தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்... - 50 - மதன்

ஔரங்கசீப்…

‘விடாக்கண்டர்’ துர்காதாஸ்!

20210630214632223.jpeg

போர்த் தந்திரத்தைப் பொறுத்தவரையில், எவரையும் மிஞ்சக்கூடிய அளவுக்குத் திறமை பெற்றிருந்தவர் ஔரங்கசீப். அரசியல் சதுரங்கத்தில் காய்களை வெற்றிகரமாக நகர்த்தத் தேவையான சாணக்கியத்தனமும் பாதுஷாவிடம் நிறையவே இருந்தது. ஒரு மிகச் சிறந்த பேரரசுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய தொலைநோக்குதான் அவரிடம் இல்லாமல் போனது.

அதற்கேற்ப, நியாயமான ஒரு காரணம் எதுவும் இல்லாமல், அமைதியாக இருந்த ராஜபுத்திரத் தேன்கூட்டில் வாளைப் பாய்ச்சினார் ஔரங்கசீப்.

அக்பர் காலத்தில் - நட்பு உணர்வோடு அரவணைக்கப்பட்ட ராஜபுத்திரர்கள், மொகலாய ஆட்சியில் செல்வாக்கோடு கூடிய பெரும் பதவிகளில் இரந்து வந்தார்கள். டெல்லியில் விசுவாசமாகப் பணியாற்றிய ராஜபுத்திர அமைச்சர்களும் தளபதிகளும் இதில் அடக்கம். மார்வார் மன்னரும் (ஜோத்பூர்), மேவார் மன்னரும் (சித்தூர்) டெல்லி ஆளுகைக்கு உட்பட்டிருந்தும்கூட, சுயாட்சியுடன் செயல்பட்டனர். இந்த மன்னர்கள் அக்பர், ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான் ஆட்சிக் காலங்களில் கௌரவத்தோடு நடத்தப்பட்டனர். அனைத்தையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினார் ஔரங்கசீப் பாதுஷா!

பலமுறை கட்சி மாறிக் கடைசியில் தாரா ஷூகோ பக்கம் போன ஜோத்பூர் மன்னர் ஜஸ்வந்த்சிங்கை, ஔரங்கசீப் தன் பக்கம் இழுத்துக் கொண்டது நினைவிருக்கிறதா? தற்போது, நினைத்த மாத்திரத்தில் கட்சி மாறும் சில அரசியல்வாதிகளிடம் மற்றபடி மேன்மையான பல திறமைகளும் இருப்பது போல, ஜஸ்வந்த் சிங்கும் திறமையும் வீரமும் மிகுந்த மன்னர்தான். மொகலாய ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிகாணும் நோக்கத்தோடு, இந்த மன்னர் முன்னொரு சமயம் அங்குமிங்கும் இடம் மாறினாலும், பிற்பாடு ஔரங்கசீப்பின் கீழ் மொகலாய ராணுவத்தின் பிரதான தளபதிகளில் ஒருவராக விசுவாசமாகப் பணியாற்றி வந்தார்.
ஆனால், சக்ரவர்த்திக்கு மனதளவில் ஜஸ்வந்த்சிங்கின் விசுவாசம் பற்றிச் சந்தேகம் தொடர்ந்து இருந்து வந்தது. வேண்டுமென்றே இந்த ராஜபுத்திர வீரரை ஒரு படைக்குத் தலைமையேற்கச் சொல்லி, ஆப்கானிஸ்தானம் அனுப்பினார் பாதுஷா. ஆப்கானியர்களின் எதிர்ப்பு இன்னமும் நீடித்ததால், அவர்களை அடக்கினாலும் லாபம். போரில் ஜஸ்வந்த்சிங் கொல்லப்பட்டாலும் லாபம்தான் என்று கணக்குப் போட்டார் ஔரங்கசீப். அவர் போட்ட கணக்குப் பலித்தது. பெஷாவர் அருகே கைபர் கணவாயை ஒட்டி 1678-ம் ஆண்டில் நடந்த ஒரு போரில் தன் இரு மகன்களை இழந்த ஜஸ்வந்த்சிங் மனம் உடைந்து போனார்.
தொடர்ந்து, பல போர்களில் பங்கேற்றதால், அவர் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. அதே ஆண்டு, டிசம்பர் 10-ம் தேதி இரவு கூடாரத்தில் வந்து படுத்த ஜஸ்வந்த்சிங் மாரடைப்பில் காலமானார்.

