தொடர்கள்
கதை
“பொய் சொல்லிட்டேன்…” - வெ.சுப்பிரமணியன்

20220021212903462.jpeg

இந்த வருட தைப் பொங்கலன்று, ‘நினத்தாலே இனிக்கும்’ படியாக சர்க்கரைப் பொங்கல் செய்திருந்தாள் ‘என் மருமகள்’. அந்தப் பொங்கலோடு போட்டியிட்டு, ‘எது சூப்பர்?’ என்று என் நாக்கில் ‘சிறப்பு பட்டிமன்றம்’ நடத்திக்கொண்டிருந்தது… ‘என் மனைவி’ செய்திருந்த ‘வெண்பொங்கல்’.

“தாத்தா… தாத்தா… இந்த அம்மாவும், பாட்டியும் பண்ணிவைச்சிருக்கிற ‘பொங்கல்’ ரொம்ப ‘யக்கியா’ இருக்கு. எனக்கு பிடிக்கலை” என்று நடுவராய் இருந்து, தனது ‘தீர்ப்பை’ வழங்கினாள், என் பேத்தி.

“நீ பேசாதேடி” என்ற என் மருமகள், “அப்பா… உங்க பேத்தி… ரெண்டு பொங்கலிலும் போட்டிருந்த முந்திரிப்பருப்பை மட்டும் ‘நோண்டி’ தின்னுட்டு, எழுந்து போயிட்டா” என்றாள். ‘இல்லே தாத்தா…’ என்ற என் பேத்தியை முறைத்தபடியே “பொய்… சொல்லாதேடி... உம்மாச்சி கோவிச்சுக்கும்” என்றாள் என் மருமகள்.

“தாத்தா… பொய்யின்னா என்ன? பொய் சொன்னா உம்மாச்சி கோவிச்சுக்குமா?” எனக் கேட்டாள் என் பேத்தி.

“பொய்யின்னா என்ன? என்பதை எப்படி அவளுக்கு புரியவைப்பது” என்று எண்ணியபடியே, அனிச்சையாக பொங்கலை விழுங்கினேன்.

‘பொய் சொல்வது’ பற்றி என் அம்மா எனக்கு ‘கதைகளாக’ சொன்ன சில புராண நிகழ்வுகள், என் எண்ணத்தில் மின்னலாய்த் தோன்றிமறைந்தன.

ஶ்ரீவைகுண்டத்தில், தன் செவிகளுக்கு வந்த ‘சாம கானத்தை’ அனுபவித்துக் கொண்டிருந்தார், ஹஸ்தினாபுரத்து ‘கோமான்’ திருதிராஷ்டிரர். அவரது கரங்கள் வைகுண்டநாதனின் கமலப் பாதங்களை மெல்ல வருடிப்பார்த்தது.

“ஆஹா… இந்த பாத ஸ்பரிசத்தை, நாம் பூலோகத்தில் துவாபர யுகத்தில், ஹஸ்தினாபுரியில், வாழ்ந்தபோதே, அனுபவிக்கத் தவறிவிட்டோமே” என்று அவரது உள்ளம் ‘கிலேசம்’ கொண்டது.

அந்த ஆதங்கம் அடங்கும் முன்னரே… அவரது செவிக்குள், சாமகானத்துடன் இயைந்து இழையோடிய, காம்போதி ராகத்திலமைந்த வீணையோசை, தேனைப் பாய்ச்சியது.

வீணையின் நாதம் வந்த திசைநோக்கி தன் கண்களைத் திறந்த துரியோதனாதிகளின் தகப்பனாருக்கு, தசக்கிரீவனான இராவணன், அமர்ந்திருந்து, வீணை மீட்டிக்கொண்டிருந்தது புலப்பட்டது. “சிவ பக்தனான இலங்கேஸ்வரன், எப்படி ஶ்ரீவைகுண்டத்தில் இருக்கிறார்?” என்ற ஐயம் காந்தாரி மணாளனுக்குள், மேலோங்கியது.

முக்தியடைந்திருந்த திருதிராஷ்டிரரின், பார்வையில் படும்படியாக, அங்கே வைகுண்டத்தில், “கஜேந்திரன்” அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தது. சற்றுதள்ளி… யமுனைக்கரை கோகுலத்திலிருந்து ததிபாண்டவனோடு முக்தியடைந்த மண்பானையும் இருந்தது. திருதராஷ்டிரரோ, மெல்ல எழுந்து, ஹஸ்தினாபுரத்தில் அன்று, தன்னோடு இருந்தவர்கள் யாராவது ‘பரலோகத்தில்’ இருக்கிறார்களா எனத் தேடலானார்.

