தொடர்கள்
கவர் ஸ்டோரி
அமித்ஷா - மம்தா பானர்ஜி மோதல்... - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

மேற்கு வங்கத்தில் நடக்கும் மல்லுக்கட்டு...

20210316231709602.jpeg

சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதாகவும், அசாம் மாநிலத்திற்கு 3 கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. அப்போதே மேற்குவங்க முதல்வர், இதை ஆட்சேபித்து தேர்தல் கமிஷன் பாரதிய ஜனதாவின் கைப்பாவையாக இயங்குகிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் போது இங்கு மட்டும் 8 கட்டமாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் தகிடுதத்தங்களை, பாரதிய ஜனதா நடத்த தேவையான கால அவகாசத்தை தேர்தல் கமிஷன் வழங்கி இருக்கிறது என்று புகார் சொன்னார்.

20210316232121449.jpeg

மேற்கு வங்கம், ஆரம்பத்தில் காங்கிரசின் கோட்டை. சித்தார்த்த சங்கர் ரே என்று காங்கிரஸ் செல்வாக்குள்ள மாநில முதல்வர்கள் அங்கு இருந்தனர். அதன் பிறகு முப்பது வருடம், மேற்கு வங்கத்தில் காம்ரேட்களின் கை ஓங்கியிருந்தது. 23 வருடம் ஜோதிபாசு, அதன் பிறகு புத்ததேவ் பட்டாச்சார்யா கம்யூனிஸ்ட் முதல்வர்களாக இருந்தனர். 2011இல் மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. 2011இல் பாரதிய ஜனதா மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை மேற்குவங்க சட்டசபைக்கு அனுப்பியது. 2011இல் திரிணாமுல் காங்கிரஸ் செல்வாக்குள்ள கட்சியாக இருந்தது. 2019 பாராளுமன்ற தேர்தலில், 42 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களையும், பாரதிய ஜனதா 18 இடங்களையும் பெற்றது. இது மம்தாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. காரணம் அமித்ஷா திட்டமிட்டு, அங்கு வேட்பாளர்களை நிறுத்தினார். அவரது பிரசார வியூகம் தேர்தல் வியூகம் எல்லாம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.

ஆக, இப்போது தேர்தல் கணக்கே மாறிவிட்டது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதி ஜனதா.. இவை இரண்டு மட்டுமே பிரதான கட்சிகள் என்று ஆகிவிட்டது. இதுதான் தற்போதைய நிலைமை. இடது கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இரண்டும் ஒரு காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இப்போது அவர்கள், செல்வாக்குள்ள கட்சி என்று சொல்ல முடியாதபடி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டனர் என்பதுதான் உண்மை.

20210316231817484.jpeg

மம்தா பானர்ஜியை பொருத்தவரை, கட்சிக் கட்டுப்பாடு எல்லாம் அவருக்கு ரொம்ப முக்கியம் என்று சொல்ல முடியாது. இது அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே வெளிப்படையாக தெரியும். ஒரு முறை, பாராளுமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட மசோதாவை எதிர்த்து பேசும்போது... ஆவேசமாக அந்த மசோதாவை எதிர்த்து பேசிவிட்டு, பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மீது அந்த மசோதாவை கிழித்து, அவர் முகத்தில் வீசினார். இப்படி பாராளுமன்றத்தில்.. அமளி, ரகளை எல்லாம் அவருக்கு கைவந்த கலை. பாரதிய ஜனதா கூட்டணியில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது... அவர் தயாரித்த ரயில்வே பட்ஜெட்டில், பெரும்பான்மையான ரயில்வே திட்டங்களை மேற்கு வங்கத்திற்கு என்று தயாரித்து, அதை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போதைய பாரதிய ஜனதா அதை கடுமையாக விமர்சித்தது. அதை மம்தா பொருட்படுத்தவேயில்லை. இப்படி தான் நினைத்ததை மட்டும் செயல்படுத்தக்கூடிய பிடிவாதக்காரர் மம்தா பானர்ஜி.

காங்கிரஸ் கட்சியுடன் அவருக்கு உரசல் ஏற்பட்டதும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை துவக்கினார். அதன் பிறகு அவரது முழு கவனமும், மேற்கு வங்கத்தின் மீது இருந்தது. ஒரு சின்ன ஜோல்னாப் பை, நூல் புடவை, ஹவாய் செப்பல் இதுதான் மம்தா பானர்ஜி. இவ்வளவு எளிமையான தலைவி, போராட்டமே போர்க்குணம் என்ற அரசியல் கொள்கையைக் கொண்ட மம்தா பானர்ஜி, தொண்டர்களை அரவணைத்துச் செல்லக் கூடியவர். அவர்கள் கருத்தை கேட்கக் கூடியவர் என்ற பெயரும் உண்டு.

20210316231838259.jpeg

அமித்ஷாவின் பார்வை 2019 பாராளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை பாரதிய ஜனதா வென்ற பிறகு மேற்கு வங்கத்தில் ஆட்சி அதிகாரத்தை பாரதிய ஜனதா கைப்பற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார், அதற்கேற்றபடி அவரது நடவடிக்கை இருந்தது.

