தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...! - ஜாசன்

வாழையிலை லாரியில் வந்தார்...
முதல் வகுப்பு ரயிலில் திரும்பினார்..!

அந்தக் காலத்தில் ஜூனியர் விகடன் ஒரு அரசாங்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தது, அதன் செயல்பாடுகள் அப்படி. ஜூனியர் விகடனில் எழுதப்படும் எல்லாப் பிரச்சினைகளையும் உடனுக்குடன் அரசு கவனித்து, சரி செய்தது அல்லது தவறு செய்த அதிகாரிகளை பணிமாற்றம் போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. அரசாங்கத்திடம் முறையிடுவதை விட, ஜூனியர் விகடனில் முறையிட்டால் நமக்கு நல்லது நடக்கும் என்று அப்போது மக்கள் நம்பினார்கள். கீழே கிடந்த பர்ஸ், நகை, தவற விடப்பட்ட குழந்தை என்று எல்லாவற்றையும் ஜூனியர் விகடன் அலுவலகத்தில் வந்து ஒப்படைத்துவிட்டு போவார்கள்.

ஒரு கட்டத்தில் வாசகர்கள் புகார் கடிதங்களை கவனித்து நடவடிக்கை எடுக்க என்று தனியாக ஒரு இலாகாவை ஏற்படுத்தி, கவனிக்க ஏற்பாடு செய்தார் ராவ் சார். நான் உள்ளே நுழையும்போது, அந்த இலாகாவை கவனித்த பெண்கள்... இந்தாருங்கள் இதையெல்லாம் விசாரித்து, தகவல் தாருங்கள் என்று பத்து கடிதங்களை என் கையில் திணிப்பார்கள். ஏற்கனவே கொடுத்த இரண்டு கடிதங்களுக்கு, நீங்கள் விசாரித்து பதில் தரவில்லை என்று நினைவு படுத்துவார்கள். இப்படி எல்லா நிருபர்களிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்படும். வாசகர்களின் கோரிக்கை கடிதங்களை இணைத்து ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் போவதும், அதற்கு உடனுக்குடன் அவர்கள் நடவடிக்கை எடுப்பதும் கூட நடந்தது. சினிமாவில்... இரு ஜூனியர் விகடனில் போய் சொல்கிறேன் என்று ஞாயம் கேட்பவர்கள் ஆவேசத்துடன் சொல்லும் வசனங்கள் எல்லாம் வரத்தொடங்கியது, அந்த அளவுக்கு ஜூனியர்விகடன் செயல்பாடு இருந்தது.

ஆந்திர எல்லைக்கு அருகே ஏகாம்பரகுப்பம் என்று ஒரு சிறு கிராமம்... அங்கு குடிக்க தண்ணீர் வசதியின்றி பொதுமக்கள் நான்கு கிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் எடுத்து வருகிறார்கள் என்று ஒரு வாசகர் கடிதம் எழுதினார். அந்தக் கிராமத்துக்கு நான் போய் பார்த்தேன். உண்மையில் அவர்கள் நிலைமை பரிதாபம்தான். நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்தக் கிணற்றையும் நான் போய் பார்த்தேன். அந்தக் கிணற்றில் தண்ணீர் அதளபாதாளத்தில் இருந்தது. அவ்வப்போது சுரக்கும் ஊற்று, இவர்களுக்கு உதவிகரமாக இருந்தது. ஒரு கயிற்றில் டால்டா டின் கட்டி, அந்த தண்ணியை சுரண்டி எடுத்து குடத்தில் நிரப்பிக் கொள்வார்கள். ஒரு குடம் நிரம்ப எப்படியும் அரை மணி நேரம் ஆகும்.

இவையெல்லாவற்றையும் பார்த்து, மக்கள் கருத்து எல்லாவற்றையும் சேர்த்து, அந்த வாரம் ஜூனியர் விகடனில் அவர்கள் தண்ணீர் பிரச்சனை பற்றிய கட்டுரை வெளிவந்தது. அப்போது எம்ஜிஆர் ஆட்சி. எம்ஜிஆர் இந்தக் கட்டுரையை படித்துவிட்டு, குடிநீர் வாரிய தலைவராக இருந்த முன்னாள் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் உகம்சந்தை அழைத்து என்னவென்று பாருங்கள் என்றார். அவர் என்னை தொடர்பு கொண்டு, என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே. தலைவர் என்ன கவனிக்கிறாய் என்று டோஸ் விட்டார் என்று சொல்லி வருத்தப்பட்டார்.