மொத்த வைகுண்டத்தையும் தேடியலைந்தும், பஞ்ச பாண்டவர்கள், கௌரவர்கள், கர்ணன், பீஷ்மர், விதுரர், துரோணர், என யாரையுமே காணவில்லை. தனக்கு மட்டும் பரமபதத்தில் இடமளிக்கப்பட்டதின் காரணத்தை, வைகுண்ட நாதனிடமே கேட்க நினைத்தார், திருதிராஷ்டிரர்.

“பரம்பொருளே… ஆயர்பாடியில், யசோதையிடமிருந்து தங்களை காப்பாற்றுவதற்காக, நீங்கள் ஒளிந்து கொள்ள இடமளித்த பானைக்கும், கூடவே ‘பொய்’ உரைத்த, ததிபாண்டவனுக்கும் முக்தியளித்துள்ளீர்களே… ஏன்?” என்றார் பாண்டுவின் மூத்தவர்.

புன்னகைத்த லக்ஷ்மிநாதன் “ததிபாண்டவனுக்கு என்னுடைய வெண்ணையிலும் தயிரிலும் பங்கு கொடுத்தேன். அதை உண்டவன், செஞ்சோற்றுக் கடனாக, என்னைப் பானையிலிட்டு மறைத்து, என் அன்னையிடம் பொய்யுரைத்தான். ‘என் பொருட்டு’ என் பக்தன் சொல்லும் எதுவுமே ‘பொய்’ ஆகாது. நான் பரம்பொருளென்பதை ஆத்மார்த்தமாக புரிந்துகொண்ட அவன் என்னிடம், அவனோடு பானைக்கும் மோட்ஷம் வேண்டினான். அதனால், அவர்கள் நித்தியசூரியானார்கள்” என்றார்.

‘பார்க்கடல் பரந்தாமா… எனில், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தன்னுயிர் ஈந்த கர்ணனுக்கு ஏன் இங்கு இடமளிக்கவில்லை?” அம்பிகையின் மைந்தன் விடவில்லை.

“பாண்டுவின் தமையனே, “நீ சொல்வது உண்மைதான். கர்ணன், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தவன். ஆனால், ஒரு உண்மையை நீ அறியமாட்டாய். கர்ணன், அர்ஜுனனை அழிக்கும் வைராக்கியத்தில், பிரம்மாஸ்த்திரம் பெறவேண்டி பரசுராமரிடம் குருகுல வாசம் செய்தான். சூர்யபுத்திரனான அவன் தான் ‘ஷத்திரியன்’ என்பதை மறைத்து, குருவிடம், தன்னை ‘பிராமணன்’ எனப் பொய்யுரைத்து பிரம்மாஸ்திரம் பெற்றான். ததிபாண்டவன் போல பிறரை ‘காக்க’ வேண்டியல்லாமல், ‘அழிக்க’ எண்ணம் கொண்டு ‘பொய்’ சொன்னான். தவறான நோக்கத்தோடு, குருவிடம் ‘பொய்’ சொன்னதால் கர்ணனுக்கு ‘மோட்ஷம்’ கிட்டவில்லை” எனப் பரந்தாமன் பதிலுரைத்தார்.

“எம்பெருமானே, அப்படியாயின், ‘பொய்யே’ சொல்லாமல் தர்மத்தின் வழிநடந்த யுதிஷ்டிரனுக்கு ஏன் இங்கே இடமில்லாமல் போயிற்று?” என்றார் கௌரவர்களின் தந்தை.

“காந்தாரியின் மணாளனே… குருஷேத்திர யுத்தம் முடிந்து, தர்மபுத்திரனுக்கு முடிசூட்டும் நாளன்று நடந்ததை சிந்தித்துப்பார். உன் சந்ததியை வேரறுத்த பாண்டவர்களை மன்னிக்க உன் மனம் தயங்கியது. அதிலும் ஏனோ குறிப்பாக, பீமசேனனை கட்டி அணைத்து நெரித்துக்கொல்ல நீ எண்ணம் கொண்டாய். எனது கண் அசைவுகண்டு, விதுரன், ஒரு உலோகப் பதுமையை, பீமன் நின்ற இடத்தில் மாற்றி வைத்தான்.

