ஐப்பசி மாதம் கடை முழுக்கு சமயத்தில் மாயவரம் பட்டமங்கள வீதியில் ராஜகம்பீரமாக மாயூரநாதர் தேர் நகர, தாளம்போடும் ஜன திரளின் முன்பு ஆஜானுபாகுவான அந்த கலைஞர்கள் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் மல்லாரி வாசிக்கும் அழகே அலாதியாக இருக்கும். நாதஸ்வர மேதைகளில் மூத்தவர் செம்பனார்கோயில் எஸ். ஆர்.ஜி. சம்பந்தம். (கண்ணாடி அணியாதவர்). இளையவர் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா.. சகோதரர்கள். பெரிய பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள். தாத்தா ராமசாமி.. தந்தை கோவிந்தசாமி.. இருவருமே நாயனத்தில் பெரிய ரவுண்ட் வந்தவர்கள். அப்படித்தான் சம்பந்தமும், ராஜண்ணாவும். தஞ்சை ஜில்லாவில் அவர்கள் வாசிக்காத கிராமங்கள் இல்லை.
அந்தக் காலத்தில் திருவீழிமிழலை சகோதரர்கள், கோட்டூர் சகோதரர்கள், வண்டிக்காரத் தெரு சகோதரர்கள், நாச்சியார் கோயில் சகோதரர்கள், பந்தநல்லூர் சகோதர்கள், திருப்பாம்பரம் சகோதரர்கள், செம்பனார் கோயில் எஸ்.ஆர்.டி. சகோதரர்கள், மதுரை சேதுரராமன் - பொன்னுசாமி.. உள்பட பல பிரதர்ஸ் கொடிகட்டி பறந்த போது, இவர்கள் ஒருபுறம் தனிகாட்டு ராஜ்ஜியம் நடத்தியது நாதஸ்வர வரலாற்றில் பொன்னான பக்கங்கள்.
சம்பந்தம்
இது செம்பனார்கோயில் சகோதர்களில் மூத்தவர் சம்பந்தத்திற்கு நூற்றாண்டு நிறைவு கொண்டாடும் நேரம். இளையவர் ராஜண்ணா தற்போது சென்னை பாலவாக்கத்தில், மகன் குருமூர்த்தி வீட்டில் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். சகோதரர்கள் பற்றிய தங்களது அந்த நாள் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள், அவர்களை அறிந்த ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் மகா வித்வான்கள். வாரா வாரம் படிக்கலாம். ஒரு சங்கீதத் தொடரில் ‘சார்பட்டா’ விறுவிறுப்பை எதிர்பார்க்க முடியாது.
நாயன ரசிகர்கள் பின் தொடரலாம்...
Leave a comment
Upload