பொதுவாகவே ராஜபுத்திர அரசர்கள் யானைகள்மீது அமர்ந்து, துந்துபிகளும் முரசுகளும் முழங்க வந்துபோய்க் கொண்டிருப்பதும், மகுடம் தரித்துத் தத்தம் அரியணையில் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருப்பதும், அதுபற்றி மக்கள் பெருமிதம் காட்டுவதும் ஔரங்கசீப் மனதில் எரிச்சலையும் சஞ்சலத்தையும் கொஞ்ச காலமாகவே ஏற்படுத்தி வந்தன. ஆகவே, ஜஸ்வந்த்சிங் மரணச் செய்தி கேட்டவுடனே, பாதுஷா முகத்தில் புன்முறுவல் விரிந்ததில் வியப்பில்லை. கூடவே, ஜோத்பூர் அரசு வாரிசு இல்லாமல் பிரச்னையில் தவிக்கும் செய்தியும் வரவே, ‘இதுதான் சமயம்’ என்று குள்ளநரித்தனத்தோடு திட்டம் போட்டு, விரைவாகச் செயல்பட்டார் ஔரங்கசீப்! உடனடியாக மார்வாரின் தலைநகரான ஜோத்பூருக்கு ஒரு படை அனுப்பப்பட்டது. கவர்னர் போன்ற பெரும் பதவிகளில் ஔரங்கசீப்பின் ஆட்கள் அவசர அவசரமாக அமர்த்தப்பட்டனர்.

தன்னுடைய இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புக் கிளம்பலாம் என்று நினைத்த பாதுஷா, மக்களைப் பயமுறுத்த வேண்டி, தானே நேரடியாக ஆஜ்மீர் நகர் வரை சென்று முகாம் போட்டார். கையோடு, ஜஸ்வந்த்சிங்கின் தூரத்து உறவினரான இந்திரசிங் என்பவரைப் பெயருக்குத் தற்காலிக மன்னராக்கினார். தன்னைப் பதவியில் அமர்த்தியதற்காக, ஏதோ ‘டொனேஷன்’ போல - ஔரங்கசீப்புக்கு இந்திரசிங் முப்பது லட்ச ரூபாய் செலுத்தவேண்டி வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஓரிரு மாதங்கள் கழித்து, கான்-இ-ஜஹான் என்னும் ஆளுநரின் தலைமையில் ஜோத்பூர் சென்ற மொகலாய அதிகாரிகளின் படை, அங்கு முழு நிர்வாகத்தையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டது.

1679, ஏப்ரல் இரண்டாம் தேதி… டெல்லிக்கு மகிழ்ச்சியோடு திரும்பிய ஔரங்கசீப், அதுவரை ராஜபுத்திரர்களுக்கு விதிக்கப்படாமல் இருந்த ‘ஜிஸியா’ வரியையும் அமலுக்குக் கொண்டு வந்தார்.

ஜோத்பூரில் இருந்த ஏராளமான இந்துக் கோயில்கள் தரைமட்டமாக்கப்பட்டு, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட சிலைகள், டெல்லி அரண்மனையில் படிக்கட்டுகளாகப் போடப்பட்டன. மார்வார் மக்கள் மதித்து வணங்கிய மன்னரின் அரியணையை, ஒரு சாதாரண ஜமீன்தாருக்கு 36 லட்ச ரூபாய்க்கு விலை பேசி விற்றார் ஔரங்கசீப். இதனாலெல்லாம் ராஜபுத்திர மக்கள் பெரும் கொதிப்பில் ஆழ்ந்தார்கள்.