புறக்கண்ணில்லாத நீ, அப்பதுமையை, கதாயுதன் என்றெண்ணி கட்டி அணைத்துப் பொடிப்பொடியாக்கி, உன் வஞ்சம் தீர்த்துக் கொண்டாய். பீமனுக்கு பதிலாக பதுமையினை மாற்றி வைப்பதை அங்கிருந்த ‘தருமனும்’ நேரில் கண்டான். அந்த உண்மையினை உன்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டான். “சரியான சமயத்தில் உண்மையைச் சொல்லாமல் மறைப்பது… கெட்ட நோக்கத்தோடு சொல்லப்படும் பொய்யைவிட மோசமானது”. எனவேதான், தருமனுக்கும் இங்கு இடமில்லை” என்று சர்வேஸ்வரன் விளக்கினார்.

“ஜகத்ரட்ஷகரே… அன்று துருபதன் மகள் துயிலுரியப்பட்ட ஹஸ்தினாபுரத்து சபையிலே, ‘தர்ம-அதர்ம’ விதிகளுக்கு கட்டுண்டு கிடந்த அனைவரோடு, அந்த அவையின், நடுநாயகமாக வீற்றிருந்தேன் நான். அப்படிப்பட்ட ‘பாவப்பிண்டமான’ எனக்கு, அங்கிருந்த ஒருவருக்குமே கிட்டாத தங்களின் பாதஸ்பரிசம், இப்போது ஏன் அளிக்கப்பட்டது?” என்றார் சகுனியின் மாப்பிள்ளை.

வழக்கம்போல ‘கர்ப்பூரமும்… கமலப்பூவும்’ ஒன்றிணைந்து வாசம் வீசும் தன் அதரங்களுக்கிடையே ஒரு மந்தகாச புன்னகையைத் தவழவிட்டார்… கருடவாகனன். பின்னர்… “வியாசரின் வித்தே… நீதான் என்னிடத்தில் சரணாகதியை அனுஷ்டித்தாயே. எனவே குற்றமில்லாத உனக்கு ‘நற்கதி’ நல்கியது நியாயம்தானே!” என்றார்.

“பகுத்தறிவில்லாத யானைக்கும், ஜடப் பொருளான மண்பானைக்கும் மோட்ஷம் கொடுத்த நான்; நீயும் உனது ‘அக மற்றும் புற’ கண்களை இழந்து ‘ஜடமான’ நிலையில், என்னிடம் சரணடைந்ததால், மோட்ஷம் கொடுத்தேன்” என்றார் லக்ஷ்மிகாந்தன்.

“பரந்தாமனே நான் புறக்கண்கள் இல்லாத பிறவிக் குருடன். ஆனால் அநேத்திரமாய் சுற்றியிருப்பவைகளை உணரும் அபூர்வ சக்தி படைத்த நான் எப்படி அகக்குருடனாவேன்? மேலும், தங்களிடம் எப்போது சரணாகதி செய்தேன்?” என்றார் காந்தாரியின் கணவன்.

“விசித்திர வீரியனின் புதல்வனே, சொல்கிறேன் கேள்” என்று பாண்டுவின் தமையனுக்கு விளக்கமளித்தார், வங்கக் கடல் கடைந்த மாதவன்.

“கணவரால் காண முடியாத உலகத்தை தானும் பார்க்க விருப்பமில்லை என்று, உன்னை திருமணம் செய்து கொள்ளும் முன்பே தன் இரு கண்களையும் கட்டிக்கொண்டு வாழ்ந்த ‘உத்தமப் பதிவிரதை’ உன் மனைவி காந்தாரி.

“யுத்தத்தின் பதினேழாவது நாள் முடிந்த நிலையில், துரியோதனனை காக்கும் பொருட்டு, அன்றுவரை கட்டியிருந்த தனது கண்களை, சகுனியின் சகோதரி திறந்தாள். அக்கணமே, அநேத்திரமாய் காணும் சக்தியினை இழந்தாய் நீ. எனவே… ‘அகமும் புறமும்’ அறியமுடியாத ஜடப்பொருளானாய். அதன் காரணமாகவே, ‘பீமனுக்கும்… உலோகப்பதுமைக்கும் வித்தியாசம் அறிய முடியாமல் போனாய்’ என்றார் பரலோகாதிபதி.