முதல் கட்டமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின், மூன்று, நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்தார். அதன் பிறகு, இருபதுக்கு அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை, பாரதிய ஜனதா பக்கம் திருப்பினார். இரண்டு பேர், மூன்று பேராக மம்தா பானர்ஜியை கண்டித்து அறிக்கை வெளியிட்டு, ராஜினாமா செய்ய வைத்தார். அவர்களுக்கு வரும் தேர்தலில் தேர்தல் வாய்ப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் அமித்ஷா தந்தார்.

இதில் சுவேந்து அதிகாரி மிக முக்கியமானவர். இவர்தான் மம்தாவின் சகல நம்பிக்கைக்கு உரியவர் என்று மம்தா பானர்ஜியால் நம்ப பட்டவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். மம்தாவின் அமைச்சரவையில் இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அமித்ஷாவின் முதல் இலக்கு இந்த சுவேந்து அதிகாரிதான். அதைப் பற்றி முழு விவரங்களை சேகரித்து, ஒரு கட்டத்தில் அமித்ஷாவே அவரிடம் பேசினார். சுவேந்துஅதிகாரியின் மனதை மாற்றினார். டிசம்பரில், அதிகாரி அமைச்சர் பதவியில் இருந்து விலகி, அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். அவரை தனது விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் சென்று, மம்தா கட்சியை எப்படி கபளீகரம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவரிடம் சொல்லி அனுப்பினார் அமித்ஷா. மேற்குவங்கத்தில், மம்தா பானர்ஜியை எதிர்த்து பல இடங்களில் மேடை போட்டு கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதுமட்டுமல்ல... மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில், அவரை எதிர்த்து பாரதிய ஜனதா வேட்பாளராக சுவேந்து அதிகாரியை நிறுத்தினார் அமித்ஷா. இது மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

20210316231902181.jpeg

அவர் பிரச்சார மேடைகளில், சுவேந்து அதிகாரியை நான் நம்பி ஏமாந்து விட்டேன் நான் ஒரு முட்டாள், அறிவு கெட்ட கழுதை என்று தன்னையே அவர் நொந்து கொள்ளும் அளவுக்கு அதிகாரியின் பாதிப்பு மேற்கு வங்கத்தில் இருந்தது.

2021 தேர்தல், மம்தா பானர்ஜிக்கு கௌரவ தேர்தல் என்றாகிவிட்டது. அவரும் தேர்தல் அறிக்கையில், தமிழகம் போல் சலுகைகளை வாரி வழங்கினார். பொதுப் பிரிவு குடும்பத்தினருக்கு மாதம்தோறும் 500 ரூபாய், பட்டியல் சமூகத்துக்கு ஆயிரம் ரூபாய் என அவர்களின் குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். இது தவிர மாணவர்களுக்கு, 4 சதவீத வட்டியுடன் பத்துலட்சம் கல்விக்கடன் பெற கடன் அட்டை, விவசாயிகளுக்கு பத்தாயிரம் மானியம்... இதுதவிர வழக்கப்படி, குடியிருப்பு, குழாய் தண்ணீர், தொழிற்சாலை என்று சலுகைகளை வாரி வழங்கினார்.

பாரதிய ஜனதா இந்தத் தேர்தலை வேறுமாதிரி அணுகியது. மோடி, அமித்ஷா என்ற இரண்டு இரட்டையர் தவிர, 22 மத்திய அமைச்சர்கள், 6 முதல்வர்கள் என்று பாரதிய ஜனதா ஒரு பெரிய படையை மேற்குவங்கத்தில் இறக்கி, மம்தா பானர்ஜியை எதிர்த்து பிரச்சாரம் செய்தது. மோடி, அமித்ஷா இருவரின் பேச்சுக்களும் மம்தாவை சாடிதான் இருந்து வருகிறது. இது தவிர, மத்திய உளவுத்துறை மம்தாவின் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்து, உடனுக்குடன் அமித்ஷாவின் பார்வைக்கு அறிக்கையாக அனுப்புகிறது. அதற்கு ஏற்ப அமித்ஷாவின் நடவடிக்கை இருக்கிறது.

காரிலிருந்து இறங்கும்போது, கார் கதவு மோதி மம்தாவின் காலில் விரிசல் ஏற்பட்டது. இதை திட்டமிட்ட சதி.. என்னைக் கொல்ல முயற்சி என்றெல்லாம் பொரிந்து தள்ளினார் மம்தா பானர்ஜி. இரண்டு நாள் பிரச்சாரத்திற்கு வராமல் கால் கட்டுடன் ஓய்வுபெற்றார். இன்று வரை, அவர் தேர்தல் பிரசாரம் சக்கர நாற்காலியில் தான். பிரச்சாரம், தேர்தல் ஆணையத்தை எதிர்த்து தர்ணா, பேரணி எல்லாமே சக்கர நாற்காலியில் தான்.

ஆனால், தேர்தல் கமிஷன் இதில் எந்த சதியும் இல்லை, இது ஒரு விபத்து. அவ்வளவுதான் என்று அறிக்கை வெளியிட்டு, இந்தப் பிரச்சனையை அப்படியே முடித்துவிட்டது.