ஒரு திருப்பம்! - ஜஸ்வந்த்சிங் இறந்தபோது, அவருடைய இரு ராணிகள் கர்ப்பமாக இருந்தனர். இருவரும் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்க, அதில் ஒன்று இறக்க… ஒரே ஒரு வாரிசு உருவானது! இந்த நேரத்தில் தனிப்பெரும் ராஜபுத்திர அமைச்சரான துர்காதாஸ் பற்றிக் கூறியாக வேண்டும்…

மறைந்த ஜஸ்வந்த்சிங்கின் பிரதம அமைச்சரான அஸ்கரன் என்பவரின் மகன் துர்காதாஸ். ஜஸ்வந்த்சிங்குக்குப் பிறந்த வாரிசைத் தன் பொறுப்பில் துர்காதாஸ் எடுத்து சகல மரியாதையுடன் வளர்க்க, ஔரங்கசீப்புக்குத் தகவல் போனது. குழந்தையையும் அழைத்துக்கொண்டு டெல்லிக்கு வரும்படி துர்காதாஸுக்கு ஆணையிட்டார் பாதுஷா. விதவையாகிப் போன இரு ராணிகளுடன், ஒரு பரிவாரமாக டெல்லிக்குச் சென்றார் துர்காதாஸ். அஜித்சிங் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையை ‘மார்வார் ராஜ்யத்தின் வாரிசாக ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் தரவேண்டும்’ என்று கேட்பதற்காக, பாதுஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே துர்காதாஸின் நோக்கம். ஒரு வேண்டுகோளாக இதை அவர் சக்ரவர்த்தி முன் வைக்க, அலட்சியமாகக் குழந்தையை ஏறிட்டுப் பார்த்த ஔரங்கசீப், ‘‘குழந்தையை விட்டுவிட்டுப் போங்கள். அது, என் அந்தப்புரத்தில் நல்லபடியாக வளரும்!’’ என்றார் கண்டிப்பான குரலில்!

‘‘ஜோத்பூர் வாரிசாக இந்தக் குழந்தையை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அதை ‘முஸ்லிமாக’ மதமாற்றம் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும்!’’ என்று ஔரங்கசீப் சொன்னதாகவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு உண்டு. மனம் புண்பட்டுப் போன துர்காதாஸும் மற்ற ராஜபுத்திர பிரதிநிதிகளும் வந்த காரியம் பலிக்காமல் டெல்லியில் விருந்தினர் மாளிகையில் தங்க, அங்கேயும் ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. துர்காதாஸும் மற்றவர்களும் தங்கிய மாளிகைமுன் திடீரென்று மொகலாய வீரர்கள் வாட்களோடும் ஈட்டிகளோடும் வந்து காவல் காக்க ஆரம்பித்தார்கள்!

சோதனையான நேரம்தான்! மொகலாய சிங்கத்தின் குகைக்குள் சிக்கிவிட்ட நிலையிலும், துர்காதாஸ் நிலைதடுமாறிக் கலங்கவில்லை. தன் கவனத்தைச் சிதறவிடாமல், புத்திக்கூர்மையுடன் அவர் செயல்படுத்திய திட்டம் இன்றளவும் ராஜபுத்திர பூமியில் பெருமிதத்துடன் பேசப்படும் ஒன்று!

எப்படியோ, ஏதோ ஒரு குழந்தையைப் பிடித்து, அதற்கு இளவரசரின் உடையை அணிவித்தார் துர்காதாஸ். கூடவே, பணிப்பெண்கள் சிலரை ராணிகளாக வேடமிட்டு, உப்பரிகையில் ‘டூப்’ இளவரசரை அணைத்துத் தூக்கிக்கொண்டு நடமாட, நிஜ ராணிகள் துப்புரவுப் பணியாட்களைப் போல வேடம் தரித்துக்கொண்டு, இளவரசரோடு நைஸாக வெளியேறித் தப்பினர்.

