தொடர்கள்
விகடகவியார்
விகடகவியார்

அமித்ஷா விட்ட டோஸ்...

20210205171539866.jpeg

விகடகவி யார் உள்ளே நுழைந்ததும் “இது வறுத்த வேர்க்கடலை... இது பால்கோவா, நேந்திரம் சிப்ஸ்” என்று அவரை உபசரித்தோம்.

ஆனால் அவரோ... “தேர்தல் அவசரம்” என்று அதிகாரிகளே குட்டிக்கரணம் எல்லாம் போட்டு வேலை செய்கிறார்கள். நாமும் அதையே பார்ப்போம்” என்று விஷயத்துக்கு வந்தார்.

“போன வாரம் உள்துறை அமைச்சர், கட்சி நிகழ்ச்சிகளையெல்லாம் விழுப்புரம், புதுச்சேரியில் முடித்துவிட்டு காரில் சென்னைக்கு வந்தார். முதல்வர், துணை முதல்வர் இருவரும் அவருக்காக காத்திருந்தார்கள். அமித்ஷா உள்ளே போன சில நிமிடங்கள் கழித்து இருவரையும் அழைத்தார். “எங்கள் கட்சிக்கு எத்தனை இடங்கள் தர இருக்கிறீர்கள்.. அதை சொல்லுங்கள்” என்றார். ஓபிஎஸ், இபிஎஸ் ஐ பார்த்தார். நாம் உடனே... “இதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டோம். “நீங்கள் தானே முதல்வர் வேட்பாளர், நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்று பார்வையால் சொல்லிவிட்டார் ஓபிஎஸ்” என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.

20210205171618341.jpeg
“முதல்வர் வேட்பாளர் என்ன சொன்னார், அதை சொல்லுங்கள்...” என்று ஆர்வமாக நாம் கேட்டோம். உடனே விகடகவியார் நம்மை உற்றுப் பார்த்து மெல்ல சிரித்து... “சொல்லிவிட்டு... எடப்பாடியார் அமித் ஷாவிடம் செமையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்” என்றார்.

உடனே நாம்.. “சரி.. சேதியை சொல்லுங்கள்.. தெரிந்து கொள்கிறோம்” என்றோம்...

முதல்வர்... “உங்கள் கட்சிக்கு, 20 தொகுதிகள் தருகிறோம்” என்று சொல்லி இருக்கிறார்.

20210205171637129.jpeg
“அவ்வளவுதான்... அமித்ஷா பொரிந்து தள்ளிவிட்டார். உங்கள் மனதில் என்ன நீங்கள் பெரிய தலைவர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா..? சசிகலா இல்லையென்றால் நீங்கள் முதல்வர் இல்லை... பாராளுமன்ற தேர்தலில் எத்தனை இடங்களில் ஜெயித்தீர்கள்... ஓபிஎஸ் மகன் ஜெயிச்சதெல்லாம், அவர் சொந்த செல்வாக்கில். உங்கள் முகத்துக்கு யாரும் ஓட்டுப் போடவில்லை. செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் உங்கள் புகழ்பாடும் விளம்பரங்களை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள எத்தனை கோடிகள் நீங்கள் செலவு செய்து இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். மத்திய அரசு பற்றி பாராட்டி ஏதாவது பேசி இருக்கிறீர்களா... பிரதமரின் சாதனைகளைப் பற்றி பேசி இருக்கிறீர்களா..? நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நமக்கு இப்போது எதிரி திமுகதான். அவர்களை வீழ்த்த நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்..? அதை கொஞ்சம் சொல்லுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

20210205171706147.jpeg
“சரி எடப்பாடி என்ன சொன்னார், அதை சொல்லுங்கள்..” என்றோம்.

“அவரால் அதற்கு ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை” அமைதியாக இருந்தார்.

உடனே அமித்ஷா... “திமுகவை எப்படி தோற்கடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.. நான் பார்த்துக்கொள்கிறேன். நான் சொல்வதை மட்டும் நீங்கள் கேளுங்கள்.. வரட்டு கவுரவம் பார்க்காதீர்கள்... சசிகலா உங்களுக்கு என்ன துரோகம் செய்தார்..? அவரை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்” என்று கேட்டார்.

