தொடர்கள்
தொடர்கள்
விதுரன் சொல் ... - 8 - சுபஸ்ரீ

20210316111056293.jpg

“கோபம், செருக்கு, தவறாகச் செயல்படுவது, திமிர் இவற்றை விலக்குவதே அறிவும், அறமும் ஆகும்...”

அறிவும்.. அறமும்...

ஒரு நிர்வாகிக்கு அறிவு வேண்டும். அவர் அறவழியிலும் நடந்து கொள்ள வேண்டும். அது எப்படி என்பதை விதுரர் இங்கு விளக்குகிறார்...

நிர்வாகி கோபத்தை தவிர்க்க வேண்டும். கோபம், அறிவை புறம் தள்ளி விடும். செருக்கு என்னும் அகம்பாவம், தனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்து கொள்ளத் தூண்டும். பிறர் சொல்வதை கேட்க விடாது.
சுயபுத்தியும் இல்லாமல், பிறர் சொல் பேச்சும் கேளாமல் நடக்கும் மனிதன் கெட்டுப்போனால், அவர் குடும்பம் மட்டுமே கெடும். அனால் ஒரு தலைவன், மன்னன் அப்படி நடந்துகொண்டால், அவன் ஆளுகையில் உள்ள நிறுவனமும், நாடும் கெட்டுவிடும். அது சமுதாயத்திற்கு நஷ்டம். அதனை தான் தெய்வப்புலவரும்,

“யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.”
குறள் 346
என்று சொல்லியிருக்கிறார். மன்னர்கள் எப்போது தங்களை “தான்” என்று சொல்லிக் கொள்வதில்லை. “தாம்” என்று தான் சொல்லுவார்கள். அதாவது தானும் தன் மக்களும் என்ற பொருளை உணர்த்துவதே “தாம்” எனும் சொல். ஆங்கிலத்தில் இதனை “Royal We” என்பார்கள். அதாவது அரசன் தனிமனிதன் அல்லன் என்பதே அதன் பொருள்.