அடுத்த மூன்று நாட்களில், குடிநீர் வடிகால் வாரிய தலைவர் உகம்சந்த், அந்தக் கிராமத்தில் முகாமிட்டு நிலத்தடி நீர் மூலம் ஒரு தெருவிற்கு மூன்று குழாய்கள் என்று எல்லா தெருக்களிலும் குடிநீர் குழாய் அமைத்து, அந்தக் கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்த்தார். தண்ணீர் வரும் அன்று என்னையும் அழைத்தார்.. நான் கிராமத்துக்குப் போயிருந்தேன், குழாயில் தண்ணீர் வந்ததும் அந்த கிராமத்து மக்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் கலந்த நிம்மதி, அதை எந்த வகையிலும் ஒப்பிட்டு சொல்ல முடியாது... அவ்வளவு மகிழ்ச்சி, அவர்கள் முகத்தில் தெரிந்தது. ஒரு வயதான பெண்மணி... “நீதான்யா என் சாமி” என்று காலில் விழ ஓடிவர.... பதறிப்போன குடிநீர் வாரிய தலைவர் அவரைத் தடுத்து, இதற்கெல்லாம் காரணம்... புரட்சித்தலைவர் மற்றும் ஜூனியர் விகடன் என்று சொன்னார். அதன் பிறகு எதுவாக இருந்தாலும், என்னிடம் பேசுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவர்களிடம் அவர் சொந்த டெலிபோன் எண்ணையும் அவர்களிடம் தந்தார்.

ஒரு நாள் மாலை நான் அலுவலகம் வந்தபோது, ராவ் சார்... தேனியில் இருந்து, கீழே வயதான ஒரு சுதந்திர போராட்ட தியாகி வந்திருக்கிறார். அவருக்கு சுதந்திர போராட்ட தியாகி பென்ஷன் கிடைக்கவில்லையாம், அவர் மனுவை கிடப்பில் போட்டுவிட்டு அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்களாம், என்னவென்று விசாரியுங்கள் என்று அனுப்பினார்.

அவர் பெயர் சீனிச்சாமி தேவர், சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்குச் சென்றவர். சுதந்திர போராட்ட தியாகி என்பதை உறுதி செய்து, சிறையிலிருக்கும் ஆவணங்களை சரிபார்த்து, சிறை அதிகாரி சான்றிதழ் தர வேண்டும். அப்போதுதான் சுதந்திர போராட்ட தியாகி பென்ஷன் கிடைக்கும், இது பொதுவான அரசாங்க விதி. இவர் மதுரை சிறையில் எட்டு மாதம் இருந்திருக்கிறார். ஆனால், அந்த ஆவணங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டது. அங்கிருந்த ஜெயில் வார்டன் பணத்தை வாங்கிக்கொண்டு, சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கெல்லாம் கூட, சுதந்திர போராட்ட தியாகி என்று சான்றிதழ் தந்து... தியாகி பென்சன் வாங்கி தர வழி செய்து வந்தார். ஆனால், இவர் உண்மை தியாகி என்பதால்.. லஞ்சம் எல்லாம் தரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், இவருடன் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திர போராட்ட தியாகிகள், இவர் எங்களுடன் சிறையில் இருந்தார் என்று சான்றிதழை தந்திருக்கிறார்கள். ஆனால் அந்தச் சான்றிதழ் மட்டும் போதாது, ஜெயிலர் சான்றிதழ் அவசியம் என்று அவர் மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், கிடப்பில் போடப்பட்டிருந்தது. என்னிடம் பேசும்போது... இப்படி அநியாயம் செய்கிறார்கள் எனவே நான் நாளை கோட்டை முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க போகிறேன் என்று மண்ணெண்ணெய் பாட்டிலையும் காட்டினார்.

நான் ராவ் சாரிடம்... அவர் சொன்னவற்றையெல்லாம் சொல்லி, இதை ஒரு கட்டுரையாக நாம் எழுதுவோம். கூடவே, நாமே அதிகாரிகளிடம் பேசி, இவருக்கு பென்ஷன் கிடைக்க முயற்சி செய்வோம் என்று சொன்னேன். உடனே, அவரை ஒரு விடுதியில் தங்க ஏற்பாடு செய்தார். அந்தச் செலவுகளை எல்லாம் ஜூனியர் விகடன்தான் ஏற்றுக்கொண்டது. சுதந்திரப் போராட்ட தியாகிக்கு, பென்ஷன் மறுக்கப்பட்டது பற்றி ஜூனியர் விகடனில் கட்டுரை வெளிவந்தது.

