தொடர்கள்
பொது
சாமான்ய மக்களின் பத்மவிருதுகள்... - தில்லைக்கரசிசம்பத்

டெல்லி ராஷ்டிரபதி பவனில், பத்மவிருதுகள் வழங்கும் விழா நவம்பர் 8ந்தேதி அன்று நடந்தது. 2020ஆம் ஆண்டு 141 பேருக்கும், 2021-ஆம் ஆண்டில் 119 பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

கொரோனா பேரிடர் காரணமாக சென்ற வருடம் நடைப்பெறாமல் போன அந்த விழாவையும் சேர்த்து, இந்த வருட பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் செயற்கரிய செயல்களை செய்த பல சாமானிய மக்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. விருது வாங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கீழ்வருமாறு...

20211019195509982.jpg

திருமதி உஷாச்சௌமார், தலித் பெண்மணியான இவர் ராஜஸ்தான், பாரத்பூர் கிராமப் பகுதியை சேர்ந்தவர். 7 வயதில் மனித கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளியாக பணி செய்ய ஆரம்பித்தார். 24 வயது வரை அந்த வேலை தொடர்ந்தது. பிறகு “சுலப் அமைப்பின்” நிறுவனர் மருத்துவர் பிந்தேஷ்வர் பதக்கை சந்தித்தது, அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. மருத்துவரின் வழிக்காட்டலின் வழியே என்ஜிஓ நைய் திஷாவை சந்தித்து, துப்புரவு தொழிலாளிகளின் நிலையான நல்வாழ்க்கை முறைக்காக பணியாற்ற தொடங்கினார்.

தற்போது சுரப் அமைப்பின் தலைவராக விளங்குகிறார்.

20211019200542855.jpg

திரு. மராச்சி சுப்புராமன்.

திருச்சியை சேர்ந்த சிறந்த சமூக சேவகரான இவர் (வயது 71).

லட்சக்கணக்கான மீனவக் குடும்பங்களுக்கு, குறைந்த செலவில் கழிப்பறைகளை நிறுவி சுகாதாரத்தை நிலைநாட்டியவர்.

20211019200514791.jpg

மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் (உயிருடன் இல்லை)

வடசென்னையில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் புரிந்து, சாமானிய மக்களுக்கு தொண்டாற்றி மறைந்தவர்.

20211019200454758.jpg

திருமதி துளசி கௌடா, ஹொன்னள்ளி கிராமம் கர்நாடகா சுற்றுசூழல் ஆர்வலர். 30,000 மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார். காட்டை பாதுகாக்கும் முயற்சியில், 60 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார்.

1944-இல் பிறந்த இவர், பழங்குடி இனத்தை சேர்ந்தவர். காடுகளின் அறிவு களஞ்சியம் என்று அழைக்கப்படும் அளவுக்கு, மரங்களை பற்றிய அத்தனை நிபுணத்துவ விவரங்களையும் அறிந்தவர். “மரங்களின் கடவுள்” என்று தான் சார்ந்த பழங்குடி மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

20211019200412611.jpg

திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அம்மா என்று அனைவராலும் பாசத்துடன் அழைக்கப்படுபவர். சமூக சேவகரான இவர், கிராமம் கிராமமாக சென்று சமூக பொருளாதார அரசியல் ரீதியாக மாற்றங்கள் ஏற்பட அஹிம்சை ஒன்றே தீர்வு என்று போதிப்பவர். நிலமற்ற ஏழைகளின் வாழ்வேற்றத்திற்கு தொடர்ந்து போராடி வருபவர். 1926இல் தேவேந்திர குலத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே மகாத்மா காந்தியுடன் ஒரே மேடையில் நின்று சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்த பெருமையும் கொண்டவர் ஆவார்.

20211019200349683.jpg

திரு. முஹம்மது ஷரீஃப்

ஷரீஃப் சாச்சா என்று அழைக்கப்படும் இவர், இருசக்கர வாகன மெக்கானிக் ஆவார். இதுவரை 25,000 எண்ணிக்கையில், யாரும் உரிமை கோராத இறந்த உடல்களுக்கு இறுதி சடங்கு செய்து எரியூட்டி இருக்கிறார். 83 வயதாகும் இவருக்கு இவர் வாழ்வில் நடந்த ஒரு துயர சம்பவமே, இவ்வாறு அவர் மாற காரணமாக இருந்திருக்கிறது.