இது போதாதென்று, தன் கட்சியை விட்டு போனவர்களை மம்தா தொடர்புகொண்டு, நந்திகிராமத்தில் என்னை வெற்றி பெற உதவுமாறு கெஞ்சுவது போன்ற ஆடியோ ஒன்றை பாரதிய ஜனதா வெளியிட்டது.

20210316232222383.jpeg

இரண்டாம் கட்ட தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், பாரதிய ஜனதாவின் ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் மம்தா ஆதரவு வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு வரவிடாமல் தடுக்கிறார்கள் என்ற புகார் மம்தாவின் கவனத்திற்கு வந்தது. உடனே அவர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அவரை எதிர்த்தும் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டு அவரைத் தடுத்தார்கள். அவர் உடனே, தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆளுநர், தேர்தல் ஆணையர் இருவரையும் தொடர்பு கொண்டு பேசினார், புகார் மனுவும் தந்தார். ஆனால், அவை எதுவும் வேலைக்கு ஆகவில்லை. எது எப்படியோ நந்திகிராமில் எந்த அசம்பாவிதமும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்தது.

ஆனால், நான்காம் கட்ட தேர்தல் அமைதியாக நடந்தது என்று சொல்ல முடியாது. நான்கு அப்பாவி வாக்காளர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்கள். இதில் மூன்று பேர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். ஓட்டுப்போட தங்கள் தொகுதிக்கு வந்தவர்கள், துப்பாக்கி சூட்டில் உயிரை விட்டார்கள். இன்னொருவர் பக்கத்து கிராமம். இறந்த 4 பேரும் இளைஞர்கள், மம்தா பானர்ஜி கட்சி ஆதரவாளர்கள்.. அவர் இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், மறுநாள் அந்தப் பகுதிக்கு பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமே மம்தா தான். அவரின் தொண்டர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையாக நடந்து கொண்டு, அவர்களைத் தாக்கினார்கள். இது எல்லாமே மம்தா பானர்ஜியின் ஏற்பாடுதான். இது எல்லாம் மக்களுக்கு தெரியும். இந்த முயற்சி எல்லாம் அவருக்கு வெற்றியை தேடித் தராது, தோல்வியைத்தான் தரும் என்று பேசி விட்டுப் போனார்.

இந்த விஷயம் பெரிதானதும், மம்தாவிற்கு ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. காரணம்... ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு ஆதரவாகவும், அவர்களை பாரதிய ஜனதாவிற்கு எதிராக தூண்டி விடுகிறார் என்ற புகாரின் அடிப்படையில், அவருக்கு ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. தவிர... எல்லா அரசியல் கட்சியும், அந்த மாவட்டத்தில் 3 நாள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. ஒரு வேட்பாளருக்கும் ஒரு நாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை, பாரதிய ஜனதா தலைவர்கள் பிரச்சாரம் செய்ய தடை என்று பாரபட்சமில்லாமல் நாங்கள் இருக்கிறோம் என்பதுபோல தங்களை காட்டிக் கொள்ள, தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் முயற்சி செய்தது.

ஆனால் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் அமித்ஷாவின் கைப்பாவையாக இயங்குகிறது என்று குற்றம் சாட்டினார். கூடவே, பாரதிய ஜனதா தலைவர்களை விமர்சனம் செய்ய அவர் தவறவில்லை. மோடி, அமித்ஷா இருவரும் எப்படியாவது மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். அதற்காக அவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்கள். ஆனால் மேற்கு வங்க மக்கள், இந்த இரட்டையர்களை ஏற்க மாட்டார்கள் என்று அவருக்கு ஒரு நாள் பிரச்சாரத் தடை விலகியதும் பேசினார்.

20210316232100437.jpeg

அதற்கு மறுநாள், அங்கு வந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மம்தா பானர்ஜி முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் என்று பேசிவிட்டு சென்றார்.

அதற்கு பதிலடியாக மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தை இன்னொரு குஜராத்தாக மாற்ற நினைக்கிறார் பிரதமர், அது நடக்காது என்றார்.

சமுதாயம், ஜாதி என்று இந்தத் தேர்தலில், மம்தாவை எதிர்த்து பெரிதாக பேசி மேற்கு வங்கத்தில், பாரதிய ஜனதா ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் தனி ஒரு மனுஷியாக எதிர்த்துப் போராடுகிறார் மம்தா பானர்ஜி என்பதும் உண்மை.

பாரதிய ஜனதா நிர்வாகிகள், அமித்ஷா இதுவரை எடுத்த காரியம் எல்லாம் ஜெயம் தான். அது மேற்கு வங்கத்தில் நடக்கும் என்கிறார்கள்.

இதில் நமக்கு எநத சம்பந்தமும் இல்லை என்பது போல், நடப்பது எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்.

ஆனால் மம்தா, ஒரு கை பார்ப்போம் என்று தைரியமாக களத்தில் இருக்கிறார். இல்லை.. இல்லை.. சக்கர நாற்காலியில் அமர்ந்து போராடுகிறார். இப்போதைக்கு மேற்குவங்க தேர்தல் நிலவரம் இதுதான்.