அப்போது எடப்பாடியார்... “தழுதழுத்த குரலில் சசிகலா மட்டும் வேண்டாம். அவர் வந்தால், எங்கள் எல்லோரையும் பழி வாங்குவார். தொண்டர்களும் அவரை விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

“சரி... துணை முதல்வர் என்ன சொன்னார்..? அதை சொல்லுங்கள்” என்றோம்.

“அவர் எதுவும் பேசவில்லை. மௌனமாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார். அவ்வளவுதான்...” என்று சொல்லி கண் சிமிட்டினார் விகடகவியார்.

“அதன்பிறகு... முடிவாக என்னதான் தீர்மானித்தார்கள்.. அதை சொல்லும்” என்றோம்...

சென்ற முறை பிரதமர் வந்தபோது, அவர் இதுபற்றி எல்லாம் என்னிடம் எதுவும் சொல்லவில்லையே என்று கேட்டிருக்கிறார் எடப்பாடியார்.

அதற்குஅமித்ஷா... அதே தொனியில் “பிரதமர் உங்களிடம் இதையெல்லாம் சொல்லமாட்டார், நான்தான் சொல்வேன்” என்று சொல்லியிருக்கிறார்.

அப்போ எடப்பாடி... “நான் சொல்வதை ஒரு சில நிமிடம் மட்டும் நீங்கள் கேட்டுவிட்டு, முடிவு செய்யுங்கள் என்று ஒரு புள்ளி விவரத்தை சொல்லி இருக்கிறார். தேவர் சமுதாய ஓட்டு 4%. ஆனால், நமக்கு வன்னியர் மற்றும் இதர பிரிவினர் மூலம் நமக்கு கூடுதலாக 10 சதவிகித வாக்கு வங்கி வர இருக்கிறது. தவிர தேவர் சமுதாயத்திலுள்ள எல்லோரும் சசிகலா ஆதரவாளர்கள் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

“சரி.. அதற்கு அமித்ஷா என்ன சொன்னார்..?”

கொஞ்சம் கோபம் தணிந்து பேசினார்... “அப்போதுகூட 30 தொகுதிகள் தாருங்கள். பாட்டாளி மக்கள் கட்சிக்கு இட ஒதிக்கீடு எல்லாம் எங்களை ஆலோசிக்காமல் நீங்கள் செய்திருக்கிறீர்கள். ஆளுநர் ஒப்புதல் தருவதற்கு முன் என்னிடம் பேசினார்.. நான் தான் பிரச்சனை வேண்டாம் என்று ஒப்புதல் தர சொன்னேன். இந்த நிமிடம் வரை பாரதிய ஜனதா உங்களிடம் பெருந்தன்மையுடன் தான் நடந்து கொள்கிறது. அதேசமயம் உங்களுக்கு சாதகமாக நாங்கள் இருப்பதால், எங்கள் கட்சிக்கு என்ன பலன் என்று ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் யோசிப்பதில் என்ன தவறு என்று திருப்பிக் கேட்டார் அமித்ஷா.”

நாம் “ஷா சரியாகத்தான் பேசுகிறார் போல் தெரிகிறது” என்றோம்...

அப்போது விகடகவியார்... “ஏழாம் தேதி மீண்டும் சென்னை வருகிறார், கன்னியாகுமரி போகும் வழியில். அப்போது தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துவிடும்” என்றார்.

சரி... “பாரதிய ஜனதாவுக்கு எத்தனை தொகுதிகள்... அதை சொல்லும்” என்று கேட்டோம்.

கமலாலயம் வட்டாரத்தில் விசாரித்தேன்... 30 தொகுதி என்கிறார்கள் என்றார் விகடகவியார்.

“அதிமுக - பாமக தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்த விஷயம் பற்றி சொல்லும்..” என்றோம்.