1992-இல் நடந்த பாப்ரி மஸ்ஜித் - ராமர்ஜென்ம பூமி கலவரத்தில் இவரது மகன் ராயிஸ் கொல்லப்பட்டு, ஆள் அரவமற்ற ரயில் பாதை ஓரத்தில் போடப்பட்டார். மகனை தேடி பல இடங்களில் அலைந்த இந்தப் பெரியவர், கடைசியில் நாய்களால் உடல் குதறப்பட்ட நிலையில் தனது மகனின் இறந்த உடலை கண்டறிந்தார். இந்தச் சம்பவமே இனி உரிமை கோரப்படாத இறந்த உடல்களுக்கு, இறுதி சடங்கு செய்து எரியூட்டி அல்லது மண்ணில் அடக்கம் செய்து வருகிறார். இந்துக்கள், முஸ்லீம்கள் மட்டுமில்லாமல்... சீக்கியர்கள், கிறிஸ்துவர்களின் உடல்களையும் அவரவர் வழக்கப்படி இறுதி சடங்கு செய்து வருகிறார், இந்த புண்ணியாத்மா. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஜனாதிபதியின் கைகளால் விருது வாங்கியது, காண்பவர்களை நெகிழ்ச்சி உண்டாக்கியது.

20211019200311799.jpg

திரு. தளவாய் சலபதி ராவ் பிரபல தோல்பாவைக்கூத்து கலைஞர் ஆவார். அனந்தப்பூர் ஆந்திராவை சேர்ந்தவர். பாரம்பரிய கலையை பிரபலப்படுத்தியதால் பத்மவிருது பெறுகிறார்.

20211019200246799.jpg

ஆச்சார்யா எம்.கே.குஞ்சால் கேரள தலித்துகளுக்கு எதிரான காவல்துறையின் கொடுமைகளுக்கு, தலித்துகள் சார்பில் அவர்களுக்கு அரணாக இருந்து, தலித்துகளுக்கு நியாயம் கிடைக்க போராடி வருபவர். அண்ணல் அம்பேத்கர் மற்றும் அய்யன் காளி அவர்களின் கருத்து சித்தாந்தத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றி வருகிறார்.

20211019200217469.jpg

திருமதி. ரஹிபாய் சோம போப்ரே “விதைகளின் தாய்” என்ற பெயரில் அழைக்கப்படும் இவர், மஹாதேவோகோலி இனத்தை சேர்ந்த பழங்குடி விவசாயி. மஹாராஷ்டிரா - அஹ்மத் நகர் கொம்பைன் கிராமத்தை சேர்ந்தவர். ஏழ்மையினால் பள்ளியில் படிக்க இயலாத காரணத்தால், 10 வயதிலேயே விவசாய கூலி, மாடு மேய்த்தல் போன்ற வேலைகளை செய்து குடும்பத்திற்கு உதவியாக இருந்தார். 17 வயதில் சோம போப்ரேயுடன் திருமணம் நடந்தது. அவரும் கல்வி கற்காதவர். விவசாயம் ஒன்றே குடும்பத்தின் வருமானமாக இருந்த நிலையில் வேளாண் பல்லுயிர், காட்டு உணவு வளங்கள் பற்றி தெரிந்து கொண்டு, தனது பயிற்சி மற்றும் அனுபவத்தின் மூலம், பாரம்பரிய முறையில் பயிர் வளர்ப்பை பலருக்கு கற்று கொடுத்து வருகிறார்.

20211019200140771.jpg

திரு. ஹரேகலா ஹஜ்ஜப்பா ஆரஞ்ச் பழ வியாபாரியான இவர், மங்களூர் - கர்நாடகாவை சேர்ந்தவர். தான் உழைத்த பணத்தில் சேமித்து தன் கிராமத்தில் பள்ளி தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது அரசு மற்றும் தனியார் நபர்களின் உதவியுடன் நன்கு வளர்ந்து, ‘ஹஜ்ஜப்பா பள்ளி’ என்று அழைக்கப்பட்டு, இயங்கி வருகிறது “நான் ஒரு முஸ்லிம். இருந்தாலும், எனது பள்ளி.... கோயில், சர்ச், மசூதி அமைப்புக்கள் கொடுக்கும் நிதி உதவிகளையும் பெற்று தான் நடக்கிறது” என்று அவர் கூறுவதன் மதநல்லிணக்கத்திற்கும் உதாரணமாக திகழ்கிறார்.

திரு பேணி சந்திரா ஜமாடியா (உயிருடன் இல்லை)

கோமதி மாவட்டம் திரிபுராவை சேர்ந்தவர். இந்தியக் கிராமப்புற கலைஞர், எழுத்தாளர், வங்காலத்து பாரம்பரிய பால் பாடல்களை (Baul singing) கோக்போரக் (Kokborok) மொழியில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். திரிபுராவில் இலக்கிய மற்றும் கல்வி துறைகள் மேம்பட தனது பங்களிப்பை அளித்தவர்.

