பு , நித்தியானந்தா நேபாளம் வழியாக தென் அமெரிக்காவில் இருக்கும் ஈக்குவடார் நாட்டின் அருகே இருக்கும் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் பக்தர்களுடன் தங்கி யிருப்பதாக தகவல் வந்தது. ஆஸ்திரேலியா அருகே உள்ள தீவு என்றும் சொல்கிறார்கள். நித்தியானந்தா தங்கி இருக்கும் தீவு கைலாசா நாடு என்று அறிவித்து , இங்கிருந்து தனது பக்தர்களுக்கு அவ்வப்போது தன்னை கடவுள் அவதாரமாக சித்தரித்து போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார்.

சுவாமி நித்தியனாந்தா தற்போது கைலாசாவில் இல்லை அவர் இறந்திருக்கலாம் என்ற தகவல் கடந்த சில நாட்களாக அரசல் புரசலாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

எல்லாவற்றிற்கும் மேலாக கைலாசா நாட்டை நித்தியானந்தாவிற்கு பிறகு யார் நிர்வாகிக்க போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் அவரது தீவிர பக்தர்கள் பேசி கொண்டனர்.

20220413171253301.jpg

இந்நிலையில் "நான் சாகவில்லை .. சமாதி யோகத்தில் இருக்கிறேன் . அதன் வழியே தற்போது நான் இணைபிரபஞ்சத்தில் (parallel universe ) இருக்கிறேன்" என்று நித்யானந்தாவே இரு நாட்களுக்கு முன் விட்ட அறிக்கை சமூக வலைதளத்தில் வெளியாகியது .

20220413171459542.jpg

இணை பிரபஞ்சம் என்கிறாரே.. அது என்னவென்று பார்ப்போம். "இணைபிரபஞ்சம்" என்பது நிரூபிக்கப்படாத தத்துவம். இதற்கு quantum universe மற்றும் parallel dimension என பல பெயர்கள் உண்டு."ஒவ்வொரு பிரபஞ்சத்திற்கும் அதன் கண்ணாடி பிம்பம் போல் அச்சு அசலாக வேறொரு பிரபஞ்சம் இருக்கிறது. அங்கேயும் நாம் அச்சு அசலாக இங்கே வாழ்வது போல் அங்கேயும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்றும் நம்மை போல பல உயிர்களும் இதே போல் அங்கு வாழ்கிறது " என்றும் கூறுகிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் நாம் வாழும் இந்த பிரபஞ்சம் போல ஒரே மாதிரியாக காட்சியளிக்கும் இன்னொரு பிரபஞ்சம் தான் இணைபிரபஞ்சம் எனப்படும்.. ஆனால் இங்கே அமெரிக்க அதிபராக இருப்பவர் இணை பிரபஞ்சத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் டீக்கடை வைத்திருக்கலாம். அணு உலகில் இது சாத்தியம் தான் என்ற அளவில் ஐன்ஸ்டீன் போனால் போகிறது என்று ஒப்புக் கொண்டாலும் காலநேரம் தலைக்கீழாக பின்னோக்கி செல்லுவதாக கூறப்படும் இணைபிரபஞ்சங்கள் நிஜத்தில் இருப்பதாக கூறுவது சாத்தியமில்லாத கம்பி கட்டும் கதைகளாக தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் விவரமறிந்த இயற்பியலாளர்கள். அது பெரிய ஆராய்ச்சி என்பதால் அதை விட்டுவிட்டு நித்யானந்தாவிடம் வருவோம்.

20220413171648678.jpg

தனது ஆன்மீக சொற்பொழிவுகளில் காஸ்மிக் சக்தி, பிரபஞ்சம், இணை பிரபஞ்சம் , சூரியனை உதிக்க விடாமல் நிறுத்துவது என்றெல்லாம் நித்யானந்தா கூறுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாகவே இப்போதும் தான் இணைபிரபஞ்சத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

