தொடர்கள்
பொது
தக்காளி காய்ச்சல் -தில்லைக்கரசிசம்பத்

20220411203442402.jpg

என்னது ..?!! தக்காளி ஜுரமா??? எங்கள் ஊரில் சின்னவெங்காயத்தோடு சேர்ந்து தக்காளியும் கன்னாப்பின்னாவென்று விலையேறி, மார்க்கெட்டில் கிலோ 120 ரூபா விற்கையில் அதை பார்த்த அதிர்ச்சியில் நமக்கு ஜுரம் வந்திருக்கிறது . ஆனால் இப்போது இது என்ன புது வகையான தக்காளி காய்ச்சல் என்று பார்த்தால் உலகத்தில் வேறு எங்கேயும் பார்க்க முடியாத.., ஏன் நம் இந்தியாவிலேயே கூட எங்கேயும் கேள்விப்படாத.., நம் கேரளாவில் மட்டும் அதுவும் கொல்லம் பகுதியில் ஸ்பெஷலா வருகிற காய்ச்சலாம் இது . அதுவும் 5 வயசுக்கு கீழே உள்ள குழந்தைகளை மட்டும் பாதிக்குமாம் .

இது வைரஸால் வருகிறதா..?, இல்லை சிக்கன்குனியா, டெங்கு ஜுரத்தால் பாதிக்கப்பட்டு குணமானவங்களுக்கு அந்த ஜுரத்தின் பாதிப்பால் வருகிற நோயா.. ?, என்று இன்னும் தெளிவாக கண்டுப்பிடிக்கப்படவில்லை .

கொல்லம், நெடுவத்தூர் , ஆன்ச்சால் , ஆர்யன்காவு பகுதிகளில் இந்த நோய் பரவி இருக்கிறது.5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்குவதால் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க , அங்கன்வாடிகளை மட்டும் கேரள சுகாதார அதிகாரிகள் மூடி இருக்கிறார்கள் .

இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல் முழுவதும் தடிப்பு, கொப்புளங்கள் ஏற்படும். கடுமையான ஜுரம், மூட்டு வீங்குதல், உடல்வலி, நாக்கு வறட்சி, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படுமாம். பாவம்..சிறு குழந்தைகளுக்கு இவ்வளவு பாதிப்புகள் உண்டாவது வேதனையாக இருக்கிறது.

20220411203601782.jpg

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை நிறைய நீர் சத்து ஆகாரங்களை எடுத்து கொள்ள வேண்டும்.தோலில் தடிப்பு ஏற்பட்டால் சொறியக்கூடாது . ஏனென்றால் சொறிவதால் பாதிப்பு மேலும் பரவும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் நெருங்காமல் பாதுகாப்பான தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.நோயாளி இருக்குமிடத்தையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.குறைந்தது ஒரு வாரமாவது முழு ஓய்வு எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த காய்ச்சல் 7,8 நாட்களுக்குள் சரியாகிவிடும் என்பது நல்ல செய்தி.

கொல்லம் பகுதியில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 80 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்

இந்த காய்ச்சலுக்கு ஏன் தக்காளி காய்ச்சல் என்ற பெயர் வந்தது என்றால் உடல் முழுக்க தோன்றும் கொப்பளங்கள் தக்காளி போன்று சிவப்பாக இருப்பதால் இதற்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள்.

தக்காளி தான் காய்ச்சலுக்கு காரணமோ என்று தவறாக நினைக்கும் அளவிற்கு தேவையில்லாமல் இந்த காய்ச்சலுக்கு தக்காளி 🍅 பேரை சூட்டி இருக்கும் புண்ணியவான்கள் யார் என்று தெரியவில்லை. இந்த காய்ச்சல் கொல்லம் பகுதியில் மட்டுமே வந்தாலும் பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றாது இருந்தால் மற்ற பகுதிகளுக்கும் காய்ச்சல் பரவ வாய்ப்பிருக்கிறது என்று அரசு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுவித்திருக்கிறார்கள் .

கொரோனா கடந்த இரண்டு வருடமாக நம்மை படாத பாடு படுத்தி தற்போது சிறிது ஓய்ந்த நிலையில் இந்த புதுவகையான தக்காளி காய்ச்சல் அதுவும் குழந்தைகளுக்கு மட்டுமே வருகிற இந்த பாதிப்புகளை கேள்வி படும் போது , நமது வயிற்றில் புளியை கரைக்கிறது .