தொடர்கள்
பொது
வேளாண் சட்டம் வாபஸ்... - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

20211020075214722.jpg

விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை, போராட்டத்தை ஏற்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.

வேளாண் சட்டங்கள் எப்படி திடீரென பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி சட்டமாக்கப்பட்டதோ, அதேபோல் இந்த திடீர் வாபஸும் நிகழ்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு, நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை நிகழ்த்த போகிறார் என்ற தகவல் வெளியானபோது... இன்னொரு திடீர் அறிவிப்பு வரும்போலும் என்று தான் எல்லோரும் யோசித்தார்கள். ஆனால், வேளாண் சட்டம் வாபஸ் என்பது பற்றி ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகம்தான். இது உண்மையில் திடுக்கிடும் திருப்பம் என்று மர்ம நாவல்கள் குறிப்பிடுவதுபோல் நிகழ்ந்திருக்கிறது. அதுபோல்தான் இந்த வாபஸ் அறிவிப்பு.

சில மாநில சட்டசபைகளில் இந்த சட்டத்தை திரும்ப பெறுமாறு தீர்மானம் நிறைவேற்றினார்கள். அரியானா, பஞ்சாப் மாநிலம் தொடர் போராட்டம் இந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து நடத்தியது. தற்போது உத்தரபிரதேசத்தில் இந்த போராட்டம் உச்சத்தை அடைந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், பிரதமர் வேளாண் சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்காதது.

மோடி எப்போதும் அதிரடி அறிவிப்புகளுக்கு பெயர் பெற்றவர். அதில் இதுவும் ஒன்று. மோடியை குறிப்பிட்டு விமர்சித்த எதிர்க்கட்சிகள், இந்த வேளாண் சட்டத்தை பயன்படுத்தியது குறித்து அவர்மேல் வேறு குறிப்பிட்டு சொல்லும்படி அவர் மீது பழி சமுத்த கூடிய குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுகளை வலுவாக சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு இருந்த ஒரே ஆயுதம் இந்த வேளாண் சட்டம் மட்டும் தான். இன்னும் சொல்லப்போனால்... காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பற்றி காங்கிரஸ் கட்சி இப்போது பேசுவதே கிடையாது.

இந்தச் சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்த பிரதமர், விவசாயிகளுக்கு நியாயமான விலையில் விதைகள் மற்றும் நுண்ணுயிர் பாசனம், 22 கோடி மண் சுகாதார அட்டைகள் போன்ற வசதிகள் வழங்க நாங்கள் உழைத்தோம். ஆனால் புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகள் பற்றி விவசாயிகளுக்கு புரியவைக்க நாங்கள் தவறிவிட்டோம். எனவே அவற்றைத் திரும்பப் பெறுகிறோம் என்று சொன்ன பிரதமர், இதற்காக வருத்தமும் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இது தவிர இந்த சட்டத்தை அமுல் படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படுகிறது. இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பதாக அறிவிப்பு செய்தது. ஆனாலும், விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடத்தியது, நடந்தது. இவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப், அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த போராட்டத்தில் 700 பேர் இறந்துபோனார்கள் என்கிறார்கள் போராட்டக்காரர்கள். அதே சமயம் இந்தப் போராட்டத்தில் சில சமயம் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் ஒலித்தது. பாரதிய ஜனதா அதை சுட்டிக்காட்டிய போது, போராட்டக்காரர்கள் அதற்கு விளக்கம் எல்லாம் சொல்லவில்லை என்பதும் உண்மை.

எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்தை தங்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள். சோனியா, ராகுல், ஸ்டாலின் ஆகியோர் இப்படித்தான் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

பாரதிய ஜனதா விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உத்தரவாத விலை என்பதை விவசாயிகள் தான் தீர்மானம் செய்ய வேண்டும், இடைத்தரகர்கள் இல்லை என்பதுதான் அவர்கள் வாதம். வேளாண் சட்டத்திற்கு இதைத்தான் அவர்கள் காரணமாக சொல்கிறார்கள். இது நியாயமானது, உண்மையும் கூட. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அவர்கள் விவசாயிகளை தூக்கி வைத்து கொண்டாட எல்லாம் செய்யவில்லை. அப்போதும் விவசாயிகள் பட்டினிசாவு, தற்கொலை போன்ற சோக சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருந்தது.

ஆனால், இன்றுவரை லாப நஷ்டம் எல்லாம் பார்க்காமல் விவசாயிகள் எல்லா இடர்பாடுகளையும் கடந்து விளைபொருட்களை உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மழை, வெயில், எலி என்று அவர்கள் சந்திக்காத பிரச்சனையே இல்லை. ஆனால், அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை என்ற கேள்வி எழுந்தால், அது அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

இந்தசட்டத்தை எதிர்த்து இடைத்தரகர்கள் தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்ற பாரதிய ஜனதாவின் குற்றச்சாட்டை ஒதுக்கித்தள்ள முடியாது. இந்தியாவின் உணவு உற்பத்தி செய்யும் விவசாய தொழிலாளர்கள் இன்றுவரை வறுமையில் தான் இருக்கிறார்கள். தாராளமயமாக்கம், தனியார்மயம் கொள்கைகள் கார்ப்பரேட் மயம் ஆகியவற்றால் விவசாயத் தொழிலாளர்களின் வறுமை சதவிகிதம் இன்றுவரை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. விலைவாசி உயர்வுக்கு விவசாயிகள் தான் காரணம் என்று நம்மால் துணிந்து சொல்ல முடியாது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கிறதா என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் இடமும் எந்த பதிலும் இல்லை என்பதுதான் உண்மை.

தேர்தல் வரும்போதெல்லாம் விவசாயத்தைப் பற்றி பேசும் அரசியல் கட்சிகள், ஆட்சிக்கு வந்ததும் கார்ப்பரேட் அதிபர்கள் மீது தான் அவர்கள் கரிசனம் காட்டுகிறார்கள். இது பாரதிய ஜனதாவுக்கும் பொருந்தும். இதைத்தான் காங்கிரஸ் உட்பட எல்லா கட்சிகளும் ஏற்கனவே செய்தது.

வரும் தேர்தலை முன்னிட்டு தான் இந்த வேளாண் சட்டம் வாபஸ் என்பது உண்மையாக இருக்கலாம். இந்த வேளாண் சட்டம் விலக்கு, விவசாயிகள் பிரச்சினையை தீர்த்து விடுமா என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகளிடம் நிச்சயம் பதில் இருக்காது. பிரதமர் தனது உரையின் இறுதியில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க குழு அமைக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். பாரதிய ஜனதாவின் மறைமுக அஜெண்டாவில்... ராமர் கோயில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ஆகியவை இருந்தன. இப்போது அவர்கள் மறைமுகமாக அஜெண்டாவில் வேளாண் சட்டம் புதிதாக சேர்ந்திருக்கிறது. இதுதான் உண்மை.