‘ராணிகளும் குழந்தையும் அதோ மாடியில்தான் இருக்கிறார்கள்…’ என்று நினைத்து மெத்தனமாகவும், அலட்சியமாகவும் இருந்த மொகலாயக் காவல் அதிகாரிகள் ஏமாந்து போனார்கள்! பிறகு, விஷயம் புரிந்து கோபத்துடன் உள்ளே பாய்ந்தது மொகலாயப் படை. தங்கள் ‘ராணி’ வேடங்களைக் களைந்துவிட்டு, வாளெடுத்துக் கொண்ட பெண்களும் ராஜபுத்திரப் பணியாளர்களும் மொகலாய வீரர்களோடு ஆவேசத்துட்டு போரிட்டு வீர சொர்க்கம் புகுந்தனர்.

நடந்த விஷயங்களைக் கேட்ட ஔரங்கசீப், வெறுத்துப்போய் தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டார். பிறகு, ‘‘தப்பிப் போனவர்களை எப்படியாவது துரத்திச் சென்று பிடியுங்கள்!’’ என்று கர்ஜித்தார் பாதுஷா. ஆனால், கிளம்பிச் சென்ற பாதுஷாவின் படையை முன்னேற விடாமல், ஒவ்வொரு கட்டத்திலும் ஆங்காங்கே ராஜபுத்திர வீரர்கள் தடுத்து நிறுத்திப் போரிட்டு உயிரை விட்டார்கள். அதற்குள் முன்னேற்பாடாகக் காட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குதிரையில் ஏறி, ஜஸ்வந்த் சிங்கின் வாரிசான குழந்தை அஜித்சிங்கைத் தூக்கிக்கொண்டு ஜோத்பூர் பறந்துவிட்டார் துர்காதாஸ்!

ஔரங்கசீப் அசருவதாக இல்லை. அரண்மனைக்குப் பால் கொண்டுவரும் பணியாளரின் குழந்தை ஒன்றைக் கொண்டு வந்து, ‘‘ஐஸ்வந்த்சிங்கின் வாரிசு தப்பிக்கவேயில்லை. இதோ, இதுதான் அந்தக் குழந்தை!’’ என்று ஒரு போடு போட்டார். அந்தக் குழந்தைக்கு முகமதியராஜ் என்று பெயர் வேறு வைக்கப்பட்டது! பிறகு, பெரும் படை ஒன்று டெல்லியிலிருந்து கிளம்பி ஜோத்பூருக்குள் புகுந்தது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ராஜபுத்திரர்கள் வெளிக் கிளம்பி, டெல்லி வீரர்களுடன் வீராவேசமாகப் போரிட்டனர். கடைசியில், மொகலாயப் படையின் பிரமாண்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து வீழ்ந்தனர். ஜோத்பூரை ஆசைதீர சூறையாடினார்கள் ஔரங்கசீப்பின் வீரர்கள்.

ஜோத்பூர் சென்ற மொகலாயப் படைக்குத் தலைமை தளபதியாக - ஔரங்கசீப் தன் மகன் அக்பரை நியமித்தார்.

1679-ல் ஆலம்கீரே ஆஜ்மீர் வந்திறங்கினார். அதைத் தொடர்ந்து, ஜோத்பூரில் இருந்த நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன. படுவேகமாக மசூதிகள் கட்டப்பட்டன. ஆனால், தப்பித்துச்சென்றுவிட்ட பறவைகளைத்தான் மீண்டும் சிறைப்பிடிக்க முடியவில்லை!