20220413171746629.jpg

மேலும் அவர் "தற்போது வெளியான வதந்திகள் எல்லாம் என்னுடைய எதிரிகள் பொய்யாக பரப்பியது . சமாதி நிலையில் இருப்பதாலும் , உடல்நிலை சிறிது சரியில்லாமல் இருப்பதாலும் தற்போது என்னால் பேசவோ அல்லது சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி இல்லை . எனக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். என்ன உபாதை என்று அவர்களாலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இருந்தாலும் உடல்நலம் தேறி வருகிறேன். தற்போது நான் இந்த உலகத்தில் இல்லை.. அதன் இணைபிரபஞ்சத்தில் இருக்கிறேன். அது சிவன் இருக்கும் கைலாசம் . இந்த உலகத்துடன் தொடர்பு கொள்ள சிவன் என்னை ஒலிபெருக்கி போல் உபயோகிப்பது போல உணர்கிறேன்.மனித உடலாக நம் பூமியில் இருப்பதை விட சிவன் இருக்கும் இணைபிரபஞ்சத்தில் அதிக நேரம் செலவிட ஆசைப்படுகிறேன். இருந்தாலும் உங்கள் அன்பு என்னை இங்கே கட்டி இழுத்து வருகிறது. தற்போது உள்ள நிலையில் என்னை சுற்றியுள்ள மனிதர்கள், அவர்களது பெயர்கள், ஊர்கள், மற்றும் நினைவுகள் எதையும் என்னால் முழுமையாக அடையாளம் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த சமாதி நிலையில் என்னை ஈடுபடுத்தி வருவதால் உடல் பலகீனமாக இருக்கிறது . உடல்நிலை முழுவதும் சரியாக இன்னும் நேரம் எடுக்கும். என் மீது அக்கறை கொண்டு என்னை காண வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள் நேராக திருவண்ணாமலை அருணகிரி யோகேஸ்வர சமாதிக்குச் சென்று விளக்கு ஏற்றுங்கள். அந்த ஜோதியில் நீங்கள் என்னைத் தெள்ளத்தெளிவாகப் பார்ப்பீர்கள்..!" என்று சொல்லி இருக்கிறார் .

அவ்வளவு சீக்கிரமா எனக்கு என்ட் கார்டு போட முடியாது என்று வலைதளத்தில் நித்தியானந்தா இந்த அறிவிப்பை தனது பக்தர்களுக்கு அனுப்பியிருப்பது ஆச்சர்யத்தை தருகிறது.

இது இப்படி இருக்க ,சில நாட்களுக்கு முன்பு சுவாமி நித்யானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சாரா ஸ்டீபனி லாண்ட்ரி என்ற முன்னாள் சிஷ்யை குற்றம் சாட்டியிருந்தார். அந்த புகாரில் நித்யானந்தா மற்றும் அவரது குழுவினர் கைலாசாவில் உள்ள தங்கள் சொந்த மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக கடுமையான குற்றச்சாட்டுகளை சாரா முன்வைத்திருந்தார்.இந்த நிலையில் நித்யானந்தா உடல்நிலை குறித்து செய்தி வெளியாகி உள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமுக வலைதளத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்களில் நித்தியானந்தா எலும்பும் தோலுமாக இருப்பது தெரிகிறது. அத்துடன் அவர் உட்கார்ந்த நிலையில் தியான செய்யும் போஸில் அவர் முகம் கடும் சோர்வுடன் காணப்படுகிறது. இது மாதிரி எங்கள் சுவாமியை நாங்கள் பார்த்ததில்லை என்று அவரது பக்தர்கள் தெரிவித்தனர்.

20220413171841235.jpg

நித்தியானந்தாவின் திருவண்ணமலை ஆசிரமத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஆசிரம முகப்பில் வைக்கப்பட்டிருந்த தட்டி தான் தற்போது நித்தியானந்தாவிற்கு என்ன ஆனது என்ற சந்தேகம் அவர் பக்தர்கள் இடையே வலுத்ததற்கு காரணம் .

நித்தியானந்தாவிற்கு பெங்களுர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளதால் அதிலிருந்து தப்பிக்க நித்தியானந்தா இந்த அவதாரம் எடுத்துள்ளார் என்று மற்றொரு தகவலாக பெங்களுர் காவல்துறையினர் இடையே பேசிக்கொள்கின்றனர்.

சமாதியில் ஒய்வு எடுக்கிறார் என்று நித்தியானந்தா என்று அவரது தரப்பில் வலைதளங்களில் வரும் தகவல்கள் தான் எங்கேயோ உதைக்கிறது ..!