தொடர்கள்
பொது
ஹாங்காங்கில் வேட்டையாடப்பட்ட வெள்ளெலிகள்!! - ராம்

20220020165029201.jpg

ஹாங்காங் போன்ற விலையுயர்ந்த நகரத்தில் இடப் பற்றாக்குறை என்பது மிக மிக அதிகம்.

இருந்தாலும் வளர்ப்பு பிராணிகள் வைத்துக் கொள்வதில், உள்ளூர் சீன மக்களுக்கு விருப்பம் அதிகம்.

ஆனால் இடம் வேண்டுமே? அதனால் சின்னச் சின்ன வெள்ளெலிகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் பலர்.

தன்னுடைய எல்லைகளை எல்லாம் உலக நாடுகள் / நகரங்களிலிருந்து இறுக்கி பூட்டி வைத்துக் கொண்டுள்ள ஹாங்காங்கிற்கு சமீபத்திய தலைவலி வெள்ளெலி.

அதற்கு முன் ஹாங்காங்கில் நடந்த கோவிட் கதை தெரிய வேண்டும். சமீபத்தில் எந்தவித கரோனா கேசும் இல்லாமல் நகர்ந்த நிலையில், சமீபத்தில் ஹாங்காங் வந்த ஒரு விமானி தனிமைப்படுத்திக் கொள்ளும் தடைகளை மீறி உணவகம் சென்று, அங்கிருந்து ஷாப்பிங்க் சென்று போகிற போக்கில் தொற்று நோய் பரவ விட்டு செல்ல, ஓமைக்ரான் அங்கிங்கு பரவத் தொடங்கியது.

உடனே விழித்துக் கொண்ட ஹாங்காங் சுகாதாரத் துறை, சோதனைகளை விரிவாக துவங்க அதில் டெல்டா வகை கரோனா ஒரே ஒருவருக்கு இருந்தது தெரிய வந்தது.

20220020165109567.jpg

அது யாரெனில் வெள்ளெலி விற்கும் ஒரு கடையைச் சேர்ந்த பெண்மணி. அவருக்கு அது வந்தது தெரிந்ததும், உடனடியாக அங்கிருந்து வெள்ளெலி வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள் அனைவரையும் சோதனை வளையத்திற்குள் கொண்டு வந்தது அரசு.

அதோடு, அந்தக் கடையில் விற்ற வெள்ளெலியை சோதித்துப் பார்த்ததில் அங்கும் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட, அந்த வெள்ளெலிகளை கருணைக் கொலை (?) செய்வதை தவிர வேறு வழியேயில்லை என்று முடிவு செய்தனர்.

அது மட்டுமல்ல... 22 டிசம்பருக்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளெலிகள் அனைத்தையும் கடைகளில் பறிமுதல் செய்து, மொத்தமாக காலி செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டது அரசு.

20220020165150388.jpg

(தர்மசங்கடத்தில் அரசு அதிகாரிகள்)

சுமார் 2000 வெள்ளெலிகளை கொல்லத் துவங்கி விட்டது சுகாதாரத் துறை.

வளர்ப்பு பிராணிகளை நேசிக்கும் மக்களுக்கு இது பேரதிற்சி. அவர்கள் வலைதளங்களில் இந்தச் செயலுக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்த, அரசு மக்களை காப்பாற்ற இதை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று வருந்தி விட்டு வெள்ளெலிகளை கொல்வதில் முனைந்து விட்டது அரசு.

இதை இரண்டு விதமாகவும் பார்க்கலாம்.

இது போல மொத்தமாக உயிரினங்களை கொல்வது இது முதல் முறையல்ல. 1997-ல் பன்னிரெண்டு லட்சம் கோழிகளை கொன்று புதைத்தது. எச்.5.என்.1. நோய் பரவாமல் இருக்க.

20220020165505625.png

அப்போதும் பிராணிகள் நல சங்கம் இப்படி மொத்தமாக கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இல்லை.

இதே ரீதியில் போனால் ஒரு வேளை நாய்களுக்கு சோதனை செய்து கரோனா பாசிடிவ் என்று வந்தால், நாய்களையும் கொல்வீர்களா என்பதும் ஒரு சாரார் கேட்கும் கேள்வி.

அரசு வெள்ளெலிகளை கொல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்பது தான் உண்மை.

கொன்றால் பாவம் தின்றால் போகும். ஆனால், கொன்று புதைத்தால் பாவம் போகாது போலும்.

20220020165930431.jpg