மார்வாரில் நடந்ததையெல்லாம் கேட்டுத் திகைத்துப் போனார்கள் மேவார் (சித்தூர்) மக்கள். ‘இன்று மார்வார்… நாளை மேவார்..!’ என்பதைப் புரிந்துகொண்டு படையைத் திரட்டிக் கொண்ட மகாராஜா ராஜ்சிங், ‘‘மார்வார் படையோடு எங்கள் படை இணைந்து போரிடும்!’’ என்று அறிவித்தார். இப்படியாக, தங்களுக்குள் அவ்வப்போது பங்காளிச் சண்டை போட்டுக் கொண்டிருந்த மார்வார்-மேவார் படைகளை, ஓர் அணியில் ஒற்றுமையாக இணைத்த ‘பெருமை’ ஔரங்கசீப்புக்கு உண்டு!

பாதுஷாவும் சளைக்காமல் ஒரு படையுடன் கிளம்பிச் சென்று, சித்தூர் அருகேயுள்ள உதய்ப்பூரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினார். உதய்ப்பூர் சூறையாடப்பட்டது. அங்கே இருந்த சுமார் 173 கோயில்களும், பிறகு சித்தூரில் 63 கோயில்களும் தரைமட்டமாக்கப்பட்டன.

ஔரங்கசீப்பின் அனுபவம் மிகுந்த ஆலோசனைகளைப் பின்பற்றித் திறமையோடு போர்புரிந்த மொகலாயப் படையிடம் சித்தூர் படை கடைசியில் தோற்றது. மன்னர் ராஜ்சிங், தன் படையோடு மலைப்பகுதிக்குள் தப்பிச் சென்று ஒளிந்து கொண்டார். திருப்தியடைந்த ஔரங்கசீப், தன் மகன் அக்பரை வரவழைத்து, சித்தூரில் தளபதியாக நியமித்துவிட்டு ஆஜ்மீர் திரும்பினார். இதுதான் பெரும் தவறாகப் போனது…

மலைப்பகுதியிலிருந்து சுதாரித்துக் கொண்டு கிளம்பிய ராஜபுத்திரர்கள், கொரில்லாத் தாக்குதலுக்கு மாறினார்கள். திடீர் திடீரென அவர்கள் நிகழ்த்திய அதிரடித் தாக்குதல்களில் பல மொகலாயத் தளபதிகளும் வீரர்களும் உயிரிழந்தனர். மொகலாயர்களுக்காகச் சுமார் 10,000 மாட்டு வண்டிகளில் வந்த உணவுப் பண்டங்களை அலாக்காக ராஜபுத்திரர்கள் கடத்திக்கொண்டு போக, பட்டினியால் தவிக்கும் நிலை டெல்லிப் படைக்கு ஏற்பட்டுவிட்டது.
இளவரசர் அக்பரே, ‘‘இருக்கிற இடத்தைவிட்டு நகராமல், பீதியில் சிக்கித் தவிக்கிறது நம் படை!’’ என்று வெளிப்படையாகக் குறிப்பிடும் அளவுக்கு நிலைமை மோசம். ‘நீ எதற்கும் லாயக்கில்லை’ என்று மகனைக் கண்டபடி திட்டிக் கடிதம் எழுதிய ஔரங்கசீப், அக்பரை பழையபடி ஜோத்பூருக்கு மாற்றினார். ஆஸாம் என்னும் இன்னொரு மகனைத் தளபதியாக நியமித்தார்.

இந்தச் சூழ்நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத - ஔரங்கசீப்பின் மூளையை மிஞ்சிய ஒரு திருப்பம் நிகழ்ந்தது!

