தொடர்கள்
Daily Articles
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 22 - கலைமாமணி பாரதி திருமகன்

20210528160334653.jpg

ஸ்ரீ காஞ்சி மகாபெரியவாளிடம் முதல் ஆசீர்வாதம் பெற்ற நாள் – என் தந்தையின் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதது. தமிழ் திரைத்துறையில் சாதனை, எழுத்துலகில் சாதனை… இதையெல்லாம் மீறி, ஏதோ ஒரு தவப்பயனால் விளைந்த ஆசீர்வாதம் என்பதை நாங்கள் மறக்க முடியாது… யாரும் மறுக்க முடியாது..!

எழுத்தாளர், பாடலாசிரியர், கதை-வசனகர்த்தா, நகைச்சுவை வசன படைப்பாளர், கவிஞர் – என ‘பஞ்ச’முகமாக இருந்த என் தந்தையை, ‘ஸ்ரீ சுவாமிநாதன்’ (மகாபெரியவாளின் இயற்பெயர்) என அழைக்கப்பட்ட பரமாச்சார்யாள் – தெய்வத்தின் குரலில் ‘ஆறுமுகம்’ கொண்ட ஆறுமுகமாகி, வில்லிசை விருட்ச விஸ்வரூபத்தைக் கண்டார்..!
பார்த்த முதல் நாள்… பரமாச்சார்யாளின் பரிபூர்ண அனுக்ரஹம்… தெய்வத்தின் குரலில் கிராமியக் கலையான வில்லிசைக்கு வளர்ச்சி..!
என் தந்தையைப் பார்த்து பரமாச்சார்யாள், ‘‘சுப்பு! உன் வில்லைப் பார்க்கும்போது, நேக்கு ஸ்ரீ ராமன் நினைவுக்கு வருது… உடுக்கை பார்க்கும்போது, ஸ்ரீ காசி விஸ்வநாதர் நினைவுக்கு வருது..! ராமர்னா… ராமேஸ்வரம்..! விஸ்வநாதர்னா… காசி..! ஒண்ணு – South… இன்னொண்ணு – North..! சுப்பு, நீ National Integration-யே கையில வெச்சுண்டு உலாவர்றே… நீ என்ன செய்றே, ஆகம சில்ப சதஸ்ல திருநாவுக்கரசர் வில்லுப்பாட்டை நடத்தறே..!’’ என்று ஆசீர்வதித்தார்.

‘உடனே’ என பரமாச்சார்யாள் சொன்னதால், திருநாவுக்கரசர் வில்லிசையை என் தந்தை எழுதி, அதற்கான கலைஞர்களை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டார். அன்று என் தந்தையுடன் பாடியவர்களில் செதலபதி பாலசுப்பிரமணியன் மாமாவும் ஒருவர்.
அன்றைய தினம் மகாபெரியவாளின் ஆசியால் என் தந்தையின் வில்லுப்பாட்டு மிகச் சிறப்பாக அமைந்தது. பரமாச்சார்யாளின் முழு ஆசீர்வாதமும் கிடைத்தது. அன்று வில்லிசையில் என் தந்தை சொன்ன ஒரு அற்புத கருத்து –

‘‘காமாட்சி… உனக்கு ஒவ்வொருத்தர் விதவிதமா நைவேத்தியம் கொண்டு வருவா..! ஜவுளிக் கடைக்காரர் பட்டு… பழக்கடைக்காரர் விதவிதமான பழங்கள், பலகார கடைக்காரர் பலவகை இனிப்புகள் மற்றும் ஆபரண கடைக்காரர் பலவித டிசைன்களில் நகைகளைக் கொண்டுவந்து தருவார்…