‘பரம ஞானியான விகர்ணனின் தந்தையே… சொல்கிறேன் கேள்’ எனத்தொடர்ந்தார் பஹவான். ‘பூமண்டலத்தில், அறிவை விசாலமாக்கிக் கொள்ளவே, மானுடர்களுக்கு, ஞானேந்திரியங்களும், கர்மேந்திரியங்களும் வழங்கப்பட்டுள்ளது.

பஞ்ச இந்திரியங்களில், அறிவுக்கு பிரதான வழிகளாவது அவரவர்களின் நேத்திரங்களும், செவிகளுமேயாகும். இவைகளே அடுத்தவரின் உணர்ச்சிகளை அறியவல்லன. ஏனைய இந்திரியங்களான, நாவோ, நாசியோ அல்லது தேகமோ… அடுத்தவர் படும் இன்ப-துன்பத்தை அறியாது.

அன்று, ஹஸ்தினாபுரத்தின் அரசவையில், உனக்கு கண்களிருந்தது… ஆனால் அதில் பார்வையில்லை. செவிகள் இருந்தது… ஆனால், அதில் கேட்கும் திறனில்லை, காரணம், திரௌபதியின் ‘அவல அலறலை’ விடவும் உனது புதல்வர்களின் ‘ஆனந்த எக்காளமே’ உன் செவிகளில் விழுந்தது.

எனவே… உன் அறிவு உனக்கு வசப்படவில்லை. ஆகையால், அந்த அவையில் உன்னால் ‘பாஞ்சாலியின்’ வஸ்திராபரணத்தின் வலியை உணரமுடியவில்லை. மேலும், ஒலி மற்றும் ஒளியை உணராத உடல்கள், உயிரற்ற ஜடமாகவே கருதப்படும். ஆகையால், ததிபாண்டவனின் மண்பானையைப் போல் நீயும் அன்றுமுதல், ஒரு ஜடப்பொருளானாய்.

பீஷ்மர், துரோணர், துரியோதனன், கர்ணன் என எல்லோரும், இறக்கும் தருவாயில்கூட தங்களது செயல்களை நியாயப் படுத்தினார்களே ஒழிய, யாருமே ‘தவறை உணர்ந்து’ எம்மை சரணடையவில்லை. ஆனால், உலோகப் பதுமையினை அணைத்து நொறுக்கிய பின்பு, நீ உனது தவறை உணர்ந்து, பாண்டுவின் புதல்வர்கள் மீது ‘தூய அன்பு’ கொண்டாய். ‘யாரொருவன் தன் தவறை உணர்ந்து, திருந்தி நல்வழிப் படுகின்றானோ, அப்போதே அவன், மனதாலும் செயலாலும் எம்மை சரண் அடைந்தவனாகிறான்’.

எனவே… ஜடப்பொருளான நீ, உன்னையறியாமல் எம்மைச் சரணடைந்தாய். ஆகவே… உனக்கு மோட்ஷம் அளித்தோம்” என்றார் வைகுண்டநாதன்.

“தாத்தா… உங்கிட்டேதானே ‘பொய்ன்னா’ என்னன்னு கேட்டேன்?” என்று மீண்டும் என்னை உலுக்கினாள் என் பேத்தி.

“ததிபாண்டவன் போல ‘கடவுள் பொருட்டு சொல்லும் பொய்’ பொய்யாகாது; கர்ணனைப் போல சத்தியத்தை மறைத்துப் பேசுவது பொய்யே; தருமன் போல உண்மையைச் சொல்லாதிருப்பதும் பொய்தான்” என்று விளக்கம் சொன்னேன். அதோடு… திருதிராஷ்டிரன் போல, தவறை உணர்ந்து, மனம் திருந்தினால் ‘கடவுளே’ மன்னிப்பார் என்றும் சொன்னேன்.

“தாத்தா… நான் அம்மாகிட்டே பொய் சொல்லிட்டேனே?... என்ன செய்யட்டும்?” என்றாள் என் பேத்தி. “நீ “பொய்’ சொன்னதுக்கு அம்மாகிட்டே ‘சாரி’ சொல்லிடு. அம்மாவும் உன்னை மன்னிச்சுடுவா” என்றேன்.

“சாரிம்மா… தெரியாம ‘பொய் சொல்லிட்டேன்’… என்னை மன்னிச்சுடும்மா” என்ற என் பேத்தியை ‘மன்னித்தாள்’ என் மருமகள்”.