20211019200031512.jpg

திருமதி. ட்ரினிட்டி சாயூ “மஞ்சள் ட்ரினிட்டி சாயூ” என்று மேகாலயா மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்படுபவர். மேற்கு ஜைன்டியா மலைகள் பகுதியை சேர்ந்தவர் “லகடோங்” வகை மஞ்சளை பயிரிட்டு வளர்ப்பதின் முறைகளை பிரபலப்படுத்தியவர். அவர் சார்ந்த பகுதிகளில் உள்ள பெண்களுக்கு, இயற்கை விவசாய முறையை கற்று தருகிறார். தற்பொழுது 900 விவசாயிகளுக்கு துணை நின்று, அவர்களின் வாழ்வு மேம்பட உழைத்து வருகிறார்.

2021101919585467.jpg

திரு.சுந்தரம் வர்மா

சிகார், ராஜஸ்தானை சேர்ந்தவர். வறண்ட நில வேளாண் காடுகளின் வளர்ச்சிக்கு பின்னால் உள்ள மனிதர், வேளாண் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றின் பிரச்சாரகர்.

இந்திய விவசாய ஆராய்ச்சி துறை - டில்லியில், வறண்ட நில விவசாய முறை பற்றி படித்தார். இதன் மூலம் வெறும் 1 லிட்டர் நீரிலேயே பல தரப்பட்ட மரங்களை வளர்க்கும் முறையை கண்டறிந்தார். இந்த முறையில் தற்போது வரை 50,000 மரங்களை வளர்த்திருக்கிறார்.

திருமதி. பாப்பம்மாள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி.. 105 வயதாகும் இவருக்கு, உலகின் மிக மூத்த வயதுடைய விவசாயி என்ற‌ பெயரும் உண்டு. இன்றும் வயலுக்கு போய் வேலை செய்கிறார். விவசாயத் துறையில் முன்னோடியாகக் கருதப்படுகிற இவர், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கத்தினராக இருக்கிறார்.

திரு. நந்தா புருஸ்டி கல்வித்துறையில் செய்த சாதனைக்காக, இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. “நந்தா சார்” என்று அழைக்கப்படும் இவர், நாடு சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்தே குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கிறார். 7-வது மட்டுமே படித்த நந்தா சார், அவரது கிராமத்திலிருந்து படிப்பறிவின்மையை விரட்டி, முழுமையான கல்வியறிவு பெற்ற கிராமமாக மாற தொடர்ந்து உழைத்து வருகிறார். ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ விருது பெறும் போது, அவரை நந்தா சார் இரு கைத்தூக்கி ஆசிர்வாதம் செய்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

திருமதி. மாதா B மஞ்சம்மா ஜொகதி

20211019195734121.jpg

திருநங்கை நாட்டியக்காரரும், சமூக சேவகரும் ஆன இவர் பல்லாரி மாவட்டம் கர்நாடகாவில் மஞ்சுநாத ஷெட்டியாக பிறந்தவர். 10-வது வரை படிப்பு. திருநங்கையாக மாறிய போது, பல துன்பங்களை அனுபவித்தவர். ஆரம்ப நாட்களில் உணவுக்காக பிச்சை எடுப்பது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர். தற்கொலை செய்து இறந்துவிடலாமா என்று இருந்த சமயத்தில், “ஜொகதி நிருத்தயா” (Jogathi Nrithya - a folk performance of Jogappas) என்ற நடனத்தை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நடனத்தில் தேர்ந்தவரானப் பிறகு, ஒரு நடனக்குழு அமைத்து நாட்டின் பல இடங்களில் தனது நடன நிகழ்ச்சியை நடத்தி வருவதின் மூலம் பிரபலமான நடன கலைஞராக விளங்குகிறார். இன்று இந்த பத்மஸ்ரீ விருது பெற்றதன் மூலம் மஞ்சம்மா, தான் சார்ந்த திருநங்கைகளின் இனத்திற்கே பெருமையின் அடையாளமாக நிற்கிறார்.

20211019195652192.jpg

யானை மனிதர் மருத்துவர் குஷால் கொன்வர் சர்மா கடந்த 10 வருடங்களாக, வார இறுதியில் கூட ஓய்வெடுக்காமல் வருடத்திற்கு 600 யானைகளுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். சுமார் 140 தனித்து சுற்றும் முரட்டு யானைகளை காப்பாற்றி இருக்கிறார். மிருக வைத்தியரான இவர், அஸ்ஸாமில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் பேராசிரியராக பணி புரிகிறார்.