தந்தை தன்னை நடத்திய விதம் கண்டு குமுறியவாறு ஜோத்பூர் போய்ச் சேர்ந்த இளவரசர் அக்பரைச் சாமர்த்தியம் மிகுந்த துர்காதாஸ் தலைமையில், ராஜபுத்திரக் குழு ஒன்று சந்தித்தது. வந்தவர்களை வியப்போடு அக்பர் நிமிர்ந்து பார்க்க, துர்காதாஸ் மென்மையான குரலில் பேச ஆரம்பித்தார் - ‘‘இளவரசே! நாங்கள் சமாதானம் செய்து கொள்ள வந்திருக்கிறோம். தங்கள் தந்தையோடு அல்ல. தங்களோடு! சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவே கூறுகிறேன்… யோசித்து ஒரு முடிவு எடுங்கள். தங்கள் தந்தை ஔரங்கசீப் பாதுஷா, தன் கொள்கையாலும் அணுகுமுறையாலும் மொகலாய சாம்ராஜ்யத்தை வீழ்ச்சிக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். அவர் வெறியாட்டம் தாங்காமல், இன்று அத்தனை ராஜபுத்திரர்களும் எதிரணியில் தோளோடு தோளாக நிற்கின்றனர். தெற்கே மராட்டியர்கள் வாளெடுத்தாகி விட்டது. தங்கள் பெரும் பாட்டனார் பேரரசர் அக்பர் (உண்மையில் எள்ளுத் தாத்தா!) பெயரை வைத்துக் கொண்டிருக்கும் தாங்கள் இதையெல்லாம் அனுமதிக்கலாமா..? நாட்டுக்கு இப்போதைய தேவை - தேசிய எண்ணம் கொண்ட, நிதானமான ஒரு சக்ரவர்த்தி. அது, தாங்களாகத்தான் இருக்க முடியும்! இளவரசர் ஒப்புதல் அளித்தால் 70,000 பேர் அடங்கிய ராஜபுத்திரப் படை, தங்கள் பின் பக்கபலமாக நிற்கும். வேறு வழியில்லை… தங்கள் தந்தையைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, டெல்லி அரியணையில் சென்று அமருங்கள். நாட்டு மக்களின் ஒருமித்த விருப்பம் இது!’’

1681-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி ஜோத்பூரில் சக்ரவர்த்திக்கான உடை தரித்துக்கொண்டு, நான்கு முல்லாக்கள் ஆசியுடன் முடிசூட்டிக் கொண்டார் அக்பர். ‘தந்தை ஔரங்கசீப் பாதுஷா பதவியிறக்கம் செய்யப்படுகிறார்!’ என்று அறிக்கை ஒன்றையும் விடுத்தார் அவர்! ராஜபுத்திரர்கள் இந்த நிகழ்ச்சியைக் கோலாகலமாக, வாணவேடிக்கைகளுடன் கொண்டாடினார்கள். ஒரு பெரிய திருப்பம் நிகழப்போகிறது என்கிற மகிழ்ச்சிதான் காரணம். ‘க்ளைமாக்’ஸில் மேலும் ஒரு திருப்பம் மிச்சமிருக்கிறது என்பது பாவம், அவர்களுக்குத் தெரியாது!

அக்பர் தலைமையில் ராஜபுத்திர-மொகலாயப் படை ஆஜ்மீருக்குச் சில மைல் தொலைவில் பாசறை அமைத்துத் தங்கியது. உடனடியாக நேரத்தை வீணாக்காமல், சுமார் 20,000 படைவீரர்களோடு மட்டும் ஆஜ்மீரில் தங்கியிருந்த ஔரங்கசீப்புடன் மோதியிருந்தால், இளவரசர் ஒரு கை பார்த்திருக்கலாம்! ஔரங்கசீப் கதை முடிந்திருக்கும்தான்! ஆனால், தேவையில்லாமல் யுத்தத்தை ஒரு நாள் தள்ளிப் போட்டார் அக்பர். இந்தச் சிறு தாமதத்தைக் கில்லாடித்தனமாக (ஆலம்கீர் மன்னித்தருள வேண்டும்… வேறு வார்த்தை தோன்றவில்லை!) பயன்படுத்திக் கொண்டார் ஔரங்கசீப்.