20210205171803464.jpeg
நீர்... “அன்புமணி ராமதாஸ் ஆனந்தக் கண்ணீர் வீடியோ பார்க்கலையா..? ஆனால், நீதிமன்றத்தில் இந்த உத்தரவு சம்பந்தமாக எப்படியும் வழக்கு வரும்... கூடவே தடையும் வரும் என்பது திமுக கணக்கு. அதைப் போலவே தற்போது நீதிமன்றத்தில் வழக்கு வந்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ஒதுக்கீடு செல்லாது என்று மகாராஷ்டிரா நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. அதனால்தான் திமுக இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், இந்த மசோதாவை காட்டிதான் 23 தொகுதிகளுக்கு பாமகவை ஒப்பந்தம் போட வைத்தார் எடப்பாடி. அன்புமணி ராமதாஸ் கூட, இதனால்தான் தொகுதிகளை குறைத்துக் கொண்டோம் என்று சொன்னார்” என்று விகடகவியார் சொன்னதும்...

“நீங்கள் திமுக தேர்தல் கூட்டணி விஷயத்துக்கு போகலாம்” என்று சொன்னோம்...

20210205171824276.jpeg
அதற்கு விகடகவியார்... “ஸ்டாலின் பாவம் ரொம்பவும் வருத்தம் ஆகிவிட்டார். போன மாதம் வரை தளபதி வருங்கால முதல்வர் என்றெல்லாம் புகழ் பாடிக் கொண்டிருந்த கூட்டணி கட்சிக்காரர்கள், இப்போது அவரிடம் வாக்குவாதம் செய்யத் துவங்கிவிட்டார்கள். சின்ன கட்சிகளையெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்றெல்லாம் கணக்கு போட்டார் ஸ்டாலின். ஆனால், விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தை தொடங்கும் போதே நாங்கள் தனி சின்னத்தில் தான் போட்டியிட விரும்புகிறோம், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லி தான் பேசவே ஆரம்பித்தார்கள். அப்போது திமுக, அவர்களுக்கு இரண்டு தொகுதிகள் என்று சொல்லியிருக்கிறார்கள். ரவிக்குமார் 10 தொகுதிகள் வேண்டும் எங்களுக்கு என்று சொல்லியிருக்கிறார், அத்தோடு பேச்சுவார்த்தை நின்று போனது. அதன் பிறகு தனித்துப் போட்டி, தொண்டர் அதிர்ச்சி என்றெல்லாம் விடுதலை சிறுத்தை கட்சியினர் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பினர். அதன் பிறகு வேறு வழியில்லாமல் 6 தொகுதிகளுக்கு திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது. தனி சின்னத்தில் போட்டியிடவும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

சரி... “மற்ற கூட்டணி கட்சிகளெல்லாம் என்ன ஆயிற்று?” என்று கேட்டோம்...

அதற்கு விகடகவியார்... “அது இன்னும் மோசம். மதிமுக 10 தொகுதிகள் இருந்தால் கூப்பிடுங்கள்.. இல்லையென்றால் நாங்கள் வரவில்லை என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள். கம்யூனிஸ்டுகளும் அதே அதே”
என்று விகடகவியார் சொல்லி சிரித்தார்.

20210205171846330.jpeg
சரி.. “தேசியக் கட்சியான காங்கிரஸ்..” என்று கேட்டோம்.

அது ரொம்ப ரொம்ப மோசம். “அழகிரி தொகுதி பங்கீடு குழுவிடம் போய், ஏற்கனவே உங்களிடம் முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி எத்தனை தொகுதிகள் என்று சொன்னார்.. அது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யார் என்ன சொன்னாலும் நம்பாதீர்கள்... நான் இதை தோழமை உணர்வுடன் உங்களிடம் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

“காங்கிரஸ் ஏன் இந்த பிடிவாதம் பிடிக்கிறது” என்று நான் கேட்டதும்...