நானோ ஏழை கவிஞன்… என்னிடம் என்னம்மா இருக்கும்..? ஆனால், என்னிடம் உள்ளது… வேறு யாரிடமும் இல்லையம்மா..! அதை மட்டும் சத்தியம் செய்து சொல்வேன். என் நெஞ்சு நிறைய கவலைகள் இருக்கிறதம்மா… நீ – நிம்மதீஸ்வரி..! உனக்கு கவலைகளே கிடையாது!
நீ என்ன செய்ய வேண்டும், தெரியுமா..? ‘கவலை’ என்று எழுதி, உன் காலடியில் வைக்கிறேன்… உன் இடதுகால் பெருவிரலால் ‘கவலை’ என்ற மூன்றெழுத்தில், ‘வ’ என்ற எழுத்தை அழித்துவிடு… நான் அதை படித்துப் பார்ப்பேன். ‘கலை’ என்று வரும்… அதை வளர்க்க, எனக்கு அருள் செய் காமாட்சி தாயே..!’’ என்று பாடினார், என் தந்தையான கவிஞர் சுப்பு.
மறுநாள் விடியற்காலை… பொழுது புலர்ந்தது. காமாட்சி தாயைத் தரிசித்துவிட்டு, மகாபெரியவாளின் சன்னதிக்கு சென்றிருக்கிறார் என் தந்தை.

ஆச்சரியம்… ஆனந்தம்..! என் தந்தையிடம் மகாபெரியவா என்ன சொன்னார், தெரியுமா..?

‘‘சுப்பு… ‘வ’னாவை அழிச்சுட்டா காமாட்சி..! இனி நீ அமோகமா இருப்பே..!’’ என பரிபூரண ஆசி தந்தாராம்!

20210528160514272.jpg

பரமாச்சார்யாள் தந்த ஆசீர்வாதத்தின் தொடர்ச்சியான வெற்றிதான், இன்று – வில்லிசைக்கென என் தந்தை வென்றிருக்கும் ‘பத்மஸ்ரீ’ என நினைக்கும்போது, எங்கள் நெஞ்சமெல்லாம் உவகை பொங்குகிறது.
இந்த விருதை தந்த மத்திய அரசுக்கு நன்றி… அதை ஆசீர்வதித்த பரமாச்சார்யாளுக்கு நமஸ்காரம்..!

அந்த நாட்களில் எல்லாம் நாங்கள் அனைவரும் எப்பவும் காஞ்சிபுரத்தில்தான் இருப்போம்… எப்பவாவது சென்னை வீட்டுக்கு வருவோம். ஏன்னா, அப்படி காஞ்சி கோயில்களில் பலப்பல தலைப்புகளில் தொடர் வில்லுப்பாட்டு..!

ஒரு நாள் என் தந்தையிடம், ‘‘சுப்பு..! வில்லுப்பாட்டுல ராமாயணம் பண்ணு… ஏன் தெரியுமா..? ஒழுங்கா வில்லடிச்சவன் ராமன்… ஒரு வில்லை உடைச்சான், ஜானகியை கல்யாணம் பண்ணிண்டான்..! மற்றொரு வில்லை அடிச்சான்… ராவண வதம்..! அதனால் பல்வேறு கிராமங்கள்ல ‘வில்லடிச்சான் கதை’ என ராமாயணத்தை சொல்லுவா..!’’ என மகாபெரியவாள் ஆசீர்வதித்தார்.

அப்ப… அவரிடம் என் தந்தை நகைச்சுவையுடன் கூறினாராம் – ‘‘நல்லவேளை பெரியவா… ஜனகர், வில்லை உடைச்சா சீதைனு பந்தயம் வெச்சார்..! ‘வில்லுப்பாட்டு பாடினாதான் சீதை’னு சொல்லி ஜனகர் பந்தயம் வெச்சிருந்தார்னா, ஸ்ரீராமனின் கல்யாணம் லேட்டாகியிருக்கும்… ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்..!’’

இதை கேட்டதும் மகாபெரியவா சிரித்த புளகாங்கித சிரிப்பு… அவரது உள்ளத்தின் சிறப்பு… வில்லுப்பாட்டுக்கு கிடைத்த பெருமதிப்பு..!
இதேபோல், இன்னும் பல சுவையான சம்பவங்களுக்கு…

– காத்திருப்போம்