தொடர்கள்
Daily Articles
ஆரோக்கியம் நம் கையில்...!! - 6 - ஆரூர் சுந்தரசேகர்

எதற்கு சாப்பிடுகிறோம்?

“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”.
(திருமந்திரம் - 724)

திருமூலர் வாக்கு... உணவே நம் உடலை வளர்க்கிறது. நம் உயிரைக் காக்கிறது.

நாம் இயங்க சக்தி தேவைப்படுகிறது. இந்தச் சக்தியை தருவது உணவு. இந்த சக்தி உடலுக்கு நாம் ஊட்டச்சத்துக்களை அளிப்பதன் மூலமே நமக்குக் கிடைக்கிறது. உடல் ஆரோக்கியத்துக்காக நாம் உண்ணும் உணவை கவனத்தோடு தேர்ந்தெடுக்கவேண்டும். உணவும் மனமும்தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. சக்தியினால் உடல் இயங்குகிறது. மனம் சிந்தித்து செயல்பட்டு நம் வாழ்வை தீர்மானிக்கின்றது.

எப்படி சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதை எல்லாம் நமது முன்னோர்கள் வகுத்த உணவுப் பழக்கங்கள், நம் உடல் ஆரோக்கியத்துக்கு பயனளிக்கின்றன. ஒவ்வொரு முறையும், பசி எடுத்தவுடன் தான் சாப்பிடவேண்டும். அப்போது தான் உண்ட உணவு செரித்து விட்டதாகக் கருத முடியும். இல்லையேல் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். உடலில் நச்சுப் பொருள்கள் தேங்கி, பல்வேறு நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

எப்படி சாப்பிடலாம்?

சாப்பிடும் உணவு விஷயத்தை தெய்வீகமாக எடுத்துக்கொண்டு சாப்பிட்டால், தீர்க்காயுள் மற்றும் செல்வ வளம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

சாப்பிடுவதற்கு முன் முகம், கைகள் நன்றாகக் கழுவி விட்டு சாப்பிட உட்கார வேண்டும். கைகளால் உணவை அள்ளி உண்ணும்போது, ஜீரண சக்தி அதிகரிக்கும். உணவைக் கைகளால் உண்ணும்போது, உடலின் நரம்புகள் நாம் உணவு உண்கிறோம் என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது. இதனால், ஜீரணம் மிக எளிதாக நடை பெறுகிறது.
சாப்பிடும் போது மிகவும் தளர்வாக, அமைதியாக இருக்கவேண்டும். மனக் கவலை, பயம், கோபம், வருத்தம் போன்ற உணர்வுகளோடு சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகள் ஏற்பட வழி வகுக்கும்.

“நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்ற பழமொழி மூலம், சாப்பிடும் முறையை நம் முன்னோர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். உணவை, வாயில் நன்றாக மென்று சுவைத்து சாப்பிடுவதால், உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது, எல்லா சத்துக்களும் கிடைக்கவும் உதவுகிறது.
டிவி, மொபைல் பார்த்துக் கொண்டோ, புத்தகம் படித்துக்கொண்டோ, பேசிக் கொண்டோ சாப்பிடுவதால், உணவு மூச்சுக்குழாய்க்குள் போய் அடைத்துக்கொள்ளும்.

அப்போது, மனம் ஜீரணச் சுரப்பிகளை சுரக்கத் தூண்டுவதில்லை.
நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு (சுக ஆசனம்) சாப்பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது.

நாம் சாப்பிடுவதற்கு 30 நிமிஷங்ளுக்கு முன்பாக 2 டம்பளர் தண்ணீர் குடிக்கலாம். அதேபோல் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் உணவு சரியாக ஜீரணமாவதற்கு முன்பாகவே வயிற்றில் உள்ள உணவு குடலுக்கு தள்ளி விட்டு விடும். சாப்பிடும் போது அதிக காரமாக இருந்து, கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் சிறிது தண்ணீர் குடிக்கலாம்.

அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்னவாகும்?

நம் வயிறானது சாப்பிடும் உணவை மட்டுமே ஆற்றல் சக்தியாய் மாற்றும். அளவுக்கு மீறி சுவைக்காகவும், ஆசைக்காகவும் உண்ணும் உணவானது முழுதாய் செரிமானமும் அடையாமல், ஆற்றல் சக்தியாகவும் மாறாமல் வயிற்றிலேயே அழுகிவிடுகிறது. எனவே வயிறு நிரம்பியவுடன் சாப்பிடுவதை நிறுத்தினால், செரிமான பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர். மீதி கால் வயிறு காற்றோட்டத்திற்கு. இப்படி இருந்தால் மட்டுமே சிறப்பு.
அதிகமாக சாப்பிடுவதும் தவறு, அதேபோல வயிற்றைப் பட்டினி போடுவது தவறு. தேவைக்காக உண்ணுதலின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும்.

தொடரும்...