திரு. கே.ஒய்.வெங்கடேஷ் எலும்பு வளர்ச்சிக் குறைவினால் (achondroplasia) பாதிக்கப்பட்டவர். இது உடல் வளர்ச்சியைத் தடுத்து மற்றும் குள்ளத்தன்மைக்கு காரணமாகிறது. இந்த உடற் கோளாறால் வெறும் 4.2 அடி உயரம் இருக்கும் வெங்கடேஷ் கைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, தடகளம், பூப்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளில் பெருமை கொள்ளும் அளவில் பாராலிம்பிக்கில் விளையாடி சாதனைகள் படைத்தவர்.

புதுச்சேரி கேசவசாமி

40 ஆண்டுகளாக சமூக, கல்வி நோக்கங்களுக்காக பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கியவர்.

இந்த முறை இந்திய அரசு சாமானிய மக்களாக இருந்தாலும் செயற்கரிய செயல்களை செய்து வரும் நல்லுள்ளங்களை கண்டறிந்து பத்மஸ்ரீ விருது கொடுத்திருப்பது மிகவும் நல்ல விஷயமாக மக்களிடையே கருதப்படுகிறது. தனது புடவை தலைப்பை ஜனாதிபதி கோவிந்த் அவர்களின் தலை உடலில் படும்படி விசிறி ஆசிர்வதித்த திருநங்கை மஞ்சம்மா, பாரம்பரிய பழங்குடி உடையில் வந்து பெருமிதமாக விருது வாங்கிய துளசிகௌடா முதற்கொண்டு விருது அளித்த ஜனாதிபதியையே கைகளை உயர்த்தி ஆசிர்வதித்த நந்தா புருஸ்டி சார் வரை மிக அழகாக பார்க்கும் மனங்கள், நெகிழ்ச்சியுரும் வண்ணம் உயிரோட்டம் உள்ள நிகழ்ச்சியாக இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி அமைந்தது.

பல காலமாகவே பத்ம விருதுகள் சமூகத்தில் மிக பிரபலமானவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைத்துறையினர், சமூகத்தில் செல்வாக்குடையவர்... எலைட் எனப்படும் சமூகத்தின் உயரடுக்கு பிரிவை சேர்ந்தவர்களே பெரும்பாலும் இத்தனை வருடங்களாக பத்ம விருதுகளை வாங்கி கொண்டிருந்தார்கள். அவர்களும் விருதுகளுக்கு தகுதியானவர்களே..!

ஆனால், சமீப காலங்களில் சாமானிய மக்களும் இந்திய அரசின் உயரிய விருதுகளை பெறலாம் என்று ஆளும் பிஜேபி அரசு பத்ம விருதுகளுக்குரியவர்களை தேர்ந்தெடுப்பதில் 2017-லிருந்து புது நடைமுறைகளை கொண்டு வந்ததால், இந்த வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

எளிய மனிதர்கள் பெற்றதால், இன்று பத்ம விருதுகளுக்கே பெருமை உண்டானது என்றும் கூறலாம்.

“இந்தியாவுக்கு சுதந்திரத்தை பிரிட்டிஷார் பிச்சையாக போட்டார்கள்” என்று கூறி சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களையும், உயிர்த் தியாகம் செய்த அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் கொச்சைப்படுத்தி பேசியவருக்கும், பத்மவிருது கிடைத்தது. தங்களது செல்வாக்கையும் வைத்து விருது வாங்கியவர்களுக்கு தெரியுமா..? இந்த விருதே இவர்கள் ஜால்ரா அடித்ததற்கு கிடைத்த பிச்சை என்று..?! வெகுகாலமாகவே இப்படித்தான் தங்களின் மேல்மட்ட தொடர்புகளை வைத்து, விருது வாங்கி கொண்டிருந்தார்கள். இப்படி ஒன்றிரண்டு திருஷ்டிகள் இந்த முறையும் இருந்தாலும், இந்த சமுதாயத்திற்கு உண்மையிலேயே நல்லது செய்து கொண்டிருக்கின்ற.., பணமோ, செல்வாக்கோ, அரசியல் தொடர்போ, இல்லாத நல்லுள்ளங்களுக்கு விருது கிடைத்தது, இந்திய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இதை செயல்முறைப்படுத்தி சாதித்த பாஜக அரசுக்கு பாராட்டுகள்.