‘அன்பு மகன் அக்பருக்கு, திட்டப்படி ராஜபுத்திரர்களை மொத்தமாக நம் வலையில் விழவைத்ததற்கு, என் மனமார்ந்த பாராட்டுகள். இவ்வளவு நுண்ணறிவுடன் நீ திட்டத்தைச் செயல்படுத்துவாய் என்று நானே எதிர்பார்க்கவில்லை. நான் சொல்லி அனுப்பும்போது, நம் இரு படைகளும் இணையலாம்’ என்று ஒரு கடிதம் அனுப்பினார் ஔரங்கசீப். கடிதத்தை எடுத்துச் சென்ற தூதுவரிடம் ‘‘ராஜபுத்திர தளபதிகள் கையில் நீ சிக்கிக்கொள்ள வேண்டும்…’’ என்று சொல்லி அனுப்பினார். பாதுஷா நினைத்தது நடந்தது… கடிதத்தை வழிமறித்துப் படித்துப் பார்த்த ராஜபுத்திர தளபதிகள், ‘என்ன இது துரோகம்..?’ என்று திகைத்துப் போனார்கள்.

மறுநாள் காலை அக்பர் விழித்தெழுந்தபோது, ராஜபுத்திரப் படையே அங்கு காணோம்! இரவோடு இரவாக அக்பரை ‘அம்போ’னெ்று விட்டுவிட்டுப் போயே போய்விட்டார்கள்.

வல்லவனுக்கு வல்லவனாக ஔரங்கசீப் செயல்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டவர் துர்காதாஸ் மட்டுமே… பாதுஷாவின் தந்திரத்தை, அவர் மற்றவர்களுக்கு எடுத்து விளக்கிச் சொல்லக்கூட நேரமில்லாமல் போனது. மனம் உடைந்துபோன அக்பர், ஓட்டமெடுக்க வேண்டி வந்தது. மராட்டிய மண்ணில் சில காலம் புகலிடம் தேடி, பிறகு பாரசீகம் சென்று உதவி கேட்கப் போன இந்த இளவரசர், அங்கு போய்ச் சேருவதற்குள் நம்பிக்கை இழந்து, துவண்டுபோய் மரணமடைந்தார்.

பிற்பாடு சித்தூர், ஔரங்கசீப்பிடம் சமாதானமாகப் போனாலும், பாதுஷாவை ஜோத்பூர் விடுவதாக இல்லை. அந்த மண்ணைச் சேர்ந்த ராஜபுத்திர வீரர்கள் தொடர்ந்து கொரில்லாத் தாக்குதல்கள் நிகழ்த்தி, மொகலாயர்களைத் துன்புறுத்தினார்கள். டெல்லியால் அவர்களை வழிக்குக் கொண்டுவர முடியாமலே போனது. அவ்வப்போது ஏற்பட்ட சில தோல்விகளும் ராஜபுத்திரர்களைச் சோர்வடையச் செய்யவில்லை.
கடைசியில் துர்காதாஸின் விசுவாசம், வீரம், விடாமுயற்சி பலனைத் தந்தன. ஔரங்கசீப் இறந்த நாலாவது நாள், மார்வார் ராஜ்யத்தின் தலைநகரான ஜோத்பூரை, துர்காதாஸ் தலைமையில் ராஜபுத்திரப் படை கைப்பற்றியது. மறைந்த ஜஸ்வந்த்சிங்கின் வாரிசான அஜித்சிங்கை அரியணையில் அமர்த்தி, முடிசூட்டிக் காட்டினார் துர்காதாஸ்!

வடக்கே சீக்கியர்களும் ராஜபுத்திரர்களும் டெல்லி ஆட்சிக்குப் பிரச்னையாகிப் போன சமகாலத்தில், தெற்கேயும் பாதுஷாவுக்கு எதிராகக் கிளர்ச்சி ஆரம்பித்து விட்டிருந்தது…

‘சிவாஜி’ என்கிற பெயரில் மராட்டியத்திலிருந்து மின்னலாகக் கிளம்பிய அந்தத் தாங்கமுடியாத ‘தலைவலி’யால் ஔரங்கசீப் பாதுஷா தடுமாறித் தவித்தது தனிக் கதை..!