ராகுல் காந்தி சொல்லும் கணக்கே வேறு மாதிரி இருக்கிறது... “தமிழ்நாட்டில் சென்ற முறை பாராளுமன்ற தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் திமுக 38 இடங்களில் வெற்றி பெற முடிந்தது. நான் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் இங்கு பிரச்சாரத்திற்கு வர தயார்... கட்சியை வளர்க்கும் வழியை பாருங்கள் என்று அவரும் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். கூட்டணி தொகுதிப் பங்கீடு அதிலெல்லாம் நீங்கள் தலையிடாதீர்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். அதைத்தான் அழகிரி திமுகவில் சொல்லியிருக்கிறார்” என்றார் விகடகவியார்.

“காங்கிரஸ் இவ்வளவு தைரியமா எல்லாம் பேசுவார்களா” என்று நாம் கேட்டபோது...

பேசி இருக்கிறார்களே என்றபடியே, விகடகவியார் பால்கோவா கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். அப்போது நாம் “தொகுதிப் பங்கீடு பற்றி எல்லாம் நீர் எதுவுமே சொல்லவில்லையே” என்று கேட்டோம்...

விகடகவியார்... “தொகுதிப் பங்கீடு பற்றி எந்தக் கட்சியும் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதுதான் உண்மை. இப்போது ஊகத்தின் அடிப்படையில் வரும் செய்திகளை பற்றி இப்போது பேச வேண்டாம்..” எனவே உங்கள் அனுமதியுடன் நான் அடுத்த செய்திக்கு போகிறேன் என்றார்...

20210205171910367.jpeg
நாம் பேஷாய் என்று சொன்னதும்... “சசிகலா அரசியல் வேண்டாம் கடிதத்தின் பின்னணியில் அவர் சகோதரர் திவாகரன் பங்கு பெரும்பங்கு. பினாமி சட்டப்படி, உங்கள் குடும்பத்தினர் சேர்த்து வைத்துள்ள 56 ஆயிரம் கோடி சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா என்று மத்திய அரசின் முக்கியஸ்தர் திவாகரனிடம் அன்பாய் எடுத்து சொன்னாராம்... அதன்பிறகு திவாகரன், சசிகலாவை சந்தித்து விஷயத்தைச் சொல்லி... தினகரனை நம்பினால் நடுத்தெரு நிச்சயம் என்று அவரும் தன் பங்குக்கு அன்பாய் சொல்லி, அரசியல் வேண்டாம்... அறிக்கையை வெளியிட வைத்தாராம்” என்றார் விகடகவியார்.

“சரி... தினகரன் என்ன சொல்கிறார்?” என்று கேட்டோம்...

அதற்கு விகடகவியார் சிரித்தபடி... “அவர்தான் இப்போது நடமாடும் காமெடி சேனல் என்றார். என் தலைமையில்தான் கூட்டணி... நான் தான் முதல்வர் வேட்பாளர்.. பிஜேபி, அதிமுக வேண்டுமானால் என்னுடன் கூட்டணி வைக்கட்டும் என்று சொல்கிறாரே கவனிக்கவில்லையா நீர்” என்றார்.

20210205171930291.jpeg
கூடவே தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக இல்லை என்றால்... சசிகலா கட்சிப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற கலகக்குரல் எழும், அப்போது பார்ப்போம். இப்போது நடப்பதை வேடிக்கை பார்ப்போம் என்பதும் சசிகலா கணக்கு என்றும் ஒரு தகவல் உலா வருகிறது. எது எப்படியோ தினகரன் பாவம், ரொம்பவும் அப்செட் என்ற விகடகவியார்... கமல் இப்போது மிகவும் குஷியாக இருக்கிறார்... ஒரு தேசியக் கட்சி அவருக்கு தேர்தல் நிதிக்கான வழியை காட்டி இருக்கிறது. கமல் இப்போது சுறுசுறுப்பாக தேர்தல் களத்தில் இறங்கி உலா வருகிறார் என்றால் அதற்கு அந்த நிதி ஆதாரம் ஒரு முக்கியக் காரணம் என்று சொன்ன விகடகவியார்... ரஜினி ஸ்டைலில் வர்ரட்டா என்று சொல்லி விட்டார் ஜூட்.