திங்கட்கிழமை காலை... தியாகி பென்ஷன் விவகாரங்களை கவனிக்கும் இலாகா அமைச்சர் யாரென்று விசாரித்து, அவரிடம் இந்தப் பிரச்சனை பற்றி பேசலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது... திங்கட்கிழமை காலை அமைச்சர் முத்துசாமி எனக்கு போன் செய்தார். நீங்கள் மதியம் வந்து என்னை பாருங்கள் என்றார். மதியம் அவரை பார்த்தபோது... அந்த சுதந்திர போராட்ட தியாகிக்கு, பென்சன் கிடைக்கும். அதுக்காக அவர் அனுப்பிய மனுவை எடுத்து நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்கிறேன், நாளை அந்த தியாகியை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றார்.

பிறகு, இருங்கள்... எங்கள் செகரட்டரி உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார் என்று சொல்லி, என்னை காத்திருக்க சொன்னார். சிறிது நேரத்தில் ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தார். அமைச்சர் என்னை பார்த்து, இவங்க ஷீலா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ். இவங்கதான் சுதந்திரப் போராட்ட தியாகி பென்ஷன் விஷயங்களை கவனிக்கிற அதிகாரி என்று சொல்லிவிட்டு, அவரிடம்... இவர்தான் அந்த நிருபர் என்று சொல்ல...

உடனே திருமதி ஷீலா பாலகிருஷ்ணன்... “நீங்கள் எப்படி எங்கள் துறையை பற்றி தரக்குறைவாக எழுதலாம் என்று என்னை கண்டபடி திட்டினார். நான் எதுவுமே பதில் பேசவில்லை. அவர் திட்டிய பிறகு... பொறுமையாக அமைச்சர் முத்துசாமி, இவர் எனக்கு ரொம்ப நாள் நண்பர். ஆனால், இந்த மாதிரி வம்பு வேலைகள் நிறைய செய்வார் என்று சொல்லி சிரித்தார்.

அதன் பிறகு திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், நாளை அந்த சுதந்திர போராட்ட தியாகியை அழைத்து வாருங்கள்.. அவருக்கு இந்த மாதம் முதலே பென்ஷன் கிடைக்கும் என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு கிளம்பினார். நடந்த எல்லாவற்றையும் ஷீலா பாலகிருஷ்ணன் டோஸ்விட்டது உட்பட எல்லாவற்றையும் ராவ் சாரிடம் வந்து சொன்னேன். அவர் சிரித்தபடியே, விடுங்க... அந்த தியாகிக்கு பென்ஷன் கிடைக்குது என்றார்.

மறுநாள்... அந்த சுதந்திர போராட்ட தியாகியை, அமைச்சர் முத்துசாமியின் அறைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் வந்தார். அவர், அந்த சுதந்திர போராட்ட தியாகியிடம், அவரது சுதந்திரப் போராட்ட அனுபவங்களை எல்லாம் கேட்டார். அதன் பிறகு அவர் மீது, அவருக்கு மரியாதை கூடியது. அவரை எழுந்து நின்று வணங்கி, தியாகி பென்ஷன் உத்தரவை தர... அவர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணனுக்கு நன்றி சொல்ல... அப்போது அவர், நான் எதுவும் செய்யவில்லை எல்லாம் அமைச்சர் தான். அவர் உத்தரவு போட்டார், நான் செய்தேன் என்று சொல்ல.. அப்போது அமைச்சர்... அதெல்லாம் இல்லை, அந்த உத்தரவில் கையெழுத்துப் போட்டு இருப்பது அவங்கதான். அதனால நீங்க அவங்களுக்கு நன்றி சொன்னது தான் சரி என்றார்.

எல்லாம் முடிந்தது. அவர் ஊருக்கு திரும்பும்போது அவர் சொன்னது, இப்போதும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. இருபது ரூபாய் தந்து வாழைஇலை லாரியில் ஏறி சென்னை வந்தேன். இன்று என்னை ரயிலில், முதல் வகுப்பு பெட்டியில் ஏற்றி அனுப்புகிறீர்கள். ரொம்ப நன்றி என்றார்.

எல்லாப் புகழும் ராவ் சாருக்கு தான்.